Home தேசிய national tamil இலங்கை அரசு பணத்தை ஹேக்கர் கணக்குக்கு மாற்றியதாக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மரணம் – என்ன...

இலங்கை அரசு பணத்தை ஹேக்கர் கணக்குக்கு மாற்றியதாக பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மரணம் – என்ன நடந்தது?

15
0

SOURCE :- BBC NEWS

இலங்கை : 2.5 மில்லியன் டாலர் ஹெக்கரின் கணக்குக்கு மாற்றம் - சம்பவம் தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மர்மமாக உயிரிழப்பு

பட மூலாதாரம், BBC SINHALA

இலங்கை அரசாங்கத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகையை ஹேக்கர் ஒருவரின் வங்கி கணக்குக்கு மாற்றிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிவிவகார வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஸ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ரங்க ராஜபக்ஸ நேற்றைய தினம் குளியாபிட்டிய பகுதியிலுள்ள அவரது வீட்டு வளாகத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

தனது வீட்டுத் தோட்டத்தில் சில வேலைகள் இருப்பதாக தெரிவித்து, தோட்டத்திற்கு சென்ற நிலையிலேயே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிய ரக கத்தியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது உடலில் சில வெட்டு காயங்களும் காணப்பட்டதாகவும், இரத்த கறைகள் அங்காங்கே காணப்பட்டதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சடலம் காணப்பட்ட இடத்திற்கு வருகைத் தந்த குளியாபிட்டிய பதில் நீதவான் காஞ்சனா ருபசிங்க மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பி.ஏ.சி பாலசூரிய ஆகியோர் விசாரணைகளை நடாத்தியிருந்தனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றும் நடாத்தப்படவுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

ரங்க ராஜபக்ஸ

பட மூலாதாரம், Facebook/Rangarajabase

தற்கொலையா? கொலையா?

ரங்க ராஜபக்ஸ தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியான போதிலும், போலீஸார் கொலையா? தற்கொலையா? என்ற இரண்டு கோணங்களிலும் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

”ரங்க ராஜபக்ஸ தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்கக்கூடும்” என போலீஸ் ஊடக பேச்சாளர் மினுர செனரத் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது பிரேத பரிசோதனையின் பின்னர் கூற முடியும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தது.

2.5 மில்லியன் டாலர் ஹேக்கர் கணக்குக்கு மாற்றப்பட்ட சம்பவம்

ஆஸ்திரேலியாவிற்கு வழங்க வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகை ஹேக்கர் ஒருவரின் கணக்குக்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பணமானது, மோசடியில் ஈடுபடும் வேறொரு தரப்பிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததாக பிபிசி சிங்கள சேவை குறிப்பிடுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையின் திட்டங்களை முன்னெடுப்பதற்காக வெளிவிவகார வளங்கள் திணைக்களத்திற்கு கடன் வழங்கியுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கப் பெற்ற கடன் தொகையானது கடன் மறுசீரமைப்புக்கு பின்னர் மீண்டும் செலுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஆஸ்திரேலிய ஏற்றுமதி நிதியகத்துக்கு பணத்தை செலுத்தும் போதே இந்த சர்ச்சை எழுந்துள்ளதாகவும், export finance gov.au என்ற ஈமெயில் முகவரியின் ஊடாகவே சில காலம் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாகவும் விசாரணைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் அந்த ஈமெயில் முகவரி export finance av.com என மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈமெயில் முகவரியுடன் தொடர்புடைய டொமெயின் பெயர் மாறியுள்ளதாக கடந்த ஒக்டோபர் மாதம் 28ம் தேதி எனேபல் என்ற நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது, குறித்த பண பரிவர்தனை இடம்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதன்படி, எனேபல் என்ற நிறுவனத்தின் தரவு கட்டமைப்புக்குள் பிரவேசித்து விசாரணைகளை நடாத்தியதாக கூறிய குற்றப் புலனாய்வு திணைக்களம், இந்த விசாரணைகளின் ஈமெயில் முகவரிக்கு சட்டவிரோதமாக பிரவேசித்தது உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அதைத் தவிர்த்து, வெளிவிவகார வளங்கள் திணைக்களத்தின் தரவு கட்டமைப்பிற்குள் பிரவேசித்து விசாரணைகளை நடாத்திய போது, அதிலுள்ள சில தரவுகள் அழிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

குற்றங்கள் செய்யும் நோக்கத்துடனா குறித்த தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன? என நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடாத்தி வருவதாகவும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஐந்து அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயண தடை விதிக்கப்பட்ட அதிகாரிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த ரங்க ராஜபக்ஸவும் அடங்குவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை போலிசார் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

ரங்க ராஜபக்ஸ விசாரணைக்கு ஆதரவு வழங்கியுள்ளாரா?

இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஹேக்கர் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் ரங்க ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையாகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்த தேதிக்கு செல்லாது, வேறு தினங்களில் சென்று விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என பிபிசி சிங்கள சேவை குறிப்பிடுகி;ன்றது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு தேவையானவற்றையையும் ரங்க ராஜபக்ஸ ஒப்படைத்துள்ளார்.

ரங்க ராஜபக்ஸ மரணம் தொடர்பான விசாரணை நடத்திய போலிசார்

பட மூலாதாரம், BBC SINHALA

ரங்க ராஜபக்ஸ மரணம் தொடர்பான விசாரணை

மர்மமான முறையில் உயிரிழந்த ரங்க ராஜபக்ஸவின் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நான்கு பேரை கொண்ட சட்ட மருத்துவ விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பிப்பார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டது.

6 லட்சம் டாலர்களும் காணாமல் போயுள்ளது.

இலங்கை தபால் திணைக்களத்தினால் யூ.எஸ் போஸ்ட் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட 6 லட்சம் அமெரிக்க டாலர் காணாமல் போன சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.

2.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஹேக்கர் ஒருவரின் கணக்குக்கு மாற்றப்பட்ட சம்பவம் பதிவான பின்னணியிலேயே இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

இலங்கை

இலங்கை நண்பர்கள் மையம் – தொலைபேசி எண்: 011 2696666 அல்லது +94 112 682 535

துணிவு, கருணை, அர்ப்பணிப்பு மையம் – தொலைபேசி எண்: 1333 அல்லது +94 112 692 909

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU