SOURCE :- BBC NEWS

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டில் நேற்று முதல் தென்மேற்குப் பருவமழை அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகப் பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (மே 26) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.
மேலும், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (மே 27) உருவாக்கக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்திக்குறிப்பில், “இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் இன்று என்ன நிலவரம்?
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் சாலைகளில் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 25.6 செ.மீ மழையும், எமரால்டு பகுதியில் 13.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் வால்பாறையில் 29.5 செ.மீ மழையும், கோவை மாநகரில் 22 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது. அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டிக்கு வருகிற மே 29ம் தேதி வரை கணமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் மழை பெய்வதன் மூலம் தனது வருகையை அறிவிக்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 27-ம் தேதியே தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் முதல் முறையாக பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் மே 24-ம் தேதியே தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே நீலகிரி, கோவை மாவட்டங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மற்ற இடங்களுக்கும் இது பரவும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் சில பகுதிகளிலும், ஆந்திர மற்றும் தெலங்கானாவில் பல இடங்களிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிலை என்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது.
குறிப்பாக உதகை அருகே உள்ள அவலாஞ்சியில் அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது
இந்த கன மழையின் காரணமாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, அவலாஞ்சி சூழல் சுற்றுலா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் லேம்ஸ் ராக், பைகாரா நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
மரம் விழுந்ததில் உயிரிழந்த சிறுவன்
அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை வடகரை தாலுகாவைச் சேர்ந்த பிரசித் என்பவரது குடும்பம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள பைன் ஃபாரஸ்ட் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு மரம் விழுந்ததில் பிரசித்தின் மகனான 15 வயது நிரம்பிய ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அண்டை மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களான கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்க கோரிக்கை விடுத்ததாகவும், மேலும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியருக்கும் நீலகிரி மாவட்டத்தின் மழை எச்சரிக்கை கொடுத்து தங்களது மாவட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்த கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காருக்குள் மூன்று பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூச்சலிட்டதை அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்

கூடலுார் அருகேயுள்ள வடவயல் என்ற கிராமத்தில் கனமழை காரணமாக, வீடுகள் மிகவும் சேதம் அடைந்திருப்பதால் அரசு பள்ளி ஒன்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தொரப்பள்ளி அருகே உள்ள தேன்வையில் கிராமத்தை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.
வால்பாறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறையை அடுத்த பாலாஜி கோயில் செல்லும் பிரதான சாலையான கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாலைகளில் விழுந்து அக்கா மலையிலிருந்து வால்பாறை நோக்கி வரும் பேருந்து லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முழு கொள்ளளை எட்டிய பில்லூர் அணை

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 97 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பருவ மழை பெய்து வருவதால் அனைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18000 கன அடியாக இருந்து வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் நான்கு மதகுகள் மூலம் உபரியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது
பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக நெல்லித்துறை மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்க ராயன் ஓடை, சிறுமுகை, ஆலங்கொம்பு, வச்சினம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் பழமையான மரங்கள் அகற்றம்

கோவையில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாநகராட்சியால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் காணப்படும் பழமையான மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள 35 ஆண்டு கால பழமையான மே பிளவர் மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்ளாக வின்சென்ட் ரோடு சாலை மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
குனியமுத்தூர் பகுதியில் மின் நகரில் கனமழையின் காரணமாக வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராமநாதபுரத்தில் சூறைக்காற்று
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சாலைகளில் புழுதி காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகின்றன.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பந்தல்கள் காற்றில் பறக்கின்றன.
தென்னை மரங்கள், வாழை மரங்கள் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வளைந்து அங்கும், இங்குமாக அசைந்து ஆடுகிறது. சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றின் வேகம் உள்ளதால் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீசி வரும் சூறைக்காற்று ஏற்பட்ட புழுதியால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடலுக்குச் செல்லாத நாட்டுப்படகு மீனவர்கள்

அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 600 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூடங்குளம், உவரி, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணல், தோமையார்புரம், பஞ்சல், இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 நாட்டு படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.
குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில், இன்று தொடங்கி வருகிற 29 வரை சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே போன்று சுற்றுலா பயணிகளும் கடற்கரை, நீர் நிலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்லத் தடை
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சிறுவாணி அருகே அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு மேல் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென்காசி மாவட்டம் குற்றால நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக – கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 115.65 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்து 1,648.03 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 1844.00 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 55.08 மில்லி மீட்டரும் அளவும் தேக்கடி பகுதியில் 36.2 மில்லி மீட்டர் அளவும் மழை பதிவாகியிருந்தது. இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படை கேரளா விரைவு
கேரளாவிற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர்.
அரக்கோணத்தை மையமாகக் கொண்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரள மாநிலம் விரைகின்றனர்.
கேரளாவின் காசர்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 30 பேர் கொண்ட மூன்று குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் மோப்ப நாய்கள் பிரின்ஸ் மற்றும் மிக்கி ஆகியோர் கொண்ட குழுவினர் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள விரைவதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC