Home தேசிய national tamil அமெரிக்கா மூழ்கடித்த இரான் கப்பல் இலங்கை அழைத்ததால் வந்ததா?

அமெரிக்கா மூழ்கடித்த இரான் கப்பல் இலங்கை அழைத்ததால் வந்ததா?

8
0

SOURCE :- BBC NEWS

ஐஆர்ஐஎஸ் டெனா

பட மூலாதாரம், @IN_HQENC

மத்திய கிழக்கில் அமெரிக்கா – இரான் இடையேயான போர், இப்போது கொழும்புவின் ராஜதந்திரக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது.

இலங்கையின் தென்பகுதியான காலி கடற்பரப்பில் இரானியப் போர்க்கப்பல் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ தகர்க்கப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ‘உத்தியோகபூர்வ அழைப்பு’ குறித்த சர்ச்சை, இலங்கையின் நடுநிலைமை ஒரு ‘ராஜதந்திரப் பொறி’யாக மாறியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஐஆர்ஐஎஸ் புஷெர்

பட மூலாதாரம், SL Navy

‘இலங்கையின் அழைப்பின் பேரிலேயே இரானிய கப்பல் வந்தது’

கொழும்புவில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கைக்கான இரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ், “ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய இரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகை தரும்படி ‘மிலான் – 2026’ நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி வருகை தந்தது. அவ்வேளையிலேயே ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் கொல்லப்பட்ட பலர் இசைக் கலைஞர்கள். அவர்கள் போருக்குத் தயாராக இருக்கவில்லை,” என தெரிவித்தார்.

‘சிநேகபூர்வ அழைப்பு ராஜதந்திர அழைப்பல்ல’

இரானியத் தூதுவரின் இந்தக் கருத்தை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர், “பிறிதொரு நாட்டின் மண்ணில் (இந்தியா) வைத்து இன்னொரு நாட்டுக்கான உத்தியோகபூர்வ ராஜதந்திர அழைப்பை விடுக்க முடியாது. இலங்கை கடற்படைத் தளபதி விடுத்தது ஒரு ‘சிநேகபூர்வ’ அழைப்பு மட்டுமே. அதனை உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரமாகக் கருத முடியாது. ராஜதந்திர மட்டத்தில் இவ்வாறான விடயங்களைக் கையாளுபவர்களுக்கு இதன் அர்த்தம் புரியும். நாம் எப்போதும் சகல தரப்புடனும் நடுநிலையான போக்கினையே கையாண்டு வருகின்றோம். அதில் எப்போதும் மாற்றமில்லை,” என கூறினார்.

ஜனாதிபதியின் ‘தேசிய பாதுகாப்பு’ தர்க்கம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து முழுமையான விளக்கம் ஒன்றினை கடந்த வாரம் முன்வைத்திருந்தார்.

அப்போது, “இந்தப் பிரச்சினையில் எமது தொடர்ச்சியான நிலைப்பாடு நடுநிலைத்தன்மை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதி தொடர்பான பிரச்னை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே நாம் வென்றெடுக்க முடியும். எனவே, எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நடுநிலைத்தன்மை கை நழுவிப்போக நாம் இடமளிக்க மாட்டோம்.” என்றார்.

”ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில தரப்பினரும் நாம் குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும், சில தீர்மானங்களைச் சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்றும் பல்வேறு கருத்துகளை முன்வைப்பதை அறிவேன். அவை முற்றிலும் உண்மையற்றவை”

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

மேலும், “அமெரிக்காவின் போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி கோரிய அதே நேரத்தில், இரானியக் கப்பல்களும் அனுமதி கோரின, அப்போது அனுமதி வழங்கியிருந்தால், மத்தளை விமான நிலையமும் கொழும்புத் துறைமுகமும் போர்க்களமாக மாறியிருக்கும். எமது பிராந்தியத்துக்குள் போர் நுழைவதைத் தடுக்கவே நாம் இரண்டு தரப்பையும் தற்காலிகமாகத் தடுத்தோம். இது எமது இறையாண்மையைக் காக்கும் நடவடிக்கை,” என அவர் தெரிவித்திருந்தார்.

இரானியக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் அனுமதி கோரியபோது, இலங்கையை ஒரு போர் வலயமாக்குவதை தவிர்க்கவே அந்த அனுமதிகள் மறுக்கப்பட்டன எனவும், இதுவே நாட்டின் உண்மையான நடுநிலைமை எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மனிதாபிமான உதவிகள் மற்றும் பயிற்சிகளை மட்டுமே உள்ளடக்கியவை என்றும், அவை இலங்கையை ஒரு போர்த்தரப்பாக மாற்றாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஐஆர்ஐஎஸ் புஷெர்

பட மூலாதாரம், SL Navy

செல்லனி மற்றும் சம்பிக்கவின் விமர்சனம்

எனினும், சர்வதேச வியூக ஆய்வாளர் கலாநிதி பிரம்மா செல்லனி, இலங்கையின் தற்போதைய போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இலங்கை 1907 ஹேக் உடன்படிக்கையைச் சட்டக் கேடயமாகப் பயன்படுத்தி இரானிய மாலுமிகளைத் தடுத்து வைத்துள்ளது. இது மறைமுகமாக அமெரிக்காவின் அழுத்தத்துக்குப் பணிந்த செயலே,” என எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

மேலும், இலங்கையின் தற்போதைய நடவடிக்கைகள் ‘வடிவத்தில் நடுநிலைமையாகத் தெரிந்தாலும், அதன் விளைவுகளில் ஒரு பக்கச்சார்பானவை என்று அவர் குறிப்பிடுகிறார்.

இரானின் தொடர்ச்சியான கோரிக்கைகளை நிராகரித்து, 200க்கும் மேற்பட்ட இரானிய மாலுமிகளை இலங்கை அரசு ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது இதன் வெளிப்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

“இலங்கை ‘ஹேக் உடன்படிக்கையை’ ஒரு சட்டக் கேடயமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த விதியின் கீழ் ஒரு நடுநிலை நாடு போர் புரியும் தரப்பின் வீரர்களைத் தடுத்து வைக்க முடியும் என்றாலும், இலங்கையின் இந்த முடிவு போர் காலத்தில் இரானுக்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் கிடைப்பதைத் தடுப்பதாக அமைகிறது” என்ற வாதத்தையும் அவர் முன் வைக்கிறார்.

மேலும், இடதுசாரி சார்புடைய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இருந்தாலும், கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டதாகச் செல்லனி குறிப்பிடுவதுடன், மாலுமிகளை விடுவிக்க வேண்டாம் என அமெரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கு இலங்கை இணங்கியுள்ளதாக கூறுகிறார்.

அதேபோல் அரசியல் ஆய்வாளர் சம்பிக்க ரணவக்க, “டாலருக்கும் தேயிலைக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் இலங்கை கத்தியின் மேல் நடக்கிறது. எதிர்காலத்தில் மோதல் தீவிரமடைந்தால் இந்த ‘நடுநிலை’ தப்புமா?” எனக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், Supplied

‘மனிதாபிமானத்துடன் பராமரிக்கிறோம்’

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் நிபுணர்களின் விமர்சனங்கள் இவ்வாறு இருக்கையில் அரசாங்கத் தரப்பு அதிகாரிகள் வேறு வாதங்களை முன்வைக்கின்றனர்.

“ஒரு சிறிய நாடான இலங்கை, தனது துறைமுகத்தில் ஒரு போர்க் கப்பலை அனுமதிக்கும்போது அதன் ‘பாதுகாப்பு அச்சுறுத்தலை’ கணக்கிட வேண்டியுள்ளது” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொந்தா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

“நாங்கள் மாலுமிகளைச் சிறை வைக்கவில்லை, மனிதாபிமானத்துடன் பராமரிக்கிறோம். சர்வதேச சட்டங்களின்படி அவர்களை உடனடியாகப் போர்க்களத்திற்கு அனுப்ப முடியாது. இது சட்டத்தை மதிப்பதே தவிர அமெரிக்காவுக்குப் பயந்த செயலல்ல,” என அவர் கூறினார்

“சர்வதேச சட்டங்களின்படி, போரில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்புக்கு வசதிகளை வழங்குவது மற்றொரு தரப்புக்கு எதிராகப் போரில் நேரடியாகப் பங்கேற்பதற்குச் சமம்,” எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது திருகோணமலையில் உள்ள ‘ஐஆர்ஐஎஸ் புஷேர்’ (IRIS Bushehr) கப்பல் மற்றும் அதிலுள்ள 206 இரானிய மாலுமிகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கையின் நேரடிக் கண்காணிப்பில் மனிதாபிமானத்துடன் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், AP

பொருளாதார இருமுனைப் போட்டி

இலங்கை – இரான் இடையிலான 200 மில்லியன் டாலர் ‘தேயிலை – எண்ணெய்’ பண்டமாற்று ஒப்பந்தம் மற்றும் 120 மெகாவாட் மின்சாரம் வழங்கும் ‘உமா ஓயா’ திட்டம் ஆகியவை இலங்கைக்கு இரான் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகின்றன.

அதேநேரம், 2.9 பில்லியன் டாலர் ஐ.எம்.எப் கடன் மற்றும் 28% ஏற்றுமதிச் சந்தையை அமெரிக்கா வைத்துள்ளதால், அமெரிக்காவின் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் உணர்ந்துள்ளது.

இரானுடன் உறவு எப்படிப்பட்டது?

இலங்கைக்கும் இரானுக்கும் இடையிலான உறவு வெறும் வர்த்தக உறவல்ல, அது ஒரு மூலோபாயப் பிணைப்பாகும்.

குறிப்பாக 2021 இல் மேற்கொள்ளப்பட்ட ‘தேயிலை – எண்ணெய்’ பண்டமாற்று ஒப்பந்தத்தின் (Tea-for-Oil Barter) கீழ், இலங்கை சுமார் 200 மில்லியன் டாலர் பெறுமதியான தேயிலையை இரானுக்கு ஏற்றுமதி செய்து கடன் தொகையில் பெரும்பகுதியை செலுத்தியுள்ளது என, இலங்கை மத்திய வங்கி மற்றும் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், இரானின் உதவியுடன் அமைக்கப்பட்ட ‘உமா ஓயா’ பல்நோக்குத் திட்டம் இலங்கையின் மின்சாரத் தேவையில் 120 மெகாவொட் பங்களிப்பை வழங்குகிறது.

தற்போதைய யுத்தத்தினால் இரான் உடனான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் இலங்கையின் உட்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

இலங்கை – அமெரிக்க உறவு: பொருளாதார மீட்சியின் முதுகெலும்பு

அமெரிக்காவுடனான உறவு இலங்கையின் பொருளாதாரத் தன்னாதிக்கத்தைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. இலங்கையின் 2.9 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியக் கடன் திட்டத்தை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கத் திறைசேரி முக்கிய பங்காற்றியுள்ளது.

அத்துடன் இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25-28 சதவிகிதம் அமெரிக்காவுக்கே செல்கிறது. அத்துடன் ‘பாதுகாப்பு மீளாய்வு 2030’ திட்டத்தின் கீழ் அமெரிக்கா வழங்கும் உளவுத்துறை தகவல்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகள் இலங்கைக்கு மிக அவசியமானவையாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மனிதாபிமானமா அல்லது மறைமுக அரசியலா?

இரானியத் தூதுவர் குறிப்பிடும் அந்த ‘அழைப்பு’ மற்றும் இசைக் கலைஞர்களின் மரணம் மனிதாபிமான ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், அமெரிக்காவின் ஏவுகணைகளுக்கும் இரானின் மனிதாபிமானக் கோரிக்கைக்கும் இடையில் ஒரு ‘நடுநிலை’ அரணை எழுப்ப முயல்கிறது.

இலங்கை எடுக்கும் அடுத்தகட்ட நகர்வு, ஆசியப் பிராந்தியத்தில் அதன் மதிப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU