Home தேசிய national tamil அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொண்டால் விரைவில் மரணம் நெருங்குமா?

அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொண்டால் விரைவில் மரணம் நெருங்குமா?

3
0

SOURCE :- BBC NEWS

அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்து, ஆரோக்கியம், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods (UPF)) அதிகமாக உண்ணும் மக்கள் விரைவாகவே இறக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பிஸ்கட்கள், குளிர்பானங்கள், ஐஸ் க்ரீம், காலை உணவில் பயன்படுத்தப்படும் சீரல் (பதப்படுத்தப்பட்ட தானிய உணவு) போன்றவை இத்தகைய அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு எடுத்துக்காட்டாகும். தற்போது இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

யூ.பி.எஃப். எனப்படும் இத்தகைய உணவுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவை வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படுவதில்லை. உணவின் தோற்றத்தை மேம்படுத்த நிறமூட்டிகள் போன்ற சேர்க்கைப் பொருட்கள், இனிப்பூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரோக்கியத்தை இந்த உணவுகள் எப்படி மோசமாக்கும் என்று கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறும் சில நிபுணர்கள், பதப்படுத்துதலில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன என்கின்றனர். இத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் இருப்பது காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

செயற்கை பொருட்கள்

அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஒருவரின் ஆயுளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பாக இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் மதிப்பாய்வு செய்துள்ளனர்.

அவர்களின் ஆய்வுக் கட்டுரை அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் ப்ரிவெண்டிவ் மெடிசன் இதழில் வெளியிட்டப்பட்டுள்ளது.

இத்தகைய உணவுகளை உட்கொள்வதால் மனிதர்கள் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு உறுதியாக நிரூபிக்கவில்லை.

ஒருவரின் உணவில் அதீத பதப்பட்டப்பட்ட உணவு இடம்பெறுவது என்பது, அவர் உணவு உட்கொள்ளும் விதம், உடற்பயிற்சி பழக்கம், வாழ்க்கை முறை, பணவசதி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அதனை உறுதியாக நிரூபிக்க இயலவில்லை.

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, கொலாம்பியா, மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய 8 நாடுகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் இறப்பு தொடர்பான தரவுகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஒருவர் நுகரும் மொத்த கலோரிகளில் பாதிக்கும் மேலானவை அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்தே கிடைக்கிறது.

அந்த நாடுகளில் முன்கூட்டியே நிகழும் மரணங்களில் (early deaths) 14% இத்தகைய உணவுகளை உட்கொள்வதோடு தொடர்புடையதாக உள்ளது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்து, ஆரோக்கியம், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

கொலாம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகவும் குறைவாகவே (20%க்கும் குறைவாக) எடுத்துக் கொள்ளப்படுகிறது. அங்கே முன்கூட்டியே நிகழும் மரணங்களில் 4% இத்தகைய உணவுகளோடு தொடர்புடையதாக உள்ளது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியரான, பிரேசிலைச் சேர்ந்த எடவுர்தோ நில்சன், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் நலத்தை பாதிக்கிறது என்று கூறுகிறார். “ஏன் என்றால், தொழிற்சாலையில் உணவு பதப்படுத்தப்படும் போதும், நிறமூட்டிகள், சுவையூட்டிகள், இனிப்பூட்டிகள், எமுல்சிஃபியர்ஸ் மற்றும் இதர செயற்கை உட்பொருட்களை சேர்க்கும் போது உணவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

அவர்களின் கணக்குப்படி, அமெரிக்காவில் 2018-ஆம் ஆண்டு அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறைய உட்கொண்டதன் விளைவாக 1,24,000 பேர் முன்கூட்டியே மரணத்தை தழுவியுள்ளனர். பிரிட்டனில் இந்த எண்ணிக்கை 18 ஆயிரமாக உள்ளது.

இத்தகைய உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க அரசாங்கங்கள் வலியுறுத்த வேண்டும் என்று ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

ஆனால் பிரிட்டன் அரசாங்கத்தின் ஊட்டச்சத்து தொடர்பான நிபுணர்கள் அடங்கிய குழு, உணவு பதப்படுத்தப்படும் முறைக்கும் மோசமான உடல்நிலைக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் யாவை?

மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் என்ன என்பதற்கு அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒற்றை விளக்கம் இல்லை. ஆனால் நோவாவின் (NOVA) வகையீடு அதிகமாக பயன்படுத்தப்படுபவற்றை அதீத பதப்படுத்த உணவு என்று சொல்லலாம். உதாரணத்திற்கு,

  • கேக்குகள், பிஸ்கட்டுகள்
  • சிப்ஸ்
  • சூப்பர்மார்க்கெட்டில் இருந்து பெறப்படும் ரொட்டி (bread)
  • சாசேஜ்கள், பர்கர், ஹாட் டாக்
  • உடனடியாக பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்படும் சூப், நூடுல்ஸ், டெசர்ட்கள்
  • சிக்கன் நக்கெட்ஸ்
  • ஃபிஷ் ஃபிங்கர்ஸ்
  • பழ யோகர்ட் மற்றும் அடைக்கப்பட்ட பழச்சாறு
  • வெண்ணெய்க்கு மாற்றாக தாவர மற்றும் விலங்கு எண்ணெய்யில் இருந்து பெறப்படும் மார்கரைன்ஸ்
  • குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஃபார்முலாக்கள்
அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்து, ஆரோக்கியம், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

விடை தெரியாத மேலும் பல கேள்விகள்

அந்த ஆய்வில் வரும் எண்ணிக்கைகள், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளால், மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை கணிக்கக்கூடிய கணினி மாதிரிகள் மூலம் உருவாக்கப்பட்டவை.

ஓப்பன் பல்கலைக்கழகத்தில் ‘அப்ளைட் ஸ்டடிஸ்டிக்ஸ்’ துறையில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கெவின் மெக்கான்வே, இந்த ஆராய்ச்சி கணிதவியல் ரீதியாக நிறைய முன் அனுமானங்களை உருவாக்கியுள்ளதால் இதன் முடிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

“அதீத பதப்பட்டப்பட்ட உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானதா அல்லது அந்த உணவுகளில் எது தீங்கானது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.”

“வெவ்வேறு அளவு அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் மக்கள் மத்தியில் உள்ள இறப்பு விகிதத்தில் உள்ள வேறுபாடுகள், உண்மையாகவே அந்த உணவுப் பொருட்களின் நுகர்வு வேறுபாட்டினால்தான் ஏற்படுகிறதா என்பதை எந்த ஒரு ஆய்விலும் உறுதிப்படுத்த முடியாது என்பதையே இந்த ஆய்வு குறிக்கிறது,” என்றும் கூறியுள்ளார்.

“இது போன்ற ஆராய்ச்சியால், எது எத்தகைய பிரச்னையை உருவாக்குகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது,” என்றும் அவர் மேற்கோள்காட்டுகிறார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் உடற்பருமன் நிபுணராக பணியாற்றும் நெரிஸ் அஸ்ட்பரி, இந்த ஆராய்ச்சியில் உள்ள வரம்புகளை ஒப்புக்கொள்கிறார்.

அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டுள்ள உணவுகள் வகை 2 நீரிழிவு நோய், உடல் பருமன், இருதய பிரச்னைகள் மற்றும் சில புற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதன் மூலம் முன்கூட்டியே மரணம் ஏற்படலாம்.

“பல அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு, சர்க்கரை அதிகமாக உள்ளன,” என்று கூறுகிறார் நெரிஸ் அஸ்ட்பரி.

”அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டதால் இத்தகைய விளைவுகளை அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்டுள்ளன என்பதைத் தவிர வேறேதும் இன்று வரை நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.”

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்டீஃபன் பர்கெஸ், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு தீங்கானது என்பதை இத்தகைய ஆய்வுகள் மூலம் நிரூபிக்க இயலாது என்று கூறுகிறார்.

பல்வேறு நாடுகள் மற்றும் கலாசாரங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவுகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறினால், நாம் நினைப்பதைக் காட்டிலும் பல விளைவுகளை இந்த உணவுகள் கொண்டிருக்கலாம் என்று பர்கெஸ் கூறுகிறார்.

உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஃபுட் அண்ட் ட்ரிங்க் ஃபெடரேஷன், ஆரோக்கியமான சமச்சீரான உணவுப் பழக்கமுறையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவும் பல உணவுகளை ‘அதீத பதப்படுத்தப்பட்ட உணவு’ என்ற பதம், மோசமானதாக சித்தகரிக்கிறது என்று கூறுகின்றது.

இதில் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் செயற்கை உட்பொருட்கள் அனைத்தும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு தரநிலை முகமையால் ஒப்புதல் வழங்கப்பட்டது என ஃபுட் அண்ட் ட்ரிங்க் ஃபெடரேஷன் தெரிவித்துள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU