Home தேசிய national tamil தொடர்ந்து 6 தோல்விகள்: சேப்பாக்கத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

தொடர்ந்து 6 தோல்விகள்: சேப்பாக்கத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

9
0

SOURCE :- BBC NEWS

தொடர்ந்து 6 தோல்விகள்... சேப்பாக்கத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

பட மூலாதாரம், R.SATISH BABU/AFP via Getty Images

சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம் இந்த சீசனின் முதல் போட்டிக்காகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. 2026 ஐபிஎல் சீசனின் தங்கள் முதல் ‘ஹோம்’ ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று (ஏப்ரல்3) விளையாடப்போகிறது. அவர்களை எதிர்த்து விளையாடப்போவது இன்னொரு கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்.

2025 சீசனில் கடைசி இடம் பிடித்த சிஎஸ்கே இந்த முறை சிறப்பாக விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி படுதோல்வி அடைந்தது. அதனால், சூப்பர் கிங்ஸ் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தோல்வியில் சூப்பர் கிங்ஸின் பேட்டிங், பந்துவீச்சு அனைத்துமே கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியோ தங்கள் சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி விட்டு இந்தப் போட்டிக்குள் வருகிறது.

இந்த இரு அணிகளுக்கு எதிரான போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம்?

சிஎஸ்கே – எதிர்பாராமல் ஏற்பட்ட பேட்டிங் பிரச்னை

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பந்துவீச்சு தான் பிரச்னை என்று பேசப்பட்டது. அதற்கு ஏற்ப முந்தைய போட்டியில் அவர்களின் பந்துவீச்சு ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. ஆனால், அவர்களின் பேட்டிங் அதைவிடப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சீசனின் மிகச் சிறந்த பேட்டிங் யூனிட்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால், முதல் போட்டியில் சிஎஸ்கே பேட்டிங் பெருமளவு தடுமாறியது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் டாப் 4 வீரர்கள் அனைவரும் சேர்ந்தே 14 ரன்கள் தான் எடுத்தனர். அதனால், போட்டியின் 20வது பந்திலேயே இம்பேக்ட் வீரரைப் பயன்படுத்தவேண்டிய நிலைக்குச் சென்றது சூப்பர் கிங்ஸ். அணியின் பேட்டர்கள் மைதானத்தின் தன்மையை, சூழ்நிலையை உணர்ந்து பேட்டிங் செய்யவில்லை என்று வல்லுநர்கள் விமர்சனம் செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் சீசன் தொடங்குவதற்கு முன்பாக மஹேந்திர சிங் தோனி, டெவால் பிரெவிஸ் என இரு முக்கிய பேட்டர்கள் காயமடைந்துவிட்டனர். அது மிடில் ஆர்டரையும் பலவீனப்படுத்தியது. சூப்பர் கிங்ஸால் கடைசி வரை ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்கவே முடியவில்லை. ஜேமி ஓவர்டன் மட்டுமே ஓரளவு நம்பிக்கை கொடுத்து 43 ரன்கள் எடுத்தார்.

தோனி 2 வாரங்கள் ஆடமாட்டார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், பிரெவிஸ் இந்தப் போட்டியில் ஆடுவதும் சந்தேகம் என்றே கூறப்படுகிறது. இந்தப் போட்டியின் முன்னோட்டத்தை இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தில் எழுதியிருந்த பத்திரிகையாளர் அழகப்பன் முத்து, “டெவால்ட் பிரெவிஸ் விலா எலும்பு காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அவர் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டிருந்தாலும், பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளாமல் ‘த்ரோ டவுன்’ பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். மேலும் பந்துகளைத் தடுத்ததோடு சரி, அதற்கு மேல் ஏதும் செய்யவில்லை. அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவது சந்தேகமாகவே தெரிகிறது. அவர் இல்லாத நிலையில், சிஎஸ்கே-வின் மிடில் ஆர்டர் மீண்டும் பலவீனமாகத் தோன்றுகிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சவால்களையெல்லாம் கடந்து இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் பேட்டிங் ஒரு நல்ல ஸ்கோர் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. சேப்பாக்கம் ஆடுகளம் அதற்கு வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைகொடுக்குமா சேப்பாக்கம்?

தொடர்ந்து 6 தோல்விகள்... சேப்பாக்கத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

பட மூலாதாரம், R.SATISH BABU/AFP via Getty Images

ராஜஸ்தானுக்கு எதிரான சூப்பர் கிங்ஸின் போட்டி நடந்தது கவுஹாத்தியில். அங்கு போட்டிக்கு முன்பு மழை பெய்ததாலும், ஆடுகளம் வெகுநேரம் மூடப்பட்டிருந்ததாலும் அது தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம் சுழலுக்கும் சாதகமாக இருந்தது. டாஸில் தோற்றுவிட்ட சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங் செய்யும்போது அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

சூப்பர் கிங்ஸின் இந்தத் தோல்வியில் ஆடுகளத்தின் தன்மையின் பங்கும் இருக்கிறது.

இந்நிலையில் சமீப காலமாக பேட்டிங்குக்கு சாதகமானதாக விளங்கிவரும் சேப்பாக்கம் ஆடுகளம் சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கு நடந்த போட்டி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேவுக்கும் இடையே நடந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி 256 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே போன்ற பேட்டர்கள் வேகத்தை அதிகம் விரும்புபவர்கள். சேப்பாக்கம் ஆடுகளம் அவர்களுக்கு அதை வழங்கும். பந்து பேட்டுக்கு நன்கு வரும். கடந்த போட்டியில் அவர்கள் சோபிக்கவில்லையென்றாலும் இந்த ஆடுகளத்தில் அவர்களால் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பெருமளவு கொண்டாடப்படும் சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கத்தில் முதல் முறையாகக் களமிறங்குகிறார். அவருக்குப் பெருமளவு ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர் தன் உலகக் கோப்பை ஃபார்மை இந்தப் போட்டியிலும் காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சேப்பாக்கம் ஆடுகளம் பற்றிப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “பொதுவாக, சென்னை ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இரவு நேரங்களில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தால், குறிப்பாக இன்னிங்ஸின் இரண்டாம் பாதியில் ஆடுகளத்தின் தன்மை சற்று மாறக்கூடும். எனவே, இந்த ஆண்டு ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.” என்று கூறினார்.

மறுபக்கம், ஒருகட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக விளங்கிய சேப்பாக்கத்தில் கடந்த சீசன் அந்த அணியால் வெற்றிகள் பெற முடியவில்லை. 2025 சீசனில் சேப்பாக்கத்தில் ஆடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. சீசனின் முதல் போட்டியில் அந்த வெற்றி வந்த பிறகு, 6 தோல்விகளுமே தொடர்ச்சியாக வந்தன. அந்தத் தோல்வி பயணத்தை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியில் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விகள்... சேப்பாக்கத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

பட மூலாதாரம், Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Images

ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா?

பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களின் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கியது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான அந்தப் போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். மூன்றாவது ஓவருக்குப் பிறகு கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஆட்டத்தை தங்கள் கைகளிலேயே வைத்திருந்தார்கள்.

அதேசமயம் அவர்கள் பேட்டிங் மட்டும் சற்று தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானலி தவிர்த்து யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. கானலி ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்ததால் தான் அந்த அணி வெற்றி பெற்றது. அதனால் அவர்களின் பேட்டிங் மீதும் நிறைய கவனம் இருக்கும்.

முதல் போட்டியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கையில் காயமடைந்திருந்தார். ஆனால், அவருக்கு எந்த எலும்பு முறிவும் ஏற்படவில்லை என்று அந்த அணியின் துணைப் பயிற்சியாளர் பிராட் ஹாடின் தெரிவித்தார். அதனால், அவர் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 6 தோல்விகள்... சேப்பாக்கத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images

நேருக்கு நேர்

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 32 முறை நேருக்கு நேர் மொதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 16 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன.

அதேசமயம் 2023ம் ஆண்டுக்குப் பிறகு விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2024ம் ஆண்டு தரம்சாலாவில் விளையாடிய போட்டியில் மட்டுமே சூப்பர் கிங்ஸ் வென்றது.

இந்தக் காலகட்டத்தில் சேப்பக்காத்தில் நடந்த 3 போட்டிகளிலுமே சிஎஸ்கே தோற்றிருக்கிறது. 2023ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 210 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ், கடந்த ஆண்டு 190 ரன்களை சேஸ் செய்தது.

முக்கியமான யுத்தங்கள்

இந்தப் போட்டி பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் யோமஹேஷ், பிரப்சிம்ரன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோருக்கு இடையிலான யுத்தம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவர்பிளே எப்படிச் செல்கிறது என்பதைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.

அதேபோல் சூப்பர் கிங்ஸின் பவர்பிளேவை சஞ்சு சாம்சன் மற்றும் யான்சன் ஆகியோருக்கு இடையிலான யுத்தம் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் நாந்ரே பர்கர் பந்துவீச்சில் தான் சாம்சன் அவுட் ஆனார். அதனால், யான்சனின் இடது கை பந்துவீச்சு சாம்சனுக்கு சிக்கல் ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் ரூபத்தில் இன்னொரு இடது கை வேகப்பந்துவீச்சாளரும் இருக்கிறார்.

“ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடும் பட்சத்தில், நூர் அஹமது வீசும் சுழற்பந்துவீச்சை அவர் எப்படி எதிர்கொள்வார் என்று பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்று யோமஹேஷ் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU