Home தேசிய national tamil அமெரிக்காவின் ‘அமைதி திட்டம்’ நிராகரிப்பு – 5 நிபந்தனைகள் விதித்த இரான்

அமெரிக்காவின் ‘அமைதி திட்டம்’ நிராகரிப்பு – 5 நிபந்தனைகள் விதித்த இரான்

9
0

SOURCE :- BBC NEWS

அமெரிக்காவின் 'அமைதி திட்டத்தை' நிராகரித்து 5 நிபந்தனைகளை விதித்த இரான் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், AFP via Getty Images

25 மார்ச் 2026, 14:42 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதி திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது என மூத்த அரசியல் – பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரஸ் டிவி கூறியுள்ளது.

அந்த அதிகாரியின் பெயர், பதவி பற்றி பிரஸ் டிவி எந்த விவரமும் வழங்கவில்லை.

இரான் தனது முடிவின்படி, தனது நிபந்தனைகள் பூர்த்தியாகும் போது மட்டுமே இந்த போரை முடிக்கும் என அந்த அதிகாரி கூறியதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.

பிரஸ் டிவி தகவல்படி, அந்த அதிகாரி ஐந்து முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

  • எதிரியின் “தாக்குதல்கள் மற்றும் கொலைகள்” முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.
  • மீண்டும் போர் தொடங்காமல் இருக்க உறுதியான செயல்முறைகள் உருவாக்கப்பட வேண்டும்
  • போர் சேதங்களுக்கான இழப்பீடு மற்றும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
  • ஆயுத குழுக்களுக்கு எதிராக நடக்கும் போர் உட்பட அனைத்து போர்களும் நிறுத்தப்பட வேண்டும்.
  • ஹோர்மூஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் இரானின் அதிகாரத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.

மேலும், அமெரிக்கா பல்வேறு தூதரக வழிகளின் மூலம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகவும், ஆனால், அந்த முன்மொழிவுகளை “அதிகப்படியானவை” என இரான் கருதுவதாகவும் பிரஸ் டிவி கூறுகிறது.

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

15 அம்ச திட்டங்கள் என்ன?

முன்னதாக போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் 15 அம்சங்கள் கொண்ட திட்டத்தை இரான் பெற்றுள்ளதாக இரண்டு பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இரான் மீதான தடைகள் நீக்கம், இரான் தனது அணுசக்தி நிலையங்களை அகற்ற வேண்டும், அமைதியான பயன்பாட்டுக்கான அணுசக்தி திட்டங்களில் ஒத்துழைப்பு, ஏவுகணை கட்டுப்பாடு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி, சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்க ராணுவம் சில படைகளை இரானுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. ஆனால் அவை எங்கு அல்லது எப்போது என்பது துல்லியமாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஆயத்துல்லா அலி காமெனெயியின் பேனர்

பட மூலாதாரம், Reuters

இரான் நிர்வாகம் ஏன் இன்னும் வீழ்ச்சியடையவில்லை?

ஜிஹான்சேஹ் ஹபீபியசத், பிபிசி பாரசீக சேவை

போர் தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது, மேலும் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.

இரான் நாட்டிற்குள் இருக்கும் சில மக்கள், போர் அதே நாளில் முடிவடையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இரான் நாட்டின் ஆட்சி இப்போதும் நீடிக்கிறது.

நாட்டை நிர்வகிப்பதில் இரான் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது.

அதி உயர் தலைவர் மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், அங்கு ஓர் இணை அரசு உள்ளது. அதுதான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி). இது முறையான ராணுவ அதிகாரத்தையும் தாண்டி அதிகாரம் கொண்ட ஒரு நிறுவனமாகும்.

இந்தப் போரிலும், கடந்த ஆண்டு நடந்த மோதலிலும் பல உயர்நிலை ஐஆர்ஜிசி தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும் பதிலாக, அந்த இடத்தைப் பிடிக்க மற்றொருவர் தயாராக இருப்பதாக அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

ஐஆர்ஜிசி அமைப்பு ‘பாசிஜ்’ என்ற அமைப்பையும் கட்டுப்படுத்துகிறது. இது சுமார் ஒரு மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தன்னார்வப் படை ஆகும். இவர்கள் பெரும்பாலும் எதிர்ப்புகளை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்த வீதிகளில் நிறுத்தப்படுகிறார்கள்.

சில ‘பாசிஜ்’ சோதனைச் சாவடிகளை தான் இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆனால் இந்த வாரம் தெஹ்ரானில் இந்தப் படைகள் இப்போதும் நகரில் அதிகளவில் உள்ளன. கார்களை நிறுத்திச் சோதனைகளை நடத்தி வருகின்றன.

இரான் ஆட்சி இன்னும் வீழாமல் இருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

போராட்டங்களைப் பொறுத்தவரை, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டாம் என்று இரானிய அதிகாரிகள் அறிக்கைகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ அச்சுறுத்தி வருகின்றனர்.

இணையதளமும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களிடையே ஒருங்கிணைப்பை மிகவும் கடினமாக்குகிறது.

இதுவரை, போர் தொடங்கியதிலிருந்து நாட்டில் பெரிய அளவிலான நிர்வாக எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிப்பதை காண முடிவதில்லை.

இருப்பினும், பல்வேறு நகரங்களில் நிர்வாகத்தின் ஆதரவாளர்கள் நடத்தும் இரவு நேரப் பேரணிகளை அரசு ஊடகங்கள் காட்டுகின்றன.

ஆனால், மார்ச் தொடக்கத்தில் பதவியேற்றது முதல் மக்கள் பொது வெளியில் இன்னும் பார்க்காத நபர் இரான் நாட்டின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி ஆவார். இதுவரை, இரானிய ஊடகங்களில் அவரிடமிருந்து வந்த சில கடிதச் செய்திகளை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். அவரை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

புதன்கிழமையன்று தெஹ்ரானில் எடுக்கப்பட்ட படம்

பட மூலாதாரம், Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS

‘இரானின் அதிகாரம் சிதறியுள்ளது’

அமெரிக்க இரானிய கவுன்சிலின் தலைவர் ஹூஷாங் அமிரஹ்மதி, அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டது, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளிடையே அதிகாரக் கட்டமைப்பைச் சிதறடித்துள்ளது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

‘முன்பு அதிகாரம் காமனெயி எனும் ஒரே மனிதரிடம் இருந்தது. அதனால் அவர் இறந்ததும் அந்த அமைப்பு உடைந்து விட்டது. இப்போது அதிகாரம் பல கீழ்நிலை அதிகாரிகளுக்கு பரவி இருக்கிறது. குறிப்பாக இந்த அதிகாரம் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அதிகமாக உள்ளது.” என பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

யார் மீது ஏவுகணைகளை வீச வேண்டும் என்பதை ஒருங்கிணைக்க ஒரு “மைய நபர் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

அரசு நிர்வாகத்திற்குத் களத்தில் அதிகாரம் இல்லை என்றும், அதனால் இப்போது புதிய அளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகளைக் கண்டு அது பயப்படுவதாகவும் அமிரஹ்மதி கூறுகிறார்.

பிபிசி தமிழின் ‘பிரச்னைகளைப் பேசுவோம்’

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU