SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
2026 ஐபிஎல் சீசனின் 7வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி எம்எஸ் தோனி அல்லது சுரேஷ் ரெய்னா இல்லாமல் சேப்பாக்கத்தில் சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் முதல் போட்டி இது.
மாத்ரே அதிரடி
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியிலும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சேப்பாக்கத்தில் முதல் முறையாக சிஎஸ்கே வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 7 ரன்களிலேயே வெளியேறினார். ஜேவியர் பார்ட்லெட் பந்துவீச்சில் அவர் பிரப்சிம்ரன் சிங் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய இளம் பேட்டர் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடி சிஎஸ்கே ரன் விகிதத்தை உயர்த்தினார். தான் சந்தித்த முதல் 4 பந்துகளையும் டாட் பால்களாக ஆடிய அவர், அதன்பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார்.
பார்ட்லெட் வீசிய ஆட்டத்தன் நான்காவது ஓவரில் 3 பவுண்டரிகள், வைஷாக் விஜயகுமார் வீசிய ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸர், அர்ஷ்தீப் வீசிய ஆறாவது ஓவரில் ஒரு பவுண்டரி என அனைத்து ஓவர்களிலுமே பவுண்டரியோ சிக்ஸரோ அடித்தார்.
மாத்ரே அதிரடி காட்டியதால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சற்று நிதானமாகவே பேட்டிங் செய்தார்.
சிஎஸ்கே பவர்பிளேவில் 1 விக்கெட்டை இழந்து 57 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகும் மாத்ரேவின் அதிரடி தொடர்ந்தது. யான்சன் வீசிய 7வது ஓவரிலும், ஸ்டாய்னிஸ் வீசிய 9வது ஓவரிலும் தலா 2 சிக்ஸர்கள் அடித்தார் அவர். யுஸ்வேந்திர சஹல் ஓவரைத் தவிர மற்ற அனைத்து ஓவர்களிலும் ரன்கள் வேகமாக வந்துகொண்டே இருந்தன.
29 பந்துகளில் அரைசதம் கடந்த மாத்ரே, 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஸ்கொயர் திசையைக் குறிவைத்த சர்ஃபராஸ்
மாத்ரேவுக்கு முன்னதாகவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (22 பந்துகளில் 28 ரன்கள்) சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். அடுத்து வந்த கார்த்திக் ஷர்மாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, சூப்பர் கிங்ஸின் ரன் விகிதம் சற்று குறைந்தது.
இந்நிலையில் சர்ஃபராஸ் கான் மிகவும் சாதுரியமாக விளையாடினார். ஸ்கொயர் திசையில் இலகுவாக பந்துகளைத் தட்டி தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசினார் அவர். 12 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்பட 32 ரன்கள் எடுத்தார் சர்ஃபராஸ்.
கடைசி கட்டத்தில் ஷிவம் துபே சென்னை அணிக்கு நல்லபடியாக இன்னிங்ஸை முடித்துக் கொடுத்தார். 17வது ஓவரின் முடிவில் 14 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்திருந்த துபே, 18வது ஓவர் முதல் அதிரடியைக் கையில் எடுத்தார்.
யான்சன் வீசிய 18வது ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. பார்ட்லெட் வீசிய 19வது ஓவரில் 13 ரன்கள் வந்தது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் துபே 3 பவுண்டரிகள் அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டன.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. துபே 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் வைஷாக் விஜயகுமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பார்ட்லெட், யான்சன், சஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பட மூலாதாரம், Getty Images
டாஸில் என்ன நடந்தது?
முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “இது அவர்களுடைய சொந்த மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி என்பதால் நான் முதலில் பந்துவீசப் போகிறோம். ஆடுகளம் புதியதாக இருப்பதாக உணர்கிறேன். ஆடுகளம் எப்படிச் செயல்படப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது ஒரு நல்ல விஷயமாக இருக்கும். எனவே, அவற்றின் அடிப்படையில் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.” என்றார்.
சிஎஸ்கே-விற்கு எதிரான சமீபத்திய சாதனை பற்றி கேட்கப்பட்டதற்கு, “எங்களிடம் உள்ள வீரர்களைக் கருத்தில் கொள்ளும்போது இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. மேலும், கடந்த போட்டியில் இருந்து எங்களுக்குக் கிடைத்த உத்வேகம் நிச்சயம் இன்றைய போட்டியிலும் எதிரொலிக்கும். அவர்களிடமும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஒரு பிரம்மாண்டமான அணி உள்ளது. எனவே, நாங்கள் எங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, இன்று எங்களின் சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க விரும்புகிறோம்.” என்று ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “எனக்குத் தெரிந்து, இந்த ஆடுகளம் சற்று காய்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இதில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பெரும்பாலும் இது அப்படியேதான் இருக்கும். ஏப்ரல் மாதத்தின் தொடக்கக் காலம் என்பதால், இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று நான் கருதவில்லை. அதனால், முதலில் ரன்களைக் குவித்துவிட்டு, இந்த ஆடுகளத்தை தாராளமாக நம்பலாம் என்று நினைக்கிறேன்.” என்றார்.
களமிறங்கும் வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்
பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர், மேட் ஹென்றி, நூர் அஹமது, கலீல் அஹமது, அன்ஷுல் கம்போஜ்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், மேத்யூ ஷார்ட், ராகுல் சஹர், குர்ஜப்னீத் சிங்
பஞ்சாப் கிங்ஸ்
பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ யான்சன், ஜேவியர் பார்ட்லட், அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யுஸ்வேந்திர சஹல்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரியான்ஷ் ஆர்யா, மிட்ச் ஓவன், சூர்யான்ஷ் ஷெட்கே, ஹர்ப்ரீத் பிரார்.
பட மூலாதாரம், Getty Images
நேருக்கு நேர்
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 16 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன.
அதேசமயம் 2023ம் ஆண்டுக்குப் பிறகு விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2024ம் ஆண்டு தரம்சாலாவில் விளையாடிய போட்டியில் மட்டுமே சூப்பர் கிங்ஸ் வென்றது.
இந்தக் காலகட்டத்தில் சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டிகளிலுமே சிஎஸ்கே தோற்றிருக்கிறது. 2023ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 210 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ், கடந்த ஆண்டு 190 ரன்களை சேஸ் செய்தது.
சேப்பாக்கம் கைகொடுக்குமா?
ஒருகட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக விளங்கிய சேப்பாக்கத்தில் கடந்த சீசன் அந்த அணியால் வெற்றிகள் பெற முடியவில்லை. 2025 சீசனில் சேப்பாக்கத்தில் ஆடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. சீசனின் முதல் போட்டியில் அந்த வெற்றி வந்த பிறகு, 6 தோல்விகளுமே தொடர்ச்சியாக வந்தன. அந்தத் தோல்வி பயணத்தை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியில் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
போட்டிக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சேப்பாக்கம் ஆடுகளம் பற்றிப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “பொதுவாக, சென்னை ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இரவு நேரங்களில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தால், குறிப்பாக இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில் ஆடுகளத்தின் தன்மை சற்று மாறக்கூடும். எனவே, இந்த ஆண்டு ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.” என்று கூறினார்.
SOURCE : THE HINDU



