Home தேசிய national tamil காணொளி: எண்ணெய் வயலை விட முக்கியமான இந்த இடத்திற்கு இரான் குறியா? வளைகுடா நாடுகள் கவலை

காணொளி: எண்ணெய் வயலை விட முக்கியமான இந்த இடத்திற்கு இரான் குறியா? வளைகுடா நாடுகள் கவலை

18
0

SOURCE :- BBC NEWS

காணொளி: எண்ணெய் வயலை விட முக்கியமான இந்த இடத்திற்கு இரான் குறியா? வளைகுடா நாடுகள் கவலை

8 மணி நேரங்களுக்கு முன்னர்

வளைகுடா முழுவதும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தாக்குவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆனால் எண்ணெயை தாண்டி மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் கடல் நீரை மில்லியன்கணக்கான மக்களுக்கு குடிநீராக மாற்றும் நிலையங்கள். அமெரிக்கா அத்தகைய ஒரு நிலையத்தைத் தாக்கியதாக சமீபத்தில் இரான் குற்றம் சாட்டியது. மேலும், அது போன்ற உட்கட்டமைப்புகளை தாக்கி முன்னுதாரணத்தை உருவாக்கியது அமெரிக்கா தான், இரான் அல்ல என்றும் கூறியது.

அந்த எச்சரிக்கை வளைகுடா பகுதி முழுவதுமே தீவிர கவலைகளை எழுப்பியிருக்க வேண்டும். ஏனெனில் இது பூமியிலேயே நீர் பற்றாக்குறை மிகுந்த பிராந்தியங்களில் ஒன்று. பரந்த பாலைவனங்கள், மிகக் குறைந்த மழைப்பொழிவு, கிட்டத்தட்ட ஆறுகள் இல்லாத நிலை ஆகியவற்றின் காரணமாக இந்தப் பிராந்திய நாடுகளிடம் இயற்கையான நன்னீர் வளங்கள் மிக குறைவாகவே உள்ளன. வளைகுடாவை எண்ணெய் வளம் நவீனமாக மாற்றி இருக்கலாம். ஆனால், அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பது நீர் தான்.

“சௌதி அரேபியாவை பொறுத்தவரை குடிநீரில் 70 சதவீதம் கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்களிலிருந்தே வருகிறது. ஓமனில் இந்த விகிதம் 86 சதவீதமாகவும், குவைத்தில் 90 சதவீதமாகவும் உள்ளது. எனவே, கடல்நீரை நன்னீராக்கும் இந்த நிலையங்கள் இல்லாவிட்டால் இப்பிராந்தியத்தின் நவீன நகர்ப்புற அமைப்பின் பெரும்பகுதி, தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே சிரமத்திற்குள்ளாகும்.” என்கிறார் ஹாம்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவி-நீரியல் தகவல் இயல் பேராசிரியர் நிமா ஷோக்ரி.

ஜெனீவா உடன்படிக்கை உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம் உட்பட பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது கடல் நீரை நன்னீராக்கும் ஒரு நிலையத்தை இரான் சேதப்படுத்தியதாக பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இது பிராந்தியம் முழுவதும் புதிய கவலைகளை எழுப்பி உள்ளது. பெரும்பாலான இந்த நிலையங்கள் நேரடியாக வளைகுடாவின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளன, அதன் மூலம் செயலாக்கத்திற்காக கடல்நீரை எடுக்க முடியும். அதில் பல முழு நகரத்துக்கும் தண்ணீர் வழங்குகின்றன.

“வளைகுடா முழுவதும் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பல வழிகளில் பாதிக்கப்படக்கூடும். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் பாரசீக வளைகுடாவின் தெற்கு கடற்கரையில் சுமார் 815 நிலையங்கள் உள்ளன.” நீர் பாதுகாப்புக்கான மூத்த நிபுணர் (CSIS) டேவிட் மைக்கேல்.

“இந்த நிலையங்கள் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடியவை. மேலும் அந்த வசதிகளுக்கு சேவை வழங்கும் மின் உற்பத்தி நிலையங்களும் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியவை. நீங்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டீர்கள் என்றால் நீர் விநியோகத்தையும் துண்டித்துவிட்டீர்கள். நன்னீரை பம்பிங் நிலையங்கள் குழாய் இணைப்புகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும், அந்த விநியோக இணைப்பும் குறிவைக்கப்படலாம்.”

“இந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சைபர் அபாயங்களும் இருக்கலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சைபர் போரும் இரானின் போர் உத்தியின் ஒரு பகுதி என்பதை நாம் அறிவோம்.” என்கிறார்.

பல வளைகுடா நாடுகள் பெரிய நீர்த்தேக்கங்களில் வியூக ரீதியாக நீரை சேமித்து வைத்துள்ளன. ஆனால் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுவதை நிறுத்தினால், இந்த இருப்புகள் பொதுவாக சில நாட்கள் முதல் ஒரு வாரம் வரை மட்டுமே போதுமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

“பஹ்ரைன், குவைத்தை பொருத்தவரை, ஒரு சில நாட்களுக்கான சேமிப்பு மட்டுமே உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 40 நாட்களுக்கான நீர் சேமிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நாடுகளின் நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டால் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான இரண்டு தாக்குதல்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.” என்கிறார் டேவிட் மைக்கேல்

“இந்த நிலையங்கள் தாக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடு முடங்கிப்போனால், சுகாதாரம் சார்ந்த அமைப்புகள் சீர்குலையத் தொடங்கும். அவ்வாறு சுகாதார அமைப்புகள் செயலிழக்கும்போது, ​​அது உடனடியாக பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கும்.” என்கிறார் நிமா ஷோக்ரி.

“பாரசீக வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்திற்கு தூண்களாகத் திகழும் பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகள் குறிப்பாக சுற்றுலா மற்றும் பல்வேறு சேவைத் துறைகள் ஆகியவற்றின் இருப்பே, நிலையான நீர் விநியோகத்தை சார்ந்தே உள்ளது. இந்த நிலையங்களை விரைவாக சீரமைப்பது என்பது ஏறக்குறைய இயலாத காரியம்.”

“எனவே, ஏற்பட்ட சேதத்தின் தீவிரத்தைப் பொறுத்து, இந்த நிலையங்களைச் சீரமைக்கும் பணிக்கு சில மாதங்கள் ஆகலாம். ஏன், அதற்கும் மேலான காலம் தேவைப்படலாம்.” என்றும் அவர் கூறுகிறார்.

ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் பிராந்தியத்தில், துபாய், தோஹா மற்றும் குவைத் ஆகியவற்றின் வானுயர்ந்த கட்டடங்கள், தாங்கள் இழக்கவே முடியாத ஓர் உயிர்நாடியை சார்ந்திருக்கின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU