Home தேசிய national tamil தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் தேவையா? நீதிமன்றம் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் தேவையா? நீதிமன்றம் கூறியது என்ன?

13
0

SOURCE :- BBC NEWS

 தமிழ்நாட்டில் இறுதி சடங்குகளுக்கு தனிச் சட்டம் - நீதிமன்ற கருத்துக்கு எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இறுதிச் சடங்குகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

‘இறுதிச் சடங்குகளை நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்கீழ் வரும் வாழ்வதற்கான உரிமையின் (right to life) ஒரு பகுதியாக இருந்தாலும் அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது’ என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் இறுதி ஊர்வலம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு தனிச்சட்டம் அவசியமா?

திருப்பரங்குன்றம், ஆலங்குளம் கிராம சாலையில் கடந்த மார்ச் 6-ஆம் தேதியன்று இறுதி ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரியின் வாகனம், சாலையைக் கடப்பதற்கு முயற்சி செய்துள்ளது. இதனை எதிர்த்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

பேருந்துக்குள் நுழைந்த நபர் ஒருவர், வாகனத்தின் ஓட்டுநரை கடுமையாக தாக்கியுள்ளார். பேருந்துக்கும் சிலர் சேதம் விளைவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டு பேருந்தில் இருந்த மாணவிகள் அச்சப்பட்டுள்ளனர்.

ஒரு மாணவி நடந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பேருந்துக்குள் தாக்குதல் நடத்தும் காட்காட்சி

பட மூலாதாரம், Handout

3 பேர் மீது வழக்கு

தாக்குதல் தொடர்பாக இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சங்கர், அஜித்குமார், சந்திரபோஸ் ஆகியோர் மீது சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து மிரட்டுதல், பொது இடங்களில் ஆபாசமாக பேசுவது, தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மூன்று பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனு விசாரணைக்கு வந்தபோது, இறுதி ஊர்வலத்துக்குள் பேருந்து ஊடுருவிச் செல்ல முயன்றதால் ஊர்வலத்தில் பங்கேற்ற சிலருக்கு கோபம் ஏற்பட்டதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

பெருங்குடி காவல்நிலைய போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் நடந்த சம்பவங்கள் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதாகவும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், “தலைக் கவசம் மற்றும் காலணிகளைக் கொண்டு ஓட்டுநரை தாக்கியுள்ளனர். பேருந்தில் பயணித்த மாணவர்களையும் அவமதித்துள்ளனர். வாகனத்துக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர்” எனக் கூறினார்.

‘இதுபோன்ற நடத்தைகள் மிகவும் தீவிரத் தன்மையுடையது என்பதால் மூன்று பேரையும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக உள்ளன. இதனை சாதாரணமாக கருதிவிட முடியாது’ என கூறியுள்ளார்.

‘மதுபோதை… மிரட்டல்’

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவில் பல்வேறு விஷயங்களை நீதிபதி பட்டியலிட்டுள்ளார்.

‘வாகனத்தில் பயணித்தவர்கள் வசைகளுக்கும் மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் சில நபர்களால் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

‘இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது சமூக மற்றும் கலாசார நடைமுறையாக இருந்தாலும் அது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ வன்முறை அல்லது அமைதியின்மை சார்ந்த செயல்களில் ஈடுபடுவதற்கோ எந்த உரிமையையும் வழங்கவில்லை’ என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில் வழக்கில் முறையான விசாரணையை நடத்துவதற்கு மனுதாரர்களை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என நீதிமன்றம் கருதுவதாகக் கூறி அவர்களுக்கு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

‘நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது’

அதேநேரம், ‘பொதுநலன் கருதி சில வழிகாட்டுதல்கள் பிறப்பிப்பது பொருத்தமானது’ எனக் கூறியுள்ள நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளை மறிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

‘இறுதிச் சடங்குகளை நடத்தும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின்கீழ் வரும் வாழ்வதற்கான உரிமையின் (Right to life) ஒரு பகுதியாக இருந்தாலும், அது பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு கருதி நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

இறுதி ஊர்வலங்களில் பங்கேற்கும் நபர்களின் கட்டுப்பாடற்ற மற்றும் ஒழுங்குற்ற நடத்தையின் காரணமாக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக 2023-ஆம் ஆண்டு பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற நிகழ்வையும் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பட மூலாதாரம், Handout

பண்ருட்டி உதாரணம்

பண்ருட்டியில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி ஊர்வலம் ஒன்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் வீசப்பட்ட மாலை ஒன்று இரு சக்கர வாகனத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மென்பொறியாளர் ராஜ்கமல் என்பவர் தனது தாயின் கண்முன்னால் உயிரிழந்தார். இதனைக் குறிப்பிட்டு பண்ருட்டியை சேர்ந்த அன்புச் செல்வன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், ‘தமிழ்நாட்டில் இறுதி ஊர்வலங்களின்போது சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விதிகளை வகுப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.

டி.ஜி.பி வெளியிட்ட சுற்றறிக்கை

இதையடுத்து, இறுதி ஊர்வலங்களின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

* வாகன போக்குவரத்து மற்றும் இறுதி ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துவதற்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் உத்தேச நேரம், வழித்தடம் குறித்து போலீசாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

* போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சிதறிக் கிடக்கும் மாலைகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

* இறுதிச் சடங்கு நடத்துகிறவர்களிடம் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திலேயே சேகரித்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

* ஊர்வலத்தின்போது அதிக எண்ணிக்கையில் மாலைகளை எடுத்துச் செல்லவோ, சாலைகள் மற்றும் வாகனங்கள் மீது அவற்றை வீசவோ கூடாது.

* விளம்பரப் பலகைகள், பேனர்கள் ஆகியவற்றை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும்.

* தேசிய நெடுஞ்சாலைகள், பிரதான சாலைகளின் வழியே இறுதி ஊர்வலம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்போர் செயல்பட்டால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

– இதனை மேற்கோள் காட்டியுள்ள நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘சுற்றறிக்கை வெளியிடப்பட்டபோதும் ஒழுங்கீன சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ எனக் கூறியுள்ளார்.

‘தனிச் சட்டத்தின் அவசியம்’

இந்தநிலையில், இறுதி ஊர்வலங்களை முறைப்படுத்துவதற்கு போதுமான கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை விதிகளை உள்ளடக்கி பொருத்தமான சட்டத்தை இயற்றுவதன் அவசியத்தை ஆராயுமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படை உரிமை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

ஜூலை 31-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ இதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஹென்றி திபேன்

பட மூலாதாரம், Handout

‘மக்களின் உரிமை பறிபோகும்’

“இறுதி ஊர்வலத்துக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டால் சடலத்தை எடுப்பதற்கு முன்னதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் எளிய மக்களின் உரிமைகள் பறிபோகும்” என்கிறார், ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.

“இறுதிச் சடங்குகள் அவரவர் மத நம்பிக்கைகளின்படி நடப்பதால் அதற்கு அனுமதி பெறப்படுவதில்லை” எனக் கூறும் ஹென்றி திபேன், “சாமி ஊர்வலமும் அனுமதி பெற்று நடப்பதில்லை. எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை மட்டுமே காவல்துறை ஒழுங்குபடுத்துகிறது” எனக் கூறுகிறார்.

இறுதிச் சடங்குகளில் அதிகமாக குடித்துவிட்டு வருவது, பட்டாசு வெடிப்பது போன்ற பிரச்னைகளையே நீதிமன்றம் சுட்டிக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“சட்டம் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பில் காவல்துறை உள்ளது. இறுதி ஊர்வலத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் தற்போதுள்ள சட்டங்களின்படியே காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, புதிய சட்டம் கொண்டு வருவதால் காவல்துறையின் அதிகாரம் அதிகரிக்கும்” என்கிறார் ஹென்றி திபேன்.

இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி, “இறுதி ஊர்வலத்தைக் காவல்துறை கண்காணித்து முறைப்படுத்தும். இதனால் எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார்.

இறுதி ஊர்வலம் தொடர்பாக பொதுவான சட்டம் பிறப்பிக்கும்போது தேவையற்ற சம்பவங்கள் நடப்பது வெகுவாக குறைந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'எவிடென்ஸ்' அமைப்பின் கதிர்

பட மூலாதாரம், Handout

‘நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு’

“இறுதி ஊர்வலம் என்ற பெயரில் பூக்களை அள்ளி வீசுவது, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பது போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனவும் கருணாநிதி குறிப்பிட்டார்.

இதே கருத்தை முன்வைக்கும் மதுரையைச் சேர்ந்த ‘எவிடென்ஸ்’ அமைப்பின் கதிர், “கிராமப்புறங்களில் இவை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நகர்ப்புறங்களில் பிரதான சாலைகளில் ஊர்வலமாக செல்கின்றனர். இறப்புக்கு மரியாதை கொடுக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு வகைகளில் இடையூறு செய்கின்றனர்” எனக் கூறுகிறார்.

இறுதி ஊர்வலம் என்பது தடை செய்ய வேண்டிய ஒன்றாக உள்ளதாகக் கூறும் அவர், “இறந்த நபரின் வீட்டில் வைத்தே சடங்குகளை செய்து முடிப்பது சரியானது. பிரதான சாலைகளில் ஊர்வலம் என்ற பெயரில் நடக்கும் தேவையற்ற செயல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU