SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், TNPSC
-
9 பிப்ரவரி 2026, 15:52 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி எட்டாம் தேதி நடத்தியிருக்க வேண்டிய ‘குரூப் 2’, ‘2 ஏ’-வுக்கான தேர்வுகளை நடத்துவதில் சென்னையில் சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டதால், மாநிலம் முழுவதும் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கை தேர்வர்களிடம் பெரும் மன அழுத்தத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. தேர்வுகளை நடத்துவதில் டிஎன்பிஎஸ்சிக்கு என்ன சிக்கல்?
சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, சென்னையில் தங்கியிருந்து யுபிஎஸ்சி தேர்வுக்கும் தமிழ்நாடு அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்திய ‘குரூப் 2’ முதல் நிலைத் தேர்வில் (prelims) தேர்ச்சியும் அடைந்துவிட்டார்.
பிப்ரவரி எட்டாம் தேதி அவர் முதன்மைத் தேர்வை (Main) எழுத வேண்டும். அரும்பாக்கத்திலிருந்த டி.ஜி. வைஷ்ணவா கல்லூரிதான் அவருக்கு தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தேர்வு. 8.35 மணியளவில் தேர்வு மையத்திற்குச் சென்றுவிட்டார் கார்த்திக் ராஜா. ஆனால், அதிர்ச்சி காத்திருந்தது.
‘200 பேருக்குத்தான் இடம்’
“காலை 8.35 மணிக்குப் போய்ப் பார்த்தால், கல்லூரி முழுக்க ஒரே கூட்டம். அங்கு ஒரே ஒரு நோட்டிஸ் போர்டில் மட்டும்தான் தேர்வு எழுதுபவர்களின் விவரங்களை ஒட்டியிருந்தார்கள். அந்த நோட்டீஸ் போர்டு முன்பாக ஏகப்பட்ட தேர்வர்கள் குவிந்திருந்ததால் என் பதிவு எண் அங்கிருக்கிறதா என்றே பார்க்க முடியவில்லை. அங்கிருந்த கல்லூரியின் செக்யூரிட்டியிடம் வேறு எங்காவது இதுபோல ஒட்டியிருக்கிறார்களா எனக் கேட்டேன். அவர் வேறொரு இடத்தைக் காட்டினார். அங்கும் ஏகப்பட்ட கூட்டம். ஒரு வழியாக நோட்டீஸ் போர்டை நெருங்கியபோது மணி 8.50 அளவுக்கு ஆய்விட்டது. ஆனால், என்னுடைய எண் அதில் இல்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னைப் போல பலர் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் கல்லூரித் தரப்பிடம் போய் கேட்டபோது, இந்த மையத்தில் 200 பேருக்குத்தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள்.” என்கிறார் கார்த்திக் ராஜா.
மற்றவர்கள் எல்லோரும் வெளியேற வேண்டுமென்றும் சொல்லிவிட்டார்கள் என்கிறார் அவர்
”இதனால்தான் பல தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதற்குப் பிறகு, தேர்வாணய அதிகாரிகள் வந்தார்கள். எங்களுடைய எண் வேறொரு தேர்வு மையத்தில் இருப்பதாகவும் ஒரு பேருந்தில் ஏற்றி அங்கே அழைத்துச் செல்வதாகவும் சொன்னார்கள். ஆனால், நாங்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து, சென்னையில் மட்டும் தேர்வுகளை ரத்து செய்வதாகச் சொன்னார்கள். பிறகு தமிழ்நாடு முழுவதும் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்கள். இது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி” என்கிறார் கார்த்திக் ராஜ்.
சென்னையில் தேர்வெழுத காத்திருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதே போன்ற அதிர்ச்சியில்தான் இருக்கிறார்கள்.
“இந்தத் தேர்வுக்காக மூன்று – நான்கு வருடங்களாக தயாராகிவந்தேன். காலை எட்டே கால் மணிக்கெல்லாம் எனக்கு ஒதுக்கப்பட்ட டி.ஜி. வைஷ்ணவா கல்லூரிக்குப் போய்விட்டேன். எண்கள் ஒட்டப்பட்டிருந்த பலகை முன்பாக பயங்கரக் கூட்டம். எனக்கு முந்தைய எண் இருந்தது, எனக்குப் பிந்தைய எண் இருந்தது. ஆனால், என்னுடைய எண் இல்லை. இதுபோல சுமார் 400 பேருக்கு ஆகியிருக்கலாம். என்ன செய்வதெனத் தெரியாமல்தான் எல்லோரும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பிறகு அங்கு வந்த அதிகாரிகள் பேருந்தில் அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். ஆனால், நாங்கள் அதனை ஏற்கவில்லை” என்கிறார் தேர்வு மையம் மாறியதால் பாதிக்கப்பட்ட கிருபா ராஜதுரை.
பட மூலாதாரம், PTI
‘பதற்றமாக இருக்கிறது’
டிஎன்பிஎஸ்சியின் நடவடிக்கையால் ஒழுங்காகத் தேர்வு எழுதிக்கொண்டிருந்தவர்களும் பாதிக்கப்பட்டதுதான் நிலைமையை இன்னும் தீவிரமாக்கியிருக்கிறது.
ஆறு – ஏழு ஆண்டுகளாக இந்தத் தேர்வுக்காக தயாராகிவந்த சுதாராணி காஞ்சிபுரத்தில் தேர்வை எழுதிக் கொண்டிருந்தார்.
“நான் தேர்வை எழுத ஆரம்பித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. திடீரென 11 மணிக்கு தேர்வு மையத்தில் இருந்த ஸ்பீக்கரில், மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வு ரத்தாகிவிட்டதாக அறிவித்தார்கள். எங்களிடம் இருந்த கேள்வித் தாள், ஓஎம்ஆர் ஷீட் ஆகியவற்றையும் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். பல நாட்களாக இந்தத் தேர்வுக்குத் தயாராகிவந்தேன். இப்போது இந்தத் தேர்வு ரத்துசெய்யப்பட்டிருப்பதால், தேர்வு திரும்ப நடத்தப்படும்வரை நான் இப்படியே தயாராகிக்கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார் சுதாராணி.
இவர் குரூப் 2 முதல் நிலை தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். குரூப் 2விற்கான முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
“அந்தத் தேர்வுக்கு முன்பாக, இந்தத் தேர்வு நடக்குமா, அதற்குப் பிறகு நடக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை. பதற்றமாகவே இருக்கிறது” என்கிறார் சுதாராணி.
தமிழகம் முழுவதும் 38 தேர்வு மையங்கள்
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத் துறையில் துணை ஆய்வாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, குழந்தைகள் நலம் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் பயிற்சி அதிகாரி, பத்திரப் பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளர், சென்னைப் பெருநகரக் காவல்துறையில் சிறப்பு பிரிவு உதவியாளர், வனத் துறையில் வனவர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ‘முதல்நிலை’ தேர்வுகள் நடைபெற்றன.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுகளை எழுத வேண்டும். இந்த முதன்மைத் தேர்வுகளை எழுத, குரூப்-2 பிரிவில் 1,126 பேரும் குரூப்-2ஏ பிரிவில் 9,457 பேரும் என மொத்தமாக 10,583 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த முதன்மைத் தேர்வுகளில் 2 ஏ பிரிவினருக்கான பாடத் தேர்வுகளும் குரூப்-2 மற்றும் 2ஏ ஆகிய இரண்டு பிரிவினருக்குமான கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும் பிப்ரவரி எட்டாம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்று காலையில் பாடத் தேர்வும், பிற்பகலில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும் நடத்தப்படுவதாக இருந்தது. சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, மதுரையில் யாதவா கல்லூரி, கோயம்புத்தூரில் செயின்ட் மைக்கல் மேல்நிலைப் பள்ளி உட்பட தமிழகம் முழுவதும் 38 தேர்வு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தன. சென்னையின் 3 மையங்களில் 3,221 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் அரும்பாக்கத்திலிருந்த டி.ஜி. வைஷ்ணவா கல்லூரிக்கு சென்ற 600 தேர்வர்களில் 400 பேருக்கு அந்த இடம் ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், அவர்களுடைய ஹால் டிக்கெட்டில் அந்த கல்லூரிதான் அவர்களுக்கான தேர்வு மையமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குழப்பமும் பதற்றமும் அடைந்த தேர்வர்கள், அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர்.
பட மூலாதாரம், PTI
வேறு மையத்தை ஏன் ஏற்கவில்லை?
அதற்கு அதிகாரிகள், ‘உங்களுக்கு வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம்’ எனக் கூறினார்.
ஆனால், தேர்வுக்கான நேரம் நெருங்கிவிட்ட நிலையில், தங்களால் எப்படி அங்கு செல்ல முடியும் என கேள்வியெழுப்பிய தேர்வர்கள், பூந்தமல்லி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிறகு அங்கு வந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் தேர்வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, இடம் ஒதுக்கப்படாதவர்களுக்கு நந்தனம் அரசு கலைக் கல்லூரிதான் தேர்வு மையம் என்றும் அந்த மையத்திற்குத் தாங்களே தேர்வர்களை அழைத்துச் செல்வதாகவும் அதிகாரிகள் கூறினர்.
ஆனால், தேர்வர்கள் அதனை ஏற்கவில்லை. இதற்குப் பிறகு டிஎன்பிஎஸ்சியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ. சண்முகசுந்தரம் அங்கு வந்தார். தேர்வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதற்குப் பிறகு, சென்னையில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், தேர்வர்கள் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
ஆனால், அதற்குள் தமிழ் நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் குறித்த நேரத்தில் தேர்வுகள் தொடங்கியிருந்தன. சுமார் ஒரு மணி நேரம்வரை தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு ரத்தான தகவல், அங்குள்ள தேர்வு மைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதற்குப் பிறகு, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தேர்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
திடீரென தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது, தேர்வை எழுதிக்கொண்டிருந்த தேர்வர்களை அதிரவைத்தது. மதுரையில் யாதவா கல்லூரியில் இந்தத் தேர்வு நடைபெற்றது. முற்பகலில் நடந்து கொண்டிருந்த தேர்வு முடிவுதற்கு 10 நிமிடங்களே இருந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கோயம்புத்தூரில் செயின்ட் மைக்கல் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு துவங்கி 20 நிமிடங்களுக்குப் பிறகு தேர்வு நிறுத்தப்பட்டது.
பட மூலாதாரம், PTI
‘சிறப்பாக செயல்பட வேண்டும்’
தேர்வர்கள் பல ஆண்டுகளாக இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகும் நிலையில், டிஎன்பிஎஸ்சி இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்கள்.
“தேர்வுகளை அறிவிக்கும்போது, அந்தத் தேர்வை நடத்துவதற்கான முழுமையான கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வை நடத்த முடிவு செய்தபோது முதலில் கணினியில்தான் தேர்வு என்றார்கள். பிறகு, வழக்கம்போல ஓஎம்ஆர் முறைக்கு மாற்றினார்கள். எங்களைப் போன்ற ஒரு பயிற்சி மையத்தினாலேயே ஐயாயிரம் பேருக்கு எவ்விதத் தவறும் இல்லாமல் தேர்வுகளை நடத்த முடிகிறது. அப்படியிருக்கும்போது, டிஎன்பிஎஸ்சி போன்ற மிகப் பெரிய நிறுவனத்தால் 9,000 பேருக்கு தேர்வை துல்லியமாக நடத்த முடியாதா? இதுபோன்ற பிரச்னைகள் முதல் நிலைத் தேர்வுகளில் நடப்பதில்லை. முதன்மைத் தேர்வுகளில்தான் நடக்கிறது.
தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டிருப்பது எட்டு மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள். தேர்வர்கள் 9.30 மணிக்கு மேல் ஒரு நிமிடம் தாண்டி தேர்வு மையத்திற்கு வந்தாலும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் எனும்போது, இதுபோல தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு, மாணவர்களை பதற்றப்படுத்துவது எந்த விதத்தில் சரி? ஒவ்வொரு தேர்வரும் 5 – 6 ஆண்டுகள் இந்தத் தேர்வுக்காக தயாராகிறார்கள். அவர்களது மனநிலை எப்படியிருக்கும்? டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றுபவர்களும் ஒரு தேர்வை எழுதித்தான் பணியில் சேர்கிறார்கள். அவர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டாமா?” என்கிறார் சென்னையிருந்து செயல்படும் சங்கர் ஐஏஎஸ் அகாதமியைச் சேர்ந்த சிவபாலன்.
‘நிச்சயம் மதிப்பெண்கள் குறையும்’
தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பேருந்தில் ஏற்றி, சரியான தேர்வு மையத்தில் விடுவதாக அதிகாரிகள் சொன்னபோதும் தேர்வர்கள் அதனை ஏற்கவில்லை.
“அவர்கள்(அதிகாரிகள்) அப்படிச் சொல்லும்போதே மணி 9. 25 ஆகிவிட்டது. பிறகு, எங்களை பேருந்தில் ஏற்றி சரியான தேர்வு மையத்திற்கு கொண்டுசெல்ல மேலும் ஒரு மணி நேரம் ஆகலாம். எங்களுக்குக் கூடுதல் நேரம் கொடுக்கும்போது, மற்ற தேர்வர்களுக்கும் அது கிடைக்கலாம். அது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவேதான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை” என்கிறார் கிருபா ராஜதுரை.
கார்த்திக் ராஜா இதற்கு வேறு ஒரு காரணத்தையும் சொல்கிறார். “இந்த முதன்மைத் தேர்வில் Reasoning தொடர்பான கேள்விகள் அதிகம் இருக்கும். அதற்கு மனம் தெளிவாக இருப்பது அவசியம். இவ்வளவு குழப்பத்திற்கும் பதற்றத்திற்கும் மத்தியில் சென்று அந்தத் தேர்வை எழுதினால், Reasoningகில் நிச்சயம் மதிப்பெண்கள் குறையும்” என்கிறார்.
மேலும், ஒவ்வொருவராக பெயரைச் சொல்லி பேருந்தில் ஏற்றி, நந்தனத்திற்கு அழைத்துச் சென்று அடையாள அட்டைகளைச் சரிபார்த்து, சரியான இடத்தில் அமர வைப்பதற்குள் மதியம் ஆகியிருக்கும். அதற்குள் மாநிலத்தின் பிற பகுதிகளில் தேர்வை எழுதி முடித்து வெளியில் வந்தவர்கள், கேள்வித் தாள் எப்படியிருக்கிறது என்ற விவரத்தை வெளியிட்டுவிடலாம் என்ற அச்சமும் தேர்வர்களிடம் இருந்தது என்கிறார் அறம் ஐஏஎஸ் அகாதெமியைச் சேர்ந்த பயிற்றுனரான மனோகரன்.
தேர்வு நடத்தும் திறன் கேள்விக்குள்ளாகிறதா?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுகள் ரத்து, தேர்வு தேதி மாற்றம் ஆகியவை புதிதல்ல. பல முறை அதுபோல தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, வேறொரு தேதியில் நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் ஒரு தேர்வை கணினி மூலம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, மீண்டும் ஓ.எம்.ஆர். ஷீட் முறைக்கே தேர்வு மாற்றப்பட்டது. ஒரு முறை, ஒரு தேர்வு மையத்தில் சிலருக்கு கேள்வித் தாள்களை அளிப்பதில் தாமதம் ஆனதால், கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. ஆனால், தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டு, மாநிலம் முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது இதுதான் முதல் முறை.
இருந்தபோதும் தேர்வாணயத்தின் தேர்வு நடத்தும் திறன் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்கிறார் மனோகரன்.
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தியாவின் மிகப் பழமையான பணியாளர் தேர்வு வாரியம். இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக உருவெடுத்த தேர்வாணயம். தற்போதுள்ள மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் தேர்வாணையம் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறதா என்று கேட்டால், ஆம் என்றுதான் சொல்ல முடியும். ஓஎம்ஆர் ஷீட்களில் புகைப்படங்களேயே அச்சிட்டுத் தருகிறார்கள். இதுபோல யுபிஎஸ்சியே செய்யவில்லை. இருந்தாலும் இதுபோல சில சமயங்களில் நடந்து விடுகிறது” என்கிறார் மனோகரன்.

தேர்வு எப்போது?
ஆனாலும் தேர்வர்களுக்கு பதற்றமும் குழப்பமும் இருக்கும் என்பதை அவர் ஏற்கிறார்.
“மீண்டும் தேர்வு நடக்கும்வரை, வரப்போகும் கேள்வித் தாள் எப்படி இருக்கும் என்ற பதற்றம் இருக்கவே செய்யும். சிலர் தேர்வை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பதற்றமாவார்கள். கேள்வித்தாள் மாறும். அது நாம் ஏற்கனவே பார்த்த கேள்வித் தாளைப் போல இருக்குமா, இன்னும் கடினமாக இருக்குமா என்று யோசித்துக்கொண்டேயிருப்பார்கள். ஆகவே, எல்லாத் தேர்வர்களுக்கும் பதற்றம் இருக்கும். இதுபோல நடப்பது தேர்வாணையத்தின் நம்பிக்கையைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார் மனோகரன்.
ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தேர்வுகளை திறமையாக நடத்தக்கூடிய ஒரு அமைப்பு என்கிறார் அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினரான குப்புசாமி.
“இதற்கு முன்பாக தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் தேர்வு மையத்தை மாற்றி ஒதுக்கீடு செய்வது போன்ற குளறுபடிகள் நடந்ததில்லை. இதை வைத்துமட்டும் ஆணையத்தைப் பற்றி முடிவெடுத்துவிட முடியாது” என்கிறார் குப்புசாமி.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மார்ச் 15-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது. குரூப் 2வுக்கான முதன்மைத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மார்ச் 22ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



