SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், BBC/Aamir Peerzada
- எழுதியவர், சமீரா ஹுசைன்
- பதவி, பிபிசி நியூஸ், வங்கதேசத்தில் இருந்து
-
17 ஏப்ரல் 2025
புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்
அவசரமாகக் கட்டப்பட்டிருந்த சுவரை உடைத்தபோது, ரகசிய அறைகள் கொண்ட ஒரு சிறைச்சாலையை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அங்கு புதிதாக செங்கல் வைத்து கட்டப்பட்ட வாசல் இருந்தது. அந்த வாசல் அதன் பின்னால் மறைந்திருப்பதை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தது.
அதற்கு உள்ளே, ஒரு குறுகிய நடைபாதையில், இடது மற்றும் வலதுபுறமாகச் சிறிய அறைகள் இருந்தன. அங்கு முற்றிலும் இருட்டாக இருந்தது.
அஹமத் பின் குவாசெம் மற்றும் மற்றவர்களும், அது குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்றால், டாக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் இருந்த இந்த ரகசிய சிறையை புலனாய்வாளர்கள் குழுவால் ஒருபோதும் கண்டுபிடித்திருக்க முடியாது.
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவரை விமர்சித்த மிர் அஹ்மத், எட்டு ஆண்டுகள் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்தச் சிறையில் அவர் பெரும்பாலும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், அந்த இடத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர, அவர் அங்கு கேட்ட ஒலிகளை அவர் நினைவு கூர்ந்தார்.
அதில், விமானங்கள் தரையிறங்கும் சத்தம் அவருக்குத் தெளிவாக நினைவில் இருந்தது. அதுவே விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த ராணுவத் தளத்தைக் கண்டுபிடிக்க புலனாய்வாளர்களுக்கு உதவியது.
அந்த வளாகத்தின் முக்கியக் கட்டடத்தின் பின்னால், கைதிகள் வைக்கப்பட்டிருந்த, செங்கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்ட, ஜன்னல்கள் இல்லாத, பலத்த பாதுகாப்புடன் கூடிய அமைப்பை அவர்கள் கண்டார்கள். அந்தச் சிறை வெளி உலகிற்குத் தெரியாத வகையில் மறைக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், BBC/Aamir Peerzada
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை வெகுஜன போராட்டங்கள் கவிழ்த்த பிறகு, குவாசெம் போலவே பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோருடன் புலனாய்வாளர்கள் பேசினார்கள், சிறைகளில் இருந்த கைதிகளை விடுத்தார்கள். மேலும் பலர் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டாக்கா விமான நிலையத்தில் இருந்து அருகிலுள்ள சிறைச்சாலைகள் உள்பட, ரகசிய சிறைகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் பேரில் செயல்படும் ஓர் உயர்தர பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியனை சேர்ந்தவர்கள் (RAB) என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
“கட்டாய ஆட்கொணர்வு வழக்குகளும் பிரதமரின் ஒப்புதல், அனுமதி அல்லது உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளன” என்று வங்கதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம் பிபிசியிடம் தெரிவித்தார்.
இவ்வாறு முன்வைக்கப்படும் கூறப்படும் குற்றங்கள் தனக்குத் தெரியாமல் நடத்தப்பட்டதாகவும், தனது கட்சிக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அந்த ராணுவ அமைப்பு தனியாகச் செயல்பட்டதாகவும் ஹசீனாவின் கட்சி கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் அமைப்பு நிராகரிக்கிறது.
குவாசெம் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டு, ஏழு மாதங்கள் ஆகியிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்களைக் சிறை பிடித்தவர்களைக் கண்டு இன்னும் அஞ்சுகின்றனர். அவர்களைச் சிறை பிடித்தவர்கள் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
இதனால் தொப்பி மற்றும் முகமூடி அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்று குவாசெம் கூறுகிறார். “நான் பயணம் செய்யும்போது, எப்போதும் எனக்குப் பின்னால் யாராவது வருகிறார்களா என்று நான் பார்க்க வேண்டும்” என்கிறார் அவர்.
‘பரவலான மற்றும் முறையான’ சிறை அமைப்பு

பட மூலாதாரம், BBC/Aamir Peerzada
அவர் எங்கு வைக்கப்பட்டிருந்தார் என்பதைக் காட்ட குவாசெம் மெதுவாக கான்கிரீட் படிகளின் வழியாக நடந்து சென்றார். ஒரு வலிமையான உலோகக் கதவைத் தள்ளி, தனது தலையைத் தாழ்த்தி மற்றொரு குறுகிய வாசல் வழியாக ‘அவரது’ அறைக்குள் செல்கிறார். அங்குதான் குவாசெம் எட்டு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.
“உயிருடன் புதைக்கப்பட்டதைப் போலவும், வெளி உலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதைப் போலவும் தான் உணர்ந்தாக” அவர் பிபிசியிடம் கூறினார்.
இயற்கையான வெளிச்சம் உள்ளே வருவதற்கு ஜன்னல்களோ, கதவுகளோ அங்கு இல்லை. உள்ளே இருந்தபோது, இரவு எது பகல் எது என்பதை அவரால் அறிய முடியவில்லை. 40 வயதாகும் குவாசெம் ஒரு வழக்கறிஞர். இதற்கு முன்பு நேர்காணல்களை வழங்கியுள்ளார். ஆனால் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய அறைக்குள் முதல் முறையாக அவர் ஊடகங்களைப் பார்க்கிறார்.
டார்ச் லைட்டின் ஒளியில் பார்க்கும்போது, அது மிகவும் சிறிய அறையாகத் தெரிந்தது. சராசரி உயரமுள்ள நபருக்கு அங்கே நேராக நிற்பது கடினமாக இருக்கும். அந்த அறையில் துர்நாற்றம் வீசியது.
சில சுவர்கள் உடைந்து, செங்கல் மற்றும் கான்கிரீட் துண்டுகள் தரையில் சிதறிக் கிடக்கின்றன. குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்கான எந்த ஆதாரத்தையும் அழிக்கும் கடைசி முயற்சியாக அந்தச் சிறை தென்பட்டது.
“[இது] ஒரு தடுப்பு மையம். நாடு முழுவதும் 500, 600, 700க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகள் உள்ளதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். பரவலாகவும், முறையாகவும் செயல்பட்டது என்பதை இது காட்டுகிறது,” என்று சிறையைப் பார்வையிடச் சென்ற பிபிசி குழுவுடன் வந்திருந்த வழக்கறிஞர் இஸ்லாம் கூறுகிறார்.
குவாசெம் தனது அறையிலிருந்த மங்கலான நீல ஓடுகளைத் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். இப்போது அது தரையில் துண்டுகளாகக் கிடக்கிறது. குவாசெம் குறிப்பிட்ட இந்தத் தகவல், புலனாய்வாளர்களை அந்தக் குறிப்பிட்ட அறைக்கு வழி நடத்தியது. தரைத் தளத்தில் உள்ள மற்ற அறைகளுடன் ஒப்பிடுகையில், இது 10 அடி x 14 அடி (3 மீ x 4.3 மீ) அளவில் மிகவும் பெரிதாக உள்ளது. அதன் ஒரு புறத்தில் ஒரு கழிப்பறை உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
குவாசெம் அந்த அறையைச் சுற்றி நடந்து, தான் சிறைப்பிடிக்கப்பட்ட ஆண்டுகளில் தனது நேரத்தை எப்படிக் கழித்தார் என்பதைப் பகிர்கிறார்.
கோடைக் காலங்களில், வெயில் மிகவும் தாங்க முடியாததாக இருந்தது என்று அவர் கூறுகிறார். அவர் தரையில் குனிந்து, காற்றைப் பெறுவதற்காக, வாசலின் அடிவாரத்தில் தனது முகத்தை நெருக்கமாக வைக்க முயன்றது போன்ற தனது வலிமிகுந்த விவரங்களைப் பகிர்ந்தார்.
“இது மரணத்தைவிட மோசமாக இருந்தது” என்கிறார் குவாசெம். தான் முன்னர் அனுபவித்த தண்டனையை மீண்டும் அனுபவிப்பது கொடூரமாகத் தோன்றினாலும், அங்கு என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று குவாசெம் நம்புகிறார்.
“பாசிச ஆட்சிக்கு உதவி செய்த மற்றும் ஊக்குவித்த உயரதிகாரிகள் இன்னும் தங்கள் பதவிகளில் உள்ளனர்” என்றும் அவர் கூறுகிறார்.
“நாங்கள் எங்கள் கதையை வெளியே சொல்ல வேண்டும், திரும்பி வராதவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தவும், எஞ்சியிருப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.”
குவாசெம் டாக்காவில் உள்ள முக்கிய உளவுத்துறை தலைமையகத்தில் உள்ள ஒரு மோசமான காவல் மையத்தில் அய்னாகோர் அல்லது “கண்ணாடிகளின் வீடு” என்று அழைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டதாக முந்தைய தகவல்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால் புலனாய்வாளர்கள் இதுபோன்று பல இடங்கள் உள்ளதாகத் தற்போது நம்புகிறார்கள்.
முதல் 16 நாட்கள் தவிர, தான் காவலில் இருந்த அனைத்து நாட்களையும் ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் தளத்தில் கழித்ததாக குவாசெம் பிபிசியிடம் கூறினார். அங்குள்ள தளம் டாக்காவில் உள்ள காவல்துறையின் விசாரணைப் பிரிவாக இருந்ததாக புலனாய்வாளர்கள் இப்போது சந்தேகிக்கின்றனர்.
தனது குடும்பத்தின் அரசியலே, தான் காவலில் வைக்கப்பட்டிருந்ததற்கு காரணம் என குவாசெம் நம்புகிறார். 2016ஆம் ஆண்டு, நாட்டின் மிகப் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் மூத்த உறுப்பினரான தனது தந்தைக்கு வழக்கறிஞராக இருந்தார் குவாசெம். அந்த நேரத்தில் அவர் ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
‘நான் வெளியே வரவே மாட்டேன் என்று நினைத்தேன்’

பட மூலாதாரம், Handout
பிபிசியிடம் பேசிய மற்ற ஐந்து நபர்கள், தாங்கள் கண்கள் மூடப்பட்டு, கைவிலங்குகளுடன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வெளி உலகத்தை எட்ட முடியாத இருண்ட கான்கிரீட் அறைகளில் அடைக்கப்பட்டதாகவும் விவரிக்கிறார்கள். அவர்கள் கடுமையாக அடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
பிபிசியால் அவர்களின் கதைகளை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், ஏறக்குறைய அவர்களில் பெரும்பாலானோர், ஒரு நாள் தெருவிலோ அல்லது பேருந்திலோ தங்களைச் சிறைபடுத்தியவரை எதிர்கொள்வோமோ என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள்.
“இப்போது, நான் காரில் ஏறும்போதோ அல்லது வீட்டில் தனியாக இருக்கும்போதோ, நான் அந்த இடத்தில் இருந்ததை நினைத்து பயமாகவே இருக்கிறது,” என்று கூறும் 35 வயதான அதிகுர் ரஹ்மான் ரசல், “நான் எப்படி உயிர் தப்பினேன், உண்மையிலேயே உயிர் பிழைக்க வேண்டியவனாக இருந்தேனா என்று எனக்கே வியப்பாக உள்ளது” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “என் மூக்கு உடைந்துவிட்டது, கை இன்னும் வலிக்கிறது. அவர்கள் எனக்கு கைவிலங்கு போட்டார்கள், கடுமையாக அடித்தார்கள்” என்கிறார்.
கடந்த ஜூலை மாதத்தில், டாக்காவின் பழைய நகரில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே, அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு குழுவினர் தன்னை அணுகியதாக ரசல் கூறுகிறார். அவர்கள் தங்களை சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தி, “நீங்கள் எங்களுடன் வர வேண்டும்” என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த நிமிடம், அவர்கள் ரசலை ஒரு சாம்பல் நிற காரில் கூட்டிச் சென்றார்கள். கைவிலங்கு போடப்பட்டு, முகமூடி அணிவிக்கப்பட்டு, அவரது கண்கள் கட்டப்பட்டிருந்தன. நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு, அவரை காரில் இருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து, ஒரு கட்டடத்திற்குள் அழைத்துச் சென்று, ஓர் அறையில் அடைத்துள்ளனர்.
“சுமார் அரை மணிநேரத்துக்குப் பிறகு, ஒவ்வொரு நபராக வந்து, ‘நீங்கள் யார்?’, ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேள்விகள் கேட்கத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகுதான் அடிக்கத் தொடங்கினர்” என்கிறார் ரசல்.
“அந்த இடத்திற்குள் இருப்பது திகிலூட்டுவதாக இருந்தது. நான் வெளியே வரவே மாட்டேன் என்று நினைத்தேன்.”
ரசல் தற்போது தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வருகிறார். டாக்காவில் உள்ள அவரது வீட்டில் அமர்ந்தவாறே, சிறை பிடிக்கப்பட்டிருந்த காலத்தை அவர் விரிவாக விவரிக்கிறார். அந்த அனுபவங்களில் இருந்து வெளியே வரத் தொடங்கியவராக, உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறார்.
தனது தந்தை மூத்த உறுப்பினராக இருந்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியில் (BNP) மாணவர் தலைவராக இருந்ததால் அவர் காவலில் வைக்கப்பட்டதாகவும், அது அரசியல் நோக்கத்தில் செய்யப்பட்டது என அவரும் நம்புகிறார். வெளிநாட்டில் வசிக்கும் அவரது சகோதரர், ஹசீனாவை விமர்சித்து, சமூக ஊடகங்களில் அடிக்கடி பதிவுகள் வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.
தன்னை எங்கு அடைத்து வைத்திருந்தார்கள் என்பதை அறிய எந்த வாய்ப்பும் இல்லை என்று ரசல் கூறுகிறார். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், மக்கள் சிலரை காவலில் அடைத்து வைத்திருந்த மூன்று மையங்களுக்குச் சென்றதை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு, தன்னை டாக்காவின் அகர்கான் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் எண்ணுகிறார்.
‘நான் காணாமல் போய்விடுவேன் என்று கூறப்பட்டது’

பட மூலாதாரம், Bangladesh Chief Advisor Office of Interim Government via AFP
அரசியல் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை ஹசீனாவுக்கு இல்லை என்பது பகிரங்கமான ரகசியம். அவரை விமர்சித்தால் எந்தத் தடயமும் இல்லாமல் நீங்கள் “காணாமல் போகலாம்” என்கிறார்கள் முன்னாள் கைதிகள், எதிரிகள் மற்றும் புலனாய்வாளர்கள்.
ஆனால் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. 2009ஆம் ஆண்டு முதல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்காணித்து வரும் வங்கதேச அரசு சாரா அமைப்பு, அவ்வாறு காணாமல் போன 709 நபர்களை இதுவரை ஆவணப்படுத்தியுள்ளது. அவர்களில் 155 பேரின் இருப்பிடமும் இன்னும் தெரியவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைக் குழு உருவாக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் நபர்களிடம் இருந்து 1,676க்கும் அதிகமான புகார்கள் கிடைத்துள்ளன. பலரும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
ஆனால் இது முழுமையான எண்ணிக்கையல்ல. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குவாசெம் போன்ற நபர்களிடம் பேசுவதன் மூலம், ஷேக் ஹசீனா உள்ளிட்ட, இவ்வாறான காவல் மையங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்கை கட்டமைக்க தாஜுல் இஸ்லாம் முயல்கிறார்.
வெவ்வேறு இடங்களில் அடைக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்கும் விஷயங்கள் அனைத்தும் ஒன்றாகவே உள்ளது. ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முகமது அலி அராபத், இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுக்கிறார். மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போனதற்கு, இந்தியாவில் தங்கியுள்ள ஹசீனாவின் வழிகாட்டுதலோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ளவர்களோ காரணமில்லை என்று அவர் கூறுகிறார்.
“அவ்வாறு காவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால், அது சிக்கலான உள்ராணுவ பிரச்னைகளின் விளைவாக இருந்திருக்கும்” என்று கூறும் அராபத் “இவர்களை ரகசிய காவலில் வைத்திருப்பதால் அவாமி லீக் அல்லது அரசுக்கு எந்த அரசியல் ஆதாயமும் கிடைத்திருக்கக் கூடும் என்று நான் கருதவில்லை” என்கிறார்.
மறுபுறம், “இந்த விஷயங்கள் குறித்து எதுவும் தெரியாது” என்கிறார் ராணுவத்தின் தலைமைப் பேச்சாளர். “அத்தகைய காவல் மையங்கள் செயல்படுவதை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது” என்று லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா இபின் ஜைட் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், AFP
இந்த நடவடிக்கைக்கு அவாமி லீக்தான் காரணம் என்பதற்கு, இந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் ஆதாரமாக உள்ளதாக தாஜுல் இஸ்லாம் நம்புகிறார். “இங்கே காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் வெவ்வேறு அரசியல் அடையாளங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முந்தைய ஆட்சிக்கு எதிராக, அப்போதைய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அதனால்தான் அவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டனர்.”
இன்று வரை அவர்கள் 122 கைது வாரன்ட்களை பிறப்பித்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படவில்லை.
அதனால்தான் 71 வயதான இக்பால் சௌத்ரி போன்ற பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளதாக நம்புகிறார்கள். சௌத்ரி வங்கதேசத்தை விட்டு வெளியேற விரும்புகிறார். அவர் 2019இல் விடுவிக்கப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக, அவர் தனது வீட்டை விட்டு வெளியேறவில்லை, சந்தைக்குக்கூட செல்லவில்லை. அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தது குறித்து ஒருபோதும் பேசக்கூடாது என்று சௌத்ரியை சிறை பிடித்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
“நீங்கள் எங்கே இருந்தீர்கள் அல்லது என்ன நடந்தது என்பதை எப்போதாவது வெளிப்படுத்தினால், மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டால், யாரும் உங்களை மீண்டும் கண்டுபிடிக்கவோ, பார்க்கவோ முடியாது. நீங்கள் இந்த உலகத்தில் இருந்து மறைந்து விடுவீர்கள்,” என்று தனக்குச் சொல்லப்பட்டதாக அவர் கூறுகிறார்.
இந்தியா மற்றும் அவாமி லீக்கிற்கு எதிராகப் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சௌத்ரி, அதனால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
“நான் மின்சாரம் கொண்டு ஷாக் கொடுக்கப்பட்டு, உடல்ரீதியாகத் தாக்கப்பட்டேன், அடிக்கப்பட்டேன். மின்சாரம் தாக்கியதில் எனது விரல்களில் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளது. நான் எனது கால்களின் வலிமையை இழந்தேன், உடல் வலிமையை இழந்தேன்” என்று கூறும் அவர், மற்றவர்கள் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதையும், மக்கள் வேதனையில் அலறி அழுததையும் நினைவு கூர்ந்தார்.
“எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது” என்கிறார் சௌத்ரி.
‘நான் இறக்கும் வரை அச்சம் இருக்கும்’

பட மூலாதாரம், BBC/Neha Sharma
அதே போன்ற அச்சத்துடன்தான் 23 வயதான ரஹ்மத்துல்லா இன்னும் வாழ்கிறார்.
“அவர்கள் என் வாழ்நாளில் ஒன்றரை வருடங்களை எடுத்துக் கொண்டார்கள். அந்தக் காலம் திரும்பக் கிடைக்காது” என்று கூறிய அவர், “ஒரு மனிதன் இருக்கக்கூடாத இடத்தில் அவர்கள் என்னைத் தூங்க வைத்தார்கள்” என்றார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று, நள்ளிரவில் அவர் தனது வீட்டிலிருந்து, சீருடையில் இருந்த சில அதிகாரிகள் மற்றும் சாதாரண உடையில் இருந்த ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மின் சாதனங்களைச் சரி செய்ய பயிற்சி பெற்று வந்தபோது, பக்கத்து ஊரில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.
பலமுறை நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அவர் சமூக ஊடகங்களில் இந்தியாவுக்கு எதிராகப் பதிவிட்டதற்காக, இஸ்லாமிய பதிவுகளுக்காக வலுக்கட்டாயமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது ரஹ்மத்துல்லாவுக்கு தெளிவாகத் தெரிந்தது.
பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி, அவர் சிறையில் இருந்த அறையின் அமைப்பை வரைந்தார். அதில் கழிவறையாகப் பயன்படுத்தும் திறந்த வடிகாலும் உள்ளது.
“டாக்காவில் உள்ள அந்த இடத்தை நினைத்தாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது. சரியாகப் படுக்க இடம் கிடைக்கவில்லை, அதனால் சுருண்டு தூங்க வேண்டியதாயிற்று. படுத்திருக்கும்போது கால்களை நீட்ட முடியவில்லை.”

பட மூலாதாரம், BBC/Neha Sharma
ரகசிய சிறைச்சாலைகள் மற்றும் அவற்றில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக முன்னாள் கைதிகளான மைக்கேல் சக்மா, மஸ்ரூர் அன்வர் ஆகிய இருவரையும் பிபிசி பேட்டி எடுத்தது.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அவர்கள் காவலில் வைக்கப்பட்டு இருந்ததால் உடலில் ஏற்பட்ட காயங்களுடன் வாழ்கின்றனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களைப் பின்தொடரும் உளவியல் வேதனையைப் பற்றியும் அவர்கள் பேசுகிறார்கள்.
வங்கதேசம் அதன் வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தில் உள்ளது. அது பல ஆண்டுகளாக எதேச்சதிகார ஆட்சிக்குப் பிறகு மீண்டும் தன்னைக் கட்டமைக்க முயல்கிறது.
இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளுக்கு எதிராக நியாயமான விசாரணை நடத்தும் அதன் திறன், ஜனநாயகத்தை நோக்கிய நாட்டின் வளர்ச்சியின் ஒரு முக்கியமான சோதனையாக இருக்கும்.
அது முடியும் என்றும், அது நடக்க வேண்டும் என்றும் இஸ்லாம் நம்புகிறார். “எங்கள் எதிர்கால சந்ததியினருக்காக இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நாம் நீதி வழங்க வேண்டும்.”
தான் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த சிறைச்சாலை அறையின் எஞ்சிய இடத்தில் நின்றபடி, வங்கதேசம் இது தொடர்பான விஷயங்களை கடந்து வர, விசாரணை நடத்தப்படுவது அவசியம் என குவாசெம் கூறுகிறார். ரஹ்மத்துல்லாவுக்கும் இது அவ்வளவு எளிதல்ல.
“பயம் இன்னும் நீங்கவில்லை. நான் இறக்கும் வரை அந்த பயம் இருக்கும்.”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC