Home தேசிய national tamil ஜனநாயகன் வழக்கு வாபஸ் – இனி சான்றிதழ் பெறும் பணி எப்படி நடக்கும்?

ஜனநாயகன் வழக்கு வாபஸ் – இனி சான்றிதழ் பெறும் பணி எப்படி நடக்கும்?

17
0

SOURCE :- BBC NEWS

ஜனநாயகன், திரைப்படம், கோலிவுட், தமிழ்நாடு

பட மூலாதாரம், @KvnProductions

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரும்பப் பெற்றனர்.

இதனால், அந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. ஆனால், இதற்கு எவ்வளவு நாட்களாகலாம்?

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறு ஆய்வுக் கமிட்டிக்கு அனுப்பும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழைப் பெற, மறுஆய்வு கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவுசெய்திருப்பதால் இந்த வழக்கைத் திரும்பப் பெற விரும்புவதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு இன்று (பிப்ரவரி 10) பட்டியலிடப்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகன், திரைப்படம், கோலிவுட், தமிழ்நாடு

பட மூலாதாரம், @KvnProductions

புகார் அனுப்பிய உறுப்பினர்

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது கடைசித் திரைப்படமாக கருதப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தை ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர். சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட இந்தப் படத்தை 2025 டிசம்பர் 19ஆம் தேதியன்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய குழுவினர் பார்த்தனர்.

இந்தப் படத்தில் சில திருத்தங்களைச் செய்தால், படத்திற்கு U/A சான்றிதழை வழங்கலாம் என டிசம்பர் 22ஆம் தேதி தயாரிப்புத் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காட்சிகளை நீக்கிய பிறகு, படத்தின் பிரதி வாரியத்திடம் டிசம்பர் 25ஆம் தேதியன்று தரப்பட்டது. இதற்கிடையில், வாரியத்தின் தலைவரான பிரஷூன் ஜோஷிக்கு படத்தைப் பார்த்த குழுவின் உறுப்பினர் ஒருவர் புகார் ஒன்றை அனுப்பினார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து ‘ஜனநாயகன்’ படத்திற்கு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்கும்படி, சென்னை பிராந்திய அலுவலகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்குப் பிறகு, படத்தை மறு ஆய்வுக் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக படக் குழுவிற்கு ஜனவரி 5ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்புத் தரப்பு, படத்திற்கு U/A சான்றிதழை வழங்க உத்தரவிடும்படி கோரியது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழைத் தரும்படி ஜனவரி 9ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட மறுத்தது.

இதையடுத்து இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்புக்கும் உரிய வாய்ப்புகளை வழங்கி வழக்கை தனி நீதிபதியே மீண்டும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

ஜனநாயகன், திரைப்படம், கோலிவுட், தமிழ்நாடு

பட மூலாதாரம், @KvnProductions

ஜனநாயகன் படத்தில் அடுத்தது என்ன நடக்கலாம்?

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கை, தயாரிப்புத் தரப்புப் திரும்பப் பெற்றிருக்கும் நிலையில், தயாரிப்புத் தரப்பு முன்பாக இருக்கும் ஒரே வாய்ப்பு ஏற்கனவே மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் குறிப்பிட்டபடி, படத்தை மறு ஆய்வுக் கமிட்டிக்கு அனுப்புவதுதான்.

இந்தப் பின்னணியில் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட எவ்வளவு நாட்கள் ஆகலாம் என்பது முக்கியமான கேள்வி.

ஒரு திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளும் காலக்கெடுவும் Cinematograph (Certification) Rules, 2024ல் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, திரைப்படத் தரப்பு, சரியான ஆவணங்களுடன் மறு ஆய்வுக் கமிட்டிக்கு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தால், 20 நாட்களுக்குள் இதற்கான குழு அமைக்கப்பட வேண்டும்.

இதற்குப் பிறகு, ஒரு படத்துக்கு சாதாரணமாக சான்றிதழ் வழங்க எத்தனை நாட்கள் ஆகுமோ, அத்தனை நாட்களில் படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படலாம். இருந்தபோதும், படத்தில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் குறித்து ஆய்வுக் குழுவினர் கேள்வி எழுப்பும் பட்சத்தில் அதற்கேற்றபடி காலதாமதம் ஏற்படக்கூடும்.

ஆனால், திரைப்படத்தைப் பார்த்த பிறகு மறு ஆய்வுக் கமிட்டி, வேறு ஒரு மறு ஆய்வுக் கமிட்டியோ, வாரியமோ படம் குறித்து முடிவு செய்யலாம் என பரிந்துரைக்கவும் முடியும்.

அந்தத் தருணத்தில், படத்திற்குச் சான்றிதழ் கிடைப்பது இன்னும் தள்ளிச்செல்லக்கூடும். ஆனால், இந்த கால வரையறைகள் அனைத்துமே அதிகபட்ச காலத்தையே குறிப்பிடுகின்றன என்பதால் எப்போது வேண்டுமானாலும் மறு ஆய்வுக் கமிட்டி படத்தைப் பார்த்து சான்றிதழை வழங்கலாம்.

“மறுஆய்வுக் கமிட்டியைப் பொறுத்தவரை, இந்தப் படத்திற்கு என புதிதாக ஒரு கமிட்டியை நியமிக்கப்போவதில்லை. ஏற்கனவே ஒரு கமிட்டி இருக்கும். அந்தக் கமிட்டியின் தலைவர் (Regional chair person) படத்தை பார்க்க வேண்டியிருக்கும். அவரால் படம் பார்க்க முடியாத சூழல் இருந்தால், வேறொரு மாநிலத்தின் மறு ஆய்வுக் கமிட்டியின் தலைவர் படத்தைப் பார்ப்பார்.” என்கிறார் தமிழ்நாட்டில் மறு ஆய்வுக் கமிட்டியின் தலைவராக இரண்டு முறை இருந்த எஸ்.வி. சேகர்.

”அப்படி படம் பார்த்த பிறகு, சில காட்சிகளை நீக்கச் சொல்வது போன்ற திருத்தங்களைச் சொல்லி சான்றிதழ் அளிக்கலாம். ஆனால், கால வரையறையைப் பொறுத்தவரை, இந்தப் படத்திற்கு முன்பாக வேறு ஏதாவது படங்கள் மறு ஆய்வுக் கமிட்டிக்காக காத்திருந்தால், அதனைப் பார்த்து முடித்துவிட்டுத்தான் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள்” என்கிறார் அவர்.

ஆனால், இந்த மறு ஆய்வுக் கமிட்டியும் படத்தை நிராகரிக்கலாம் என்றும் அம்மாதிரி சூழலில் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார் எஸ்.வி. சேகர்.

“ஆனால், அம்மாதிரி நடப்பதற்கான வாய்ப்புக் குறைவு” என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜனநாயகன் திரைப்படத்தில் என்ன பிரச்னை?

‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் சில காட்சிகள் ஆட்சேபணைக்குரியனவாக இருப்பதாக படத்தை ஆய்வு செய்த குழுவில் இருந்த ஒருவர் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தின்படி பார்த்தால், “வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் பெரிய அளவிலான மத ரீதியான மோதலை ஏற்படுத்துவது போல இந்தப் படத்தில் காட்சிகளும் வசனங்களும் உள்ளன. இது இந்நாட்டின் மத ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கலாம். ராணுவம் தொடர்பான குறிப்புகள் படத்தில் வருகின்றன. இந்த விவகாரம் குறித்து தீர்மானிக்கும் வகையில் ஆய்வுக் குழுவில் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை” என அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU