SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி. 256 ரன்கள் எடுத்து டி20 உலகக் கோப்பை வரலாற்றின் இரண்டாவது பெரிய ஸ்கோரைப் பதிவு செய்தது இந்தியா.
இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்துவந்த நிலையில் வந்திருக்கிறது இந்த செயல்பாடு.
இந்திய தொடக்க ஜோடியின் செயல்பாடு, அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோரின் தனிப்பட்ட செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தன. ஆனால், இந்தப் போட்டியில் அந்த பிரச்னைகள் எதுவும் வெளிப்படவில்லை. அனைத்துமே இந்தியாவுக்கு சரியாகவே நடந்தன.
சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கு வந்தது பல வகைகளில் இந்த செயல்பாட்டுக்கு காரணமாகியிருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய தொடக்க ஜோடி:
- போட்டி 1 vs அமெரிக்கா – இஷான் கிஷன் & அபிஷேக் ஷர்மா – 1.2 ஓவர்களில் 8 ரன்கள்
- போட்டி 2 vs நமீபியா – இஷான் கிஷன் & சஞ்சு சாம்சன் – 1.6 ஓவர்களில் 25 ரன்கள்
- போட்டி 3 vs பாகிஸ்தான் – இஷான் கிஷன் & அபிஷேக் ஷர்மா – 1 ஓவரில் 1 ரன்
- போட்டி 4 vs நெதர்லாந்து – அபிஷேக் ஷர்மா & இஷான் கிஷன் – 3 பந்துகளில் ரன் எடுக்கவில்லை
- போட்டி 5 vs தென்னாப்பிரிக்கா – இஷான் கிஷன் & அபிஷேக் ஷர்மா – 1.5 ஓவர்களில் 10 ரன்கள்
- போட்டி 6 vs ஜிம்பாப்வே – சஞ்சு சாம்சன் & அபிஷேக் ஷர்மா – 3.4 ஓவர்களில் 48 ரன்கள்
ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுத்த 48 ரன்கள் தான் இந்திய தொடக்க ஜோடி இந்த உலகக் கோப்பையில் கொடுத்த சிறந்த செயல்பாடு. அதற்கு முந்தைய 5 போட்டிகளில் இந்திய தொடக்க ஜோடிகள் 2 ஓவர்கள் கூடத் தாக்குப் பிடிக்கவில்லை.
அதிலும், பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா என தொடர்ந்து இந்த மூன்று அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அபிஷேக் அல்லது இஷான் இருவரில் ஒருவர் டக் அவுட் ஆனார்கள். விரைவில் போன அந்த விக்கெட் அடுத்து வரும் பேட்டர்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அது ஒட்டுமொத்தமாக இந்திய பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்பு மிகவும் எளிதாக 200+ ஸ்கோர்களை எடுத்த அணியால் அப்படி பெரிய ஸ்கோர்கள் எடுக்க முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
இதற்கு முக்கியக் காரணமாகப் பலரும் கருதியது அபிஷேக் ஷர்மா அவருடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியது. லீக் சுற்றில் அவர் விளையாடிய 3 போட்டிகளிலுமே டக் அவுட் ஆனார். அவர் பெரிய தாக்கம் ஏற்படுத்தத் தவறியதால், இந்திய அணியாலும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை என்று வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி இந்த ஃபார்மட்டில் எப்படி ஆடிவந்ததோ, இப்போது இந்த உலகக் கோப்பையில் அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் ஆடவேண்டியிருக்கிறது. காரணம், அவர்களின் அதிரடியான அணுகுமுறை அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை மையப்படுத்தியே இருந்தது. ஆனால், தற்போது அவருக்கு ரன் வரவில்லை” என்று கூறியிருந்தார்.
அபிஷேக் ஷர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முன் சற்று நிதானமாக இன்னிங்ஸை தொடங்க வேண்டும் என்று சஞ்சய் பங்கர் போன்ற வல்லுநர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு அபிஷேக் ஷர்மாவுக்கு கிடைக்கவில்லை. ஏனெனில், எதிரணிகள் இந்திய ஓப்பனர்களுக்கு எதிராக ஒரு திட்டத்தோடு களமிறங்கினார்கள் – ஆஃப் ஸ்பின்.
அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா என இந்திய அணியின் டாப் 3 எல்லோரும் இடது கை பேட்டர்கள் என்பதால், ஆஃப் ஸ்பின்னர்களை வைத்து எதிரணி கேப்டன்கள் இன்னிங்ஸை தொடங்கினார்கள். அது இந்திய ஓப்பனர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
இஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் சிரமப்படவே செய்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து அனைத்து போட்டிகளிலுமே அவர் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராகவே ஆட்டமிழந்திருக்கிறார்.
இந்த உலகக் கோப்பையில் இஷான் கிஷனை அவுட்டாக்கிய பௌலர்கள்
- போட்டி 1 vs அமெரிக்கா – ஷாட்லி வேன் ஷால்ஷ்விக் – வலது கை மிதவேகப்பந்துவீச்சாளர்
- போட்டி 2 vs நமீபியா – ஜெரார்ட் எராஸ்மஸ் – ஆஃப் ஸ்பின்னர்
- போட்டி 3 vs பாகிஸ்தான் – சயிம் அயூப் – ஆஃப் ஸ்பின்னர்
- போட்டி 4 vs நெதர்லாந்து – ஆர்யன் தத் – ஆஃப் ஸ்பின்னர்
- போட்டி 5 vs தென்னாப்பிரிக்கா – எய்டன் மார்க்ரம் – ஆஃப் ஸ்பின்னர்
- போட்டி 6 vs ஜிம்பாப்வே – சிகந்தர் ராஸா – ஆஃப் ஸ்பின்னர்
இப்படி ஆஃப் ஸ்பின்னர்கள் சீக்கிரம் பந்துவீச வந்து நெருக்கடி ஏற்படுத்தியதால், ஒருபக்கம் இஷானும் அந்த ஆஃப் ஸ்பின்னர்களின் சவாலை சந்தித்ததால், அபிஷேக் ஷர்மாவால் தன் அதிரடியையும் காட்ட முடியவில்லை. அதற்கு முன்பான அவகாசமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
இப்போது சஞ்சு சாம்சன் வந்திருப்பது இரண்டு வகைகளில் இந்த நெருக்கடிகளை சமாளிக்க உதவியது.
பட மூலாதாரம், Getty Images
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மாவோடு ஓப்பனராகக் களமிறங்கிய சாம்சன், முதல் பந்தில் ஸ்டிரைக்கையும் தானே எடுத்தார். தொடர்ந்து 3 போட்டிகளாக முதல் ஓவரில் ஆஃப் ஸ்பின்னர்களை சந்தித்த இந்திய அணிக்கு எதிராக சிகந்தர் ராஸா ஆஃப் ஸ்பின்னரைப் பயன்படுத்தவில்லை. சாம்சனுக்கு எதிராக இடது கை வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் நகராவாவை வைத்தே பந்துவீச்சைத் தொடங்கினார் சிகந்தர் ராஸா. சொல்லப்போனால், அவர் பவர்பிளே முழுவதும் ஆஃப் ஸ்பின்னைப் பயன்படுத்தவே இல்லை. இதுவே ஒருவகையில் நெருக்கடியைக் குறைத்தது.
அதுமட்டுமல்லாமல், சாம்சன் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஒவ்வொரு பந்தையுமே அவர் அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எதிர்கொண்டார். ஒருபக்கம் அவர் அந்த அதிரடியைக் கையில் எடுத்ததால், ரன்கள் எளிதாக வந்ததால், அபிஷேக் ஷர்மா களத்தில் செட்டில் ஆவதற்கான அவகாசம் கிடைத்தது. 2 ஓவர்கள் முடிவில் இந்தியா 23 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அபிஷேக் சந்தித்திருந்தது ஒரு பந்து மட்டுமே.
அந்த நல்ல தொடக்கத்துக்குப் பிறகு மூன்றாவது ஓவரில் அபிஷேக் எந்த நெருக்கடியும் இல்லாமல் அடித்து ஆடினார். மபோசா வீசிய அந்த ஓவரில் அவர் 2 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடித்தார். அதன்பின், அவர் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடி அரைசதமும் அடித்தார்.
அபிஷேக் ஷர்மாவின் இந்த செயல்பாட்டில் சாம்சன் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பலரும் பேசிவருகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், “அபிஷேக் ஷர்மா நன்றாக ஆடியதற்கு ஒரு மிகப் பெரிய காரணம் சஞ்சு சாம்சன் கொடுத்த அந்த தொடக்கம். 15 பந்துகளில் 24 ரன்கள். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அபிஷேக் ஷர்மா பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்தார். சாம்சனும் நெருக்கடியில் தான் இருந்தார். அவரிடம் தொடக்கத்திலேயே அந்த ‘இன்டன்ட்’-ஐ பார்க்க முடிந்தது. சிக்ஸர் அடித்துத்தான் அவர் ரன் கணக்கையே தொடங்கினார். இது அபிஷேக் ஷர்மாவுக்கு அவகாசம் வழங்கியது. இந்த உலகக் கோப்பையில் இப்படியொரு தொடக்கம் கிடைக்காததுதான் இந்தியாவுக்கு பிரச்னையாக இருந்தது” என்று கூறினார்.
முன்னணி வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே, “சஞ்சு பொறுப்பை தான் எடுத்து விளையாடியது அபிஷேக்குக்கு சிறு அவகாசம் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், தொடக்கத்தில் ஒரு வலது கை பேட்டர் இருந்தது, எதிரணி ஆஃப் ஸ்பின்னரை பயன்படுத்துவதைத் தடுத்தது” என்று எக்ஸ் தளத்தில் எழுதியிருக்கிறார்.
போட்டியின் போது வர்ணனை செய்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
ஆனால், சாம்சனின் தாக்கம் அபிஷேக் ஷர்மாவோடு மட்டும் முடிந்துவிடவில்லை. இந்தியாவுக்குக் கிடைத்த நல்ல தொடக்கம், மிடில் ஆர்டர் பேட்டர்கள் நெருக்கடி இல்லாமல் முன்பு போல் அதிரடியாக விளையாடுவதற்கு வழிவகுத்தது.
பட மூலாதாரம், Getty Images
திலக் வர்மாவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அதை உணர முடிகிறது. இந்தப் போட்டிக்கு முன்புவரை அவர் சுமார் 118 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தான் விளையாடினார். ஒவ்வொரு முறையும் சீக்கிரமாக ஒரு விக்கெட் விழுந்ததும் மூன்றாவது வீரராக வரும் அவரும் நெருக்கடியை உணர்ந்திருந்தார். ஆனால், ஜிம்பாப்வேவுக்கு எதிராக 14.5 ஓவர்களில் 172/4 என்ற நிலையில் களமிறங்கியதால், அவர் எந்த நெருக்கடியும் இல்லாமல் அதிரடி காட்டினார். 16 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர்களில் சிறந்த ஸ்டிரைக் ரேட் (275) வைத்திருந்த பேட்டர் இவர்தான்.
ஒருவகையில் இதுவொரு சங்கிலித் தொடர் நிகழ்வு போலத்தான் – சஞ்சு சாம்சன் ஆடிய விதம், அபிஷேக் ஷர்மா தன் இயல்பான ஆட்டத்தை ஆட வித்திட்டது – வருண் ஆரோன் சொன்னதுபோல், அபிஷேக் அதிரடியாக ஆடியதால் திலக் வர்மா போன்ற மிடில் ஆர்டர் பேட்டர்களாலும் நெருக்கடி இல்லாமல் ஆட முடிந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



