SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியா 2026 டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்திருக்கிறது. ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று ஒரு குரூப் சுற்று போட்டி மீதமிருக்கும் போதே ஆஸ்திரேலியா வெளியேறியிருக்கிறது.
2009-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இப்போதுதான் குரூப் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறியிருக்கிறது. உலகக் கோப்பை என்று வந்துவிட்டாலே விஸ்வரூபம் எடுக்கும் ஆஸ்திரேலியா இந்த நிலைக்கு வந்ததற்கான காரணம் என்ன? எளிதாகச் சொல்லவேண்டும் என்றால் அவர்கள் ஆஸ்திரேலியாவாக இருக்கவில்லை.
எப்போதுமே உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடருக்குள் வரும்போது உங்களின் முன்னணி வீரர்கள் காயமடைந்தால் அது பெரும் பின்னடைவாகவே இருக்கும். ஆஸ்திரேலிய அணி இரண்டு உலகத்தர பௌலர்களை தவறவிட்டிருக்கிறது. பேட் கம்மின்ஸ், ஜாஷ் ஹேசில்வுட் இருவருமே அற்புதமான டி20 பௌலர்கள்.
கம்மின்ஸ் தலைமைப் பண்பு கொண்டவர். நிறைய அனுபவம் இருக்கிறது. அவரால் பேட்டிங்கிலும் கூட பங்களிக்க முடியும். அதேபோல், ஜாஷ் ஹேசில்வுட் இந்த ஃபார்மட்டின் மிகச் சிறந்த பௌலர்களுள் ஒருவர். என்னைப் பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் பட்டம் வென்றதே அவரால்தான். அப்படிப்பட்ட பௌலர்கள் இல்லாதது எந்த அணிக்கும் மிகப் பெரிய பின்னடைவு. அவர்களை ஆஸ்திரேலியா நிச்சயமாக தவறவிட்டது.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூட முதலிரு போட்டிகளில் விளையாடவில்லை. இப்படி 3 முன்னணி வீரர்கள் இல்லாதபோது அது எந்த அணியையுமே பாதிக்கும். ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரில் கஷ்டப்பட்டதற்கும் அதுவொரு முக்கியக் காரணம்.
அவர்களின் பந்துவீச்சு பலவீனம் அடைந்தது உண்மைதான் என்றாலும், என்னைப் பொருத்தவரை ஆஸ்திரேலியாவின் ஏமாற்றமான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணம் பேட்டிங்.
என்னதான் 3 பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும், இந்த உலகக் கோப்பையில் ஆடிக்கொண்டிருக்கும் அணியும் சளைத்த அணி அல்ல. திறமையான வீரர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஹெட், இங்லிஸ், டேவிட், ஸ்டாய்னிஸ் என நிறைய ‘மேட்ச் வின்னர்கள்’ இருந்தார்கள். ஆனால், செயல்பாடு தான் வரவில்லை. குறிப்பாக அவர்களின் பேட்டிங் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.
டிராவிஸ் ஹெட் நல்ல தொடக்கம் கொடுக்கவில்லை. பவர்பிளேவில் அவர் ஏற்படுத்தும் வழக்கமான தாக்கத்தை இலங்கை போட்டி தவிர்த்து மற்ற போட்டிகளில் அவரால் கொடுக்க முடியவில்லை.கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் இருவரும் பெரிய ஷாட்கள் அடிக்கக்கூடிய அதிரடி வீரர்கள். அவர்களால் வழக்கமான அதிரடியை இந்த தொடரில் வெளிப்படுத்த முடியவில்லை.
இதற்கு முக்கியக் காரணம், மெதுவான இலங்கை ஆடுகளங்களுக்கு ஏற்ப அவர்களால் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானமாகட்டும், பிரேமதாசா ஆடுகளம் ஆகட்டும் பந்து பேட்டுக்கு எதிர்பார்த்தது போல் வரவில்லை. அது இந்த ஆஸ்திரேலிய பேடர்களுக்கு சிக்கலாக அமைந்துவிட்டது.
அவர்கள் வேகம் மற்றும் பௌன்ஸை அதிகம் எதிர்பார்ப்பவர்கள். ஷார்ட் லென்த்தில் போட்டால் விளாசக் கூடியவர்கள். ஆனால், இலங்கை ஆடுகளங்களில் ஒருவித ஈரப்பதம் இருந்தது. குறிப்பாக காலை போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அப்படியான ஆடுகளங்களுக்கு அவர்கள் சரியாகத் தயாராகவில்லை என்றே நான் சொல்வேன்.
பட மூலாதாரம், Getty Images
அதேபோல், ஆஸ்திரேலிய பேட்டர்கள் அனைவருமே இந்தத் தொடரில் சீரற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். ஒருசில போட்டிகளில் ஒருசிலர் ரன் சேர்த்திருந்தாலும் அது ‘தாக்கம் ஏற்படுத்தக் கூடிய’ ஒன்றாக இருந்ததா என்பதை யோசிக்க வேண்டும். இப்போது நாம் வீரர்களின் ‘இம்பேக்ட்’ பற்றி அதிகம் பேசுகிறோம். உதாரணமாக இஷான் கிஷன் அடிக்கும் ரன்கள் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ரன்களை அடிக்கவில்லை.
ஒருவகையில் ஆஸ்திரேலியாவின் இந்த நிலைக்கு அனைத்து வீரர்களுமே காரணம் என்றாலும், என்னைப் பொருத்தவரை டிராவிஸ் ஹெட்டின் செயல்பாடு இதில் பெரிய தாக்கம் ஏற்படுத்திவிட்டது என்று நினைக்கிறேன். சன்ரைசர்ஸுக்கு போட்டிக்குப் போட்டி பவர்பிளேவில் 80 ரன்கள் எடுத்துக் கொடுத்தவரால் இந்த உலகக் கோப்பையில் அதைச் செய்ய முடியவில்லை. அவரது மோசமான ஃபார்ம் மற்றும் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் சேர்ந்து தான் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டன.
இன்னொரு முக்கியமான விஷயம் – உலகக் கோப்பைக்கு அவர்கள் தயாரான விதமுமே அவர்களுக்குக் கடினமாகத்தான் இருந்தது. உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய டி20 தொடரில் அந்த அணி வைட்வாஷ்(அனைத்து போட்டிகளிலும் தோல்வி) ஆனது. பாகிஸ்தானில் போட்டிகள் நடந்திருந்தாலும், பாகிஸ்தான் அணியே சமீபமாக இந்த ஃபார்மட்டில் கஷ்டப்பட்டிருக்கிறது. அவர்களிடம் வைட் வாஷ் ஆனது ஆச்சர்யம் தான். அதுமட்டுமல்லாமல் அந்தத் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அந்த அணி முறையே 108, 96 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
இப்படி அவர்கள் நம்பிக்கை அடிபட்ட நிலையில் தான் இந்த உலகக் கோப்பைக்குள் நுழைந்தார்கள். அவர்களிடத்தில் நம்பிக்கை குறைவாக இருந்தது வீரர்களின் முகத்திலேயே தெரிந்தது.
இந்த காயங்கள், அவர்களின் ஃபார்ம் அனைத்தையும் அலசியபோது அந்த அணி இந்த உலகக் கோப்பையில் சற்று கஷ்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும் விஷயம் என்னவெனில், ஆஸ்திரேலிய அணியின் போராட்ட குணம் எங்கே போனது என்பதுதான். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஆஸ்திரேலிய அணி கடுமையான போராட்ட குணத்தை வெளிப்படுத்தும். பெரிய தொடர்களில் அணி அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும் அவர்கள் எதிரணிகளுக்கு சவால் கொடுக்கும் விதமாக ஆடுவார்கள். முதல் முறையாக உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி இப்படி கஷ்டப்பட்டு நான் பார்க்கிறேன். அந்த அணியை இப்படி ஒருதலைப்பட்சமாக தோற்கடிப்பதெல்லாம் அரிதிலும் அரிதாகவே நடக்கும்.
கிரிக்கெட்டாக இருந்தாலும், வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி ‘ வேட்கை’ (intent) என்ற வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருக்கும். இந்திய அணியைப் பார்த்தால் இப்போது எல்லோருமே அதைத்தான் சொல்கிறார்கள். ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் இருந்தே அடிக்கப் பார்க்கிறார், எல்லோரும் அதிரடியைக் கையில் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறோம். இந்திய அணி வீரர்களைப் பார்த்தாலே அது தெரிகிறது. ஆனால், நீண்ட காலத்தில் முதல் முறையாக இந்த ஆஸ்திரேலிய அணியில் அந்த ‘ வேட்கை’ தெரியவில்லை. அவர்கள் தற்போது வெளியேறுவதற்கு அது மிக முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கூட டாஸ் போட வரும்போது அவ்வளவு கூலாக இருந்தார்கள். ஃபீல்டிங்கிலும் அவர்களிடம் ஒரு உத்வேகம் இருக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
இத்தனை காலம் நாம் ஆஸ்திரேலிய அணியைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் அவ்வளவு ஆக்ரோஷமாக இருப்பார்கள். எதிரணி வீரர்களின் முகத்துக்கு முன் வந்து முறைப்பார்கள். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் அவர்கள். இந்தத் தொடரில் அவர்களிடம் அதைக் காண முடியவில்லை.
இதனால்தான் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவாக இல்லை என்று நான் கூறினேன். ஆஸ்திரேலியாவை பார்த்து வியந்தவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு விஷயமாகத்தான் இருக்கும். இந்த கடினமான காலகட்டம் சீக்கிரம் மாறிவிடும் என்று நம்புகிறேன்.
‘ஆஸ்திரேலியா அவ்வளவுதான்’ என்பது போன்ற பேச்சுகளை தற்போது அதிகம் கேட்க முடிகிறது. ஆனால், அந்த அளவுக்கு யோசிக்கத் தேவையில்லை. இந்த உலகக் கோப்பை செயல்பாடு மிகப் பெரிய ஏமாற்றம் தான். அவர்கள் சிந்திப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதேசமயம் அவர்களிடம் திறமையான வீரர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயம் அதே உத்வேகத்தோடு மறுபடியும் மீண்டு வந்துவிட முடியும். எப்போதுமே ஆஸ்திரேலிய அணியைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.
(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



