Home Latest news tamil சமீபத்திய செய்தி ‘பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக டெல்லியில் சுவரொட்டி’ : திருப்பூரில் வங்கதேசத்தவர் 6 பேர் கைது

‘பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக டெல்லியில் சுவரொட்டி’ : திருப்பூரில் வங்கதேசத்தவர் 6 பேர் கைது

1
0

SOURCE :- BBC NEWS

வங்கதேசத்தவர் கைது

பட மூலாதாரம், Tirupur City Police

டெல்லியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியவர்களுடன் தொடர்புடையதாக வங்கதேசத்தவர்கள் 6 பேரை, திருப்பூரில் டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்து, வடமாநிலத்தவர்கள் என்ற பெயரில் திருப்பூரில் தங்கி பனியன் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான வழக்கு குறித்து டெல்லி போலீசார் முழுமையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்று பிபிசி தமிழிடம் கூறிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், அவர்கள் மீது திருப்பூரில் எந்த வழக்கும் இல்லை என்றார்.

இதுபோன்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பூரில் 200க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர்களை கைது செய்து திருப்பி அனுப்பியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லி போலீசார் இங்கு வந்து கைது செய்யும்வரை, மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 6 பேர்

கடந்த வெள்ளிக்கிழமையன்று திருப்பூருக்கு வந்த டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு போலீசார், திருப்பூர் நகரின் வெவ்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர்.

மிஜனுார் ரகுமான் (வயது 33), முகமது சாபேட் (வயது 35), உமர் (வயது 32), முகமது லிட்டன் (வயது 40), முகமது ஜாகீத் (வயது 40) மற்றும் முகமது உஜால் (வயது 29) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 12 மொபைல் போன்கள், வடமாநில முகவரிகளைக் கொண்ட போலி ஆவணங்களை டெல்லி போலீசார் கைப்பற்றியதாக திருப்பூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகர காவல்துறையினர் பிபிசியிடம் பகிர்ந்த தகவலின்படி, டெல்லி காவல்துறையின் காவல் ஆய்வாளர் ஒருவர் தலைமையில், 2 சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படையினர், திருப்பூர் வந்து இவர்களை பிப்ரவரி 20 ஆம் தேதியன்று கைது செய்தனர். திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பில் வைத்திருந்து மறுநாள் காலையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின், திருப்பூர் ஜூடிஸியல் மாஜிஸ்திரேட் எண்:3 முன்பாக ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்பின் ரயிலில் டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், ”டெல்லி போலீசார், இந்த 6 பேரையும் வெள்ளிக்கிழமையன்று இரவில் கைது செய்துள்ளனர். உடனடியாக அவர்களை அழைத்துச் செல்ல முடியாத காரணத்தால் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதி கோரினர். அங்கு வைத்திருந்துவிட்டு, மறுநாள் சனிக்கிழமை காலையில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் மீது என்னென்ன வழக்கு என்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.” என்றார்.

”அந்த 6 பேர் மீதும் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட எந்த காவல் நிலையத்திலும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்து, இங்கே தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தங்கி, அன்றன்றைக்குக் கிடைக்கும் தினக்கூலி பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் எவ்வளவு காலமாக இங்கே தங்கியிருந்தனர், எங்கெங்கு பணியாற்றினர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார் காவல் ஆணையர்.

‘பாகிஸ்தான் ஆதரவு சுவரொட்டி ஒட்டியவர்களுடன் பேசியவர்கள்’

டெல்லியில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதாகக் கைது செய்யப்பட்டவர்களுடன் பேசியவர்கள் பட்டியலை எடுத்ததில் இவர்களின் 6 பேருடைய எண்களும் தெரியவந்ததன் அடிப்படையில்தான் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக டெல்லி போலீசார் கூறியதாகவும் திருப்பூர் மாநகர காவல்துறையினர் தகவல் பகிர்ந்தனர்.

அதுபற்றி காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, அதுபற்றி, டெல்லிக்கு அழைத்துச் சென்ற பின்பு நடக்கும் விசாரணையில்தான் முழுமையாகத் தெரியவரும் என்றார்.

டெல்லி ஜன்பத் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் சமீபத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் காஷ்மீரை குறித்த கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன.

அது தொடர்பான வழக்கில்தான் இவர்களை கைது செய்திருப்பதாகவும் டெல்லி போலீசார் கூறியதாக திருப்பூர் மாநகர காவல்துறையினர் தெரிவித்தாலும், இந்த நடவடிக்கைகளில் திருப்பூரில் கைதானவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி வேறு எந்த விபரங்களும் இல்லை என்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் பெயரில் ஊடுருவும் வங்கதேசத்தவர்!

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாகவுள்ள திருப்பூரில், வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

திருப்பூர் நகரிலுள்ள பனியன் நிறுவனங்களில் எட்டரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் புலம் பெயர் தொழிலாளர்கள் என்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருக்குமரன் பிபிசியிடம் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இங்கு பணியாற்ற வரும் புலம்பெயர் தொழிலாளர்களில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் 103 வங்கதேசத்தவர்களை கைது செய்ததாக கோவை மேற்கு மண்டலங்களின் ஐஜி சரவணசுந்தர், பிபிசியிடம் தகவல் பகிர்ந்திருந்தார்.

அது முந்தைய ஆண்டை விட 3 மடங்கு அதிகமென்றும் அவர் தெரிவித்திருந்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜவுளி சார்ந்த சிறிய நிறுவனங்களில் முறைசாரா பணிகளில் பணியாற்றிவந்ததும் கண்டறியப்பட்டது.

இதேபோன்று திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த ஒன்றரை ஆண்டில் 200க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர்களை கைது செய்திருப்பதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பாஸ்போர்ட், விசா இல்லாமல் கடந்த ஆண்டில் திருப்பூரில் பணியாற்றிவந்த 28 வங்கதேசத்தவர்களை, திருப்பூர் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு 2 ஆண்டு சிறை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களுக்கு வழங்கிய தண்டனை போதுமானது என்பதால், அவர்களை சிறையிலிருந்து விடுவித்து, 3 மாதங்களில் வங்கதேசத்துக்கு திரும்ப அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC