SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடனான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இரானின் தலைமை தீவிர ராஜிய ரீதியான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு எதிராக டிரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிராந்திய சக்திகளை செயல்படுத்த இரான் தலைமை முயற்சிக்கிறது.
இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பிராந்திய போரை தூண்டக்கூடும் என இரான் கூறியுள்ளது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகியவை தங்களின் வான்வெளி மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்தி இரான் மீதான எந்தவொரு சாத்தியமான தாக்குதலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளன. இது, அமெரிக்காவுக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தளங்கள் மற்றும் வளங்களையும் இலக்கு வைப்போம் என இரான் எச்சரித்துள்ளது.
இராக், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, குவைத், ஜோர்டான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சிரியா ஆகிய நாடுகளில் சாத்தியமான தாக்குதல்கள் நடக்கக்கூடும்.
அமெரிக்காவுடனான முந்தைய மோதல்களுக்கு இரானின் எதிர்வினை அடையாள ரீதியானதாக மட்டுமே இருந்தது.
2025ஆம் ஆண்டு இரான்-இஸ்ரேல் போரின்போது அமெரிக்காவின் தாக்குதல்களை தொடர்ந்து இரான் முன்கூட்டியே எச்சரித்துவிட்டு கத்தாரின் அல் உதெய்ட் விமானப் படை தளம் மீது தாக்குதல் நடத்தியது.
காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பின்னர், 2020 ஜனவரியில் இராக்கின் ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பும் இரான் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
எனினும், தற்போதைய சூழலில் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் தன்னுடைய இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாக இரான் கருதலாம்.
இரானின் சமீபத்திய பதற்றமான சூழலின்போது டிரம்ப், “இரானில் புதிய தலைமையை” கண்டறிய வேண்டிய நேரம் என டிரம்ப் தெரிவித்திருந்தார். அங்கு புதிய போராட்டங்களைத் தூண்டி இஸ்லாமிய குடியரசு ஆட்சியை கவிழ்க்க ராணுவ வாய்ப்புகள் குறித்து அவர் யோசித்ததாகவும் தகவல் வெளியானது.
பதற்றம் அதிகரித்த நிலையில், தங்கள் நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என இரான் எச்சரித்திருந்தது.
இரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் மீது அமெரிக்கா ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துவதைத் தடுக்க இரானின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட இரானின் எதிர்தரப்பு தலைவர் ரெஸா பஹ்லவி அத்தகைய தாக்குதலுக்கு அழைப்பு விடுத்திருப்பது, தற்போதைய சூழலில் அமைப்பை மேலும் பலவீனப்படுத்தி, இரானில் புதிய போராட்டங்களை தூண்டக்கூடும்.
1. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுதல்
பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி 28ஆம் தேதி, 30,000 முதல் 40,000 வரையிலான அமெரிக்க துருப்புகள் மத்திய கிழக்கின் எட்டு அல்லது 9 தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ‘ஆயிரக்கணக்கான இரானிய யுஏவி (டிரோன்கள்) மற்றும் இரானிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்புக்குள்ளேயே நிறுத்தப்பட்டுள்ளதாக’ கூறினார்.
இரானிடம் குறுகிய மற்றும் நடுத்தர தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கவல்ல சுமார் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இஸ்ரேலுடனான போரின்போது, இரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவதில் வெற்றி கண்டன.
அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வைத்துள்ளது, ஆனால் இஸ்ரேலை விட அமெரிக்கா இன்னும் பெரிய பகுதியை பாதுகாக்க வேண்டியிருக்கும்.
கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இரான் தன்னுடைய ராணுவ திறன்களை மேம்படுத்த உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. எதிர் தாக்குதல் கொள்கை
பட மூலாதாரம், Fadel Itani/NurPhoto via Getty Images
இரானின் பழைய ராணுவ தொழில்நுட்பம் அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாது, எனவே இரான் தன்னுடைய பாரம்பரிய வியூகத்தை மாற்றலாம்.
வேகமான தாக்குதல் படகுகள் அல்லது டிரோன்களை ஒரே நேரத்தில் அனுப்பி எதிரி சென்சார்கள் மற்றும் வான் பாதுகாப்புகளை செயலிழக்க செய்ய முயற்சிக்கலாம்.
பெர்சிய வளைகுடாவில் தங்களின் வேக படகுகள் மற்றும் ஷாஹெத்-136 டிரோன்களை பயன்படுத்தி, யுக்ரேனிய போரில் ரஷ்யா பெரியளவில் பயன்படுத்தியது போன்ற ஒரு வியூகத்தை இரான் தழுவக்கூடும்.
பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், சில இரானிய ஊடகங்கள், குறிப்பாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சில ஊடகங்கள், இந்த வியூகத்தை வலியுறுத்தி கூறுகின்றன.
ஜனவரி 29ஆம் தேதி இரானிய ராணுவம் தங்களுக்கு 1,000 ‘ஸ்டிரேட்டஜிக் டிரோன்கள்’ கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவித்தது.
3. பிராந்திய கூட்டாளிகளை முடுக்கி விடுதல்
பட மூலாதாரம், Fadel Itani/NurPhoto via Getty Images
இரான் பல தசாப்தங்களாக தன்னுடைய கூட்டணி ஆயுதக்குழுக்களுக்கு (Axis of Resistance) நிதியளித்து ஆயுதங்களை வழங்கியுள்ளது.
இதில், இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்கள், லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் ஏமனில் ஹூதிகள் போன்றவை அடங்கும்.
இரானிய நட்பு நாடுகளில் உள்ள இத்தகைய குழுக்களை குறிப்பிடத்தக்க அளவில் இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் சேதப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இரான் தனது எல்லைக்கு அப்பால் செல்வாக்கை பயன்படுத்தும் திறனை இஸ்ரேல் குறைத்துள்ளது. இருப்பினும், இந்தக் குழுக்கள் கூட்டாக அமெரிக்க இலக்குகளைத் தாக்கினால் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
இந்த குழுக்கள் 2025ஆம் ஆண்டு இரான் – இஸ்ரேல் போரில் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் அமெரிக்காவுடனான போர் இரானுக்கு அதன் இருப்புக்கான அச்சுறுத்தலாக மாறினால் இரான் மற்றும் அதன் நட்பு ஆயுதக்குழுக்களின் எதிர்வினைகள் மாறக்கூடும்.
இதுவரை, இரான் ஆதரவு பெற்ற பி.எம்.எஃப்(Popular Mobilization Forces – PMF) உடன் இணைந்த சில இராக்கிய குழுக்கள் இரானைப் பாதுகாப்பது பற்றிப் பேசியுள்ளன.
அதேபோன்று, அல்-நுஜாபா இயக்கம் மற்றும் பத்ர் அமைப்பு (Badr) ஆகியவை இரானுக்கு தங்களின் ஆதரவை அறிவித்துள்ளன.
ஹெஸ்பொலாவின் பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசெம் இரானுக்கான ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், தங்களின் குழு எப்போது, எப்படி தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா இரானை தாக்கினால், ஹூதிகள் செங்கடலில் அமெரிக்க கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கலாம்.
ஜனவரி 26ஆம் தேதி, கப்பல் ஒன்று தீப்பிடித்து எரியும் வீடியோவை ஹூதிகள் வெளியிட்டிருந்தனர், அதில் “விரைவில்” (Soon) என எழுதப்பட்டிருந்தது.
எனினும், 2025ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க ஹூதிகள் விரும்பினால், இரானுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என அந்த அமைப்பு முடிவெடுக்கலாம்.

4. ஹோர்முஸ் நீரிணையை மூடுதல்
மேற்கு நாடுகளுடனான எந்தவொரு பெரும் பதற்றத்தின் போதும் இரான் தொடர்ந்து விடுக்கும் பழைய அச்சுறுத்தலே இது.
வளைகுடாவின் இந்தக் குறுகிய பாதை வழியே உலகின் எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடக்கிறது.
கடல் கண்ணிவெடிகள், குரூயிஸ் ஏவுகணைகள், கடலோர பாதுகாப்பு அமைப்புகள், அதிவேக படகுகள் ஆகியவை நீரிணையை மூடுவதற்கு பயன்படுத்தக்கூடும்.
இரானின் கடைசி புகலிடமாக இது இருக்கக்கூடும். ஏனெனில், இரானிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கிவரும் அதன் நட்பு நாடான சீனா மற்றும் இரானுக்கு தற்போது வரை ஆதரவு அளித்து வரும் வளைகுடா நாடுகளின் வர்த்தகத்தையும் இது பெருமளவில் பாதிக்கக்கூடும்.
அதனால்தான் சமீபத்திய அமெரிக்க-இரான் பதற்றங்களின் போது இரானின் சொல்லாடல்களில் இது முக்கியமாக இடம்பெறவில்லை.
என்ன நடக்கலாம்?
இரான் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுமே ராஜ்ஜீய ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளித்தாலும், அவர்களின் நிலைப்பாடுகளில் உள்ள மிகப்பெரிய இடைவெளி காரணமாக இரு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவது எளிதானது அல்ல.
டிரம்ப் நிர்வாகம் படைபலத்தைப் பயன்படுத்தினால், இரான் தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு இஸ்லாமியக் குடியரசைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு சில சலுகைகளை அறிவிக்கக் கூடும்.
மறுபுறம், மோதலின் போது இரான் அமெரிக்காவுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் அது மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் நிலை வரலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



