SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், alliancein
“இது கரபத்ர சிவப்பிரகாச சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான இடம். இதைப் பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்காமல் எங்களைக் கட்டுமான நிறுவனம் ஏமாற்றிவிட்டது. இதனால் 2026 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.”
தமிழ்நாடு டிஜிபியிடம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னை கொரட்டூரில் வசிக்கும் சிலர் அளித்த புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“நிலத்தின் மதிப்பை பூஜ்ஜியமாக பதிவுத்துறை அறிவித்துவிட்டதால் கடும் மன உளைச்சலில் தவிக்கிறோம்” என பிபிசி தமிழிடம் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தனியார் கட்டுமான நிறுவனம் மறுத்துள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தாலுகாவில் கொரட்டூரில் அலையன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் ‘ஆர்கிட் ஸ்பிரிங்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன.
சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பில் 2026 வீடுகள் அடங்கியுள்ளன.
“வீடு கட்டுவதற்கு 2000ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன. வீடுகளை 2014 முதல் 2019 ஆகிய காலகட்டங்களில் ஒப்படைத்தனர்” என டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் இதன் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் கணபதி சுரேஷ் கூறியுள்ளார்.
‘மடத்திற்குச் சொந்தமான நிலம்’
கட்டுமான நிறுவனம் அளித்த வாக்குறுதி மற்றும் ஆவணங்களை நம்பி சொந்த சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் மூலமாக வீடு வாங்கியதாக புகாரில் தெரிவித்துள்ள அவர், 2018ஆம் ஆண்டிலேயே பதிவுத்துறை தரப்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அப்போது வீடுகளைப் பதிவு செய்வதற்கு பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது குறித்து கட்டுமான நிறுவனத்திடம் கேட்டபோது, “இது சிறிய விவகாரம்தான் விரைவில் தீர்க்கப்பட்டுவிடும்” என அவர்கள் பதில் தந்ததாக கணபதி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இதுதொடர்பாக விசாரித்தபோது சர்வே எண் 590 மற்றும் 591 ஆகியவை மடத்திற்குச் சொந்தமான நிலம் எனக் கண்டறிந்ததாகக் கூறியுள்ள அவர், “இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எங்கள் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
கடந்த 1972ஆம் ஆண்டில் பூந்தமல்லி மாவட்ட முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளதை புகார் மனுவில் கணபதி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். அதில், “திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரின் அறிக்கைப்படி, குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலம், கரபத்ர சிவப்பிரசாச சுவாமிகள் சன்னதிக்குச் சொந்தமானது’ எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது” என்று கணபதி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், hrce
யார் இந்த கரபத்ர சிவப்பிரகாச சுவாமிகள்?
“மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து தங்களிடம் கட்டுமான நிறுவனம் எதுவும் கூறவில்லை. இதன் சட்டப்பூர்வ உரிமையாளர் எனக் கூறி 2015ஆம் ஆண்டில் சதீஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். ஆனால், பட்டாவை காட்டி கட்டுமான நிறுவனம் எங்களை ஏமாற்றிவிட்டது” என கணபதி சுரேஷ் கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் கரபத்ர சிவப்பிரகாச சுவாமிகள் மடம் அமைந்துள்ளது. சித்தர்களில் ஒருவராக அறியப்படும் இவர், ஆனந்தாசிரமம் அமைத்துச் செயல்பட்டு வந்ததாக இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரச்னைக்குரிய நிலத்தின் மீது உரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ரிட் மனுவை சதீஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். இவரது தந்தை மடத்தில் வேலை பார்த்ததால் சர்ச்சைக்குரிய நிலத்தைத் தனது தந்தையின் பெயரில் மடத்தின் நிர்வாகம், எழுதி வைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டுவதற்கு இரு தரப்பும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்’ எனக் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அசல் உரிமை ஆவணம், மூலப்பத்திரம், நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் என எதையும் தங்களிடம் ஒப்படைக்கவில்லை எனப் புகார் மனுவில் கணபதி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்புகளின் பின்னணியில் உள்ள சர்ச்சையைத் தெரிவிக்காமல் வாங்கும் நபர்களை கட்டுமான நிறுவனங்கள் ஏமாற்றியதாகப் புகார் மனுவில் கூறியுள்ள கணபதி சுரேஷ், “இது மக்களின் பணத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. கட்டுமான துறைக்கும் களங்கம் விளைவிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
“அலையன்ஸ் நிறுவனம் கட்டியுள்ள ஒவ்வொரு வீடும் தலா 1 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது. அந்த வகையில் ஏறக்குறைய 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது” எனவும் புகாரில் அவர் கூறியுள்ளார்.

‘வீட்டுக் கடனுக்கு நெருக்கடி’
“குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலம், மடத்திற்கு சொந்தமானது எனக் கூறி பத்திரப் பதிவுக்கு தடை விதித்துவிட்டனர். இதனால் நிலத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக மாறிவிட்டது. இதனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்” என்கிறார், இதே குடியிருப்பில் வசித்து வரும் சங்கரன்.
இதன் காரணமாக கல்விக் கடன், வணிகக் கடன் என எதுவும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் குடியிருப்புவாசிகள் அனைவரும் கடும் மன உளைச்சலில் தவிப்பதாகக் கூறுகிறார், இங்கு வசிக்கும் சுரேஷ் சீனிவாசன். வங்கியில் பணிபுரியும் இவர் கடந்த 2015ஆம் ஆண்டில் இங்கு வீடு வாங்கியுள்ளார்.
“நிலத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக மாறிவிட்டதால் வீட்டுக் கடன்களுக்கு ஈடாக வேறு சில சொத்துகளை உத்தரவாதமாக தருமாறு சிலருக்கு வங்கிகள் நெருக்கடிகள் தந்துள்ளன” எனவும் அவர் கூறினார்.
காவல்துறை டிஜிபியிடம் அளித்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடந்து வருவதாகக் கூறிய அவர், “நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த பிறகு அலையன்ஸ் நிறுவனத்துக்கு பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களிடம் பேசிய நிறுவனத்தின் பிரதிநிதிகள், “இந்த விவகாரத்தில் சட்டரீதியாகத் தீர்வு பெற்றுத் தருகிறோம்” எனக் கூறியுள்ளனர்.
பட மூலாதாரம், alliancein
கட்டுமான நிறுவனம் கூறுவது என்ன?
குடியிருப்புவாசிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக அலையன்ஸ் கட்டுமான நிறுவனத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. அந்த நிறுவனத்தின் சார்பாகப் பேசிய வழக்கறிஞர் ஜோசப், “குடியிருப்பின் அதிகாரப்பூர்வ உரிமையாளர்களாக நாங்கள் இல்லை. அனைத்து வீடுகளையும் ஒப்படைத்துவிட்டோம்” என்கிறார்.
“அதன் பராமரிப்புப் பணிகளும் எங்களிடம் இல்லை” எனக் கூறும் வழக்கறிஞர் ஜோசப், “ஆனால், எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சட்டரீதியாக உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிலம் தொடர்பாக டிசம்பர் மாதம் தீர்ப்பு வந்துள்ளது. அப்போது கிறிஸ்துமஸ் உள்பட விடுமுறைக் காலம் என்பதால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை” எனக் கூறினார்.
தீர்ப்புக்குத் தடை பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய அவர், “மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். பத்திரப் பதிவு செய்வதிலும் சிக்கல் இருப்பதால் அதைச் சரிசெய்வதற்கான பணிகளில் ஈடுபட உள்ளோம்” என்றார்.
“இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நினைத்தால் பொது மக்களுக்கு உதவி செய்யலாம். தவிர அது கோவில் நிலம் அல்ல என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், alliancein
‘அரசிடம் இழப்பீடு கோர முடியாது’
“கோவில் அல்லது மடத்திற்குச் சொந்தமான நிலம் எனக் கண்டறியப்பட்டால் அதில் மேற்கொண்டு பத்திரப் பதிவு நடக்கக் கூடாது என்பதற்காக பூஜ்ஜிய மதிப்பு எனப் பதிவேற்றப்படுகிறது” என்கிறார் மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரன்.
“ஆவணங்களை சரிபார்க்காமல் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு வாய்ப்பில்லையே?” என அவரிடம் கேட்டபோது, “பொதுத்துறை வங்கிகளில் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து கடன் தருகின்றனர். சில தனியார் வங்கிகளில் இலக்கு நிர்ணயித்துச் செயல்படுவதால் சரிபார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு” என்கிறார்.
“வீடுகளை வாங்குவதற்கு முன்பு பட்டா விவரம், அடமானம் வைக்கப்பட்டிருந்தால் அதன் விவரம், பொது அதிகாரப் பத்திரம் பெற்ற நபர் உயிருடன் உள்ளாரா என்பதற்கான சான்று ஆகியவற்றை ஆராய வேண்டும்” என்கிறார், வழக்கறிஞர் எஸ்.குமாரதேவன்.
“கட்டடத்தைக் கட்டுவதற்கு சிஎம்டிஏ, டிடிசிபி அனுமதி ஆகியவை முறையாகப் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கூறிய அவர், “மடத்தின் நிலத்தில் தவறு நடந்திருந்தால் அரசிடம் இழப்பீடு கோர முடியாது. கட்டுமான நிறுவனம்தான் பதில் அளிக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
“வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அதை முழுமையாக திருப்பிச் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” எனவும் எஸ்.குமாரதேவன் தெரிவித்தார்.

வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, ஓய்வுபெற்ற சார்-பதிவாளர் பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் கேட்டது. இதற்கான வழிமுறைகளை அவர் பட்டியலிட்டார்.
- நிலத்தின் மூலப் பத்திரத்தை (Parent document) சரிபார்க்க வேண்டும்.
- சுமார் 40 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று போட்டுப் பார்க்கும்போது நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து தொடர்ச்சியாக வந்துள்ளதா என்பதை அறியலாம். இதற்கு Tnreginet என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
- குறிப்பிட்ட நிலத்துக்கு 1987ஆம் ஆண்டில் இருந்து மட்டும் இணையத்தில் ஆவணங்களைக் காட்டுகிறது என்றால் தொடர்புடைய சார்-பதிவாளர் அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து விவரங்களைச் சரிபார்க்கலாம்.
- வீடுகளை வாங்கும்போதே கட்டுமான நிறுவனம் பட்டா பெற்றுள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
- தொடர்புடைய கட்டுமான நிறுவனம் அளிக்கும் ஆவணங்களை மட்டும் நம்பாமல் கிராம நிர்வாக அலுவலரை அணுகி விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
- நிலத்திற்கு கணினிவழி சிட்டா இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
- அறநிலையத்துறை சட்டம் 1956ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. குறிப்பிட்ட நிலம் கோவிலுக்குப் பயன்படாமல் இருந்து அரசாணை வெளியிட்டு விற்கப்பட்டிருந்தால் அதை ஆராய்வது அவசியம்.
“இதையும் மீறி போலி ஆவணங்கள் மூலம் வீடுகள் விற்கப்பட்டு இருந்தால் காவல்துறை மூலம் சட்டரீதியாக நடவடிக்கையை எடுக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



