SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
இந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு ஒரு சிறப்பான முடிவு கிடைத்திருக்கிறது. ஒரு நாக் அவுட் போட்டி போலக் கருதப்பட்ட இந்த ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை சென்று அட்டகாசமாக வென்றிருக்கிறது இந்திய அணி.
சஞ்சு சாம்சனின் மறக்க முடியாத இன்னிங்ஸ் இந்தியாவுக்கு அரையிறுதி இடத்தை உறுதி செய்து கொடுத்திருக்கிறது. ஓப்பனராக இறங்கி, கடைசி ஓவர் வரை களத்தில் நின்று இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துவிட்டார் சாம்சன். இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவிட்டார்.
சாம்சனின் இந்த இன்னிங்ஸ் போல, இன்னும் சில தருணங்கள் இந்தப் போட்டியில் பெரும் தாக்கம் ஏற்படுத்தின என்று நான் கருதுகிறேன். சில செயல்பாடுகள் போட்டியை இரு அணிகளின் சார்பாகவும் மாறிமாறி இழுத்தன. அப்படியான ஐந்து தருணங்களைப் பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன்.
1. அக்ஷர் படேல் வீசிய பவர்பிளே ஸ்பெல்
சூர்யகுமார் டாஸ் வெற்றி பெற்றது இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மைதானத்தில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். அதை டாஸின்போது சூர்யகுமாரும் கூறினார். அதை இந்தியா பேட்டிங் செய்கையிலுமே நன்றாகப் பார்க்க முடிந்தது. இந்தியா முதலில் பந்துவீசியது மிகவும் நல்ல விஷயம்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி சரியான தருணத்தில் ஒரு முடிவை எடுத்தார்கள். பிராண்டன் கிங் நீக்கப்பட்டு ராஸ்டன் சேஸை ஓப்பனராக களமிறக்கும் முடிவு அவர்களுக்குப் பலன் கொடுத்தது. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு ஹோப் உடன் இணைந்து அவர் 68 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் ஆடிய விதம் நிச்சயம் விவாதங்களை ஏற்படுத்தும். ஏனெனில், விக்கெட் போகாத ஒரு சமயத்தில் அவர் 33 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதற்கு இந்தியாவின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா இருவருமே நன்றாகத் தொடங்கினார்கள். ஆனால், புதிய பந்தில் அக்ஷர் படேல் வீசிய அந்த 2 ஓவர் ஸ்பெல் புத்துணர்வு கொடுப்பதாக இருந்தது. அந்த 2 ஓவர்களில் அவர் 15 ரன்கள் தான் கொடுத்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதனால்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விகள் வலுத்தன. இதுதான் அவர் அணிக்குக் கொண்டுவரும் விஷயம். நல்ல அனுபவம் கொண்ட வீரர். கடந்த உலகக் கோப்பையில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்தவர்.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இந்தியாவின் சிக்கனமான பௌலர் (எகானமி 8.75) இவர்தான். அதிலும், நிச்சயம் பவர்பிளேவில் பந்துவீசுவது சவாலான ஒரு விஷயமாகத்தான் இருந்திருக்கும். அதை அவர் சிறப்பாகக் கையாண்டார்.
அவர் சிக்கனமாகப் போட்டதால் தான் சூர்யாவால் பும்ராவை தாமதமாக பந்துவீச அழைக்க முடிந்தது. பவர்பிளேவில் ஒரேயொரு ஓவர் மட்டும் கொடுத்து, அவரை பின்னர் பயன்படுத்த முடிந்தது. அக்ஷரின் நல்ல பந்துவீச்சு இந்த வகையிலும் சூர்யகுமாருக்கு உதவியது. இந்திய கேப்டனும் இந்த விஷயத்தில் சிறப்பான முடிவெடுத்தார்.
2. பும்ராவின் ஒரு ஓவர்
பட மூலாதாரம், Getty Images
ஓவருக்கு சுமார் 9.5 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்ட இந்தப் போட்டியில் பும்ரா வீசிய அந்த ஒரு ஓவர் மட்டும் தனியாகத் தெரியும் – வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸின் 12வது ஓவர்.
ஒருபக்கம் ராஸ்டன் சேஸ் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார். 160 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 40 ரன்கள் எடுத்துவிட்டார். மறுபுறம் அதிரடிக்குப் பெயர் போன ஷிம்ரன் ஹெட்மெயர் 225 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 27 ரன்கள் எடுத்தார். இந்த வலது – இடது கை பேட்டர்கள் காம்பினேஷன் வேறு இந்திய பௌலர்களுக்கு கொஞ்சம் சவால் கொடுக்கத் தொடங்கியிருந்தது. ஆனால், சவால் தந்த அந்த இரு பேட்டர்களையும் ஒரே ஓவரில் காலி செய்தார் பும்ரா.
சரியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்ரேட் அதிகரித்துக் கொண்டிருந்த தருணம் அது. இந்த உலகக் கோப்பை முழுக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டத்தைப் பார்த்தால், அது ஒரு ‘டெம்ப்ளேட்’ ஆகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் ஓவருக்கு 8 ரன்ரேட் வீதம் தொடங்குவார்கள். பின்னர் மிடில் ஓவர்களில் சற்று அதிகரித்து 10 வரை செல்வார்கள். பிற்பகுதியில் முழுமையான அதிரடியைக் கையில் எடுப்பார்கள்.
இந்த டெம்ப்ளேட்டில் தான் இந்தியாவுக்கு எதிராகவும் ஆடினார்கள். ஆனால், அவர்கள் அந்த ரன்ரேட்டை அதிகரிக்கும்போது பும்ரா அங்கே வேகத்தடையாக அமைந்தார். தன் வேரியேஷன்களால் மிரட்டி அந்த 2 விக்கெட்டுகளையும் அவர் எடுக்க, 15-வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் ஒரு விக்கெட் எடுக்க, அந்த ஓரிரு ஓவரில் இந்திய ஆட்டத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது. இல்லையேல், வெஸ்ட் இண்டீஸின் அதிரடி விரைவாகவே அடுத்த கட்டத்தை அடைந்திருக்கும்.

3. வருணுக்குப் பதிலாக அர்ஷ்தீப் வீசிய ஓவர்
என்ன வேடிக்கையான விஷயம் என்றால், அந்த ஒருசில ஓவர்களில் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்த இந்தியா, ஒரு பந்துவீச்சு மாற்றத்தால் மறுபடியும் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்த அனுமதித்தது.
16-வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தியின் கையில் சூர்யகுமார் பந்தைக் கொடுத்திருந்தார். அப்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாஷிங்டன் சுந்தரிடம் ஒரு செய்தியைச் சொல்லி அனுப்பினார். வேகவேகமாக வாஷிங்டன் ஓடி வந்து செய்தியைச் சொல்ல, வருண் கையில் இருந்த பந்தை அர்ஷ்தீப் சிங்கிடம் கொடுத்தார் சூர்யா. ஆனால், அந்த ஓவர் இந்தியாவுக்கு சாதகமாகச் செல்லவில்லை.
அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் ராவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர் இருவரும் இணைந்து 24 ரன்கள் எடுப்பார்கள். அது ஆட்டத்தை மறுபடியும் இந்தியாவிடமிருந்து பறித்துச் சென்றது.
அதேசமயம் பவல் – ஹோல்டர் இருவரும் ஆடிய விதத்தையும் பாராட்டியாக வேண்டும். இருவரும் இணைந்து 35 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்கள்.
குறிப்பாக ஜேசன் ஹோல்டர்!
கடந்த போட்டியிலும் அணி தடுமாறியபோது அவர்தான் காப்பாற்றி பெரிய ஸ்கோர் அடிக்க உதவினார். இந்தப் போட்டியிலும் அதை மறுபடியும் செய்திருக்கிறார். இவர்களின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 195 என்ற ஸ்கோரை எட்டிவிட்டது.
15-வது ஓவர் முடிவிலெல்லாம் அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து சுமார் 170 ரன்கள் தான் வரும் என்றே கருதப்பட்டது. ஆனால், இந்த பார்ட்னர்ஷிப்பின் ஆட்டம் காரணமாகத்தான் அந்த அணி 20 ரன்கள் கூடுதலாக எடுத்தது.
4. சஞ்சு சாம்சனின் மகத்தான ஆட்டம்
பட மூலாதாரம், Getty Images
190க்கு மேல் ஒரு ஸ்கோரை சேஸ் செய்கிறோம் எனும்போது அதுவே நெருக்கடி ஏற்படுத்துவதாக இருக்கும். அந்த நிலையில், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் அவுட் ஆகிக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும், அந்த இக்கட்டான சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று விளையாடி அசத்தினார். தான் ஏன் ஒரு மேட்ச் வின்னர் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். ஆட்ட நாயகனும் ஆகியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் சர்வதேச டி20 அரங்கில் 3 சதங்கள் அடித்தவர். ஆனால், அதன்பிறகு நிறையவே பந்தாடப்பட்டார். இந்த உலகக் கோப்பையிலும் கூட இடம் இருக்குமா என்ற கேள்வி இருந்தது. அதன்பிறகு பிளேயிங் லெவனில் சில போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு வந்தவர், கடந்த போட்டியிலும் கலக்கினார், இந்தப் போட்டியிலும் கலக்கியிருக்கிறார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் ஒருமுறை கூட சுயநலமான ஆட்டத்தை ஆடவில்லை. வெற்றி முக்கியம் என்ற போட்டி, பெரிய இலக்கு, ஈடன் கார்டன் போன்ற ஒரு மைதானம் எனும்போது நெருக்கடி அதிகமாக இருக்கும். ஆனால், அவர் எதையும் உணரவில்லை. அவருடைய பேட் சத்தமாகப் பேசியது. 50 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) குவித்தார்.
பொதுவாக அவருக்கு சிக்ஸர் அடிக்கப் பிடிக்கும். அதிகம் சிக்ஸர்கள் அடிக்கவே முயற்சி செய்வார். ஆனால், இந்தப் போட்டியில் அவர் அப்படி ஆடவில்லை. முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தை இந்தியாவுக்கு வென்று கொடுக்க வேண்டும் என்று அவருக்கு இருந்த பசி தெளிவாகத் தெரிந்தது. வென்றும் கொடுத்துவிட்டார்.
அவரே பவுண்டரி அடித்து வென்று கொடுத்தது கூடுதல் சிறப்பம்சம். அவரது இன்னிங்ஸ் இன்னும் நீண்ட காலம் பேசப்படும்.
5. திலக் வர்மாவின் அசத்தல் இன்னிங்ஸ்
பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் அவுட் ஆகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 99/3. அது கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலை தான். ஏனெனில், அதன்பிறகும் இந்தியாவின் நிலை அப்படியே மாறியிருக்கலாம். ஆனால், அந்த நிலையில் திலக் வர்மா ஆடிய ஆட்டம் அபாரமானது. 15 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார் அவர்.
அவர் ஆரம்பத்தில் சற்று அவகாசம் எடுத்தார். முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் தான் அடித்திருந்தார். ஆனால், சரியான நேரத்தில் பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். அது சாம்சன் மீதான நெருக்கடியைக் குறைத்தது. அதுமட்டுமல்லாமல் தேவைப்படும் ரன்ரேட்டும் சற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. ஷமார் ஜோசஃப் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தது மீண்டும் இந்தியாவுக்கு புத்துணர்வு கொடுத்தது. ராஸ்டன் சேஸ் ஓவரில் அடித்த சிக்ஸர் பௌலருக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கும் நெருக்கடியை உண்டாக்கியது. இப்படி நல்லதொரு தாக்கத்தை தன் இன்னிங்ஸ் மூலம் ஏற்படுத்தினார் திலக் வர்மா.
கடந்த போட்டியிலுமே ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து கடைசி கட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் திலக். அதை இந்தப் போட்டியிலும் தொடர்ந்திருக்கிறார். இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம். மிடில் ஆர்டர் இன்னும் பலம் அடையும்போது அது டாப் ஆர்டருக்கும் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



