Home தேசிய national tamil ‘மகளிருக்கு ரூ.5000’ – பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?

‘மகளிருக்கு ரூ.5000’ – பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?

11
0

SOURCE :- BBC NEWS

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், MKSTALIN/X

தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மறுபுறம், பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.10,000 கொடுத்தது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துருப்புச் சீட்டாக அமைந்தது போல, தமிழக தேர்தலில் இந்த 5,000 ரூபாய் திமுகவுக்கு அமையுமா என்ற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக அரசியல் தலைவர்களின் கருத்துகள் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?

உரிமைத் தொகை ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோடிக்கும் மேலான மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 இன்று காலையில் வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத் தொகை, முன்பணமாக வழங்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை ஆகியவை சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 என ஒட்டுமொத்தமாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதோடு, “தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் இந்தத் திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இவ்வாறு முன்கூட்டியே வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் அவர்களே 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய், “புதிதாகக் கோடைக்கால சிறப்புத் தொகை என திடீரென அறிவித்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் இதை அறிவிக்கிறார்கள் என்பதை தமிழக மக்களும் மகளிரும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ஒரே நேரத்தில் ரூ.5000 மகளிருக்கு கிடைத்திருக்கிறது. இது அவர்களின் மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு,” என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி கையைவிட்டுப் போவது உறுதியானதை உணர்ந்துகொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் அனைத்தும் கலைந்துவிட்ட நிலையில், தமது நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில்தான் முதலமைச்சர் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது,” என்று விமர்சித்துள்ளார்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

ரூ.5000 கொடுத்தது தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

பிகார் சட்டமன்றத் தேர்தலில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான பங்கை ஆற்றியது. தமிழ்நாட்டிலும் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் ரூ.5,000 என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் சூழ்ச்சிகளைச் செய்ய வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிகார் அரசியல் களத்தையும் தேர்தல் முடிவுகளையும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகச் செயல்பட்டதையும் பார்க்கும்போது, இங்கு அவர் கூறுவது போன்ற சூழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது,” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், “அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் உத்தியாக மகளிர் உரிமைத்தொகையை முன்பணமாக வழங்கியிருப்பது தேர்தலில் திமுகவுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, இதுபோன்ற ஒரு தேர்தல் உத்தியைக் கையில் எடுக்கும் சூழலுக்கு திமுக தள்ளப்பட்டது.

ஆனால், “இது வாக்குக்காக நடக்கும் அரசியல்தான்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். “மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம் திமுக வாக்குகளைப் பெறுவதற்கான இந்த அரசியல் உத்தியைப் பயன்படுத்தியது.”

அதோடு, “இந்தத் தொகையைப் பெற்ற அனைவருமே திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறிவிட முடியாது என்றாலும், அவர்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இதன் மூலம் உண்மையாகவே பலனடையும் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தப் பயனாளிகளில் 60% பேர் வாக்களித்தாலே அது திமுகவுக்கு வெற்றிதான்” என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், “இதுபோன்ற திட்டங்களையும் தாண்டி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதே ஓர் அரசாக திமுக எப்படிச் செயல்பட்டது என்பதைத் தீர்மானிக்கிறது. அதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தும்,” என்று என்கிறார் குபேந்திரன்.

“திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5000 என்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில், பெண்களின் வாக்குகளைக் கவர வேண்டுமென்பதில் அனைவருமே தனிக் கவனம் செலுத்துவர். அந்த வகையில், இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் கணிசமாக உதவக்கூடும்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

அதிமுக, பாஜக கூறுவது என்ன?

மகளிருக்குப் பணம் கொடுத்ததில் தவறில்லை எனக் கூறும் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் பிரச்னையாக இருக்கிறது,” என்கிறார்.

“யாரோ தடுக்கப் பார்ப்பதாக, ஒடுக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார். யார் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமல்லவா! முதலில் இதை யாரால் தடுக்க முடியும்? இது முதலமைச்சர் அரண்டு போயிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. மோசமான, தோல்வியுற்ற ஆட்சி என்பதால்தான் இதுபோன்ற அறிவிப்பை திடீரென்று வெளியிட்டுள்ளார். இது அவரது அச்சத்தையே காட்டுகிறது,” என்கிறார் நாராயணன் திருப்பதி.

மேலும், “5000 ரூபாய் இல்லை ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதற்காகவே அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் ஆட்சியில், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள், டாஸ்மாக் காரணமாக ஏற்படும் சீர்கேடுகள், போதைப்பொருளின் நடமாட்டம் ஆகியவற்றையெல்லாம் மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிகார் தேர்தலில், ஆளும் கட்சி பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததை ஆதரித்தது குறித்து கேட்டபோது, “இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுவொரு கடன் திட்டம். ஆனால், இது இலவச திட்டம். மக்களை கவர்வதற்காக இது செயல்படுத்தப்படுகிறது. இதை அதோடு ஒப்பிட முடியாது,” என்றார்.

பிகாரில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட10 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், “மு.க.ஸ்டாலின் தனது மற்றும் தம் மகனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்து, அந்த அச்சத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த அறிவிப்பு, ஸ்டாலினின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இந்தத் திட்டத்தை வழக்கு போட்டு முடக்கிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய பொய். ஏற்கெனவே இரண்டேகால் கோடி பேருக்கு கொடுப்பதாகக் கூறி ஒரு கோடி பேருக்கே கொடுத்தார்கள். ஆட்சி முடியப்போகும் நேரத்தில் மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கத் தொடங்கினார்கள். இவையனைத்துமே மகனை அரியணை ஏற்றுவதற்கான வேலைகள்.இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பாதிக்காது.

கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என கூறும்போது ‘கொடுக்க முடியாது’ எனக் கூறினார்கள். இப்போது அதே 2000 ரூபாயை கொடுப்பதாக இவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதற்கான ஒப்புதல்தானே! அவர்களின் மீதிருந்த நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிட்டார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

திமுக கூறுவது என்ன?

“பிகாரில் தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு 10,000 ரூபாய் திட்டத்தை அறிவித்தார்கள், அதைக் கடுமையாக விமர்சித்தோம். இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால், இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது,” என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

“பிகாரில் நடந்தது அரசியல் சூழ்ச்சி. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளும் கட்சி கபட நாடகமாடி வாக்குகளைப் பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கும், பல கோடி மகளிர் பயனடையும் திட்டம் இது,” என்றார்.

மேலும், “திமுகவுக்கு கிடைத்த தகவலின்படி, தேர்தல் காலகட்டத்தில் நிதி சார்ந்த எவ்வித உதவித் திட்டங்களையும் தடை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று கூறிய ரவீந்திரன், “அந்த முயற்சிகளின் விளைவாக மகளிர் உரிமைத் தொகை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டால், அதன் மூலம் பயனடையும் பல கோடிப் பெண்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதாலேயே, முதலமைச்சர் இவ்வாறு அறிவித்தார்,” எனவும் விளக்கினார்.

மேலும் பேசிய அவர், “ஒருவேளை மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் பிற கட்சிகள், அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட்டதாகப் பரப்புரை செய்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கக்கூடும். அதையும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான தொகை வழங்கப்பட்டது,” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU