Home தேசிய national tamil பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சிறுமியை மீட்க துப்பறிவாளருக்கு ‘செங்கல்’ உதவியது எப்படி?

பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சிறுமியை மீட்க துப்பறிவாளருக்கு ‘செங்கல்’ உதவியது எப்படி?

24
0

SOURCE :- BBC NEWS

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் பாலியல் வன்கொடுமை பற்றிய விவரங்கள் உள்ளன

தனது குழுவினரால் லூசி என்று பெயரிடப்பட்ட ஒரு வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியை மீட்பதற்கான முயற்சியில் ஆன்லைன் விசாரணை நிபுணரான கிரெக் ஸ்கொயர் ஒரு முட்டுக்கட்டையைச் சந்தித்தார்.

மனதைக் கலங்கடிக்கும் அவளுடைய படங்கள் ‘டார்க் வெப்’ தளத்தில் பகிரப்பட்டு வந்தன. டார்க் வெப் தளம் என்பது உரிமையாளர்களைக் கண்டறிய முடியாதபடி வடிவமைக்கப்பட்ட, சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தினால் மட்டுமே அணுகக் கூடிய இணையத்தின் என்க்ரிப்ஷன் (Encryption) செய்யப்பட்ட ஒரு மூலையாகும்.

அந்த அளவிலான ரகசியத்திலும் கூட, வன்கொடுமையாளர் “தனது தடயங்களை மறைப்பதில்” கவனமாக இருந்தார். அடையாளம் காணக்கூடிய எந்தவொரு அம்சத்தையும் வெட்டியோ அல்லது மாற்றியோ இருந்தார் என்று ஸ்கொயர் கூறுகிறார். லூசி யார் அல்லது எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாக இருந்தது.

அந்த 12 வயது சிறுமியின் இருப்பிடத்திற்கான குறிப்பு கண் முன்னாலேயே மறைந்திருப்பதை அவர் விரைவில் கண்டறிய இருந்தார்.

பாலியல் வன்கொடுமையை சித்தரிக்கும் பொருட்களில் இடம்பெற்றுள்ள குழந்தைகளை அடையாளம் காண முயற்சிக்கும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணையின் ஒரு உயரடுக்கு பிரிவில் ஸ்கொயர் பணிபுரிகிறார்.

பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் குழு ஒன்று ஸ்கொயர் மற்றும் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் ரஷ்யாவில் உள்ள பிற புலனாய்வுப் பிரிவினருடன் ஐந்து ஆண்டுகளைச் செலவிட்டு அவர்கள் வழக்குகளுக்கு தீர்வு காண்பதை படம் பிடித்துள்ளது.

ரஷ்யாவில் கடத்தப்பட்டு இறந்ததாகக் கருதப்பட்ட ஏழு வயது சிறுமியின் வழக்கில் தீர்வு கண்டது மற்றும் டார்க் வெப்பில் ஐந்து மிகப்பெரிய குழந்தை வன்கொடுமை குழுக்களுக்கு பொறுப்பான பிரேசிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் தீர்வு காண்பதை இது காட்டுகிறது.

இந்த முன்னெப்போதும் இல்லாத அணுகல், அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அல்லாமல், படங்கள் அல்லது அரட்டை குழுக்களில் வெளிப்படும் சிறிய விவரங்களைக் கண்டறிவதன் மூலம் இந்த வழக்குகள் எவ்வாறு பெரும்பாலும் தீர்க்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

லூசியின் வழக்கை ஸ்கொயர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் கையாண்டார். அதுவே அவரது நீண்டகால அர்ப்பணிப்பிற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்று குறிப்பிடுகிறார்.

லூசி தனது சொந்த மகளின் வயதில் இருந்ததும், அவள் தனது படுக்கையறையில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் புதிய புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்ததும் அவருக்குப் பெரும் கவலையை அளித்தது.

படங்களில் காணப்படும் மின்சார சாக்கெட் மற்றும் அவுட்லெட் வகையிலிருந்து லூசி வட அமெரிக்காவில் இருக்கிறாள் என்பதை ஸ்கொயரும் அவரது குழுவினரும் கண்டறிந்தனர். ஆனால் அவர்களால் அவ்வளவுதான் அறிய முடிந்தது.

அவர்கள் அந்த நேரத்தில் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்திய ஃபேஸ்புக்கை தொடர்பு கொண்டு, பதிவேற்றப்பட்ட குடும்பப் புகைப்படங்களை ஆய்வு செய்து லூசி அவற்றில் ஏதேனும் ஒன்றில் இருக்கிறாளா என்று பார்க்க உதவி கேட்டனர். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் இருந்த போதிலும், அதற்கு உதவத் தன்னிடம் “சாதனங்கள் இல்லை” என்று கூறியது.

அதனால் ஸ்கொயரும் அவரது சகாக்களும் லூசியின் அறையில் கண்ட அனைத்தையும் பகுப்பாய்வு செய்தனர். படுக்கை விரிப்பு, அவளுடைய ஆடைகள், அவளுடைய பொம்மைகள். ஏதாவது ஒரு அம்சம் உதவுமா என்று தேடினர்.

அவர்களது தேடலில் ஒரு சிறிய முன்னேற்றம் கிடைத்தது. சில படங்களில் காணப்பட்ட சோபா ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டுமே விற்கப்பட்டது, நாடு தழுவிய அளவில் அல்ல என்பதை அந்த குழு கண்டறிந்தது. எனவே, அது குறைந்த அளவிலான வாடிக்கையாளர் தளத்தை கொண்டிருந்தது.

ஆனால் அதுவும் சுமார் 40,000 மக்களை சென்றடைந்திருந்தது.

“விசாரணையின் அந்த கட்டத்தில், நாங்கள் [இன்னும்] அமெரிக்காவின் 29 மாநிலங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தோம். அதாவது பல்லாயிரக்கணக்கான முகவரிகளை ஆய்வு செய்யவேண்டியிருந்தது, அது மிகவும் கடினமான பணி,” என்கிறார் ஸ்கொயர்.

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

பட மூலாதாரம், Getty Images

அந்த குழு மேலும் துப்புகளைத் தேடியது. லூசியின் படுக்கையறையில் காணப்பட்ட வெறும் செங்கல் சுவர் தங்களுக்கு ஒரு வழியைக் காட்டக்கூடும் என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தார்கள்.

“நான் சாதாரணமாக கூகுளில் செங்கற்களை பற்றி தேடத் தொடங்கினேன், அதிகத் தேடல்கள் இல்லாமலேயே செங்கல் தொழில் சங்கத்தைக் கண்டறிந்தேன்,” என்கிறார் ஸ்கொயர்.

“மறுமுனையில் பேசிய பெண் அற்புதமாக பேசினார். அவர், ‘செங்கல் தொழில் எப்படி உதவ முடியும்?’ என்பது போல் கேட்டார்.”

அந்தப் புகைப்படத்தை நாடு முழுவதும் உள்ள செங்கல் நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் முன்வந்தார். அதற்கான பதில் கிட்டத்தட்ட உடனடியாகக் கிடைத்தது என்று அவர் கூறுகிறார்.

தொடர்பு கொண்டவர்களில் ஒருவர் ஜான் ஹார்ப், அவர் 1981 முதல் செங்கல் விற்பனையில் பணியாற்றி வருகிறார்.

“அந்தச் செங்கல் மிகவும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட செங்கல் என்பதையும், அதன் மீது சிறிது கரிப்பூச்சு இருப்பதையும் நான் கவனித்தேன். இது ஒரு மாடுலர் எட்டு அங்குல செங்கல் மற்றும் இது சதுர விளிம்புகளைக் கொண்டது. அதைப் பார்த்ததும், அந்தச் செங்கல் எது என்று எனக்குத் தெரிந்துவிட்டது,” ,” என்று அவர் கூறுகிறார்.

அது ஒரு “மிளிரும் அலமோ” (Flaming Alamo) என்று அவர் ஸ்கொயரிடம் கூறினார்.

“[எங்கள் நிறுவனம்] 60-களின் பிற்பகுதியிலிருந்து 80-களின் நடுப்பகுதி வரை அந்தச் செங்கலைத் தயாரித்தது, அந்த ஆலையில் இருந்து நான் பல லட்சக்கணக்கான செங்கற்களை விற்றுள்ளேன்.” என்றார்.

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

தொடக்கத்தில் ஸ்கொயர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வாடிக்கையாளர் பட்டியலை அணுகலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் விற்பனைப் பதிவுகள் பல தசாப்தங்களுக்கு முந்தைய “வெறும் குறிப்புகளின் குவியல்” என்ற செய்தியை ஹார்ப் தெரிவித்தார்.

இருப்பினும் அவர் செங்கற்களைப் பற்றிய ஒரு முக்கிய விவரத்தை வெளிப்படுத்தினார் என்று ஸ்கொயர் கூறுகிறார்.

‘செங்கற்கள் கனமானவை. மிகவும் கனமான செங்கற்கள் மிகத் தூரம் செல்வதில்லை’ என்று அவர் கூறியதாக ஸ்கொயர் தெரிவித்தார்.

இது அனைத்தையும் மாற்றியது. அந்தக் குழு சோபா வாடிக்கையாளர் பட்டியலுக்குத் திரும்பியது மற்றும் அமெரிக்காவின் தென்மேற்கில் உள்ள ஹார்பின் செங்கல் தொழிற்சாலையிலிருந்து 100 மைல் சுற்றளவிற்குள் வசிக்கும் வாடிக்கையாளர்களை மட்டும் பட்டியலிட்டது.

அந்த 40 அல்லது 50 நபர்களின் பட்டியலிலிருந்து, அவர்களின் சமூக ஊடகங்களைக் கண்டுபிடித்து ஆய்வு செய்வது எளிதாக இருந்தது. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் லூசி ஒரு வயது வந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை கண்டனர், அந்தப் பெண் அந்தச் சிறுமிக்கு நெருக்கமானவர் – அநேகமாக ஒரு உறவினர் போலத் தெரிந்தார்.

அவர்கள் அந்தப் பெண்ணின் முகவரியைக் கண்டறிந்தனர். பின்னர் அந்த நபருடன் தொடர்புடைய மற்ற அனைத்து முகவரிகளையும், அவர் எப்போதாவது ஒன்றாக வாழ்ந்த அனைவரையும் கண்டறிய அதைப் பயன்படுத்தினர்.

அது லூசியின் சாத்தியமான முகவரிக்கான தேடலை மேலும் சுருக்கியது. அவர்கள் வீடுவீடாகச் சென்று விசாரிக்க விரும்பவில்லை. முகவரி தவறாகப் போனால், சந்தேக நபர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கிறார் என்பதை யாராவது அவருக்குத் தெரிவிக்கும் அபாயம் இருந்தது.

அதனால் ஸ்கொயரும் அவரது சகாக்களும் இந்த வீடுகளின் புகைப்படங்களைச் செங்கல் நிபுணரான ஜான் ஹார்ப்பிற்கு அனுப்பத் தொடங்கினர்.

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

எந்த வீட்டின் வெளிப்புறத்திலும் ‘மிளிரும் அலமோக்கள்’ தெரியவில்லை, ஏனெனில் அந்த வீடுகள் வேறு பொருட்களால் மூடப்பட்டிருந்தன. ஆனால், இந்த வீடுகளின் பாணி மற்றும் வெளிப்புறத்தைப் பார்த்து – ‘மிளிரும் அலமோக்கள்’ விற்பனையில் இருந்த காலத்தில் இவை கட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்று மதிப்பிடுமாறு அந்தக் குழு ஹார்ப்பைக் கேட்டுக்கொண்டது.

“நாங்கள் அந்த வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து ஜானுக்கு அனுப்பி, ‘இந்த வீட்டிற்குள் இந்தச் செங்கற்கள் இருக்க வாய்ப்புள்ளதா?’ என்று கேட்போம்,” என்கிறார் ஸ்கொயர்.

இறுதியாக அவர்களுக்கு ஒரு முன்னேற்றம் கிடைத்தது. ஹார்ப் ‘மிளிரும் அலமோ’ செங்கல் சுவரைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக நம்பிய ஒரு முகவரியைக் கண்டறிந்தார். மேலும் அது சோபா வாடிக்கையாளர் பட்டியலிலும் இருந்தது.

“அதனால் எங்கள் தேடலை [இந்த] ஒரு முகவரிக்குள் சுருக்கினோம்… மற்றும் அரசு ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம்… பள்ளிகள் பற்றிய தகவல்கள் மூலம் அங்கு யார் வசிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியைத் தொடங்கினோம்,” என்கிறார் ஸ்கொயர்.

அந்த வீட்டில் அவளது தாயின் காதலரான, ஏற்கனவே பாலியல் குற்றவாளியாக ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர் தங்கியிருப்பதை அந்தக் குழு கண்டுபிடித்தது.

லூசியை ஆறு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த, அந்த குற்றவாளியை அடுத்த சில மணிநேரத்தில் உள்ளூர் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லூசி பாதுகாப்பாக இருக்கிறார் என்பதைக் கேட்டு செங்கல் நிபுணர் ஹார்ப் மகிழ்ச்சியடைந்தார்.

“எங்கள் வீட்டில் 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு குழந்தைகள் இருந்துள்ளனர். நாங்கள் மூவரைத் தத்தெடுத்துள்ளோம். வன்கொடுமையால்[முன்பு] பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் எங்கள் வீட்டில் இருந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“[ஸ்கொயரின் குழு] நாளுக்கு நாள் செய்வதும் பார்ப்பதும், நான் பார்த்த அல்லது கையாண்டதை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிகம்.” என்றும் ஸ்கொயர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்கொயருக்கு ஏற்பட்ட அந்த அழுத்தம் அவரது மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. அவர் வேலை செய்யாதிருந்த போது, “மது எனது வாழ்க்கையில் இருக்க வேண்டியதை விட அதிகப்படியான பங்கைக் கொண்டிருந்தது” என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

“அந்த நேரத்தில் எனது குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்களாக இருந்தனர். அது என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டியது. அதாவது… ‘இன்று அதிகாலை மூன்று மணிக்கு நான் எழுந்தால், ஆன்லைனில் ஒரு குற்றவாளியை நான் கண்டுபிடிக்க முடியும்’ என்பது போல.”

“இதற்கிடையில், தனிப்பட்ட முறையில்… ‘கிரெக் என்பவர் யார்? அவருக்கு என்ன செய்யப் பிடிக்கும் என்று கூட எனக்குத் தெரியவில்லை.’ நண்பர்கள் அனைவரும்… பகல் நேரத்தில், அவர்கள் குற்றவாளிகள்… அவர்கள் நாள் முழுவதும் மிக பயங்கரமான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.”

சிறிது காலத்திற்குப் பிறகு, அவரது திருமணம் முறிந்தது. அவருக்குத் தற்கொலை எண்ணங்கள் வரத் தொடங்கியதாக அவர் கூறுகிறார். அவரது சக ஊழியர் பீட் மேனிங் தான், தனது நண்பர் சிரமப்படுவதைக் கவனித்து உதவி பெற ஊக்குவித்தார்.

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

“உங்களுக்கு இவ்வளவு ஆற்றலையும் உந்துதலையும் தரும் ஒரு விஷயம்தான், உங்களை மெதுவாக அழித்துக் கொண்டிருக்கிறது எனும்போது அது கடினமாக இருக்கும்,” என்கிறார் மேனிங்.

தனது பலவீனங்களை வெளிப்படுத்தியதுதான் குணமடைவதற்கும், தான் பெருமைப்படும் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்வதற்கும் முதல் படியாக இருந்ததாக ஸ்கொயர் கூறுகிறார்.

“தொலைக்காட்சியில் பார்ப்பதற்கோ அல்லது கேள்விப்படுவதற்கோ பதிலாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குழுவின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்… அதை நிறுத்த முயற்சிக்கும் அந்தப் போராட்டத்திலேயே நான் இருக்க விரும்புகிறேன்.”

கடந்த கோடையில் கிரெக் முதல்முறையாக லூசியைச் சந்தித்தார், அவருக்கு இப்போது 20 வயது ஆகிறது.

அமெரிக்கா, டார்க்வெப், சிறுமி மீட்பு, கிரெக் ஸ்கொயர்

தான் கடந்து வந்ததைப் பற்றி இப்போது விவாதிக்கும் தனது திறன், தன்னைச் சுற்றியுள்ள ஆதரவிற்கு சான்றாகும் என்று லூசி அவரிடம் கூறினார்.

“[வன்கொடுமை] பற்றி மக்களிடம் பேசுவதற்கான ஆற்றல் எனக்கு உள்ளது, இதை என்னால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கூட செய்திருக்க முடியாது.”

தனக்கு நேரிட்ட வன்கொடுமையை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முடிவுக்குக் கொண்டு வந்த நேரத்தில், அது முடிவுக்கு வர வேண்டும் என்று தான் “தீவிரமாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாக” லூசி கூறினார்.

“சாதாரணமாகச் சொல்வதாகத் தோன்றலாம், ஆனால் அது ஒரு பிரார்த்தனைக்கான பதில்.”

உதவி வந்து கொண்டிருக்கிறது என்பதைத் தம்மால் தெரிவித்திருக்க முடிந்திருக்கலாம் என்று ஸ்கொயர் அவரிடம் கூறினார்.

“ஏதாவது ஒரு மனத்தொடர்பு இருந்து அவரை தொடர்பு கொண்டு, ‘கேளுங்கள், நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்’ என்று சொல்ல முடிந்திருக்கலாம் என்று விரும்புகிறேன்.”

லூசியைத் தேடுவதில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்த முடியவில்லை என்று பிபிசி ஃபேஸ்புக்கிடம் கேட்டது. அதற்கு, “பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க, நாங்கள் பொருத்தமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம், ஆனால் எங்களால் முடிந்தவரை சட்ட அமலாக்கத்திற்கு உறுதுணையாகப் பணியாற்றுகிறோம்.” எனத் தெரிவித்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU