SOURCE :- BBC NEWS

“சாம்சங் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து 346 நாள்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தென்கொரியாவை தவிர எந்த நாட்டிலும் அந்நிறுவனத்துக்கு தொழிற்சங்கம் இல்லை. இந்தியாவில் அதை மாற்றியமைத்துள்ளோம்” எனக் கூறுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் முத்துகுமார்.
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதாக மே 19 அன்று, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி?
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா ஆலையில் வீட்டு உபயோகப் பொருட்களான தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மெஷின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
சுமார் 2000 பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தில் ஊதிய உயர்வு, தொழிற்சங்கப் பதிவு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு கைது சம்பவங்கள், போராட்ட பந்தல் பிரிப்பு, வழக்குகள் என பிரச்னை நீண்டது.
இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

ஒருகட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலையிட்டு இரு தரப்பிலும் சமரச உடன்பாட்டை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்து.
தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்வதாக சிஐடியு குற்றம் சுமத்தியது. ஒருகட்டத்தில் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்தது.
அதேநேரம், இரு தரப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு மாறாக ஊழியர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பழிவாங்குவதாக புகார் எழுந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 23 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகக் கூறி உணவுப் புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை சாம்சங் இந்தியா தொழிற்சங்கம் (சிஐடியு) முன்னெடுத்தது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் மே 19 அன்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக, அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், CVGanesan/X
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் சி.வி.கணேசன், சாம்சங் இந்தியா நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
“தொடக்கத்தில் நடந்த போராட்டத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் அமர்ந்து பேசி வாபஸ் பெற வைத்தேன். அது ஒரு காலகட்டம்” எனக் கூறுகிறார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.
தற்போது ஊதிய உயர்வு ஒப்பந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறும் சி.வி.கணேசன், “1.4.2025 முதல் 31.3.2028 வரையிலான காலத்துக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் இது. இதற்காக தொழிலாளர் நலத்துறையின் உயர் அதிகாரிகள் 31 முறை பேசியும் முடிவு எட்டவில்லை” என்கிறார்.
“இதைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு தொழிற்சாலையிலும் போராட்டம் நடத்தினால் மாநிலத்தில் தொழில் அமைதி என்னவாகும் என்ற எண்ணத்தில் நானே தொழிலாளியாக மாறி நிர்வாகம், தொழிற்சங்கம் என அனைவரையும் வரவழைத்துப் பேசினேன்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“பேச்சுவார்த்தையின்போது, சங்கத்தை பதிவு செய்துவிட்டு சாதித்துவிட்டீர்கள். சம்பளத்தையும் வாங்கி சாதிப்பதன் மூலம் அமைதி கிடைக்கும் என அமைச்சர் கூறினார்” என்கிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துகுமார்,
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சாம்சங் பிரச்னை தீர்ந்தால் தான் மாநிலத்தில் ஒட்டுமொத்த தொழில் அமைதியே கிடைத்தது போன்ற ஒரு தோற்றம் அரசுக்குக் கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதை சரியான ஒன்றாக பார்த்தோம்” என்றார்.
“சாம்சங் இந்தியா நிறுவனத்தால் தொழில் அமைதியை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, உள்ளிருப்பு போராட்டம், வெளியிடத்தில் போராட்டம் என நீடித்தது. தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
“ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 22 ஆயிரம் ரூபாய் வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் ஊழியருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 42 ஆயிரமாக அதிகரித்திருக்கும். இந்த ஆண்டிலேயே 11 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும்” என்கிறார், முத்துகுமார்.
நிர்வாகம் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை, சுமார் 16 ஆண்டுகளாக நீடித்ததாகக் கூறும் முத்துகுமார், “தொழிலாளர்களும் நிர்வாகமும் சமம் கிடையாது. தீர்மானிக்கும் இடத்தில் நிர்வாகம் உள்ளது. தற்போது, பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது” எனக் கூறுகிறார்.
23 பேரின் நிலை என்ன?

பிப்ரவரி 4 அன்று, சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, நிர்வாகத்தின் சார்பாக இயங்கும் தொழிலாளர் குழுவில் சேருமாறு மிரட்டப்படுவதாக சிஐடியு குற்றம் சுமத்தியது.
கையெழுத்து போடாமல் எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்களை, அவர்களுக்குத் தொடர்பில்லாத துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்குவதாகவும் புகார் எழுந்தது.
இதற்குப் பதில் அளித்த சாம்சங் இந்தியா நிர்வாகம், உற்பத்தி தேவைகளின் அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறியது.
தங்களை பணியில் இருந்து நீக்குவதற்காக ஒப்பந்த ஊழியர்கள் மூலம் சட்டவிரோத உற்பத்தியில் சாம்சங் இந்தியா ஈடுபடுவதாகக் கூறி உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றையும் ஊழியர்கள் நடத்தினர்.
இதை அடிப்படையாக வைத்து, பணிநேரத்தில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாகக் கூறி 23 ஊழியர்களை சாம்சங் இந்தியா பணியிடை நீக்கம் செய்தது.
தொழிலாளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த சாம்சங் இந்தியா, “அனைத்து ஊழியர்களையும் மரியாதையுடன் நடத்துகிறோம். இதற்கு மாறாக கூறப்படும் தகவல்களை நிராகரிக்கிறோம்” எனக் கூறியது.
இதன் தொடர்ச்சியாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 பேரையும் மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மார்ச் 5 முதல் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை சரிசெய்வதற்காக சுமார் 11 முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை.
“எங்கள் முன் இரண்டு பிரச்னைகள் உள்ளன. தற்போது ஊதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்து, 23 ஊழியர்களும் வெளியில் இருந்தால் அது அவர்களுக்கு (சாம்சங் இந்தியா) மிகப்பெரிய தலைவலியாக மாறும். அதை நோக்கி எங்கள் போராட்டங்கள் தொடரும்” எனக் கூறுகிறார் முத்துகுமார்.
பணியிடை நீக்கம் என்பது பிரதான விவகாரம் அல்ல எனக் கூறும் அவர், “தொழிற்சங்கம் தான் பிரதானம். அதற்குக் காரணமாக இருந்தவர்களை பணியிடை நீக்கம் செய்தனர்” என்றார்.
இதே கருத்தை வலியுறுத்திய சாம்சங் இந்தியா சிஐடியு சங்கத்தின் கௌரவத் தலைவர் அ.சௌந்திரராஜன், “23 பேர் பணியிடை நீக்கத்தை பெரிய பிரச்னையாக பார்க்கவில்லை. நிறுவனம் இருந்தால் அதில் பழிவாங்கல் நடக்கும். சங்கமா, கோரிக்கையா என்றால் சங்கம் தான் பிரதானமானது” என்றார்.
அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “23 பேரின் தற்காலிக இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளோம். அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.
வெற்றி பெற்றது யார்?

“ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை. தொழிற்சங்கத்துடன் எந்தவித உடன்பாடோ, அங்கீகாரமோ கிடையாது என சாம்சங் நிறுவனம் முடிவெடுத்தது. அதை இந்த உடன்பாட்டின் மூலம் மாற்றிக் காட்டியுள்ளோம்” எனக் கூறுகிறார், முத்துகுமார்.
“சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு ஆதரவாக அரசு இருந்தது. சாம்சங் செய்வது எல்லாம் சரி என்றால் அரசின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது” எனக் கூறும் முத்துகுமார், “வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், இந்த நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு உடன்பட வேண்டும் என்ற போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது” என்கிறார்.
“இது முக்கியமான முன்னேற்றம்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க கௌரவ தலைவர் அ.சௌந்திரராஜன், “எங்களுடன் பேச மறுத்த நிர்வாகம், தொழிலாளர் நலத்துறையுடன் அமர்ந்து பேசி முடிவுக்கு வந்துள்ளது” என்கிறார்.
போராட்டம் தொடங்கிய நாள் முதலாக, சிஐடியு முன்வைத்த கோரிக்கைளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்கவில்லை. பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரவே, இதுதொடர்பாக விளக்கம் ஒன்றையும் அந்நிறுவனம் கொடுத்தது.
அதில், சட்டவிரோத போராட்டத்தை ஆலையின் உள்புறம் நடத்தி அசாதாரண சூழலை சில தொழிலாளர்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறியது.
தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்ப வலியுறுத்தியும் சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா கூறியிருந்தது.
இதுபோன்ற போராட்டங்களால் நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி ஊழியர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவதாக, சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
“ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, முதலில் கையெழுத்து போட முடியாது என சாம்சங் இந்தியா கூறியது. மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு சிஐடியு சங்கத்தை விட்டு விலகுமாறு ஊழியர்களை நிர்பந்தம் செய்தது” எனக் கூறுகிறார் முத்துகுமார்.
கடைசியாக, தொழிலாளர்கள் நீதிமன்றம் செல்லலாம் எனக் கூறிய பிறகு தான் சாம்சங் இந்தியா சற்று இறங்கி வந்தாகக் கூறும் முத்துகுமார், “நீதிமன்றம் சென்றால் சம்பளப் பிரச்னை மட்டுமல்ல, வேலை நேரமும் பிரதான பிரச்னையாக மாறும். ஆகவே, இரு தரப்பிலும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்” என்கிறார்.
மீண்டும் போராட்டம் நடக்குமா?

சாம்சங் இந்தியா மற்றும் தொழிற்சங்கம் (சிஐடியு) ஆகியவற்றுக்கு இடையேயான போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முத்துகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“சம்பள விகிதம் என்பது பிரதான உரிமை. அதில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. தற்போது தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தியில் நான்காயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் உயர் நீதிமன்றம் செல்வோம்” எனக் கூறினார்.
அடுத்த 60 நாள்களுக்குள் 23 பேர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் எனக் கூறிய முத்துகுமார், “மீண்டும் சங்கத்தை ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டால் சட்டரீதியாகவே போராடுவோம்” என்கிறார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசியபோது, “அனைவரையும் அனுசரித்துச் செல்லுமாறு நிர்வாகத்திடம் கூறியுள்ளேன். அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால் இரு தரப்பிடமும் பேசி கையெழுத்து போட வைத்தேன்” எனக் கூறினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது குறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பாளரிடம் பிபிசி தமிழ் பேசியது.
இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா அனுப்பியுள்ள பதிலில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் ஊழியர்களின் நலனுக்கு பிரதான முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் இந்தியா ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலத்துக்கான பணிச் சூழலை வளர்ப்பதில் உறுதியாக உள்ளதாக அதன் ஊடக தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள சாம்சங் இந்தியா நிர்வாகம், “நேர்மறையான மற்றும் உற்பத்தி திறன் கொண்ட பணியிடச் சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளோம்” என்று மட்டும் தெரிவித்துள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU