Home தேசிய national tamil பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய ‘ஒரு விஷயம்’ என்ன?

பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய ‘ஒரு விஷயம்’ என்ன?

15
0

SOURCE :- BBC NEWS

பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய 'ஒரு விஷயம்' என்ன?

பட மூலாதாரம், Getty Images

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது.

இரண்டு அணிகளும் தங்களது முதல் இரு போட்டிகளையும் வென்று நம்பிக்கையோடு களமிறங்குவதால் நிச்சயம் ஒரு பரபரப்பான போட்டியை இவ்விரு அணிகளும் அரங்கேற்றலாம்.

எந்தவொரு இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலும் இரு அணிகளுக்குமே நிச்சயம் மிகப் பெரிய நெருக்கடி இருக்கும்.

உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இம்முறையும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு அனைத்து ஏரியாவுமே முழுமையாக இருக்கிறது.

அதேசமயம் ‘இழப்பதற்கு ஒன்றும் இல்லை’ என்ற மனநிலையில் பாகிஸ்தான் அணி ஆடும்பட்சத்தில் அவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையக்கூடும். அந்த அணியிலும் இளமையான, பயமற்ற வீரர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவுமே இந்தப் போட்டியின் முடிவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா கவனம் செலுத்தவேண்டிய இடங்கள்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இரண்டு போட்டிகளையும் வென்று இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும், ஒருசில விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

இந்திய அணி மிகவும் அதிரடியாக ஆட நினைக்கிறது. அது அவர்களுக்கு சற்று பிரச்னைக்குரிய விஷயமாக மாறலாம். கடந்த இரண்டு போட்டிகளிலும் சில தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அதனால், அவர்கள் சற்று கவனமாக இந்தப் போட்டியைக் கையாளவேண்டும்.

அதேபோல், ஃபினிஷிங்கில் அவர்கள் சற்று கவனம் செலுத்தவேண்டும். அங்கு பிரச்னை இருப்பதாகச் சொல்லமாட்டேன். அதேசமயம், அவர்கள் முழுமையன ஒரு செயல்பாட்டைக் கொடுக்கவில்லை.

ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், ரிங்கு சிங் ஆகியோர் கடைசி கட்டத்தில் என்ன செய்வார்கள் என்பது தெரியும். ஆனால், இந்த இரு போட்டிகளில் அவர்கள் அதை இன்னும் செய்யவில்லை.

ஒருவகையில் இது நல்லது தான் என்று நினைக்கிறேன். ஏனெனில், போகப் போக தொடரின் முக்கியமான தருணத்தில் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.

கடைசி 5-6 ஓவர்களில் நெருக்கடியை சமாளித்து விளையாடுவது என்பது ஒரு கலை. அதை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாகச் செய்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையிலும் அதை அவர்கள் செய்யத் தொடங்கவேண்டும்.

பொதுவாக இந்திய வீரர்கள் பந்தின் வேகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆடும் திறன் பெற்றவர்கள். ஆனால், நமீபிய வேகப் பந்துவீச்சாளர்கள் மெதுவாகப் பந்துவீசி சவால் கொடுத்திருந்தனர்.

இந்திய பேட்டர்கள் அதற்குத் தகவமைத்துக்கொள்ளத் தவறவிட்டார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இது நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இந்த உலகக் கோப்பையில் 20 பந்துகளை சந்தித்திருக்கும் ரிங்கு சிங் 7 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக் இல்லாவிட்டால்..

இந்திய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா உடல்நிலை பாதிப்பு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

ஒருவேளை இந்தப் போட்டியிலும் அபிஷேக் ஷர்மா ஆடவில்லை என்றால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும்.

ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சாளர்கள் மீதும், எதிரணி மீதும் அவர் நெருக்கடியை ஏற்படுத்துவார். அந்த அதிரடியைப் பவர்பிளேவுக்குப் பின்பும் தொடர்கிறார். மிகவும் எளிதாக சிக்ஸர்கள் அடிக்கிறார். அவர் ஆடாமல் போனால் அது நிச்சயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமையும்.

மேலும், அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் சற்று நம்பிக்கையைக் கொடுக்கும். ஏனெனில் அவர் ஓப்பன்னிங்கில் ஆடும்போது 6 ஓவர்களில் 70-80 ரன்கள் வரை வந்துவிடும். அதனால், அவர் இல்லையெனில் அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஆசிய கோப்பை போட்டிகளில் அபிஷேக்கின் அதிரடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

அதேசமயம் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். அவர், அபிஷேக் இடத்தை அவர் ஓரளவு நிரப்புவார் என்றாலும், இடது கை வீரர் அபிஷேக் ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கத்தை இந்தியா தவறவிடும்.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா விளையாடவில்லை

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் ஆச்சர்யம் ஏற்படுத்தலாம்

பாகிஸ்தான் ஒரு நல்ல அணி. அவர்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. முதல் போட்டியில் சேஸிங்கின்போது சற்று தடுமாறியிருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கணிக்க முடியாத ஒரு அணியாக இருந்திருக்கிறார்கள். எப்போது சிறப்பாக ஆடுவார்கள், எப்போது சொதப்புவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அந்த ஆச்சரியமளிக்கும் தன்மை (‘surprise element’) அந்த அணியிடம் எப்போதுமே இருக்கும்.

சாஹிப்சாதா ஃபரான் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் அதிரடியாக ரன் குவிக்கிறார். ஆரம்பத்தில் எதிரணி பந்துவீச்சாளர்கள் மீது அவர் நெருக்கடியை ஏற்படுத்துகிறார். அதை ஆசிய கோப்பையின்போதும் பார்த்தோம். அது அந்த அணிக்கு மிகவும் சாதகமான விஷயம்.

அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் எடுத்துவிட்டால், சேஸ் செய்வது பாகிஸ்தானுக்கு எளிதாக இருப்பதில்லை. இந்த இடத்தில் தான் பாபர் ஆசம் முக்கியத்துவம் பெறுவார். அவர் சமீபத்தில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

பட மூலாதாரம், Getty Images

உஸ்மான் தாரிக் இந்தியாவுக்கு சவாலா?

இந்த உலகக் கோப்பை தொடங்கப்பட்டதில் இருந்தே பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறார். அவரது ‘பௌலிங் ஆக்‌ஷன்’ பற்றி நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை உஸ்மான் தாரிக்கின் ‘பௌலிங் ஆக்‌ஷன்’ சரியாகத்தான் இருக்கிறது. அவர் ‘த்ரோ’ செய்யவில்லை. அது ‘சக்கிங்’ கிடையாது.

இதுபோன்ற பந்துவீச்சாளர்களை, குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அடிப்பது சற்று கடினமாக இருக்கும். ‘அண்டர் தி பால் எலிவேஷன்’ கிடைப்பது பேட்டர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும்.

பொதுவாக இந்த ஃபார்மட்டில் பேட்டர்கள் பந்துக்கு கீழே சென்று ஆடவிரும்புவார்கள். ஆனால், இவர் பந்துவீச்சில் அது மிகவும் கடினம். அதிலும் பௌன்ஸ் குறைவான ஆடுகளம் என்றால் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்திய அணி இவருக்கு ஏற்ற திட்டங்கள் வகுத்துக் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன்.

அவருக்கு எதிராக முற்றிலும் ‘டிஃபன்ஸிவாக’ ஆடுவார்கள் என்று எண்ணவில்லை. அவர் பந்துவீச்சில் எப்படி ஸ்கோர் செய்யலாம் என்று நன்கு திட்டமிட வேண்டும்.

உஸ்மான் தாரிக் மீது நெருக்கடியை ஏற்படுத்த நல்ல பவர்பிளே தேவை. பவர்பிளேவில் இந்திய அணி 2 அல்லது 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அதன்பிறகு தாரிக் போன்ற ஒரு பந்துவீச்சாளர் வந்து ஆதிக்கம் செலுத்தக்கூடும்.

அப்படியில்லாமல் பவர்பிளேவில் 55/0, 60/0 என்பதுபோன்ற ஸ்கோர் எடுத்தால், உஸ்மான் தாரிக் பந்துவீச வரும்போதே அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

இதனால்தான், அபிஷேக் ஷர்மா இல்லாதது பின்னடைவு என்று நான் கருதுகிறேன்.

இருந்தாலும், நிச்சயம் இந்திய வீரர்கள் தாரிக்கின் வீடியோக்களைப் பார்த்திருப்பார்கள். அதனால் நல்ல திட்டத்தோடு வருவார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

சாதகம் யாருக்கு?

பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வரலாறு இந்திய அணியிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மிகமுக்கியமான போட்டிகளில் அவர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதைச் சீராகச் செய்திருக்கிறார்கள். ஆசிய கோப்பையில் துபை போன்ற மெதுவான ஆடுகளத்திலும் கூட இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஒருவேளை அபிஷேக் ஷர்மா ஆடாவிட்டால், ஃபரான் போன்ற பேட்டரும், உஸ்மான் தாரிக் போன்ற பந்துவீச்சாளரும் தங்களின் ஆகச்சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பலம் கூடும்.

இலங்கையில் ஆடுவது ஒருவேளை சற்று சவால் கொடுக்கலாம். ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஆட்டத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்தது.

அதனால், இந்திய அணி ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU