Home தேசிய national tamil சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் – என்ன நடக்கிறது?

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் – என்ன நடக்கிறது?

31
0

SOURCE :- BBC NEWS

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Seeman/Facebook

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

அந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள மாங்குடி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பாக தேர்போகி பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மருத்துவர் டி.கே. பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் நியூட்டன் பாபு , அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் காளிமுத்து ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

காரைக்குடி தொகுதியில் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி காரைக்குடி தொகுதியில் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இங்கு பெண் வாக்காளர்களே அதிகம்.

காரைக்குடி தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக வேட்பாளர் துரை மாணிக்கம் 23,872 வாக்குகள் பெற்றார். கடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 1,63,412 வாக்குகள் பெற்ற நாதக வேட்பாளர் எழிலரசிக்கு, இந்த காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 28,046 வாக்குகள் கிடைத்தன.

இந்த தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 4 முறையும் , திமுக 3 முறையும் , சுதந்திரா கட்சி 2 முறையும் , தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் - என்ன நடக்கிறது?

2021 தேர்தலில் நடந்தது என்ன?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை மாங்குடியை களமிறக்கியிருந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக எச்.ராஜா , அமமுக சார்பாக தேர்போகி பாண்டியன், நாம் தமிழர் சார்பாக துரை மாணிக்கம் ஆகியோர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மாங்குடி 75,954 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் எச் ராஜா 54,365 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். நாதக வேட்பாளர் துரை மாணிக்கம் 23,872 வாக்குகள் பெற்றார்.

மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் - என்ன நடக்கிறது?

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காரைக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. மாநகரம் என்றாலும், காரைக்குடியில் தொழில் துறை சார்ந்த வளர்ச்சி எதுவும் இல்லை என்கிறார் போட்டித்தேர்வுக்கு தயாராகும் பகத். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் அதற்கான வளர்ச்சிப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் இன்னும் நடக்கவில்லை என்றார் அவர்.

ராமசுப்பு என்பவர் பேசுகையில், “கிராமங்களில் சாலை மற்றும் தண்ணீர் வசதிகள் சரிவர இல்லை. அதனை மேம்படுத்துவதுடன் பொன் நகர் ரயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பவருக்கே இந்த முறை வாக்களிப்பேன்” என்றார்.

பிரதீப்குமார் என்பவர் பேசுகையில், “கிராமங்களில் சீமை கருவேளை மரங்கங்களால் பெரிய அளவில் பிரச்னை இருக்கிறது. நீர் வளங்கள் பாதுகாக்கப்படுவது இல்லை. விவசாயிகள் அதிகமாக இருக்கும் இந்த பகுதியில் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகிறார்கள். நிலையான வருவாய் இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

கண்ணங்குடி ஒன்றியத்தில் இத்தனை ஆண்டுகாலமாக சாலைவசதி செய்து தரப்படவில்லை என்றும் எந்த வளர்ச்சியும் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நடக்கவில்லை என்றும் கூறினார் பூக்கடை வைத்துள்ள விக்னேஷ்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

வேட்பாளர்கள் சொல்வது என்ன?

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் - என்ன நடக்கிறது?

தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியனிடம் பிபிசி தமிழ் பேசியது, ” 15 ஆண்டுகாலம் காரைக்குடியில் வாழ்ந்து வரும் மக்களின் தேவை என்ன என்பது எனக்குத் தெரியும். வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளை கொண்டு வருவது முக்கிய தேவையாக இருக்கிறது. திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வேன்.”

“ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொள்வேன். சீமான் இங்கு போட்டியிட்டாலும் திமுக கூட்டணிக்கும் – தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் நேரடி போட்டி. தவெக வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்றாலும் வெற்றி பெறுவதற்கான போட்டியில் அவர் இருக்க மாட்டார்.” என்றார்.

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் - என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான மருத்துவர் பிரபு பிபிசி தமிழிடம் பேசுகையில், “காரைக்குடி தொகுதியில் 80 முதல் 90% கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. உடனடியாக சரிசெய்ய வேண்டிய பிரச்னையாக அதனை நான் பார்க்கிறேன்.”

“காரைக்குடி பகுதியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தான் இந்த ஊரின் பிரச்னை என்னவென்று தெரியும், அதை எளிமையாக அடையாளம் கண்டு என்னால் சரி செய்ய முடியும். எங்கள் கட்சி தலைவர் கூறியதைப் போல காரைக்குடி தொகுதியிலும் இரண்டு முனை போட்டி தான். மிஷன் 2030 என காரைக்குடிக்கு என்று தனியாக 15 முக்கிய செயல்திட்டங்களை வைத்துள்ளேன். வெற்றி பெற்று 4 ஆண்டுகளில் அதை நிறைவேற்றுவேன்.” எனத் தெரிவித்தார்.

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் - என்ன நடக்கிறது?

காரைக்குடி தொகுதிக்கு என தனி வாக்குறுதி ஏதேனும் வைத்துள்ளீர்களா என சீமானிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “என் மண்ணில் உள்ள மக்களுக்கு என்ன பிரச்னை உள்ளது என எனக்கு தெரியும். இதுவரை காரைக்குடியில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏன் இந்த மக்களின் பிரச்னையை சரி செய்யவில்லை. நான் மக்களின் பிரச்னையை கேட்க வந்த மகன் அல்ல, பிரச்னைகளை தீர்க்க வந்த மகன். மக்கள் மன்றத்தில் 15 ஆண்டுகள் பேசியாகிவிட்டது. சட்டமன்றத்தில் சென்று பேச வேண்டும் என்பதால்தான் சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன்.” என்றார்.

சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி கள நிலவரம் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Facebook/S Mangudi

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி பிபிசி தமிழிடம் பேசுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் பேசி தொகுதிக்கு தேவையான பல்வேறு நிரந்தர திட்டங்களைப் பெற்று கொடுத்துள்ளேன். மீண்டும் வெற்றி பெற்றால் மக்கள் குறிப்பிடும் பிரச்னைகளைச் சரிசெய்வேன்.” என்றார்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU