Home தேசிய national tamil அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டு பகைமை உருவானது எப்படி?

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டு பகைமை உருவானது எப்படி?

14
0

SOURCE :- BBC NEWS

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images

நவீன வரலாற்றின் மிக நீண்ட அரசியல் பகைமைகளில் இதுவும் ஒன்று. ஒருபுறம், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா. மறுபுறம், ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய தீவு நாடான கியூபா.

அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு ஃபிடல் காஸ்ட்ரோவின் சோசலிச புரட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்கா, கியூபா இடையிலான உறவு மோசமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டுகளில், சிஐஏ ஆதரவுடனான படையெடுப்பு, அணு ஆயுதப் போர் அபாயம் மற்றும் பல புலம்பெயர்வு நெருக்கடிகள் ஏற்பட்டன.

பல தலைமுறை கியூபர்களும் அமெரிக்கர்களும் இந்த அரசியல் விரோதத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த மோதல் இன்னும் தீர்க்கப்படவில்லை.

கடந்த சில பத்தாண்டுகளில், இரு நாடுகளும் பதற்றமான, பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட உறவையே கொண்டிருந்தன. இதில் சில நல்ல காலகட்டங்களும் சில மோசமான காலகட்டங்களும் இருந்தன.

ஆனால், 2025இல் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியது பதற்றங்களை மேலும் வலுப்படுத்தியது.

அவரது அரசாங்கம், 1960களில் இருந்து நிலவி வரும் பொருளாதாரத் தடையை இன்னும் கடுமையாக்கியது. கியூபாவின் பல பிரச்னைகளுக்கு இந்தத் தடையே காரணம் என்று அந்நாடு கூறுகிறது. பிற நாடுகளில் இருந்து கியூபா எரிபொருள் பெறுவதைக் கடினமாக்கும் நடவடிக்கைகளையும் டிரம்பின் அரசாங்கம் எடுத்தது.

இது கியூபாவின் எரிசக்தி, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை மேலும் மோசமாக்கியது. அந்தத் தீவு ஏற்கெனவே துன்பத்தில் இருந்தது. மேலும் ஜனவரி தொடக்கத்தில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் ஆதரவு குறைந்தது. இதுவும் கியூபாவின் நிலையை மேலும் மோசமாக்கியது.

கியூபா “வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது” என்று டிரம்ப் எச்சரிக்கிறார். ஆனால் தனது நிர்வாகமும் கியூபாவும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழியைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார். கியூபாவின் அதிபர் மிகுவல் தியாஸ்-கானெல், இரு அரசுகளுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததை உறுதி செய்துள்ளார்.

பலருக்கு இதை நம்புவது கடினமாக உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் வாஷிங்டனும் ஹவானாவும் நெருங்கி வருவதாகத் தோன்றும் போதெல்லாம், ஏதோவொன்று அதைத் தடுத்து நிறுத்தியது.

இந்த நிலையில் பலருக்கும் எழக்கூடிய முக்கியக் கேள்வி ஒன்று உண்டு. இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான இந்த பகைமை எப்படித் தொடங்கியது?

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், CORBIS/Corbis via Getty Images

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை

கடந்த 1898ஆம் ஆண்டு, பிப்ரவரி 15ஆம் தேதியன்று, ஹவானா துறைமுகத்தில் ‘மெய்ன்’ என்ற அமெரிக்க போர்க்கப்பல் வெடித்துச் சிதறியது. 260க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

கப்பல் மூழ்கிய பிறகு, அமெரிக்க கடற்படை விசாரணைக் குழு, கப்பல் நீருக்கடியில் இருந்த கண்ணிவெடியால் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறியது.

அந்தக் காலத்தில், பலர் ஸ்பெயின் மீது சந்தேகம் கொண்டனர். 1895 முதல் சுதந்திரத்திற்காகப் போராடி வந்த கியூப கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஸ்பெயின் அப்போது போரிட்டுக் கொண்டிருந்தது.

ஏப்ரல் மாதம், அமெரிக்கா ராணுவ பலத்துடன் இந்த மோதலில் நுழைந்தது. இது ஸ்பானிய-அமெரிக்க போர் தொடங்கக் காரணமானது. 400 ஆண்டுகளுக்கும் மேலான காலனித்துவத்திற்குப் பிறகு, கியூபா மீதான ஸ்பானிய ஆட்சிக்கு ஒரு முடிவைக் கொண்டுவர இது உதவியது.

பின்னர் 1976இல் அமெரிக்க கடற்படையின் மற்றொரு விசாரணையில், கப்பலுக்குள் ஏற்பட்ட நெருப்பே இந்த வெடிப்புக் காரணமாக இருந்திருக்கலாம் எனவும், அது கப்பலின் வெடிமருந்துகளை வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்த வெடிப்பு ஸ்பானிய கண்ணிவெடியாலோ அல்லது நாசவேலையாலோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது.

போரில் ஸ்பெயின் தோல்வியடைந்த பிறகு, கியூபாவின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்கள் கடுமையாகச் சேதமடைந்தன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. மேலும், அந்தச் செயல்பாட்டில் அமெரிக்கா மிக முக்கியப் பங்காற்றியது.

“அமெரிக்க தொழிலதிபர்கள் மிகக் குறைந்த விலையில் வாய்ப்புகளைக் கண்டறிந்தனர். அமெரிக்கா நேரடியாக கியூபாவின் பொருளாதாரத்தில் நுழைந்தது,” என்று அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் புஸ்டாமான்டே பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

கடந்த 1898 முதல் 1902 வரை, கியூபா ஓர் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆட்சிக்குட்பட்ட பகுதியாகச் செயல்பட்டது. அது 1902 வரை முறையான சுதந்திரத்தைப் பெறவில்லை. அதோடு, கியூபாவின் முதல் அரசியலமைப்பில் ஒரு முக்கியமான நிபந்தனை இணைக்கப்பட்டிருந்தது.

அது பிளாட் திருத்தம் எனப்படும் ஓர் இணைப்புப் பகுதியாகும். இது 1901 முதல் 1934 வரை நடைமுறையில் இருந்தது. நடைமுறையில், இது கியூபாவை வாஷிங்டனின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.

“அதுவொரு சுதந்திர குடியரசாக இருந்தது. அதே வேளையில், கியூபாவின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையைக் கோரிய அமெரிக்காவின் தெளிவான வெளிப்புறக் கட்டுப்பாடும் இருந்தது,” என்கிறார் புஸ்டாமான்டே.

இந்தத் திருத்தத்தின் 3வது பிரிவு, இவ்வாறு செய்வதற்கான உரிமையை அமெரிக்காவுக்கு அழுத்தமாக வழங்கியது.

அதே ஆவணம், இன்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில், செயல்பாட்டில் உள்ள குவான்டநாமோ கடற்படை தளத்தை உருவாக்கவும் அனுமதித்தது.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

காஸ்ட்ரோவின் புரட்சி

கடந்த 1950களில் கியூபாவின் உள்ளூர் தொழில்துறையும் கியூபாவுக்கு சொந்தமான வணிகங்களும் தேசிய பொருளாதாரத்தில் மீண்டும் வலுப்பெற்றன. ஆனாலும், அந்நாடு அமெரிக்க நிறுவனங்களின் வலுவான செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது.

நிக்கல், மின்சாரம், தொலைத்தொடர்பு, நிதி போன்ற முக்கிய துறைகளில் அமெரிக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல் உறவு மிகவும் நெருக்கமாக இருந்தது. முக்கிய நகரங்களில், மக்கள் கோகோ-கோலா விளம்பரப் பலகைகளையும், சமீபத்திய மாடல் அமெரிக்க கார்களையும் காண முடிந்தது. அவற்றில் சில இன்றும் சாலைகளில் காணப்படுகின்றன.

அந்தத் தீவில், செல்வமும் ஆடம்பரமும் சமத்துவமின்மை மற்றும் ஊழலுடன் ஒருங்கே நிலவின. ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா, 1952இல் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

அவரது அரசாங்கம் சர்வாதிகார ஆட்சிக்கும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் பெயர் பெற்றது. இது பொது மக்களின் கோபத்தை மேலும் வலுப்படுத்தியது. தீவின் பிரச்னைகள் மற்றும் அமெரிக்காவின் தலையீடு காரணமாகப் பலர் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்தனர். அமெரிக்கா பாடிஸ்டாவை ஆதரித்தது. மேலும் 1925 முதல் 1933 வரை ஜெரார்டோ மச்சாடோ போன்ற பிற சர்வாதிகார கியூப அரசுகளையும் அது ஆதரித்திருந்தது.

“அமெரிக்கா பல வழிகளில் கியூபாவுடன் ஒரு புதிய காலனித்துவ உறவைப் பேணி வந்தது. அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வு இடதுசாரிப் பிரிவுகளில் மட்டுமல்ல. பல்வேறு சித்தாந்தங்களிலும் காணப்பட்டது,” என்கிறார் புஸ்டாமான்டே.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

எதிர்க்கட்சிகளிடையே, சில குழுக்கள் பாடிஸ்டா ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்பிருந்த நிலைமைக்குத் திரும்புவதை விரும்பின. மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஒரு தேசியவாத சீர்திருத்தத்தை விரும்பினர். அதன் மூலம் கியூபா அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும் எனக் கருதினர்.

இந்த இரண்டாவது பிரிவில்தான் ஃபிடல் காஸ்ட்ரோ தனித்துத் தெரியத் தொடங்கினார். அவர் சோசலிச கருத்துகளைக் கொண்ட ஓர் இளம் வழக்கறிஞரும் அரசியல் தலைவரும் ஆவார். கியூபா அதிக இறையாண்மையைக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் நம்பினார். மேலும், ஆயுதப் போராட்டத்தை புரட்சியை உருவாக்குவதற்கான வழியாகக் கண்டார்.

கடந்த 1953இல் நடந்த முதல் தோல்வியுற்ற ஆயுதக் கிளர்ச்சிக்குப் பிறகு அவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டு, பின்னர் மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

கடந்த 1956இன் பிற்பகுதியில், காஸ்ட்ரோ மற்றோர் இளம் அர்ஜென்டினிய புரட்சியாளரான எர்னஸ்டோ “சே” குவேரா மற்றும் பிற 80 பேருடன் மீண்டும் திரும்பினார்.

கிளர்ச்சியாளர்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒரு கெரில்லா போரைத் தொடங்கினர். இரண்டே ஆண்டுகளில், அந்தக் கிளர்ச்சி தீவு முழுவதும் பரவியது. 1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று அதிகாலையில், பாடிஸ்டா ஒரு விமானத்தில் டொமினிக்கன் குடியரசுக்கு தப்பியோடினார்.

ஏழு நாட்களுக்குப் பிறகு, காஸ்ட்ரோவும் ‘தாடி வைத்தவர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்களும், வலுவான மக்கள் ஆதரவுடன் வெற்றியுடன் ஹவானாவுக்குள் நுழைந்தனர்.

இப்படியாகப் புரட்சி தொடங்கியது.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images

தேசியமயமாக்கலின் அலை, பொருளாதாரத் தடை

கியூபா, அமெரிக்கா இடையிலான உறவு முறிவு உடனே நிகழ்ந்துவிடவில்லை.

“உண்மையில், காஸ்ட்ரோ ஒரு தேசியவாதி மட்டுமே எனவும் புதிய அரசுடன் நல்லுறவை விரும்புகிறார் எனவும் நம்பிய சிலர் அமெரிக்க வெளியுறவுத் துறையில் இருந்தனர்,” என்று புஸ்டாமான்டே நினைவுக்கூர்கிறார்.

ஆனால், 1960களின் முற்பகுதியில், இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இந்த உறவை முறித்தன.

முதலாவதாக, காஸ்ட்ரோ ஒரு நிலச் சீர்திருத்த திட்டத்தைத் தொடங்கினார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த சில நிலங்கள் தேசியமயமாக்கப்படும் என்று இந்தத் திட்டம் அறிவித்தது.

இது அப்போது ஒரு கம்யூனிச கருத்தாக இருக்கவில்லை என்று புஸ்டாமான்டே கூறுகிறார். ஏனெனில், காஸ்ட்ரோ அனைத்து சொத்துகளையும் பறித்துக்கொள்ள விரும்பவில்லை. “இது சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவம் பற்றிய ஒரு பார்வையாகவே இருந்தது,” என்று அவர் விளக்குகிறார்.

ஆனால், சோவியத் தூதர் அனஸ்டாஸ் மிகோயன் கியூபாவுக்கு வருகை தந்து, அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபோது, அமெரிக்கா விரைவில் மிகுந்த கவலைக்கு உள்ளானது.

அமெரிக்காவின் மிகப்பெரிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார போட்டியாளராகத் திகழ்ந்த சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR), அமெரிக்காவுக்கு மிக அருகிலேயே தனது செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கியது.

ஹவானாவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று, கியூபாவின் சர்க்கரைக்கு ஈடாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் பரிமாற்றம் செய்து கொள்வதாகும்.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், PhotoQuest/Getty Images

கியூபாவில் இருந்த பல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன என்பதால் இதில் சிக்கல் எழுந்தது.

“ரஷ்ய எண்ணெயை சுத்திகரிக்க மறுக்குமாறு அமெரிக்கா தனது நிறுவனங்களுக்கு உத்தரவிட்டபோது, கியூப அரசாங்கம் அந்தச் சுத்திகரிப்பு நிலையங்களில் தலையிட்டு அவற்றை தேசியமயமாக்கியது,” என்று புஸ்டாமான்டே கூறுகிறார்.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்க சந்தையில் கியூபாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த உத்தரவாதமான சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை வாஷிங்டன் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து கியூபாவின் சர்க்கரையை வாங்கும் முதன்மை நாடாகத் தன்னை மாற்றிக் கொள்வதன் மூலம் மாஸ்கோ இதற்கு பதிலடி கொடுத்தது.

இதுவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடையின் முதல் கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹவானா அமெரிக்காவுக்கு சொந்தமான தொழில்துறைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக தேசியமயமாக்கியது.

கடந்த 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறிவு முழுமையடைந்தது. அத்துடன் காஸ்ட்ரோ தனது புரட்சியின் சோசலிச பயணத்தைத் தொடங்கினார்.

மிகவும் பதற்றமான ஆண்டுகள்

அடுத்த சில மாதங்கள் மிகவும் பதற்றமாக இருந்தன. 1961 ஏப்ரலில் காஸ்ட்ரோவை எதிர்த்த, பெரும்பாலும் கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட சுமார் 1,500 போராளிகள், காஸ்ட்ரோவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்காக சிஐஏ-வின் ஆதரவுடன் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் கியூபாவுக்கு வந்தனர்.

இது பிக்ஸ் வளைகுடா படையெடுப்பு என்று அழைக்கப்பட்டது.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Photo12/Universal Images Group via Getty Images

ஆனால், அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி கடைசி நேரத்தில் வான்வழி ஆதரவைத் திரும்பப் பெற்ற பிறகு, கியூப படைகள் நாட்டின் தெற்கில் வெறும் மூன்று நாட்களில் அவர்களைத் தோற்கடித்தன.

இந்தத் தோல்வி காஸ்ட்ரோவை மேலும் பலப்படுத்தியது. அதோடு அவர் தனது சோசலிச திட்டங்களை இன்னும் அதிகமாக முன்னெடுத்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் வரலாற்றுப் பதிவுகளின்படி, இது கியூபா மீதான கென்னடியின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வைத்தது.

பின்னர், பிக்ஸ் வளைகுடா படையெடுப்பு செய்யத் தவறியதைச் சாதிப்பதற்காக, வாஷிங்டன் ‘ஆபரேஷன் மங்கூஸ்’ என்ற புதிய ரகசிய திட்டத்தைத் தொடங்கியது.

இந்தத் திட்டத்தில் அரசியல், உளவியல், ராணுவ, நாசவேலை மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் அடங்கியிருந்தன. காஸ்ட்ரோ உள்பட முக்கிய அரசியல் தலைவர்களைக் கொல்லும் முயற்சிகளும் இதில் அடங்கியிருந்தன.

“கியூபாவில் ஒரு கிளர்ச்சிக்கான சூழலை உருவாக்கி, அந்நாட்டைப் பேரழிவின் விளிம்புக்குக் கொண்டு செல்வதே ‘ஆபரேஷன் மங்கூஸ்’ திட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், ஓர் உள்நாட்டு இயக்கம் புரட்சியை வீழ்ச்சியடையச் செய்வதற்கான வாய்ப்புகள் நடைமுறையில் இல்லை என்பது தெளிவானது” என்று கியூபா வரலாற்று அகாடெமியின் ஆய்வாளர் ஆஸ்கார் சானெட்டி பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

“எனவே, மார்ச் 1962இல் தேவையான அனைத்து ராணுவ வழிமுறைகளையும் பயன்படுத்தி அமெரிக்கா நேரடியாகத் தலையிடும் வாய்ப்பு திணிக்கப்பட்டது” என்று சானெட்டி மேலும் விளக்கினார்.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அளவில் சிறிய நாடான கியூபாவுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது, அப்போது நிகிதா குருசேவ் தலைமையிலான சோவியத் ஒன்றியம் அதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்தது. 1962ஆம் ஆண்டின் கோடையில், கியூபாவுக்கான சோவியத் ஆயுத ஏற்றுமதி அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்தன.

அக்டோபரில் ஒரு விமானம் எடுத்த புகைப்படங்களில் அந்தத் தீவில் ஒரு ஏவுகணை தளம் இருப்பது கண்டறியப்பட்டது. இது கியூப ஏவுகணை நெருக்கடிக்கு வழிவகுத்தது. இது பனிப்போரின் மிகவும் ஆபத்தான தருணம்.

அந்தக் காலத்தின் இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் அணு ஆயுத மோதல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உலகம் 13 நாட்கள் கவனித்துக் கொண்டிருந்தது; அதன் நடுவில் கியூபா இருந்தது.

தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அந்த நெருக்கடி முடிவுக்கு வந்தது. மேலும் சோவியத் ஒன்றியம் கியூபாவில் இருந்து தனது ஏவுகணைகளை அகற்றியது. இருப்பினும், அதனால் ஏற்பட்ட சேதம், வலி, அவநம்பிக்கை ஆகியவை மிகவும் ஆழமானவையாக இருந்தன.

கியூப அரசாங்கம், சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கிய சோசலிச கூட்டணியுடன் இன்னும் நெருக்கமாகப் பிணைந்ததுடன், தனது வடக்கே அமைந்துள்ள அண்டை நாடான அமெரிக்காவில் இருந்து மேலும் விலகிச் சென்றது.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், Najlah Feanny/Corbis via Getty Images

பல தசாப்தகால முட்டுக்கட்டை

கடந்த 1960களின் நடுப்பகுதியில் இருந்து 1990கள் வரையிலான ஆண்டுகள், அமெரிக்கா, கியூபா இடையே ‘பதற்றம் தணிந்த’ காலமாக இருந்தது என்று கியூப வரலாற்றாசிரியர் ரஃபேல் ரோஜாஸ் கூறுகிறார். இது குடியேற்றம், பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புக்குக் கூட வித்திட்டது.

ஆனால், இதன் காரணமாக கியூபா அப்பகுதியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதை நிறுத்திவிட்டதாக அர்த்தமல்ல.

அந்த ஆண்டுகளில், பல ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அதிபர்கள் மாறி மாறி ஆட்சி புரிந்தனர். ஹவானாவில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஒற்றைக் கட்சி சோசலிச அமைப்பு உறுதியாக நிலைபெற்றது.

கியூப புரட்சி அப்பகுதியில் இடதுசாரி இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்தது. இவற்றில் 1960களில் கொலம்பிய கெரில்லாக்கள், 1980களில் நிகரகுவாவில் சாண்டினிஸ்மோ, 1990களின் பிற்பகுதியில் வெனிசுவேலாவில் பொலிவேரியன் புரட்சி ஆகியவை அடங்கும்.

இந்தக் காலகட்டத்தில் குடியேற்றம் என்பது மோதல், ஒத்துழைப்பு ஆகிய இரண்டுக்கும் காரணமானதாக இருந்தது. 1959 முதல் அமெரிக்கா கியூப குடியேறிகளுக்கு சலுகை அளித்து வருகிறது. இது எதிர்ப்பாளர்களையும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைத் தேடுவோரையும் கியூபாவை விட்டு வெளியேறத் தூண்டியது.

மக்கள் சட்டபூர்வ வழிகளில் வெளியேறினர். ஆனால் பலர் ஆபத்தான சிறிய படகுகளில் கடலைக் கடந்தனர்.

இதற்கு ஒரு முக்கிய உதாரணம் மரியல் சம்பவம். அந்தச் சம்பவத்தில், நாட்டைவிட்டு வெளியேற விரும்பும் எவருக்கும் காஸ்ட்ரோ கதவுகளைத் திறந்துவிட்ட பிறகு, 125,000 பேர் ஃப்ளோரிடாவுக்கு வெளியேறினர்.

மற்றொரு முக்கிய நிகழ்வு 1994இல் நடந்த கடல்வழி புலம்பெயர்வு நெருக்கடி. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பிறகு, கியூபா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

அந்த வீழ்ச்சி வலுவான, அசாதாரணமான போராட்டங்களுக்கு வித்திட்டது. இந்த அழுத்தத்தின் விளைவாக, காஸ்ட்ரோ எல்லைகளை மீண்டும் திறந்துவிட்டார். சுமார் 35,000 பேர் வெளியேறி அமெரிக்காவுக்கு சென்றனர்.

அமெரிக்கா, கியூபா இடையிலான பல்லாண்டுக்கால பகைமை உருவானது எப்படி?

பட மூலாதாரம், ADALBERTO ROQUE/AFP via Getty Images

இது வாஷிங்டனை தனது குடியேற்றக் கொள்கையை மாற்றி, புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்த வைத்தது. அதன் பெயர் ‘ஈரக் கால், உலர்ந்த கால்’ கோட்பாடாக அறியப்பட்டது. அதாவது, அமெரிக்க மண்ணை அடையும் எந்தவொரு கியூபரும் அங்கு தங்கலாம். ஆனால், கடலில் தடுத்து நிறுத்தப்படும் எவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதே இதன் பொருள்.

கடந்த 1990களில் கியூபாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1996ஆம் ஆண்டின் ஹெல்ம்ஸ்-பர்டன் சட்டம், பொருளாதாரத்தின் மீது மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்ததுடன், பொருளாதாரத் தடையையும் சட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கியது. இதன் பொருள் என்னவெனில், இந்தப் பொருளாதாரத் தடையை முடிவுக்குக் கொண்டு வர காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்பட்டது. வெறும் அதிபரின் நிர்வாக ஆணை மட்டும் போதுமானதாக இருக்கவில்லை.

இந்தத் தடை உத்தரவின் காரணமாகவும், அத்துடன் நாட்டின் சொந்த உள் கட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்தி சார்ந்த பலவீனங்கள் காரணமாகவும், கியூபா சுற்றுலாத் துறையை வெகுவாகச் சார்ந்திருக்கத் தொடங்கியது.

இன்றும்கூட, 1990களில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அந்நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை.

உறவில் ஏற்பட்ட முன்னேற்றம்

கடந்த 1994ஆம் ஆண்டு முதல் இன்று வரை, அமெரிக்கா, கியூபா இடையிலான உறவு இன்னும் முழுமையாக மீளவில்லை. இருப்பினும், இரு நாடுகளும் சற்றே நெருக்கமான காலங்களும் மேலும் விலகியிருந்த காலங்களும் இருந்தன.

ஃபிடல் காஸ்ட்ரோ 2006இல் கடுமையாக நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து பதவியைத் துறந்தார். அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ பதவியேற்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ரவுல் காஸ்ட்ரோவின் அரசாங்கத்திலும், பராக் ஒபாமாவின் அதிபர் பதவிக் காலத்திலும், 2015இல் இரு நாடுகளும் உறவை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் முன்னேறின.

“கடந்த 2013இலேயே, ரவுலின் பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸ் மற்றும் கியூபாவின் கத்தோலிக்க திருச்சபையின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்காவும் கியூபாவும் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கின,” என்று மெக்சிகோ கல்லூரியை சேர்ந்த வரலாற்றாசிரியர் ரோஜாஸ் நினைவுகூர்கிறார்.

கடந்த 2015இல் ஏற்பட்ட ‘உறவுத் தளர்வு’ என்று அழைக்கப்படும் நிகழ்வுக்குப் பிறகு, தூதரகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன, பயணக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன. மேலும், பொருளாதார தாராளமயமாக்கல் மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

ஆனால், ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, 2017இல் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, இது குலையத் தொடங்கியது.

மேலும், 2025இல் அவர் திரும்பிய பிறகு, அந்தத் தீவின் மீதான பொருளாதாரத் தடை, அழுத்தம், கட்டுப்பாடுகள் இன்னும் வலுவடைந்தன. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமும் அதிகரித்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU