Home தேசிய national tamil அடுத்த போப் ஆண்டவர் ஆப்பிரிக்கராக இருப்பாரா? நிறவெறி தடையாக இருக்குமா?

அடுத்த போப் ஆண்டவர் ஆப்பிரிக்கராக இருப்பாரா? நிறவெறி தடையாக இருக்குமா?

4
0

SOURCE :- BBC NEWS

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி மட்டுமே அடுத்த போப் எங்கிருந்து வருவார் என்பதைக் கணிக்கக்கூடிய ஒரே காரணி என்றால், அடுத்த போப் ஆப்பிரிக்கராக இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனச் சொல்லலாம்.

ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 2022 மற்றும் 2023ஐ உள்ளடக்கிய இரண்டு ஆண்டு காலத்தில் இது 3.31% அதிகரித்துள்ளது. வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், உலகின் கத்தோலிக்கர்களில் 20% பேர் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்ததாகக் காட்டுகின்றன.

இதற்கு நேர்மாறாக, ஐரோப்பா அதே காலகட்டத்தில் 0.2% என்ற மிகக் குறைந்த வளர்ச்சியைக் கண்டது. மேலும் 1910 மற்றும் 2010க்கு இடையில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 63%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் கிறிஸ்தவத்தின் மையப் பகுதியாகக் கருதப்பட்ட இந்தப் பகுதி, உலகின் மதச்சார்பற்ற நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. கத்தோலிக்க திருச்சபை இன்னும் லத்தீன் அமெரிக்காவில் செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், அங்குள்ள பல நாடுகளில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்திற்கு எதிராகத் தனது வலிமையை அது இழந்து வருகிறது.

கடந்த 2022இல், இந்தப் பிராந்தியத்தில் உள்ள 18 நாடுகளில் லத்தீனோபரோமெட்ரோ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், கத்தோலிக்கர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 2010இல் 70 சதவிகிதமாக இருந்தது. ஆனால், அதுவே 2020இல் 57% ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

எனவே, அடுத்த போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் வாடிகனில் கூடும்போது, ​​’வேட்பாளர்’ எங்கிருந்து வருகிறார் என்பதும் அடுத்த போப்பை தீர்மானிக்கும் அவர்களது முடிவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா?

நைஜீரிய கத்தோலிக்க பாதிரியாரும் டீபால் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான பாதிரியார் ஸ்டான் சூ இலோ அப்படித்தான் நினைக்கிறார்.

“ஒரு ஆப்பிரிக்க போப் இருப்பது சிறப்பாக இருக்குமென நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார். திருச்சபையின் தலைமை, உலகளாவிய சபையின் அமைப்பைச் சிறப்பாகப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.

போப் பிரான்சிஸ் 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 9% ஆக இருந்த துணை-சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளைச் சேர்ந்த கார்டினல்களின் விகிதத்தை 2022இல் 12% ஆக உயர்த்தினார். இப்போது அந்த கார்டினல்களும் வாக்களிக்கவுள்ளார்கள்.

“அதற்காக அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அர்த்தமல்ல” என்கிறார் பாதிரியார் சூ இலோ.

“கார்டினல்கள் மிகவும் பிரபலமான ஒருவரைத்தான் தேர்வு செய்வார்கள். அதாவது தேர்வு செய்யப்படும் நபர் ஏற்கெனவே செல்வாக்கு மிக்க நபராக இருப்பார்” என்று அவர் கூறுகிறார்.

“இன்று வாடிகனில், மூத்த ஆப்பிரிக்க மதகுருமார்களில் எவரும் எந்த முக்கியப் பதவியையும் வகிக்கவில்லை என்பதுதான் சவால். அது ஒரு முக்கிய சிக்கல். போப் பதவிக்கு வரக்கூடிய ஆப்பிரிக்க கார்டினல்களை பற்றி நீங்கள் சிந்தித்தால், இன்றைய சூழலில் உலகளாவிய கத்தோலிக்க மதத்தில் யார் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி யாரும் இல்லை என்பதே நிதர்சனம்” என்கிறார் பாதிரியார் சூ இலோ.

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலை, 2013ஆம் ஆண்டு கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் போப் பதவிக்கு ஒரு வலுவான போட்டியாளராக இருந்ததற்கும், 2005ஆம் ஆண்டு நைஜீரிய கார்டினல் பிரான்சிஸ் அரின்ஸ், போப் பெனடிக்ட் XVI தேர்வு செய்யப்படுவதற்கு வழிவகுத்த மாநாட்டில் ஒரு சாத்தியமான வேட்பாளராக இருந்ததற்கும் நேர்மாறாக உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார்.

“ஆப்பிரிக்கா தொடர்பான போப் பிரான்சிஸின் வெளிப்படையான மனப்பான்மையைக் கருத்தில் கொண்டால், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்பது நம்மில் பலரை இன்னும் ஆச்சரியப்படுத்தும் ஒன்று” என்று பாதிரியார் சூ இலு கூறுகிறார்.

ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று போப்கள்

ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை மூன்று போப்கள் வந்திருந்தாலும்கூட, அதில் கடைசி போப் ஆணவடரான – போப் கெலாசியஸ் I – 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே இன்னொரு ஆப்பிரிக்க போப் வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று பலர் வாதிடுகின்றனர்.

ஆனால் சில ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள், அடுத்த போப் எங்கிருந்து வரக்கூடும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நினைக்கிறார்கள்.

நோட்டர் டேம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் நைஜீரியாவில் பிறந்த கத்தோலிக்க பாதிரியாருமான பவுலினஸ் இகெச்சுக்வு ஒடோசோரும் அப்படித்தான் கருதுகிறார்.

“ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவதால் அல்லது ஐரோப்பாவில் இருந்து வருவதால், அவர்தான் பிரதான வேட்பாளர் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை,” என்று அவர் கூறுகிறார்.

“நீங்கள் எங்கிருந்து வந்தாலும், நீங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், அனைவரின் பிரச்னைகளும் உங்கள் பிரச்னையாக மாறும். மக்கள் எங்கிருந்தாலும், அவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், எந்தச் சூழலில் இருந்தாலும், கிறிஸ்துவ சமூகத்தைக் கட்டிக்காப்பதே உங்களுக்கு இருக்கும் ஒரே கவலையாக இருக்கும்” என்கிறார்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், போப் தேவாலயத்தின் தலைமை இறையியலாளராக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

போப் என்பவர் பாரம்பரியத்தை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும், அதைப் பயன்படுத்தி மக்களுக்கு வழிகாட்டக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று பவுலினஸ் நினைக்கிறார்.

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அடுத்த போப் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டுமா என்று கேட்கப்படுவது விரக்தியை ஏற்படுத்துவதாக பாதிரியார் ஒடோசோர் கூறுகிறர். பன்மைத்துவத்தின் அடையாளமாக மட்டுமே ஒரு ஆப்பிரிக்க போப் பார்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை.

இந்தப் பார்வை, “சரி, ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறார்கள். எனவே நாம் அவர்களுக்கு ஏன் ஒரு போப்பை வழங்கக் கூடாது’ என்று மக்கள் சொல்வது போல் இருக்கிறது” என்கிறார் அவர்.

அவரது பார்வையில், ஆப்பிரிக்காவில் உள்ள விசுவாசிகளைப் பாதிக்கும் விஷயங்களை வாடிகனில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

“சில நேரங்களில், ஆப்பிரிக்கர்கள் முக்கியமற்றவர்கள் என்பது போல அல்லது அவர்களுடைய நம்பிக்கை ஏதோவொரு வகையில் தாழ்ந்ததாகவோ அல்லது போலியாகவோ பார்க்கப்படுவது போல மற்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது என்பது போன்ற ஒரு சூழல் நிலவுகிறதோ எனத் தோன்றுகிறது” என்று அவர் கூறுகிறார்.

“ஆப்பிரிக்கர்கள் தங்கள் பிரச்னைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளுக்குச் செல்லவில்லை என்று உணரும்போது, அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். சரி, ஒருவேளை நம்மில் இருந்து ஒருவர் அங்கு இருந்தால் மட்டுமே நமது குரல் ஒலிக்கும் என்ற எண்ணமும் தோன்றும்” என்கிறார் பாதிரியார் ஒடோசோர்.

வாடிகனில் இனவெறியா?

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கார்டினல்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அவர்களுக்கு திருச்சபையில் உண்மையான அதிகாரம் இல்லை என்று பாதிரியார் சூ இலோ கருதுகிறார். பாதிரியார் ஒடோசோரின் கருத்தும் அதுவே.

“போப் பிரான்சிஸ் நியமிக்கும் கார்டினல்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை,” என்று அவர் விளக்குகிறார்.

ஆனால், “நீங்கள் அவர்களை நியமிக்கும்போது, ​​அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறீர்களா? நீங்கள் நியமிக்கும் இந்த மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள், வேலையில் அவர்களை நம்புங்கள், அதை அவர்கள் சுதந்திரமாகச் செய்யட்டும்” என்று அவர் கூறுகிறார்.

திருச்சபையின் தலைமை, அதன் உறுப்பினர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுக்கக்கூடிய ஒரு பிரச்னையை, பாதிரியார் சூ இலோ மற்றும் பாதிரியார் ஒடோசோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

“திருச்சபையில் இனவெறி பற்றிய கேள்வி இன்னும் உள்ளது. நாம் ஒருபோதும் அதைப் பற்றிப் பேசியதில்லை” என்று பாதிரியார் ஒடோசோர் கூறுகிறார்.

“அது ஒருவரை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும், அவர் போப் அல்லது கத்தோலிக்க தேவாலயத்திற்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் சரி, அவர் என்ன செய்தாலும் சரி, அவர் ஒரு ஆப்பிரிக்க போப்பாக மட்டுமே பார்க்கப்படுவார்.”

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

அடுத்த போப்பை நியமிக்கும் கார்டினல்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களை, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுத்திருந்தார்.

இது ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைவிட சற்று குறைவு. அதாவது, யார் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டாலும், ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களைச் சென்றடைவதில் போப் பிரான்சிஸ் காட்டும் முக்கியத்துவத்தை அவர்களும் பகிர்ந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த அணுகுமுறையை ‘ஏழைகளுக்கு முன்னுரிமை’ என்று அழைக்கிறார் பாதிரியார் சூ இலோ. இது, ‘அவர்களது குரல்களைக் கேட்கும் ஒரு தேவாலயம், மிகவும் முற்போக்கான தேவாலயம், மிகவும் எளிமையான தேவாலயம்’ என்பதில் கவனம் செலுத்துகிறது.

அடுத்ததாக திருச்சபையை வழிநடத்தப் போகும் எவரிடமும் அவர் காண விரும்பும் ஒன்று இதுதான்.

ஆச்சரியமான முடிவு

ஆனால் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். அதற்கு மற்றொரு முக்கியக் காரணி உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார்.

“கடவுள், பரிசுத்த ஆவி, திருச்சபையின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்,” என்று அவர் கூறுகிறார். அதாவது, 2013இல் போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டதைப் போல, ஓர் ஆச்சரியமான முடிவாக இருக்கலாம்.

“அவர் வருவார் என யாரும் கணிக்கவில்லை” என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார்.

“அடுத்த போப், திருச்சபை விவகாரங்களில் தனக்கு முன்பிருந்த போப் கொண்டிருந்த அதே பார்வையைக் கொண்டிருப்பது முக்கியமா, அல்லது அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமா?” என பாதிரியார் சூ இலோவிடம் கேள்வி எழுப்பினோம்.

“நான் ஒரு நல்ல பாதிரியாரைப் போல பதிலளிப்பேன்,” என்று அவர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து பேசினார்.

“பிரான்சிஸின் கண்ணோட்டத்தைத் தொடரும் ஒரு போப்பை கடவுள் நமக்குத் தருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன். அத்தகைய நபர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன்.”

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU