Home தேசிய national tamil காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு அமைச்சரவை ஒப்புதல் கிடைப்பதில் உள்ள சவால்கள் என்ன?

காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு அமைச்சரவை ஒப்புதல் கிடைப்பதில் உள்ள சவால்கள் என்ன?

1
0

SOURCE :- BBC NEWS

இஸ்ரேல் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம், பாலத்தீனம், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மியா டேவிஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 17 ஜனவரி 2025, 06:38 GMT

    புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் அமைச்சரவை காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் மீது வாக்களிக்க விரைவில் ஒன்றுகூடவுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், “ஞாயிற்றுக்கிழமையன்று முதல்கட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதில் சில சவால்களும் உள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஜனவரி 17 அன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான” ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை அன்று அரசியல் – பாதுகாப்பு அமைச்சரவை கூடும் என்றும் அப்போது ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களின் குடும்பத்தினருக்கும் இத்தகவல்கள் அளிக்கப்பட்டுவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கெனவே ஜனவரி 16-ஆம் தேதி அன்று, போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவை கூடியது.

ஆனால், போர் நிறுத்தம் தொடர்பான முடிவை எடுப்பதற்கான வாக்கெடுப்பை தாமதப்படுத்தினார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஹமாஸ், இறுதி நேரத்தில், ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

போர் நிறுத்தத்திற்கு பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் கூட, பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் இஸ்ரேலிய அரசால் அங்கீகரிக்கப்படும் வரை போர் நிறுத்தத்தை செயல்படுத்த இயலாது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அமெரிக்கா நம்பிக்கை

இஸ்ரேலிய அமைச்சரவையில் வாக்களிப்பு தாமதமானபோது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், சில தீர்வு காணப்படாத அம்சங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை முதல் போர் நிறுத்தம் தொடங்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால், ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு அதன் சில உறுப்பினர்களை சேர்க்க முயற்சிப்பதை பிபிசி புரிந்துகொண்டது.

புதன்கிழமை அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன் பிறகும், காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 80-க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு போர் நிறுத்தம் தொடர்பான வாக்களிப்பு தாமதப்படுத்தப்பட்டது. வியாழன் அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ‘இறுதி நிமிடத்தில் சலுகைகளை பெற ஹமாஸ் முயற்சி செய்கிறது,’ என்று நெதன்யாகு குற்றம் சாட்டினார்.

ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் வரை அமைச்சரவையை இஸ்ரேலிய அரசு கூட்டாது என்றும் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுபோன்ற ஒரு சவாலான சூழலில் இத்தகைய தாமதத்தை எதிர்பார்த்ததாக பிளிங்கன் அறிவித்தார்.

வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிளிங்கன் இது குறித்து பேசும்போது, “இது போன்ற பேச்சுவார்த்தையில் சவாலான, தீர்வு காண இயலாத அம்சங்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.

“அதனை நாங்கள் சரி செய்ய முயற்சி செய்கின்றோம். எனவே, திட்டமிட்டபடி ஞாயிறு அன்று ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றும், போர் நிறுத்தம் தொடரும் என்றும் அமெரிக்கா நம்புகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

எச்சரிக்கை விடுக்கும் கூட்டணி கட்சிகள்

இந்த விவகாரத்தில் கூறப்படும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இன்று, ஜனவரி 17 அன்று, ஹமாஸுடனான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க அமைச்சரவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

பெரும்பான்மையான இஸ்ரேலிய அமைச்சர்கள் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் இட்டாமர் பென்-கவிர், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், நெதன்யாகுவின் கூட்டணி அரசில் இருந்து தங்களின் வலது சாரி கட்சி வெளியேறும் என வியாழக்கிழமை கூறியுள்ளார்.

“தற்போது தயாராகிவரும் ஒப்பந்தமானது ஒரு பொறுப்பற்ற ஒப்பந்தம்,” என்றும் பென்-கவிர் விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், இந்த ஒப்பந்தம் “போர் நிகழ்த்திய சாதனைகளை ஒன்றுமற்றதாக மாற்றும்,” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால், அவரது ஒட்ஸ்மா யெஹுடிட் (யூத சக்தி) கட்சி அரசாங்கத்தை கவிழ்க்க முயலாது என்று அவர் கூறினார்.

இந்த கூட்டணியில் உள்ள மற்றொரு தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான, ரிலிஜியஸ் சியோனிஸ்ட் கட்சியின் பெசலெல் ஸ்மோட்ரிச்சையும் இந்த முடிவில் தன்னோடு இணையுமாறு பென்-கவிர் வேண்டுகோள் விடுவித்தார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், அக்கட்சியின் தலைவராக அங்கம் வகிக்கும், ஓஹாட் தால், பிபிசி ரேடியோ 4 நிகழ்வில் பேசிய போது, நெதன்யாகுவின் அரசை விட்டு வெளியேறுவது குறித்து அக்கட்சியினருடம் விவாதித்து வருவதாக கூறினார்.

இஸ்ரேல் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம், பாலத்தீனம், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், EPA

அடுத்து நடக்க இருப்பது என்ன?

இந்த சூழலில், அமைதி பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் அறிவித்த ஒப்பந்தத்தை செயல்படுத்த முழு உறுதியுடன் இருப்பதாக, ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய நடத்திய குழுவின் தலைவர் கலீல் அல்-ஹய்யா, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பட்டியலிடப்பட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளிப்பதாக, கத்தார் மற்றும் எகிப்திடம் அறிவித்தார் என்று அதிகாரப்பூவமாக தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின் கீழ் சிறைகளில் இருந்து விடுவிக்கப்படும் கைதிகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு அவர்களின் ஒன்று அல்லது இரண்டு முக்கிய உறுப்பினர்களின் பெயர்களையும் இணைக்க முயற்சி செய்கிறது என்று, பிபிசி காஸா நிருபர் ருஷ்டி அபுவலூஃப் அறிந்து கொண்டார்.

ஒப்பந்தத்தின் முதல் ஆறு வாரத்தில், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகளை வெளிவிடுவதற்கு மாற்றாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

காஸாவின் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து, இஸ்ரேலிய துருப்புகள் அங்கிருந்து கிழக்கு நோக்கித் திரும்பும்.

போரால் இடம்பெயர்ந்த பாலத்தீனர்கள் தங்களின் சொந்த ஊர்களில் உள்ள வீடுகளுக்குத் திரும்புவார்கள். மேலும், ஒவ்வொரு நாளும் நிவாரணப் பொருட்களுடன் வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் காஸாவுக்குள் அனுமதிக்கப்படும்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த 16-வது நாளில் துவங்கும். அப்போது, மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேலிய துருப்புகளை திரும்பப் பெறுவது, நிலையான அமைதிக்குத் திரும்புவது தொடர்பான விவகாரங்கள் ஆலோசிக்கப்படும்.

மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட போர் நிறுத்த நடவடிக்கைகளின்போது, பணயக்கைதிகளின் உடல்கள் ஏதேனும் திரும்பி வழங்காமல் இருந்தால், அதனை திருப்பி அளிக்கவும், காஸாவின் மறுகட்டுமானம் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த புனரமைப்புப் பணிகள் நடைபெற நீண்ட காலம் ஆகும்.

இஸ்ரேல் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம், பாலத்தீனம், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

புதன்கிழமை அன்று ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, இஸ்ரேல் வான்வழி தாக்குதலைத் தொடர்ந்தது. அந்த தாக்குதலில், காஸா நகரில் 12 பேர் கொல்லப்பட்டனர். பிபிசி செய்தியாளரிடம் பேசிய மருத்துவர், அந்த இரவில் ஒரு நிமிடம் கூட அமைதியில்லை என்று கூறினார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும், பாதுகாப்பு முகமையும் வெளியிட்ட அறிக்கையில், ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, காஸாவில் 50 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் ஆறு-வார கட்டம் தொடங்குவதற்கு முன்பு இரு தரப்பினரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று, போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கத்தாரின் பிரதமர் அறிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் நோக்கில், ஹமாஸை அழிக்க உறுதிபூண்டது இஸ்ரேல். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இதர பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்துள்ளன.

காஸாவில் இதுவரை 46,788 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காஸாவில் இருந்து அநேக மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தாக்குதலில் பல இடங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. உணவு, எரிபொருள், மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத்தர பல நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணயக் கைதிகளில் ஏற்கனவே 94 பேர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் ஏற்கனவே இறந்திருக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. போருக்குப் முன்னர் நான்கு இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டனர். அவர்களில் இருவர் இறந்துவிட்டனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU