Home தேசிய national tamil ‘உல்லாச உலகம்’ – கண்டசாலா பாடிய 10 பிரபல தமிழ் பாடல்கள்

‘உல்லாச உலகம்’ – கண்டசாலா பாடிய 10 பிரபல தமிழ் பாடல்கள்

12
0

SOURCE :- BBC NEWS

கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் 10 பாடல்கள்

பட மூலாதாரம், Krishnakumari

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் அறிந்திராத இசைக் கலைஞர் கண்டசாலா. தமிழ், தெலுங்கு திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சியவர்.

கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, இந்தி ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். சினிமா தவிர, பல ஆன்மிகப் பாடல்களும் பாடியுள்ளார்.

இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி தனது 51-வது வயதில் காலமானார்.

நாகேஸ்வரராவ் உடன் கூட்டணி

1944-இல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் கோரஸ் பாடும் வாய்ப்பைப் பெற்றார் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்.

பின்னர், ‘சொர்க்க சீமா’ என்ற படத்தில் முதன்முதலாகப் பின்னணி பாடல் பாடினார். தெலுங்கில் அந்த காலத்தில் கிட்டதட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் பாடியிருக்கிறார்.

குறிப்பாக, நடிகர் நாகேஸ்வரராவ் பாடல் என்றால் கண்டசாலா குரல் என்று ஒன்றிப்போனது.

தமிழில் அவர் பல படங்களில் பாடினாலும் ‘பாதாள பைரவி’ திரைப்படம் அவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கும் அவர் குரல் பொருந்திப்போனது.

தமிழ் ரசிகர்கள் அவரை “கண்டசாலா மாமா” என்று அழைத்தார்கள். தெலுங்கில் ‘கான கந்தர்வா’ என்று கொண்டாடினார்கள்

கண்டசாலா

பட மூலாதாரம், Ayngaran

கண்டசாலாவின் புகழ் பெற்ற 10 தமிழ் பாடல்கள்

1) ஓ… தேவதாஸ்..ஓ … … பார்வதி

தேவதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்தார். சி.ஆர்.சுப்பராமன் இசையில் கண்டசாலாவும், ஜிக்கியும் இணைந்து இந்த பாடலை பாடியிருப்பார்கள். இந்திய சினிமாவில் தேவதாஸ் படத்துக்கு தனியிடம் உண்டு.

அழுத்தமான காதலை சொன்ன படங்களில் இதுவே முன்னோடியானது. இந்த படத்தின் காதல் காட்சிகள், கிளைமாக்ஸ் இன்றும் பேசப்படுகின்றன. அந்த கால வானொலி பிரியர்களின் விருப்பமான பாடலாகவும் ‘ஓ தேவதாஸ், ஓ பார்வதி’ பாடல் இருந்தது. நாகேஸ்வரராவ், சாவித்ரி அந்த பாடலில் நடித்து இருப்பார்கள்.

2) முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக

அண்ணன், தம்பி பாசம் என்றால் உடனே நினைவுக்கு வரும் இந்தப் பாடல் அன்பு சகோதரர்கள் படத்தில் இடம்பெற்றது. தெலுங்கில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான பண்டந்திகபுரம் படத்தின் ரீமேக்தான் அன்புசகோதரர்கள்.

தெலுங்கிலும் இந்தப் பாடலை கண்டசாலா பாடியிருந்தார். தமிழில் கே.வி.மகாதேவன் இசையில், கண்ணதாசன் வரிகளில் கண்டசாலா பாடிய இந்தப் பாடல், காலத்தால் அழியாத பாடலாக உள்ளது.

கண்டசாலா

பட மூலாதாரம், Modern pictures

3) உலகே மாயம் வாழ்வே மாயம்

தமிழ் சினிமாவின் சோகப்பாடல் என்ற பட்டியலை எடுத்தால் தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் கண்டிப்பாக இடம் பெறும். காதலின் வலியை, வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லும் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆன ஒன்று. நாகேஸ்வரராவ் நடிப்பு, உடுமலை நாராயண கவி வரிகள், சி.ஆர்.சுப்புராமன் இசை கூட்டணியில், கண்டசாலாவின் குரலும் லட்சக்கணக்கானவர்களை கண் கலங்க வைத்தது.

4) ஆஹா இன்ப நிலாவினிலே

தமிழ், தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாயாபஜார் படத்தில் இந்தப் படம் இடம்பெற்றது. இந்தப் படத்துக்கு கண்டசாலாவே இசையமைத்து இருந்தார். இந்தப் பாடலை தஞ்சை ராமையா தாஸ் எழுத, லீலாவுடன் இணைந்து பாடியிருந்தார் கண்டசாலா. ஜெமினியும், சாவித்ரியும் தங்கள் நடிப்பின் மூலம் பாடலுக்கு உயிர் கொடுத்திருந்தனர்.

5) உல்லாச உலகம் உனக்கே சொந்தம்

எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் இடம் பெற்ற துள்ளல் பாடல் இது. மருதகாசி எழுதி, தட்சிணா மூர்த்தி இசையமைத்து இருந்தார். மற்ற பாடல்களை விட சற்றே இதில் கொஞ்சம் மாறுபட்டு பாடியிருப்பார் கண்டசாலா. இந்த பாடலில் கண்டசாலா குரலுக்கு அற்புதமாக நடனம் ஆடியிருப்பார் நகைச்சுவை நடிகர் தங்கவேலு.

கண்டசாலா

பட மூலாதாரம், Dream Cinemas

6) ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

எங்க வீட்டு மஹாலக்ஷ்மி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை உடுமலை நாராயண கவி வரிகளில் மாஸ்டர் வேணு இசையில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியிருப்பார் கண்டசாலா. விவசாயத்தின் அருமை, பெருமை சொல்லும் இந்தப் பாடலில் நாகேஸ்வரராவ், சாவித்ரி நடித்திருப்பார்கள்.

7) வெய்யிற்கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றல் காற்றுண்டு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதை, கள்வனின் காதலி என்கிற படத்தில் பாடலாக இடம்பெற்றது. அதை பானுமதியுடன் இணைந்து பாடியிருப்பார் கண்டசாலா. கோவிந்தராஜ நாயுடுவுடன் இணைந்து கண்டசாலாவே இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

8) அமைதி இல்லாதென் மனமே என் மனமே

மன்னர் கால கதையான பாதாள பைரவி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் டிஎன்.ராமையா. தாஸ் லீலாவுடன் இணைந்து பாடியிருந்தார் கண்டசாலா. அவரே இசையும் அமைத்திருந்தார். என்.டி.ராமாராவ், மாலதி நடித்த இந்த படத்தை நாகிரெட்டி தயாரித்து இருந்தார்.

9) கோடை மறைந்தால் இன்பம் வரும்

மஞ்சள் மகிமை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை மாஸ்டர் வேணு இசையில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியிருப்பார் கண்டசாலா. நாகேஸ்வரராவ், சாவித்ரி பாடலில் கலக்கியிருப்பார்கள்.

10) எங்குமே ஆனந்தம் எங்குமே ஆனந்தம்

பலே ராமன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலிலும் கண்டசாலாவின் ஆஸ்தான ஹீரோ நாகேஸ்வரராவ் நடித்து இருப்பார். இந்தப் படத்திற்கு கல்யாணம் இசையமைத்து இருந்தார். கோட்சூட் அணிந்த நிலையில் பியானோ வாசித்தபடி ஒரு பார்ட்டியில் பாடுவார் நாகேஸ்வரராவ்.

கண்டசாலா

பட மூலாதாரம், Moserbear

கண்டசாலா நினைவுகள், பாடல் குறித்து நடிகை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

”கண்டசாலா எப்படிப்பட்ட மேதை என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. நான் சின்ன வயதில் அவர் பாடல்களை ரசித்து கேட்டேன். அம்மா சாவித்ரிக்கு அவர் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். அவர் இசையமைத்த மாயாபஜார் படம் என் அம்மாவுக்கு எவ்வளவு முக்கியமான படம் என்பது எல்லாருக்கும் தெரியும். பிற்காலத்தில் அந்த படத்தில் பாடல் காட்சியில் எப்படி நடித்தேன் என்று அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார்.”

“அந்தப் படத்தில் வரும் ஆஹா இன்ப நிலாவினிலே எனக்கு ரொம்ப பிடிக்கும். எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது. அதேபோல் அந்த படத்தில் இடம் பெற்ற ‘டும்டும் என் கல்யாணம்’ பாடலும் எனக்கு பிடித்த பாடல். அதே படத்தில் வரும் கண்ணுடன் கலந்திடும் சுபதினமே பாடல் போன்றவையெல்லாம் கண்டசாலா திறமைக்கு சாட்சிகள்.” என்கிறார்.

இசை விமர்சகர் ஷாஜியிடம் கண்டசாலா இசை, குரல் குறித்து பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.

”கண்டசாலா பாடகர் மட்டுமல்ல, சிறந்த இசையமைப்பாளரும் கூட. தமிழில், தெலுங்கில் அவர் இசையமைத்த படங்கள் காலத்தால் அழியாத காவியம். என்னை பொறுத்தவரையில் அவர் பாடகர் என்பதை காட்டிலும் இசையமைப்பில் சிறந்தவர். பல பாடகர்களை அழகாக பாட வைத்து இருக்கிறார்” என்றார் அவர்.

“உணர்ச்சிகரமான பாடும்முறை, இசை ஞானம், கர்நாடக சங்கீதம் குறித்த அனுபவம் இதெல்லாம் அவரின் வெற்றிக்கு முக்கியமான காரணம். கர்நாடக இசை ஞானம் காரணமாக பொடி, பொடி சங்கதிகளை அழகாக கொண்டு வருவார். அவர் பாடியதில் துணிந்தபின் மனமே (தேவதாஸ்) என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.” எனத் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

‘ஒரு பெரிய நிறுவனம் நிராகரித்தது’

கண்டசாலா குறித்து அவரது மருமகள் கிருஷ்ணாகுமாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், “என் மாமனார் கண்டசாலா ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை சங்கீத வித்வான். சின்ன வயதிலே அவர் இறக்க, ஒரு மோதிரத்தை 4 ரூபாய்க்கு விற்றுவிட்டு விஜய நகரம் போய் சங்கீதம் படித்தார். கல்லூரி விடுமுறை காலங்களில் மலையில் தங்கி பாடி இருக்கிறார்.”

“பின்னர் சென்னை வந்து வாய்ப்பு தேடி இருக்கிறார். அவரது குரல் சரியில்லை என ஒரு பெரிய நிறுவனம் நிராகரித்தது உள்ளது. பின்னர் பாடி, இசையமைப்பாளர் ஆனார். அவரை இன்றும் தெலுங்கில் கொண்டாடுகிறார்கள். அங்கே பல சிலைகள் அவருக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU