Home தேசிய national tamil ரூ.1 கோடி ‘மர’ வழக்கில் திருப்பம்: ரூ.50 லட்சம் செலவழித்த விவசாயி மரணம் – அது...

ரூ.1 கோடி ‘மர’ வழக்கில் திருப்பம்: ரூ.50 லட்சம் செலவழித்த விவசாயி மரணம் – அது என்ன மரம்?

26
0

SOURCE :- BBC NEWS

சந்தன மரம், இழப்பீடு, ரயில்வே

பட மூலாதாரம், Bhagyashree Raut

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவரின் நிலத்தை கையகப்படுத்திய ரயில்வே துறை, அவர் நிலத்தில் உள்ள சிவப்பு சந்தன மரத்திற்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ரயில்வே துறையும் இழப்பீட்டு தொகையை செலுத்திய நிலையில், அது சிவப்பு சந்தன மரம் இல்லையென்றும் அது சுமார் ரூ.10,000 மதிப்புள்ள சாதாரண மரம்தான் என்றும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததால் இந்த வழக்கு புதிய திருப்பத்தைச் சந்தித்தது.

ஆனால் இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நிவாரணம் பெற்ற விவசாயி தற்போது உயிரிழந்துவிட்டார்.

மகாராஷ்டிராவின் யவாட்மாலை சேர்ந்த விவசாயியான கேஷவ் ஷிண்டே தான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். தற்போது அந்த இழப்பீட்டு தொகையை திரும்பப்பெற ரயில்வே துறை மனு தாக்கல் செய்துள்ளது.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த கேஷவ் ஷிண்டே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அவரின் குடும்பம் தெரிவித்தது.

ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டில் அவர் ரூ.50 லட்சத்தை எடுத்துள்ள நிலையில் மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் தற்போது உயர் நீதிமன்றத்தில் வைப்பு நிலையில் உள்ளது.

இந்தச் சூழலில் கேஷவ் எடுத்திருந்த 50 லட்சம் ரூபாய் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவரின் வாரிசுதாரர் அந்தப் பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் என ரயில்வே நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

ரயில்வே துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீர்ஜா சௌபே கூறுகையில், “உயர் நீதிமன்றம் எங்களை கீழமை நீதிமன்றத்துக்குச் செல்லுமாறு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இது சிவப்பு சந்தன மரம் இல்லையென்றும் பிஜாசல் மரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

தற்போது இது சிவப்பு சந்தன மரமா, இல்லையா என்பதை கீழமை நீதிமன்றத்தில் விவசாயி தரப்பில் நிருபிக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், அதை நிருபிக்க முடியவில்லை என்றால் மரத்தின் மதிப்பு ரூ.10,000 ஆக குறைந்துவிடும் என்றும் மீதமுள்ள பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சந்தன மரம், இழப்பீடு, ரயில்வே

ஆனால் இந்த மதிப்பீடு தவறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என விவசாயி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

விவசாயி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சனா ராவத், “நீதிமன்றத்தில் ரயில்வே தாக்கல் செய்த அறிக்கையில் மரத்தின் மதிப்பு சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மற்றும் திருடப்பட்ட மரக்கட்டையின் மதிப்பை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மரம் அப்படியே உள்ளது. மரத்தின் எடை 400 டன் ஆக உள்ளது. அதற்கேற்ப மதிப்பிடப்பட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

மரம் மீண்டும் மதிப்பிடப்படும் என விசாரணையின்போது நீதிமன்றம் வாய்மொழியாக தெரிவித்ததாக குறிப்பிடும் அவர், “மரத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால் ரயில்வே தரப்பு கூடுதல் தொகையை விவசாயியிடம் செலுத்த வேண்டும், அதற்கு குறைவாக இருந்தால் விவசாயி பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டது. ஆனால் எழுத்துப்பூர்வமான உத்தரவு தற்போது வரை கிடைக்கவில்லை.” என்றார்.

இந்த வழக்கு தற்போது யவாட்மலில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நடத்தப்பட உள்ளது.

விவசாயியின் வாரிசுகள் என்ன சொல்கிறார்கள்?

கேஷவ் ஷிண்டே எடுத்த ரூ.50 லட்சத்தை அவரின் குழந்தைகளுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்தச் சூழலில் மதிப்பீடு குறைந்து போனால் அவரின் வாரிசுகள் அந்தப் பணத்தை எப்படி திருப்பிச் செலுத்துவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

எனினும் புதிய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டால் பணத்தை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக கேஷவ் ஷிண்டேவின் மூத்த மகன் பஞ்சாப் ஷிண்டே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை அவர்தான் கையாண்டு வருகிறார்.

இந்த மரம் ரூ.10,000 மதிப்புள்ளதுதான் எனக் கூறி ரயில்வே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

கேஷவ் ஷிண்டே மற்றும் அவரது மகன் பஞ்சாப் ஷிண்டே

“எங்களின் மரம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே மரம் வழங்கும் ஆக்சிஜன் மற்றும் அதன் சூழலியல் மதிப்பும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் மதிப்பீட்டை தவறான வழியில் செய்துள்ளார்கள். 100 ஆண்டு பழமையான மரத்தை நாம் மதிப்பிட்டால் அது 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் செல்லும்.” என பஞ்சாப் ஷிண்டே தெரிவித்தார்.

மேலும் அவர், “அந்த மரம் முறையாக மதிப்பிடப்பட வேண்டும். அதன் செல்லுபடித்தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். அது நடந்தால் விதிப்படி பணத்தை திருப்பிச் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

என்ன நடந்தது?

விவசாயியான கேஷவ் ஷிண்டே 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, தனது சிவப்பு சந்தன மரத்திற்கு இழப்பீடு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது நிலத்தை ரயில்வே பணிகளுக்காக ரயில்வே துறை கையகப்படுத்தியிருந்தது.

அந்த நிலத்திற்கான இழப்பீட்டை அவர் பெற்றிருந்தார். அதோடு நிலத்தில் உள்ள மரங்கள் மற்றும் நிலத்தடி குழாய்க்குமான இழப்பீட்டை அதிகாரிகளிடம் கோரி வந்தார்.

ஆனால் ‘சிவப்பு சந்தன’ மரம் முதலில் மதிப்பிடப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறி வந்த நிலையில் மதிப்பீடு நடத்த வனத்துறையிடம் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது.

கேஷவ் ஷிண்டேவின் நிலத்தில் மா மரங்களும் இதர பழத்தோட்டங்களும் இருந்ததாக அவரின் மகன் பஞ்சாப் ஷிண்டே தெரிவிக்கிறார்.

“அந்த மரங்களுக்கு இழப்பீடு கிடைத்தது. கிணற்றுக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைத்தது. ஆனால் குழாய் மற்றும் சந்தன மரம் உள்ளிட்ட இதர மரங்களுக்கு இழப்பிடு கிடைக்கவில்லை. இதற்காக 2014-ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட ஆட்சியர், வனத்துறை, ரயில்வே, பாசனத் துறை ஆகிய துறைகளுக்குத் தொடர்ந்து எழுதி வந்தோம். ஆனால் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை, எனவே உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.” என்றார்.

சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ள மரம்

பட மூலாதாரம், Bhagyashree Raut

இந்த வழக்கில் ரயில்வே ரூ.1 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ரயில்வே 1 கோடி ரூபாய் தாக்கல் செய்த நிலையில் அதில் 50 லட்சம் ரூபாயை விவசாயி எடுத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

ஆனால் அந்த நேரத்தில் மரம் மதிப்பிடப்படவில்லை. மரத்தை மதிப்பிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மதிப்பீட்டிற்குப் பிறகு இழப்பீடு அதிகரித்தால் ரயில்வே கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன் பிறகு மரத்தை மதிப்பிடும் பணி பெங்களூருவில் உள்ள சர்வதேச மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் வனத்துறையால் வழங்கப்பட்டது. அவர்கள் வழங்கிய அறிக்கையில் அந்த மரம் சிவப்பு சந்தன மரம் இல்லையென்றும் அது பிஜசல் மரம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை நாடியுள்ள ரயில்வே மரத்தின் மதிப்பு வெறும் சுமார் 10,000 ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU