Home தேசிய national tamil கப்பலில் பாம்புகளை கண்டு அஞ்சி நடுங்கும் ஊழியர்கள் – விசாகப்பட்டினத்தில் என்ன நடக்கிறது?

கப்பலில் பாம்புகளை கண்டு அஞ்சி நடுங்கும் ஊழியர்கள் – விசாகப்பட்டினத்தில் என்ன நடக்கிறது?

6
0

SOURCE :- BBC NEWS

சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

பட மூலாதாரம், UGC

கடந்த மூன்று மாதங்களாக, விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பலுக்குள் நுழைய ஊழியர்களும் தொழிலாளர்களும் பயப்படுகிறார்கள். அந்தக் கப்பலின் பெயர் சாகரகன்யா.

இதுவொரு கடல் ஆராய்ச்சிக் கப்பல். அதில் பாம்புகள் இருப்பதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சில நேரங்களில் பாம்புகள் காணப்பட்டன. இது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கப்பல் பழுது பார்ப்பதற்காக அந்தமானில் இருந்து விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்திற்கு சுமார் நூறு நாட்களுக்கு முன்பு இந்தக் கப்பல் வந்தது. மார்ச் 3ஆம் தேதி, கப்பலில் ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர் பாம்பு மீட்பர் நாகராஜு குழுவினரால் அது மீட்கப்பட்டது.

“அதுவொரு நாகப் பாம்பு, சுமார் 8 அடி நீளம் கொண்டது,” என்று நாகராஜு பிபிசியிடம் கூறினார்.

“நான் அங்கு சென்றபோது, தொழிலாளர்கள் கப்பலில் ஒரு மலைப்பாம்பு இருப்பதாக வீடியோக்களை காட்டினர். அதற்கு முன்பு ஒரு பாம்பு இருப்பதாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்தே நான் அங்கு சென்றேன். ஆனால், அந்த மலைப்பாம்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லைம்,” என்று நாகராஜு பிபிசியிடம் கூறினார்.

கப்பல் கட்டும் தளத்தின் உதவிப் பொது மேலாளர் இனாயதுல்லா பெய்க் பிபிசியிடம் பேசியபோது, கப்பலில் பாம்புகள் இருப்பது குறித்துச் சில குழப்பங்கள் இருப்பது உண்மைதான் எனவும், ஆனால் தற்போது அப்படி எதுவும் இல்லை என்றும் கூறினார்.

நீருக்குள் உள்ள கப்பலில் பாம்புகள் எப்படி உள்ளே நுழைகின்றன? அவை கடல் பாம்புகளா?

இந்த விஷயங்களுக்குள் செல்வதற்கு முன், சாகரகன்யா கப்பலைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

பட மூலாதாரம், UGC

சாகரகன்யா கப்பலின் அம்சங்கள்

‘சாகர் கன்யா’ என்பது ஒரு கடல் ஆராய்ச்சிக் கப்பல். இது கடலில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பல். பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்பட 40 பேர் வரை தங்கக்கூடிய வசதிகளை இது கொண்டுள்ளது.

இந்தக் கப்பல் முக்கியமாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற கடல் ஆராய்ச்சி நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கப்பல் கடல் வெப்பநிலை, உப்புத்தன்மை, கடற்பரப்பு ஆராய்ச்சி, கனிம ஆய்வு மற்றும் கடலில் காலநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும்.

சாகரகன்யா கப்பல் முக்கியமாக இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலில் ஆய்வுகளை நடத்துகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் இந்தக் கப்பல், அந்தமானில் உள்ள ஒரு படகுத்துறையில் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதை ஒரு வணிக நிறுவனம் விலைக்கு வாங்கி மீண்டும் பயன்படுத்தும் யோசனையுடன், பழுதுபார்ப்பதற்காக விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்திற்குக் கொண்டு வந்ததாக கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

பட மூலாதாரம், UGC

ஆய்வுக் கப்பலில் பாம்புகள் உள்ளதா?

மூன்று மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்திற்குக் கொண்டு வரப்பட்ட சாகரகன்யா கப்பல், பழுது பார்ப்பதற்காக படகுத்துறையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சில தொழிலாளர்கள் உள்ளே சென்றபோது, பாம்புகளைக் கண்டதாகக் கூறி வெளியே ஓடினர்.

“இரண்டு மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் இயந்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கப்பலில் ஒரு பாம்பு இரண்டு குட்டிகளும் இருப்பதாக அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் அனைவரும் பயந்து வெளியே வந்தோம். இப்போது எங்களில் சிலர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேலை செய்கிறோம். மூன்று நாட்களுக்கு முன்பும் ஒரு பாம்பு தென்பட்டது. அதைப் பிடித்துள்ளோம்,” என்று கப்பல் கட்டும் தளத்தில் தொழிலாளியாகப் பணியாற்றும் லட்சுமணன் கூறினார்.

கப்பல் அந்தமானில் இருந்து வந்தது. அது நீண்ட காலமாக அந்தமானில் உள்ள படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட காலமாக படகுத்துறையில் இருந்ததால் அப்போது சில பாம்புகள் நுழைந்திருக்க வாய்ப்புள்ளதாக கப்பல் கட்டும் தளத்தின் உதவிப் பொது மேலாளர் பெய்க் பிபிசியிடம் தெரிவித்தார்.

கப்பல் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்குள் அது திருப்பி அனுப்பப்படும் என்று இனாயதுல்லா பெய்க் கூறினார்.

சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

பட மூலாதாரம், UGC

கப்பலுக்குள் பாம்புகள் வந்தது எப்படி?

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மீன்வள ஆய்வகத்தின் பொறுப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற பாமிரெட்டியும், ஆய்வுக் கப்பலைப் பயன்படுத்தி கடல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, படகுத் துறையில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களுக்குள் பாம்புகள் நுழைய வாய்ப்புள்ளதா என்பதை அறிய பிபிசி பேசியது.

அப்போது அவர், “கப்பல்கள் பல மாதங்களாக படகுத்துறையில் வைக்கப்படும்போது, கப்பலுக்குள் பாம்புகள் நுழைய வாய்ப்புள்ளது. படகுத்துறையில் உள்ள எலிகள் கப்பலுக்குள் நுழைகின்றன. பாம்புகள் கேங்வே (தரையில் இருந்து கப்பலுக்குள் நுழைய ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறிய பாலம்) வழியாக நுழைந்திருக்கலாம். அல்லது நங்கூரமிடப்பட்ட கயிறுகள் வழியாகவும் கப்பலுக்குள் நுழைய வாய்ப்புள்ளது,” என்று பாமிரெட்டி கூறினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் எஃப்.எஸ்.ஐ படகில் ஒரு பாம்பு வந்ததை பாமிரெட்டி நினைவுகூர்ந்தார். ஒரு பாம்பு மீட்பர் வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்பு மீட்கப்பட்டது.

அதேபோல, “நிருடு படகுத்துறையில் கப்பலில் பாம்பு ஒன்று ஏறியது. நானே அதைப் பிடித்தேன்” என்று பாம்பு மீட்பரான நாகராஜு கூறினார்.

சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

பட மூலாதாரம், Getty Images

பாம்புகள் கப்பல்களில் தங்குவது ஏன்?

பாம்புகள் தற்போது இருப்பதாகக் கூறப்படும் கப்பலில் முன்னர் ஆய்வு நடத்திய விலங்கியல் துறையின் பேராசிரியர் சி. மஞ்சுலதா பிபிசியிடம் பேசினார்.

“துறைமுகங்களுக்கு அருகில் நிறைய எலிகள் உள்ளன. பாம்புகள் கப்பல்களுக்குள் சென்று அவற்றை உண்ணலாம். பாம்புகள் ஒளிந்துகொள்ள இருண்ட இடங்களை தேடுகின்றன. படகுத்துறையில் பல மாதங்களாக அசையாமல் இருக்கும் ஒரு கப்பல்கூட அத்தகைய இருள் சூழ்ந்த இடமாக இருக்கும். ஒரு பாம்பு கப்பலில் உள்ள எலியைச் சாப்பிட்டால், அதற்கு சில நாட்களுக்கு உணவு தேவைப்படாது. எனவே அது அங்கேயே ஓய்வெடுக்கும்,” என்று அவர் கூறினார்.

“கப்பலின் இயந்திர அறை சூடாகவும், சேமிப்பு அறைகள் இருட்டாகவும் இருக்கும். இவை பாம்புகள் ஒளிந்துகொள்ள ஏற்ற இடங்கள்” என்றார்.

கப்பலில் சேமிக்கப்படும் உணவு காரணமாக எலிகள் உள்ளே வர வாய்ப்புள்ளது. அதைச் சாப்பிட பாம்புகளும் கப்பலுக்குள் வர வாய்ப்புள்ளதாக விலங்கியல் பேராசிரியர் சி. மஞ்சுலதா பிபிசியிடம் கூறினார்.

“நான் 1986இல் 35 நாட்கள் அந்தக் கப்பலில் இருந்தேன். ஆய்வுக்காக அந்தமானுக்கு சென்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

நாகம், மலைப்பாம்பு…

பாம்பு மீட்பர் நாகராஜு, சாகரகன்யா கப்பலில் ஒரு நாகப் பாம்பைப் பிடித்ததாகவும், தொழிலாளர்கள் கப்பலில் ஒரு மலைப்பாம்பை இருப்பதாக வீடியோ ஒன்றைக் காட்டியதாகவும் கூறினார்.

நாகராஜு பிபிசியிடம் பேசியபோது, மற்ற சிறிய பாம்புகள் மற்றும் பிற வகைப் பாம்புகளை அவர்கள் பார்த்ததாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.

சுமார் மூன்று மணிநேரம் தேடிய பின்னரே நாகப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நாகராஜு கூறினார்.

“அந்தமான் தீவுகளில் அந்தமான் நாகம் என்று ஓர் இனம் உள்ளது. இது ஒரு தனி வகைப் பாம்பு. அதோடு, மலைப்பாம்புகள் எனப்படும் பாம்புகளின் அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய பாறை மலைப்பாம்பு, அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. இவை அளவில் பெரிய பாம்புகள், ஆனால் மிகவும் மெதுவாகச் செயல்படக் கூடியவை,” என்று பேராசிரியர் சி. மஞ்சுலதா பிபிசியிடம் விளக்கினார்.

கடல் பாம்புகள் இருப்பதாகவும் அவை முக்கியமாக இந்திய பெருங்கடல் மற்றும் அந்தமான் கடலில் காணப்படுவதாகவும் பேராசிரியர் மஞ்சுலதா கூறினார். இருப்பினும், அவை கப்பல்களில் வருவது அரிது என்றும் அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU