Home தேசிய national tamil பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு

பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு

4
0

SOURCE :- BBC NEWS

இருண்ட ஆற்றல்- பிரபஞ்சத்தின் கோட்பாட்டை மாற்றியமைக்குமா?

பட மூலாதாரம், ESA

இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு வானியல் தொடர்பான நமது அடிப்படைப் புரிதலைக்கூட மீண்டும் ஒருமுறை கேள்வி கேட்க வைத்துவிடும்.

இந்த ஆய்வின் முதல்கட்ட கண்டுபிடிப்பு, தற்போது அனைவரும் பின்பற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது.

இதன் முடிவுகளை உறுதி செய்வதற்கு இன்னும் நிறைய தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகிறது. ஆனால் மிகவும் மதிக்கத் தகுந்த ஆய்வாளர்களான லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓபர் லஹவ் போன்றோர்கூட கிடைக்கும் தரவுகளைக் கண்டு அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் மூழ்கியுள்ளனர்.

பேராசிரியர் ஓபர் லஹவ், “இதுவொரு வியத்தகு தருணம்,” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

இருண்ட ஆற்றல் என்பது என்ன?

பிரபஞ்சம் பற்றிய புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

ஓபர் லஹவின் கருத்துப்படி, “இதுவரை பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முன்மாதிரியாக இருந்த புரிதலில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்.”

இருண்ட ஆற்றல் என ஒன்று இருப்பது கடந்த 1998ஆம் ஆண்டில் தெரிய வந்தபோது, அந்தக் கண்டுபிடிப்பே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவரை, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்வுக்குப் பிறகு ஈர்ப்பு விசையின் காரணமாக பிரபஞ்சம் விரிவடையும் வேகம் குறையும் என்றே நம்பப்பட்டது. பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்க முயல்கிறது.

ஆனால், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் கணிப்புப்படி இதன் விரிவாக்கம் மேலும் வேகமடைந்து வருகிறது.

இது ஏற்படக் காரணமாக இருக்கும் ஆற்றல் என்னவென்று தெரியாததாலும், அதைப் பற்றிய புரிதல் இல்லாததாலும் அதற்கு இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று பெயர் சூட்டினர்.

‘வலுவான ஆதாரம்’

இருண்ட ஆற்றல்- பிரபஞ்சத்தின் கோட்பாட்டை மாற்றியமைக்குமா?

பட மூலாதாரம், DESI

இருண்ட ஆற்றல் என்ன என்பது நமக்குத் தெரியாமல் இருப்பதால் அறிவியலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மர்மமாக அது இருக்கிறது.

இதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியின் உருவாக்கம் அத்தகைய முயற்சிகளில் ஒன்று. இது அரிசோனாவில் உள்ள டூசான் நகரத்தில், கிட் பீக் தேசிய கண்காணிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி, 5,000 ஒளியியல் இழைகளைக் (optical fibres) கொண்டுள்ளது. ஒவ்வொரு ஒளியியல் இழையும் ரோபோட்கள் மூலம் கேலக்ஸிகளை அதிவேகத்தில் கண்காணிக்கின்றன.

கடந்த ஆண்டு, இந்தக் கருவியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இருண்ட ஆற்றல் வெளிப்படுத்திய ஆற்றல் காலப்போக்கில் மிகவும் மாறுபட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். முதலில், சராசரியாகக் கிடைக்கும் தரவுகளில் ஏற்பட்ட சிறு பிசகல் என்றே இதை அவர்கள் கருதினர். ஆனால், அந்தப் “பிசகல்” மேலும் வளர்ந்துள்ளது ஓர் ஆண்டுக்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“முன்பு இருந்ததைவிட இப்போது ஆதாரம் வலுவாக உள்ளது” என்று போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பேரசிரியரான சேஷாத்ரி நடத்தூர் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு நடைபெற்ற சோதனைகளைவிட அதிகளவிலான சோதனைகளைச் செய்துள்ளோம். அவற்றில் கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் நமக்குக் கிடைத்த மாறுப்பட்ட தரவுகள் அனைத்தும் உண்மை என்றும், எங்களால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தரவுப் பிசகல் இல்லை என்ற நம்பிக்கையையும் வலுவாக்கியுள்ளது,” என்றார் அவர்.

விசித்திரமான முடிவுகள்

இதுவரை கிடைத்த தரவுகள், இதை ஒரு கண்டுபிடிப்பாக முன்வைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லாவிட்டாலும், ஸ்காட்லாந்து முன்னணி வானியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கேத்தரின் ஹேமன்ஸின் கவனத்தை இதன் பக்கம் ஈர்த்துள்ளது.

“நாம் நினைத்ததைவிட இந்த இருண்ட ஆற்றல் மிகவும் விசித்திரமானதாக இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

“கடந்த 2024ஆம் ஆண்டு கிடைத்த தரவுகள் மிகவும் புதிதாக இருந்ததால், இது தொடர்பாக இன்னும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போது நம்மிடம் நிறைய தரவுகள் உள்ளன. நமக்குக் கிடைத்த தரவுகளில் இருக்கும் விலகல் சரியாகின்றதா அல்லது மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்பை நோக்கி நமது பயணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றதா என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்” என்றும் கேத்தரின் ஹேமன்ஸ் குறிப்பிட்டார்.

மாறுபட்ட தரவுகள் கிடைக்கக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, அது “யாருக்கும் தெரியாது” என்று புன்னகையுடன் ஒப்புக்கொண்டார்.

 யூக்லிட் மிஷன்

பட மூலாதாரம், ESA

“புதிதாகக் கிடைத்த முடிவுகள் சரியானவை என்றால், இதை ஏற்படுத்தும் ஆற்றலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் புத்தம் புதிய கோட்பாடு ஒன்று உருவாகலாம், இது மிகவும் உற்சாகமளிக்கக் கூடியதாக இருக்கும்.”

மேற்கூறிய டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட் (DESI) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தோராயமாக 5 கோடி கேலக்ஸிகளையும் மற்ற ஒளி நிறைந்த பொருட்களையும் கணக்கிடும். இதன் மூலமாக அவர்களின் கணக்கீடுகள் சரியா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.

“இந்தப் பிரபஞ்சமே அது செயல்படும் வழிமுறையை நம்மிடம் சொல்லும். ஒருவேளை நாம் நினைத்ததைவிட அதன் செயல்பாடு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்பதை அது நமக்கு உணர்த்துகிறதா என்பதை நாம் அறிய வேண்டும்,” என்கிறார் கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே குயூ.

இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும். யூக்லிட் என்பது ஒரு விண்வெளி தொலைநோக்கி. இது DESI-ஐ விட இன்னும் நுணுக்கமான கணக்கீடுகளைக் கொடுக்கக்கூடியது. 2023ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியில் ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் டர்ஹாம், யு.சி.எல். மற்றும் பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் உள்பட 70க்கும் மேற்பட்ட நிறுவங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU