Home தேசிய national tamil “காலநிலை மாற்றம்” ஒபாமா காலத்து உத்தரவுகளை ரத்து செய்த டிரம்ப்- விளைவுகள் என்னவாக இருக்கும்?

“காலநிலை மாற்றம்” ஒபாமா காலத்து உத்தரவுகளை ரத்து செய்த டிரம்ப்- விளைவுகள் என்னவாக இருக்கும்?

17
0

SOURCE :- BBC NEWS

காலநிலை மாற்றம் குறித்த முக்கிய விதிமுறைகளை ரத்து செய்த டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

பூமியை வெப்பமாக்கும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக விளங்கும் ஒபாமா காலத்து முக்கிய அறிவியல் விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

2009-ஆம் ஆண்டின் ‘ஆபத்து கண்டறிதல்’ (Endangerment Finding) என்று அழைக்கப்படும் அந்த விதிமுறைகள், பல்வேறு பசுமை இல்ல வாயுக்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக முடிவு செய்தது. இது உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான, (குறிப்பாக வாகனங்களில்) ஃபெடரல் அரசின் முயற்சிகளின் சட்டப்பூர்வ அடித்தளமாக மாறியுள்ளது.

இந்த ரத்து நடவடிக்கையை “அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய விதிமுறைத் தளர்வு” என்று வெள்ளை மாளிகை விவரித்ததுடன், இது கார்களின் விலையைக் குறைக்கும் என்றும், வாகனத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வாகனத்திற்கு 2,400 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,17,000 ரூபாய்) செலவைக் குறைக்கும் என்றும் கூறியுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க பின்னடைவு நடவடிக்கை இது என்று சுற்றுச்சூழல் குழுக்கள் கூறுகின்றன, மேலும் இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கவும் தயாராக உள்ளன.

டிரம்ப் மற்றும் ஒபாமா கூறியது என்ன?

காலநிலை மாற்றம், வாகனங்கள், அமெரிக்கா, பசுமை இல்ல வாயுக்கள்

பட மூலாதாரம், Getty Images

வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், 2009-ஆம் ஆண்டு விதிமுறைகள், “அமெரிக்க வாகனத் தொழில்துறையை கடுமையாக சேதப்படுத்திய மற்றும் அமெரிக்க நுகர்வோருக்கான விலைகளை பெருமளவில் உயர்த்திய ஒரு பேரழிவுகரமான ஒபாமா காலக் கொள்கை” என்று கூறினார்.

“இந்தத் தீவிரமான விதி, வரலாற்றின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றான ‘கிரீன் நியூ ஸ்கேம்’ என்ற மோசடிக்கான சட்ட அடித்தளமாக மாறியது,” என்று ஜனநாயகக் கட்சியினரின் காலநிலைத் திட்டம் குறித்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் கூறினார்.

பதவியில் இருக்கும் அதிபர்களின் கொள்கைகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ‘இந்த விதிமுறைகளை ரத்து செய்வது அமெரிக்கர்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும்’ என்று கூறினார்.

“அது இல்லாமல், நமது பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திறன் ஆகியவற்றில் நாம் குறைபாடுகளை எதிர்கொள்வோம்.” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) முதலில் 2009-ஆம் ஆண்டில், ஒபாமாவின் முதல் பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்புகள் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் உட்பட பூமியை வெப்பமாக்கும் ஆறு முக்கிய பசுமை இல்ல வாயுக்கள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்று அந்த முகமை முடிவு செய்தது.

உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலையைச் சமாளிப்பதற்கான சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Congress) ஒருமித்த கருத்தை எட்ட முடியாத நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான ஃபெடரல் அரசின் முயற்சிகளுக்கு இபிஏ-வின் இந்தக் கண்டறிதல் மையப்புள்ளியாக மாறியது.

“ஆபத்து கண்டறிதல் விதிமுறைகள், அமெரிக்காவின் பசுமை இல்ல வாயுக்கள் ஒழுங்குமுறையின் முக்கிய அச்சாகச் செயல்பட்டுள்ளது,” என்று முன்னாள் இபிஏ மற்றும் நீதித்துறை வழக்கறிஞர் மேகன் கிரீன்ஃபீல்ட் கூறினார்.

“இதில் மோட்டார் வாகனங்கள் அடங்கும், அதேசமயம் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, குப்பை கிடங்குகளிலிருந்து வரும் மீத்தேன், விமானங்கள் கூட இதில் அடங்கும். எனவே இது முழு அளவையும் உள்ளடக்கியது, ஒவ்வொரு துறைக்கான அனைத்து தரநிலைகளும் இந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டவை” என்கிறார்.

காலநிலை மாற்றம், வாகனங்கள், அமெரிக்கா, பசுமை இல்ல வாயுக்கள்

பட மூலாதாரம், Reuters

பொருளாதார மற்றும் சுகாதாரத் தாக்கம்

டிரம்ப் நிர்வாக அதிகாரிகள், இந்த விதிமுறைகளை ரத்து செய்வதன் மூலம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான நிதியைச் சேமிக்க முடியும் மற்றும் எரிசக்தி மற்றும் போக்குவரத்தின் விலையைக் குறைக்க உதவும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விதிமுறைகளை ரத்து செய்வது வாகனத் தயாரிப்பாளர்களின் செலவை ஒரு வாகனத்திற்கு 2,400 அமெரிக்க டாலர்கள் வரை குறைக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டிரம்ப் குழுவினர் கூறும் சாத்தியமான நிதி சேமிப்புகள் குறித்து சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

“குறைந்த செயல்திறன் கொண்ட மற்றும் அதிக மாசுபடுத்தும் இந்த வாகனங்களை இயக்குவதற்கு சுமார் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதல் எரிபொருள் செலவுகளுக்கு இது அமெரிக்கர்களைக் கட்டாயப்படுத்தும்,” என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தைச் சேர்ந்த பீட்டர் சல்சல் கூறினார்.

“சுகாதார பாதிப்புகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்துள்ளோம். இந்த நடவடிக்கை 58,000 கூடுதல் அகால மரணங்கள் மற்றும் 37 மில்லியன் கூடுதல் ஆஸ்துமா தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

அமெரிக்க கார் தொழில்துறையில் உள்ள சிலருக்கு இந்த பின்வாங்கல் குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்படும், ஏனெனில் குறைந்த எரிபொருள் திறன் கொண்ட வாகனங்களைத் தயாரிப்பது அவர்களின் வெளிநாட்டு விற்பனையை மட்டுப்படுத்தக்கூடும்.

“இந்த பின்வாங்கல் ஏற்கனவே செய்யப்பட்ட விஷயங்களை உறுதிப்படுத்துவது போன்றது, அதாவது எரிபொருள் சிக்கனத் தரங்களைத் தளர்த்துவது போன்றவை,” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் காலநிலைச் சட்ட நிபுணர் மைக்கேல் ஜெரார்ட் கூறினார்.

“ஆனால் இது அமெரிக்க வாகனத் தயாரிப்பாளர்களை ஒரு சங்கடத்தில் ஆழ்த்துகிறது, ஏனென்றால் வேறு யாரும் அமெரிக்க கார்களை வாங்க விரும்ப மாட்டார்கள்.” என்று மைக்கேல் ஜெரார்ட் கூறுகிறார்.

காலநிலை மாற்றம், வாகனங்கள், அமெரிக்கா, பசுமை இல்ல வாயுக்கள்

பட மூலாதாரம், Reuters

இந்த ரத்து நடவடிக்கை காலநிலை மாற்ற விதிமுறைகளைத் திரும்பப் பெற வெள்ளை மாளிகைக்கு உதவும் என்றாலும், சில பார்வையாளர்களின் கூற்றுப்படி, இதில் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த முடிவை ரத்து செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கார்பன் உமிழ்வு விஷயத்தில் மாநிலங்கள் கடுமையான சட்டங்களை இயற்றுவதைத் தடுக்க டிரம்ப் நிர்வாகம் 2009-ஆம் ஆண்டின் தீர்ப்பைப் பயன்படுத்தியது.

வெப்பமூட்டும் வாயுக்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஃபெடரல் அதிகார அமைப்பிற்கு இந்த விதிமுறைகள் வழங்கியிருந்தது, அதேசமயம் காலநிலை விவகாரம் தொடர்பாக தனிநபர்கள் அல்லது அமைப்புகளால் கொண்டுவரப்படும் ‘தொந்தரவு’ (Nuisance) வழக்குகள் என்று அழைக்கப்படுபவற்றை அடக்கவும் பயன்படுத்தப்பட்டது.

“ஆபத்து கண்டறிதல் விதிமுறைகள் ஏராளமான வழக்குகளைத் தடுத்துள்ளது. வாதிகளின் கூற்றுக்களை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்திருப்பதில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.” என்று கூறும் மேகன் கிரீன்ஃபீல்ட், இப்போது வாஷிங்டன் சட்ட நிறுவனமான ஜென்னர் அண்ட் பிளாக்-இல் பணிபுரிகிறார்.

“மாநிலங்கள் மற்றும் லாப நோக்கற்ற குழுக்கள், அநேகமாக நமது மாநில நீதிமன்றங்களில், இந்த புதிய சட்டத்தின் வரம்புகள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டறிய வழக்குகள் தொடரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காலநிலை அறிவியல் தொடர்பான சவால்

ஆபத்து கண்டறிதல் விதிமுறைகளைத் திரும்பப் பெறுவது குறித்த ஒரு முக்கிய வாதம் அது அடிப்படையாகக் கொண்ட அறிவியலைப் பற்றியதாக இருக்கும்.

பசுமை இல்ல வாயுக்களின் வெப்பமயமாதல் தாக்கம் குறித்த பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியலைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஒரு அறிக்கையை எழுதுவதற்காக எரிசக்தி துறை கடந்த ஆண்டு விஞ்ஞானிகள் குழுவை உருவாக்கியது.

அந்த அறிக்கை 2009-ஆம் ஆண்டின் விதிமுறைகளைத் திரும்பப் பெறுவதற்கான ஆரம்பத் திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

ஆனால் பல காலநிலை நிபுணர்கள், அறிக்கையின் பின்னணியில் உள்ள குழு பிரதிநிதித்துவமற்றதாகவும், வெப்பமயமாதலில் மனிதத் தாக்கம் குறித்து சந்தேகம் கொண்டவர்களால் நிரம்பியுள்ளதாகவும், அது துல்லியமற்றதாகவும் தவறாக வழிநடத்துவதாகவும் புகார் கூறினர்.

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள டிரம்ப் நிர்வாகம் இந்த அறிக்கையை எந்த அளவுக்கு நம்பியிருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதை எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை உருவாக்குவதில், சட்டம் மீறப்பட்டுள்ளதாக ஒரு ஃபெடரல் நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்தார்.

உண்மையில், ஆபத்து கண்டறிதல் விதிமுறைகளை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றம் வழியாக சவால்கள் எழுவதை டிரம்ப் நிர்வாகம் இப்போது எதிர்பார்க்கலாம்.

பல சட்ட வல்லுநர்கள், டிரம்பின் பதவிக்காலம் முடிவதற்குள் இந்த முன்மொழிவு உச்ச நீதிமன்றத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக கூறுகிறார்கள். அவர்கள் வெற்றி பெற்றால், ஆபத்து கண்டறிதல் விதிமுறைகள் வரலாற்றில் சேர்க்கப்படும் என்று நம்புகிறார்கள்.

“இபிஏ இந்த இடத்தை முழுமையாக விட்டு வெளியேறுகிறது மற்றும் அதை நிரந்தர அடிப்படையில் செய்ய விரும்புகிறது என்பதால் இது உண்மையில் மாறுபட்ட ஒரு விஷயம்,” என்று மேகன் கிரீன்ஃபீல்ட் கூறினார்.

“அவரகள் எப்படி இதை வடிவமைத்தார்களோ, அப்படியே உச்ச நீதிமன்றத்தின் முன்வைத்து, அதில் வெற்றி பெற்றால், புதிய சட்டம் இல்லாத நிலையில், ஒரு புதிய அதிபர் நிர்வாகம் அந்த நிலையை மாற்ற முடியாது” என்கிறார் மேகன் கிரீன்ஃபீல்ட்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU