Home Latest news tamil சமீபத்திய செய்தி மத்திய கிழக்கு முழுவதும் இரான் தாக்குதல் – செளதி, இராக், குவைத், கத்தாரில் என்ன பாதிப்பு?

மத்திய கிழக்கு முழுவதும் இரான் தாக்குதல் – செளதி, இராக், குவைத், கத்தாரில் என்ன பாதிப்பு?

14
0

SOURCE :- BBC NEWS

லெபனான் - இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Reuters

2 மார்ச் 2026, 02:31 GMT

புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கிய ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதன் ஒரு அறிக்கை கூறுகிறது.

பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட் மீது தாக்குதல்

பெய்ரூட்டில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு சற்று முன்பு தொடர் வெடிப்புச் சத்தங்களால் மக்கள் விழித்துக் கொண்டனர். இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா ஆயுதக்குழு வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக அதன் இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கத் தொடங்கியது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் புகை மூட்டங்கள் எழுவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்டுகிறது.

விமான நிலைய சாலையிலும் வடக்கு நோக்கிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதையும், இரவு வரை நீண்ட வரிசைகள் உருவாகி இருப்பதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. பெய்ரூட்டில் அது இன்னும் நீண்ட இரவாக இருக்கும்.

விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் தாக்கத்தை ஆன்லைனில் உள்ள பிற படங்கள் காட்டுகின்றன. சேதமடைந்த கார்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் தெருவில் உள்ளன, ஆனால் சேதத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை.

ஹெஸ்பொலா இரானுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இஸ்ரேலிய பொதுமக்களை குறிவைப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது.

“அந்த குழுவின் முடிவுக்கு” எதிராக செயல்படுவோம் என்றும், ஹெஸ்பொலா வடக்கு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

ஹெஸ்பொலாவின் நடவடிக்கைகள் லெபனானுக்கு மேலும் அழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு வலுவாக பதிலடி கொடுத்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

லெபனான் - இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Houssam Shbaro/Anadolu via Getty Images

இஸ்ரேலை தாக்கியதை உறுதிப்படுத்தியது ஹெஸ்பொலா

லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக ஹெஸ்பொலா உறுதிப்படுத்தியுள்ளது.

இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த குழு கூறியுள்ளது. இது “சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கை” என்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ஏவுகணை தளத்தில் “துல்லியமாக இலக்கைத் தாக்கும் ராக்கெட்டுகள் மற்றும் டிரோன்களின் கூட்டத்தை” ஏவியதாக ஹெஸ்பொலா கூறியது.

ஆனால் இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய பிரதேசத்தில் திறந்தவெளியில் அந்த ஏவுகணைகள் விழுந்தன.

ஷியா முஸ்லிம் அரசியல் மற்றும் இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு இரானின் வலுவான ஆதரவு உள்ளது. இந்த குழு இஸ்ரேலின் இருப்பையே எதிர்க்கிறது.

லெபனான் - இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Anwar AMRO / AFP via Getty Images

லெபனான் பிரதமர் எச்சரிக்கை

தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு எதிராக எச்சரிக்கும் வகையில் லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவது ஒரு பொறுப்பற்ற மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலாகும், இது லெபனானின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களைத் தொடர சாக்குப்போக்குகளை வழங்குகிறது,” என்று அவர் கூறுகிறார்.

இஸ்ரேலும் லெபனானும் 2024 இல் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் பேரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன, இது இஸ்ரேல் – ஹெஸ்பொலா இடையே ஓராண்டுக்கும் மேலாக நீடித்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனாலும் அப்போதிருந்தே இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

13 மாத மோதலைத் தொடர்ந்து வந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், லெபனானில் ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய இலக்குகள் என்று கூறி இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்கப் படைகள் தளம் கொண்டுள்ள ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அன்று கரும்புகை எழும்புவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

பட மூலாதாரம், Reuters

தாக்குதலைத் தொடரும் இரான்

செளதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம், நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ராஸ் தனூரா சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பு நிலையம் அருகில் பறந்த இரண்டு டிரோன்கள் இடைமறிக்கப்பட்டபோது விழுந்த சிதிலங்களால் சிறிய அளவு சேதம் ஏற்பட்டதாக செளதி பிரஸ் ஏஜென்சி கூறியுள்ளது.

பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், சுத்திகரிப்பு நிலையத்தில் தீ மற்றும் அதிக அளவில் புகை எழுவது காணப்படுகிறது.

செளதி அரேபியா நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ தளங்களைக் கொண்டுள்ளது.

சனிக்கிழமை, சௌதி அரசு இரான் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

செளதி, கத்தார், குவைத், இராக்கில்

பட மூலாதாரம், Social media

தோஹாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் துபையிலும் வெடிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎஃப்பி (AFP) தெரிவித்துள்ளது.

வடக்கு இராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எர்பில் விமான நிலையத்திற்கு மேலே மூன்று ஆயுதம் ஏந்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் தளம் கொண்டுள்ள அந்த விமான நிலையத்திற்கு அருகே பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது

குவைத் - இரான் - இஸ்ரேல் - அமெரிக்கா

பட மூலாதாரம், AFP via Getty Images

குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது அதன் அருகில் கரும்புகை எழும்புவதாக ஏஎஃப்பி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், சமீபத்தில் வெளியாகியிருக்கும் புதிய படங்கள், குவைத் நகரத்தின் மீது புகைத் தூண்கள் எழுவது காட்டுகின்றன.

அங்குள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற தகவல்களின் பின்னர் இது வெளியாகியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கிக் கொள்ளவும் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று, மத்திய கிழக்குப் பகுதியில் முழுவதும் இரான் தாக்குதல்கள் நடத்திய நிலையில், குவைத்தில் ஒருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் கூட்டாளியான குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளம் உள்ளது. தங்களை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்தியதாகவும் குவைத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், குவைத்தில் அமெரிக்க விமானம் தாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

“இன்று காலை பல அமெரிக்க போர் விமானங்கள் கீழே விழுந்தன,” என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானப் பணியாளர்கள் “பாதிப்பின்றி உயிர் தப்பினர்” என்றும், அவர்கள் வெளியேற்றப்பட்டு உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் என்றும் அது கூறியுள்ளது. அவர்களின் உடல்நிலை “நிலையாக உள்ளது” என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் “சூழ்நிலைகள்” குறித்து தனது அமெரிக்க கூட்டாளியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், சம்பவத்தின் “காரணங்கள்” குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC