Home தேசிய national tamil ‘தானாகவே கட் ஆகிவிடுகிறது’ – வீடுகளுக்கு சமையல் எரிவாயு முன்பதிவில் சிக்கலா?

‘தானாகவே கட் ஆகிவிடுகிறது’ – வீடுகளுக்கு சமையல் எரிவாயு முன்பதிவில் சிக்கலா?

14
0

SOURCE :- BBC NEWS

வீட்டு சிலிண்டர்

பட மூலாதாரம், Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் இந்தியா முழுவதும் பரவலாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் இதன் தட்டுப்பாட்டால் உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ஹோட்டல்கள் தங்களின் மெனுக்களில் உள்ள பல்வேறு உணவுகளை நீக்கியுள்ளது, சிறு உணவகங்கள் தங்கள் சேவையை தொடர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளன.

இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரிலும் இதன் தாக்கம் மெல்ல உணரப்பட்டு வருகிறது.

முன்னதாக, வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் முன்பதிவு செய்யும் காலமும் 21 நாளில் இருந்து 25 நாளாக மாற்றப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது.

மக்கள் கூறுவது என்ன?

இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

சென்னை போரூரை சேர்ந்த ஜெபக்குமார் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர் கூறுகையில், “நேற்று காலையில் இருந்து மாலை வரை சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான எண்ணை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. தானாகவே கட் ஆகிவிடுகிறது அல்லது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடுகிறது, இல்லையென்றால் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக வருகிறது. மாலை 6.30 மணிக்கு மேல்தான் அழைப்பு கனெக்ட் ஆனது. சிலிண்டரை முன்பதிவு செய்துவிட்டேன். வழக்கமாக உடனேயே ரெஃபரன்ஸ் எண் மெசேஜ் வரும். ஆனால், அந்த எண் இப்போதுவரை வரவில்லை.” என்றார்.

ஒரு சிலிண்டர் காலியாகும் நிலையில் இருக்கும்போது மற்றொன்றை முன்பதிவு செய்வோம் எனக்கூறிய அவர், வீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள சிலிண்டர் எப்போது காலியாகும் என தெரியவில்லை என்றார்.

“ஆனால், இப்போதிருக்கும் சூழலில் புதிய சிலிண்டர் வருவதற்கே இன்னும் 20 நாட்களாகும் என கூறுகின்றனர். எங்களுடையது நான்கு பேர் உள்ள குடும்பம். 40 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் பயன்படும். வேறு வழியே இல்லையென்றால், அடுத்த மாற்றாக இண்டக்‌ஷன் அடுப்பைதான் வாங்கியாக வேண்டும்,” என்றார்.

வீட்டு சிலிண்டர்

பட மூலாதாரம், Getty Images

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ஜீவா கூறுகையில், “சிலிண்டர் முன்பதிவு செய்து ஒரு வாரமாகிறது, இன்னும் வரவில்லை. வழக்கமாக 3-4 தினங்களில் வந்துவிடும். இன்னும் தாமதமாகும் எனக் கூறுகின்றனர். எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதால் வழக்கமாக 25 நாட்கள்தான் ஒரு சிலிண்டர் வரும். சுடுநீர் போடுவது உட்பட எல்லாவற்றுக்கும் கேஸ் அடுப்பைதான் பயன்படுத்துகிறோம். வேறு வழியே இல்லையென்றால் இண்டக்‌ஷன் அடுப்புதான் வாங்கியாக வேண்டும். இப்போதைக்கு பெரிய பிரச்னையில்லை. ஆனால் சிலிண்டரே வரவில்லையென்றால் வேறு வழியைத்தான் யோசிக்க வேண்டும்.” என்றார்.

சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திகா, “எங்கள் வீட்டில் மூன்று வயது குழந்தை உள்ளது. பால் காய்ச்சுதல் என எல்லாவற்றுக்கும் கேஸ் அடுப்பைதான் பயன்படுத்துகிறோம். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டால் குடும்பத்தை சமாளிக்க முடியாது.” எனக் கூறினார்.

சென்னையை சேர்ந்த மகேஸ்வரி என்பவர், “சமையல் எரிவாயு சிலிண்டரை விலை ஏற்றியிருக்கின்றனர். எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கித்தானே ஆக வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் விறகு அடுப்பைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.” என தெரிவித்தார்.

அதேபோன்று, சென்னையை சேர்ந்த பரிமளம், “வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டால் 3 வேளைக்கு பதிலாக ஒரு வேளைக்குதான் சமைக்க வேண்டும் போல” என தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“பீதியடைய வேண்டாம்”

எனினும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு இல்லை என, சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனத்தின் முகவர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் வழக்கம்போலவே இருப்பதாகவும் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் செவ்வாய்கிழமை இரவு அவசர ஆலோசனை நடைபெற்றது.

அதில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை கோரிய நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனிடையே, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU