Home தேசிய national tamil அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?

8
0

SOURCE :- BBC NEWS

| அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான்  நிராகரிப்பது ஏன்? |

பட மூலாதாரம், Getty Images

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது என அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.

பெயர் குறிப்பிடாத ஒரு “மூத்த அரசியல்-பாதுகாப்பு அதிகாரி” ஒருவரை மேற்கோள் காட்டி, சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது உட்பட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரானின் ஐந்து நிபந்தனைகளை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது. அதன் பிறகு வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளைக் குறிவைத்து இரான் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது.

செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 24) பேசிய டிரம்ப், பேச்சுவார்த்தைக்காக இரான் “ஏங்குவதாகவும்”, இரானிய பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவிற்கு ஒரு “மிகவும் குறிப்பிடத்தக்க பரிசை” வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

அந்த “பரிசு” எண்ணெய், எரிவாயு மற்றும் ஹோர்மூஸ் நீரிணை தொடர்பானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அவர் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

ஆனால் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் பேச்சுவார்த்தை குறித்த எந்தவொரு கருத்தையும் முற்றிலும் நிராகரித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் திட்டத்தில் என்னென்ன அடங்கியுள்ளன?

இஸ்ரேலின் சேனல் 12 செய்திகளின்படி, போர் முடிவுக்கு வர இரான் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

அமெரிக்க அதிகாரிகள் இந்தப் போரைத் தொடங்கியதற்குக் கூறிய முக்கியக் காரணங்களையே இந்தக் கோரிக்கைகள் மையமாகக் கொண்டுள்ளன.

அதாவது இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுப்பது. இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை, அதேபோல் இரானும் இதனை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.

மேலும், அதன் ஏவுகணைத் திட்டத்தினால் ஏற்படும் அச்சுறுத்தலை அகற்றுவது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகள், இரான் “ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும்”, அணுசக்தி நிலையங்களை அகற்றுவதாக உறுதியளிக்க வேண்டும் மற்றும் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றன.

இந்த முன்மொழிவுகளின்படி, இரான் தனது ஏவுகணைத் திட்டத்தின் வரம்பு மற்றும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.

கூடுதலாக, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா, காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற பிராந்திய ஆயுத குழுக்களுக்கு நிதி வழங்குவதை இரான் நிறுத்த வேண்டும்.

இரான் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதும் முன்மொழிவில் உள்ளது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணையின் வழியாக செல்கிறது. இந்த நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மேலும் உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், இரான் மீதான அனைத்து சர்வதேசத் தடைகளும் நீக்கப்படும் என்றும் அமெரிக்காவின் இந்த திட்டம் கூறுகிறது.

பல அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து, இரான் தனது அணுசக்தி நிலையங்களின் ஆய்வுகளை நிறுத்தியதால், கடந்த நவம்பரில் மீண்டும் முழுமையான தடைகள் விதிக்கப்பட்டன.

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான்  நிராகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இரானின் நிபந்தனைகள் என்ன கூறுகின்றன?

பிரஸ் டிவி தகவலின்படி, போரை முடிவுக்குக் கொண்டுவர இரான் ஐந்து நிபந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளது.

அதில் “எதிரியின் போர் மற்றும் படுகொலைகளை” முற்றிலும் நிறுத்துவதும் அடங்கும்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அதிகாரிகள் “ஆக்டோபஸின் தலையைத் துண்டிப்பதே” தங்களின் நோக்கம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளனர்.

போரின் முதல் நாளில் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதில் இருந்து, பல உயர்நிலை இரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரானின் மற்ற நிபந்தனைகளில், “இஸ்லாமிய குடியரசின் மீது மீண்டும் போர் திணிக்கப்படாது என்பதை உறுதி செய்வதற்கான உறுதியான வழிமுறைகள்” என்பதும் அடங்கும்.

போர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளையும், ஹோர்மூஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உரிமையையும் இரான் கோருகிறது.

முக்கியமாக, பிராந்தியத்தில் உள்ள இரானின் கூட்டாளிகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று இரான் விரும்புகிறது.

ஹெஸ்பொலாவிற்கு எதிரான தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

போர் தொடங்குவதற்கு சற்று முன்பு பிப்ரவரி மாதம் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரான் முன்வைத்த கோரிக்கைகளுடன் இவை கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று பெயர் குறிப்பிடப்படாத ஓர் அதிகாரி கூறியதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான்  நிராகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

போரின் முடிவு தென்படுகிறதா?

இறுதியில் பேச்சுவார்த்தைகள் நடந்தால், டிரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் (டிரம்பின் மருமகன்) ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த அமைதி முன்மொழிவுகள், காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தத் தூதர்கள் பின்பற்றிய மாதிரியைப் போலவே இருப்பதாகத் தெரிகிறது.

அதே நடைமுறை இங்கும் பின்பற்றப்பட வேண்டுமானால், அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்தின் அம்சங்களை பேச்சுவார்த்தையாளர்கள் இறுதி செய்வதற்கு ஏதுவாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் இரான் மீதான தங்கள் தாக்குதல்களை நிறுத்துவதில் இஸ்ரேலியத் தலைவர்கள் அதிக மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்று இஸ்ரேலின் சேனல் 12 தெரிவித்துள்ளது.

காஸா பேச்சுவார்த்தைகளின் போது போர் நிறுத்தம் குறித்து நெதன்யாகு இதேபோன்ற தயக்கங்களைக் கொண்டிருந்தார்.

இரான் டிரம்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்று இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் நிர் பர்கட் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இந்த சுற்றின் முடிவில், ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சரி, ஏற்படாவிட்டாலும் சரி, நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம் என்று நான் நம்புகிறேன்” என்று பர்கட் கூறினார்.

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான்  நிராகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இரான் தரப்பில் யார் இதில் ஈடுபடுவார்கள் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்காவுடன் யார் பேசுகிறார்கள் என்பதை டிரம்ப் கூறவில்லை.

“நாங்கள் சரியான நபர்களுடன் பேசி வருகிறோம்” என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று தனது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் காயமடைந்த பிறகு இதுவரை வெளியே காணப்படாத இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி இதில் இடம்பெறவில்லை என்று நம்பப்படுகிறது.

சமீபத்திய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இரானின் வெளியுறவு அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, தற்போதைய இரானிய தலைமை அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையாக உள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான்  நிராகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஏனென்றால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில்தான் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அந்தப் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் இரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் அமைதிக்கான இந்த முன்மொழிவுகள் வந்துள்ளன.

அவர்களின் நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கோ அல்லது இரானின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதற்கோ பயன்படுத்தப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பிபிசி தமிழின் ‘பிரச்னைகளைப் பேசுவோம்’

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU