Home தேசிய national tamil ‘கோலி சாயலில் சாம்சன், பிராட்மேன் மறுஉருவம் பும்ரா’: இந்தியாவை சாதனை சிகரத்தில் ஏற்றிய இருவர்

‘கோலி சாயலில் சாம்சன், பிராட்மேன் மறுஉருவம் பும்ரா’: இந்தியாவை சாதனை சிகரத்தில் ஏற்றிய இருவர்

7
0

SOURCE :- BBC NEWS

டி20 உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - நியூசிலாந்து, சாம்சன், பும்ரா

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்றிருக்கிறது. முதல் அணியாக அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்றிருக்கிறது. எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்குப் பிறகு சூர்யகுமார் அந்தக் கோப்பையை ஏந்திய போது அந்த உணர்வு அலாதியாக இருந்தது. இந்திய அணி கிரிக்கெட் ஆடிய விதம் நிச்சயம் எல்லோருக்கும் பெருமையாக இருந்திருக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி ஒரு வெற்றியை இந்தியா பெற்றிருக்கிறது. இதில் நியூசிலாந்தின் சில முடிவுகள் கேள்வி எழுப்புவதாக இருந்தது.

டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது, மெக்கான்கீயை பிளேயிங் லெவனில் சேர்க்காதது போன்ற முடிவுகள் ஆச்சரியமாக இருந்தன. பவர்பிளேவில் தொடர்ச்சியாக வெளியேயே பந்துவீசிக் கொண்டிருந்தனர்.

எல்லாம் அப்படி நடக்கும்போது அபிஷேக் ஷர்மா குஷியாகி 18 பந்துகளில் ஒரு அதிவேக அரைசதம் அடித்துவிட்டார். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் நியூசிலாந்து அணியின் சிறந்த கிரிக்கெட் வெளிப்படவில்லை.

அதேசமயம், இந்தியா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆடியிருக்கிறது. ஆமதாபாத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து சொந்த மண்ணில் சாம்பியன் ஆகியிருக்கிறது.

சொல்லப்போனால் இது முழுக்க முழுக்க எளிதான ஒரு பயணமாகவும் இருக்கவில்லை. ஒருகட்டத்தில் சூப்பர் 8 சுற்றை இந்தியா தாண்டுமா என்ற கேள்வி எழத்தானே செய்தது.

ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்தத் தோல்வி சரியான நேரத்தில் வந்தது என்றுதான் சொல்லவேண்டும். அது, இந்திய அணி சரியான தருணத்தில் எழுச்சி பெறுவதற்கு வித்திட்டது. அதன்பிறகு இந்திய அணி அரையிறுதி, இறுதி போட்டிகளில் முழு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

20 அணிகள் பங்கேற்கும், 30 நாள்களுக்கு மேல் நடக்கும் ஒரு தொடரை வெல்வது எளிதானதல்ல. முக்கியமான தருணங்களில் நீங்கள் வெற்றி பெறவேண்டும். அப்படி முக்கியமான தருணங்களில் முக்கியமான வீரர்கள் எழுச்சி பெற்று இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்திய அணியின் மிகப் பெரிய பலமே அதுதான் – இந்த அணி ஓரிரு வீரர்களை மட்டுமே நம்பி இருக்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வீரர் அணியை வெற்றி பெறவைத்திருக்கிறார். அதுபோல் வெவ்வேறு வீரர்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

பல வீரர்கள் அப்படியான செயல்பாடுகள் கொடுத்திருந்தாலும், பெரும் தாக்கம் ஏற்படுத்திய இருவரின் பங்களிப்பு பற்றி நான் குறிப்பிட நினைக்கிறேன்.

டி20 உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - நியூசிலாந்து, சாம்சன், பும்ரா

பட மூலாதாரம், Getty Images

சாம்சனின் எழுச்சி = இந்தியாவின் எழுச்சி

சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான கம்பேக்காக இது அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் அணிக்குள்ளேயே இல்லாத வீரர் ஒருவர், ஒரு 10 நாள் இடைவெளியில் தொடர் நாயகன் ஆவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.

அணியில் இருப்பாரா என்று கேட்கப்பட்டவருக்கு இடையில் ஒரு வாய்ப்பு கிடைத்தது, பின்னர் மீண்டும் வெளியே அமரவைக்கப்பட்டார், பின்னர் மீண்டும் வாய்ப்பு பெற்றவர் 97*, 89, 89 என மாபெரும் இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் மட்டுமே ஆடிய சாம்சன் 80.25 என்ற சராசரியில் 321 ரன்கள் எடுத்திருக்கிறார். அதுவும் 199.37 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். மற்ற இந்திய வீரர்களை விட 4 போட்டிகள் குறைவாக ஆடியிருந்தும் கூட இவர்தான் அணியின் டாப் ரன் ஸ்கோரர்.

சஞ்சுவின் எழுச்சி இந்தியாவின் எழுச்சி இரண்டும் ஒரே புள்ளியில் சந்தித்தது என்று நான் கருதுகிறேன். ஏனெனில், அவர் இந்திய அணிக்குள் வந்து நல்ல தொடக்கம் கொடுக்கத் தொடங்கிய பிறகுதான் இந்திய அணி பெரும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

தென்னாப்பிரிக்க தோல்விக்குப் பிறகு அவர் அணிக்குள் வந்ததும், இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடங்கியது. அதில் பெரும்பாலான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியே இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தத் தொடரில் அவருடைய ஆட்டத்தில் அனுபவமும், நிலைத்தன்மையும் நன்கு தெரிந்தது. நன்றாக விளையாடுகிறார் என்பதையும் தாண்டி அவர்மீது ஒரு மதிப்பும் ஏற்பட்டது. ஏனெனில், இந்த கடைசி 3 போட்டிகளிலுமே சாம்சனால் சதம் அடித்திருக்க முடியும்.

ஆனால், அவர் அதைப் பற்றி யோசிக்கவேயில்லை. ஒவ்வொரு போட்டியிலும் அந்தத் தருணத்தில் அணிக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே அவர் செய்தார். சுயநலமற்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.

டி20 உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - நியூசிலாந்து, சாம்சன், பும்ரா

பட மூலாதாரம், Getty Images

சாம்சன் மீது நிறைய விமர்சனங்கள் இருந்திருக்கிறது. இந்த உலகக் கோப்பைக்கு முன்பு கூட அவருடைய நுட்பம் பற்றி குறை சொல்லப்பட்டது. பொதுவாகவே, ‘அவரிடம் சீரான ஆட்டம் இருக்காது. ஒரு போட்டியில் அடித்தால் அடுத்த போட்டியில் அடிக்கமாட்டார்’ என்றெல்லாம் நிறைய பேசப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரின்போது கூட ‘அவர் ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகளில் அடிப்பார். அதன்பின் அடிக்கமாட்டார்’ என்றெல்லாம் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால், இந்த உலகக் கோப்பையின் கதையை இப்போது திரும்பிப் பார்த்தால் அது அப்படியே வித்தியாசமாக இருக்கிறது.

ஒரு உலகக் கோப்பையின் காலிறுதி போன்ற போட்டியில், அரையிறுதியில், இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறவைத்திருக்கிறார். சஞ்சு சாம்சன் தன் கிரிக்கெட் கரியரின் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

அவருடைய ஆட்டத்தில் ஒருசில கட்டத்தில் எனக்கு விராட் கோலியின் சாயல் தென்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும்போது எனக்கு வேறு எதுவுமே தோன்றவில்லை. ‘யாரால் இதை முடித்துக் கொடுக்க முடியும்?’ என்று அப்போது யோசிக்கையில் கோலியின் பெயர் தான் முதலில் தோன்றியது. அவர் இல்லாதபோது யார் அதைச் செய்வது? இப்படி கேள்வி எழுந்த போதுதான் ‘நான் அதைச் செய்து தருகிறேன்’ என்று சாம்சன் தன் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சஞ்சுவின் இந்த எழுச்சி உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உண்மையான ‘கேரளா ஸ்டோரி’ இதுதான்.

டி20 உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - நியூசிலாந்து, சாம்சன், பும்ரா

ஜஸ்ப்ரித் ‘பிராட்மேன்’ பும்ரா

இவரைப் பற்றி ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். மிகப் பெரிய தருணங்களின் நாயகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப் பெரிய பிரம்மாஸ்திரமாக விளங்கியிருக்கிறார் பும்ரா.

சர்வதேச அரங்கில் அவருடைய மிகச் சிறந்த டி20 பந்துவீச்சு (4/15) ஒரு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வந்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கராக (14 விக்கெட்டுகள்) உருவெடுத்திருக்கிறார். அதுவும் 6.21 என்ற எகானமியோடு!

இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு பௌலரும் ஓவருக்கு 8-9 ரன்கள் கொடுக்கும்போது இவர் மட்டும் ஓவருக்கு 6.21 என்ற வீதத்தில் வீசுயிருக்கிறார் என்பது பிரம்மிக்க வைக்கிறது. அதுதான் அவரது தனித்துவம். இதுவே அவரது திறமையைப் பற்றிச் சொல்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் சிவப்புப் பந்தில் ஜொலிக்கிறார், ஒருநாள் போட்டிகளிலும் முத்திரை பதிக்கிறார், டி20 போட்டிகளிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறார். இவருக்கு ஜஸ்ப்ரித் ‘பிராட்மேன்’ பும்ரா என்று பெயர் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

ஏனெனில், பிராட்மேனின் எண்களை (டெஸ்ட் சராசரி 99.94) எப்படி யாராலும் தொட முடியாதோ, அதேபோல் பும்ராவின் எண்களையும் யாராலும் தொடமுடியாது என்று நினைக்கிறேன். அலசி ஆராய்ந்து பார்த்தால், பும்ரா போன்ற ஒரு பௌலர் இங்கு இல்லை.

டி20 உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - நியூசிலாந்து, சாம்சன், பும்ரா

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரால் பந்துவீச முடிகிறது, அங்கே தாக்கம் ஏற்படுத்த முடிகிறது. எப்போதெல்லாம் இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படுகிறதோ, எப்போதெல்லாம் எதிரணியின் ரன் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அதை அவரால் பூர்த்தி செய்ய முடிகிறது.

உதாரணம், இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய அரையிறுதிப் போட்டி. ஓவருக்கு 12.29 என்ற ரன்ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்துக்கு கடைசி 3 ஓவர்களில் தேவைப்பட்டது 45 ரன்கள்.

ஆட்டம் மதில் மேல் பூனை போல் இருந்தது. அப்போது தன் கடைசி ஓவரைப் போட வந்த பும்ரா கொடுத்தது வெறும் 6 ரன்கள் மட்டுமே. 15 ஆக இருந்த தேவைப்படும் ரன்ரேட் உடனே 19.5 என்று உயர்ந்தது. அந்த ஒரு ஓவர் ஆட்டத்தை அப்படியே புரட்டிப்போட்டது.

இப்படி ஆட்டத்தையே மாற்றக்கூடிய தன் திறனை அவர் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திய அணிக்கு ஒரு பொக்கிஷமாகவே இருக்கிறார். சூர்யகுமாருக்கு மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கிறார். ‘நம்மிடம் பும்ரா இருக்கிறார். அதனால் நம்மால் எதிரணியை விட சிறப்பாக பேட்டிங் செய்திட முடியும்’ என்ற நம்பிக்கையை அவர் கேப்டனுக்குக் கொடுக்கிறார் என்று நினைக்கிறேன். அதை சூர்யா பயன்படுத்திய விதத்திலும் பார்க்க முடிந்தது. எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, எப்போதெல்லாம் ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமோ அப்போதெல்லாம் பும்ராவைப் பயன்படுத்தினார்.

(கட்டுரையாளர் யோ மஹேஷ் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார்)

தமிழ்நாடு தேர்தல் 2026 – உங்கள் பகுதியில் உள்ள சாதிய பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள்

தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ளும் இந்த தருணத்தில், உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதற்கான தளத்தை பிபிசி தமிழ் வழங்குகிறது.

உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடா? தீண்டாமை பிரச்னை குறித்து குரல் எழுப்பியும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா?

உங்கள் பிரச்னைகளை பிபிசி தமிழுடன் பகிருங்கள். அவற்றை செய்தியாக்கி அரசிடம் கொண்டு சேர்க்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்!

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU