SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், R.SATISH BABU/AFP via Getty Images
புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 251 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் 11வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றவருகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பில் சால்ட் மற்றும் விராத் கோலி அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். கோலி 28 ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதார், சிஎஸ்கே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 19 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதற்கிடையே 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த சால்ட் ஆட்டமிழந்தார்,
ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் களம் கண்ட டிம் டேவிட், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அவர் வெறும் 25 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 70 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் 28 ரன்கள் எடுத்தபோது, விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி எஸ்கே அணி விளையாடி வருகிறது.
ஹோம் டீம் ஆர்சிபி தங்களின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி சீசனைத் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் தாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோற்று முதல் வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கிறது.
ஆர்சிபி எந்த மாற்றங்களும் செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், கடந்த போட்டியில் ஆடாத ஜேமி ஓவர்டன் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.
டாஸில் என்ன நடந்தது?
பந்துவீச்சை தேர்வு செய்த ருதுராஜ் கெய்க்வாட், “நாங்கள் முதலில் பந்துவீசுகிறோம். இது அதிக ரன்கள் எடுக்கக்கூடிய மைதானம். ஆடுகளம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அவர்களை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முயற்சிப்போம். தோனி மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார், சில நேரங்களில் அதற்கு அவகாசம் தேவைப்படும், அவர் விளையாடத் தயாராக இருந்தால், அது விரைவில் நடக்கும். முதல் போட்டி ஏமாற்றமளித்தது, ஆனால் இரண்டாவது போட்டியில் எங்கள் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், “நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஆனால் ஆடுகளம் கடினமாகத் தெரிவதால் பேட்டிங் செய்வதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு புதிய ஆடுகளம். கடந்த போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள், அதை இங்கேயும் தொடர நினைக்கிறோம். கடந்த போட்டியில் அனைவரும் விளையாடிய விதம் அபாரமானது, ஒவ்வொருவருக்கும் தங்கள் பொறுப்பு குறித்து தெளிவு இருந்தது, மேலும் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நாங்கள் அதே அணியுடன் களமிறங்குகிறோம்.” என்றார்.
விளையாடும் வீரர்கள் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பிளேயிங் லெவன்: விராட் கோலி, ஃபில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, அபினந்தன் சிங்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சுயாஷ் ஷர்மா, ஜேக்கப் பெதெல், ரஷிக் சலாம், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, பிரஷாந்த் வீர், ஜேமி ஓவர்டன், மேட் ஹென்றி, நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அஹமது.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: குர்ஜப்னீத் சிங், ராமகிருஷ்ணா கோஷ், கார்த்திக் ஷர்மா, அகீல் ஹொசைன், மேத்யூ ஷார்ட்.
நேருக்கு நேர்
ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் இதுவரை 36 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில் 13 போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 22 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலுமே ராயல் சேலஞ்சர்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தங்கள் ஹோம் கிரவுண்டில் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ தங்கள் முதலிரு போட்டிகளில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நீயூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



