Home தேசிய national tamil அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தரானால் இந்தியாவுக்கு பின்னடைவா? மோதி மீது எழும் கேள்விகள்

அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தரானால் இந்தியாவுக்கு பின்னடைவா? மோதி மீது எழும் கேள்விகள்

14
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மத்தியஸ்தம், இந்தியா

பட மூலாதாரம், MANDEL NGAN/AFP via Getty Images

9 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தானில் நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாகக் கூறப்பட்டதில் இருந்து, மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

இதை அரசாங்கத்தின் ‘ராஜ்ஜீய தோல்வி’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் இந்தியா ‘தோல்வியடைந்துவிட்டதாகவும்’, பாகிஸ்தான் இந்த விஷயத்தில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த சில நாட்களாக இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொடர்பில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியை அழைத்துப் பேசினார். ஆனால் ‘அமைதிப் பேச்சுவார்த்தையில்’ பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடப்படுவதை இந்தியாவுக்கு பின்னடைவாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதுவரை நடந்தது என்ன?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மத்தியஸ்தம், இந்தியா

பட மூலாதாரம், DREW ANGERER,TOLGA AKMEN/AFP via Getty Images

“மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து, அப்பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த அறிக்கையை ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். இதிலிருந்து, ஒருவேளை பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் தயாராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

மறுபுறம், இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்து, இரானிய தூதர் ஒருவர் பிபிசி நியூஸ் உருதுவிடம் கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு சில வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

“இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகள் தேவையான அடித்தளத்தை அமைத்து வருகின்றன. இது சாதகமான முடிவுகளைத் தரும் என்று நம்பப்படுகிறது,” என்று பாகிஸ்தானுக்கான இரானிய தூதர் கூறியதாக அல் ஜசீரா மேற்கோள் காட்டியுள்ளது.

இதற்கிடையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாகிஸ்தானைப் பாராட்டியுள்ளார்.

“அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பாகிஸ்தானின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். ஷாபாஸ் ஷெரீப் மற்றும் பிற நட்பு நாடுகளின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசின் நிலைப்பாடு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மத்தியஸ்தம், இந்தியா

பட மூலாதாரம், Anadolu via Getty Images

இந்தியாவின் ராஜ்ஜீய கொள்கை குறித்த கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 24 செவ்வாய்க்கிழமை அன்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த மோதல் குறித்து நாங்கள் எங்களது கவலையை வெளிப்படுத்தி வருகிறோம். நான் மேற்கு ஆசியாவின் அனைத்துத் தலைவர்களுடனும் பேசி, பதற்றத்தைக் குறைக்குமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தேன். பொதுமக்கள் மீதான தாக்குதல்களையும், போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறைகள் மீதான தாக்குதல்களையும் நாங்கள் எதிர்த்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை அழைத்துப் பேசியதாகவும், வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் குறித்து இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் பிரதமர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

‘அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை தான் வலியுறுத்தியதாகவும்’ பிரதமர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என்ன?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மத்தியஸ்தம், இந்தியா

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images

இதற்கிடையில், இரான் போர் காரணமாக உருவாகியுள்ள சூழ்நிலை குறித்து விவாதிக்க மார்ச் 25 அன்று மோதி அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பிபிசி செய்தியாளர் சந்தன் ஜஜ்வாரேவிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.யான தாரிக் அன்வர், பாகிஸ்தானின் பங்கு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறிய பதிலில் எங்களுக்கு திருப்தி இல்லை என்றார்.

பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து மார்ச் 24-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “பிரதமரே சமரசம் செய்துகொண்டதால், நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்புவதை மட்டுமே மோதி செய்கிறார். மோதியால் ஒருபோதும் இந்தியாவின் நலனுக்காக முடிவுகளை எடுக்க முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது,” என்று சாடினார்.

இரான் போர் தொடங்கியதில் இருந்து மோதி அரசின் வெளியுறவு கொள்கையை ஆதரித்து வந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்த முறை அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தால், அதற்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், அமெரிக்கா மற்றும் இரானுடன் உள்ள நல்லுறவைப் பயன்படுத்தி இந்தியா இந்த விஷயத்தில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று நான் மூன்று வாரங்களாகச் சொல்லி வருகிறேன். ஆனால் பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து அதைச் செய்துவிட்டன. அவர்களுக்கு எனது வாழ்த்துகள், ஏனென்றால் நாம் அனைவரும் அமைதியையே விரும்புகிறோம். ஆனால் இதற்கான எந்தப் பெருமையும் இந்தியாவுக்குக் கிடைக்காது, பாகிஸ்தானே அனைத்துப் பெருமையையும் பெற்றுக்கொள்ளும்,” என்றார்.

பிரபல மூலோபாய விவகார ஆய்வாளர் செல்லனி, பிரதமர் மோதிக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஒரு ‘சமாதானப்படுத்தும்’ முயற்சி என்று விவரித்தார்.

அவர் கூறுகையில், “உண்மை என்னவென்றால், முக்கியமான சர்வதேச விவகாரங்களில் டிரம்ப் பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்தார். பின்னர், பிரதமர் நரேந்திர மோதி இதைத் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவருடன் பேசி அவரை சமாதானப்படுத்த முயன்றார். டிரம்ப் தனது நல்ல நண்பரான மோதியைக் குறைத்து மதிப்பிட்ட மற்றொரு தருணம் இது” என்று தெரிவித்தார்.

‘இந்தியா விலகி இருப்பதே நல்லது’

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மத்தியஸ்தம், இந்தியா

பட மூலாதாரம், Ronen Zvulun/POOL/AFP via Getty Images

ஆனால், சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகி இருப்பதே நல்லது என்று மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா நம்புகிறார்.

“இந்தியா இஸ்ரேலுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது, ஆனால் பாகிஸ்தானும் இரானும் இஸ்ரேலை ஒரு நாடாகக் கூட அங்கீகரிக்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.

சேகர் குப்தாவின் கூற்றுப்படி, பாகிஸ்தான் ஒரு நம்பகமான நாடு அல்ல.

அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடான இரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்க பாகிஸ்தான் விரும்புகிறது. அதே நேரத்தில், அது மற்றொரு இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானைத் தாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த இரானும் முன்மொழிந்துள்ளது. இது மிகவும் விசித்திரமான சூழ்நிலை. இதில் இந்தியா தலையிடக்கூடாது,” என்றார்.

முன்னாள் இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எலியன் லெவி செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் கூறுகையில், “இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் தலையீட்டை இஸ்ரேல் விரும்பாது. இஸ்ரேல் விஷயத்தில் பாகிஸ்தான் எப்போதும் மிகவும் கடினமான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அது இஸ்ரேலை அங்கீகரித்தது கூட இல்லை…” என்றார்.

இது ஒருபுறமிருந்தாலும், இரான் இதுவரை மறுத்து வந்த விஷயங்களை ஏற்றுக்கொண்டால், அது வரவேற்கப்பட வேண்டும், ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் கூறுகையில், “நிலவியல் ரீதியாக, இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு சாதகமான நிலை உள்ளது,” என்றார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் மத்தியஸ்தம், இந்தியா

ஆனால், சௌதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், வளைகுடா பிராந்தியத்தில் இரானின் அதிகாரம் பலவீனமடைந்து சௌதி அரேபியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்க, இரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா அதிகரிக்க வேண்டும் என்று சௌதி அரேபியா விரும்புவதாகவும் அவர் கூறினார்.

சௌதி அரேபியா தன்னுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் போகலாம் என்றும், இதனால் பாகிஸ்தான் விருப்பமில்லாமலேயே இரான் போருக்குள் இழுக்கப்படலாம் என்றும் பாகிஸ்தான் அஞ்சுவதாக சிபல் கூறுகிறார்.

இந்த முழு செயல்முறையிலிருந்தும் இந்தியா விலகி இருப்பதே நல்லது என்று குறிப்பிடும் சிபல், “இந்த விஷயத்தில் நாம் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இரான் மத்தியஸ்தம் செய்வதற்கான கதவுகளை நாமே திறந்துவிடுவோம்” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU