Home தேசிய national tamil நீங்கள் படித்து முடித்ததும் முதல் வேலை கிடைக்க என்ன செய்யலாம்? 5 யோசனைகள்

நீங்கள் படித்து முடித்ததும் முதல் வேலை கிடைக்க என்ன செய்யலாம்? 5 யோசனைகள்

18
0

SOURCE :- BBC NEWS

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய “பணியாற்றும் இந்தியாவின் நிலை” குறித்த அறிக்கையின்படி, இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட 36.7 கோடி இளைஞர்கள் உள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகையாகும். இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இவர்களாகவே உள்ளனர்.

நாட்டிலுள்ள 36.7 கோடி இளைஞர்களில், 26.3 கோடி பேர் தற்போது பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலவில்லை. எனவே, இவர்கள் தற்போது பணிகளில் ஈடுபடக்கூடிய அல்லது விரைவில் வேலைவாய்ப்புகளில் இணையக்கூடியவர்களாக உள்ளனர். இதனாலேயே இவர்கள் “சாத்தியமான பணியாளர் வளம்” (potential workforce) என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பின்மை குறித்த விவாதத்தை இந்த சமீபத்திய ஆய்வறிக்கை மீண்டும் தூண்டியுள்ளது.

இந்த சூழலில், வேலை கிடைப்பதற்கு இளைஞர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பகுதி நேர வேலையோ அல்லது முழு நேர வேலையோ நீங்கள் உங்கள் வேலையை தொடங்குவதற்கான முக்கியமான 5 யோசனைகள் இதோ…

1. திறன்கள் மீது கவனம் செலுத்துங்கள், வேலை மீது அல்ல

உங்களின் முதல் வேலை என்ன என்பது ஒரு விஷயமே இல்லை – வேலையைவிட நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்களே உங்களின் எதிர்கால பணி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, பல அனுபவம் வாய்ந்த பணிகளுக்கு வலுவான சமூக மற்றும் தொடர்பியல் திறன்கள் தேவை, இந்த திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய பல ஆரம்பநிலை வேலைகள் உள்ளன என்கிறார், பாத் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு பிரிவின் தலைவர் கிஸ்லைன் டெல்.

“நீங்கள் வேலை பார்க்கும் உள்ளூர் கடைக்கு வழக்கமாக வரும் ஒருவரோ அல்லது தங்களுக்காக சாஃப்ட்வேர் ஒன்றை வடிவமைக்க விரும்பும் ஒருவரோ உங்களின் வாடிக்கையாளராக இருக்கலாம்,” என்கிறார் அவர். “எதுவாக இருந்தாலும், நீங்கள் அவருடன் நன்றாக தொடர்புகொள்ளும் உங்கள் திறனை வெளிப்படுத்தி, அவர்கள் கேட்பதை செய்துதருவது மிகவும் முக்கியம்.”

உங்களின் முதல் வேலை குறித்து நீங்கள் அதிகம் சிந்திக்கக்கூடாது என, ஒப்புக்கொள்கிறார் சார்லோட் போஸ்வொர்த். இவர், நாண்டோ மற்றும் B&Q போன்ற நிறுவனங்கள், பிரிட்டனின் சர்வதேச வர்த்தக துறையுடனும் இணைந்து பணியாற்றிவரும் லைஃப்டைம் டிரெய்னிங் எனும் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார்.

“முதலில் நீங்கள் சந்தையில் நுழையுங்கள் – நீங்கள் வேலையில் இருந்தாலே வேலைவாய்ப்புக்கு தகுதி பெற்றவர்கள் ஆவீர்கள்,” என்கிறார் அவர்.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

2. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துங்கள்

வேலை வழங்கும் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை கையாளும் திறன்களுடன் கூடிய அடுத்த தலைமுறை பணியாளர்களை வேலைக்கு அமர்த்த தேடிவருகின்றன. செயற்கை நுண்ணறிவு திறனை உங்கள் வேலைக்கான விண்ணப்பத்தை தயாரிக்க உதவுவதில் பயன்படுத்துவதற்கும் பல வழிகள் உள்ளன.

உங்களின் வேலை என்ன என்பது குறித்தும் நிறுவனத்தின் இணையதளத்தையும் செயற்கை நுண்ணறிவு அமைப்பில் பதிவேற்றி, “இந்த நிறுவனம் எத்தகைய பணியாட்களை தேடுகிறது என்பது குறித்த முதல் 5 விஷயங்கள் என்ன?” என்பது போன்ற குறிப்பான கேள்விகளை கேட்கலாம் என கிஸ்லைன் டெல் பரிந்துரைக்கிறார்.

நீங்கள் விண்ணப்பத்தை தயார் செய்வதிலும், கட்டமைப்பை உருவாக்குவதிலும் உங்கள் திறன்களை சிறந்த வழியில் வெளிக்காட்டுவதிலும் உதவுவதற்கு இவற்றை நீங்கள் பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.

நீங்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால், உங்களின் துறை, நிறுவனம், என்ன வேலை என்பதன் அடிப்படையில் உங்களுக்கு என்ன கேள்விகள் கேட்கப்படலாம் என்பதை உருவாக்கி, உங்களை தயார்படுத்துவதிலும் செயற்கை நுண்ணறிவு உதவலாம் என்கிறார் டெல்.

எனினும், உங்களின் விண்ணப்பத்தை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்து அவர் எச்சரிக்கவும் செய்கிறார்.

“நீங்கள் நீங்களாகவே தெரிய வேண்டும் என நிறுவனங்கள் விரும்பும். உங்களைவிட செயற்கை நுண்ணறிவால் திட்டமிடப்பட்ட 10 வயது அதிகமான ஒரு நபர் போன்று நீங்கள் இருக்க நிறுவனங்கள் விரும்பாது,” என்கிறார் அவர்.

“நேர்த்தியான க்ளோனிங்காக இல்லாமல், சில தவறுகளுடன் உங்களை போன்று இருப்பதே சிறந்தது.”

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

3. உங்களை நேரில் அறிமுகம் செய்யுங்கள்

சிறிதோ அல்லது சுயாதீன தொழில்களோ – உள்ளூர் கஃபேக்கள், கடைகள் அல்லது பப் என எதுவாக இருந்தாலும், நீங்கள் நேரில் சென்று அறிமுகம் செய்துகொள்வது உங்களின் நம்பிக்கையையும் அந்த தொழில் குறித்து அதிகம் கற்றுக்கொள்வதில் உங்களின் ஆர்வத்தையும் வெளிக்காட்டவும் உதவும் என சார்லோட் கூறுகிறார்.

வெவ்வேறு பணியிடங்களை நீங்கள் பார்ப்பது, என்ன மாதிரியான சூழலில் நீங்கள் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்பது குறித்த யோசனையை பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

“நீங்கள் ஏற்கெனவே இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தாலும், நேரடியாக சென்று உங்களை அறிமுகம் செய்தல், உங்களின் வேலை குறித்த கேள்விகளை கேட்டல் மற்றும் நிறுவனம் மீதான உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவது, உங்களின் சுயவிவரக் குறிப்பை (Curriculam vitae) மற்றவர்களைக் காட்டிலும் மேலே கொண்டு செல்லக்கூடும்,” என்கிறார் அவர்.

எந்தவொரு வேலை குறித்தும் விளம்பரம் செய்யாத இடங்களுக்கும் நேரில் சென்று ஆர்வத்தை வெளிக்காட்டுவது, எதிர்காலத்தில் அங்கு ஏதேனும் காலியிடம் ஏற்பட்டால் உங்களை பற்றி அந்நிறுவனம் பரிசீலனை செய்ய உதவக்கூடும்.

4. விண்ணப்பக் கடிதத்தில் உங்களின் ஆளுமை பிரகாசிக்கட்டும்

நீங்கள் யார் மற்றும் நீங்கள் எதன் மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்பது குறித்தும் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு விண்ணப்பக் கடிதம் (cover letter) சிறந்த வாய்ப்பாக இருக்கலாம்.

அது நீங்கள் நேரம் எடுத்து விண்ணப்பித்துள்ளீர்கள் என்ற “சமிக்ஞையை” நிறுவனத்திற்கு வழங்கும், என பிரிட்டனின் யூத் எம்ப்ளாய்மெண்ட் சமூக நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் கொள்கை இயக்குநர் பாஸ் ராமயா கூறுகிறார்.

“உங்களின் ஆளுமையை பிரகாசிக்க செய்வதற்கு அதுவொரு வாய்ப்பு,” என்கிறார் அவர்.

இளம் வயதினரை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்களின் விண்ணப்பக் கடிதம் உங்களால் நிறுவனத்திற்கு என்ன கொண்டு வர முடியும் என்பதை வெளிக்காட்ட உதவும் என்கிறார் சார்லோட் போஸ்வொர்த்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

5. இளம் வயதினரை குறிவைக்கும் வளங்களை தேடுங்கள்

இளம் வயதினர் பணிக்கு செல்வதற்கு உதவும் குழுக்கள், இலவச இணைய பயிற்சிகள் குறித்து தேடுங்கள்.

“வேலையை கண்டுபிடிப்பதில் போராடும் இளம் வயதினருக்கு உதவும் வகையிலான அணுகக்கூடிய உள்ளூர் குழுக்கள், அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகள் பல உள்ளன. இத்தகைய குழுக்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது என்பதே பிரச்னை,” என்கிறார் பாஸ் ராமயா

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU