Home தேசிய national tamil இரான் மீதான போரினால் ஆதாயமடையும் நாடுகள், பாதிக்கப்படும் நாடுகள் யாவை?

இரான் மீதான போரினால் ஆதாயமடையும் நாடுகள், பாதிக்கப்படும் நாடுகள் யாவை?

8
0

SOURCE :- BBC NEWS

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

போர்களில் தெளிவான வெற்றியாளர்களை நிர்ணயிப்பது அரிது. மாறாக, சாதாரண மக்களே பெரும்பாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். உலகளாவிய எரிசக்தி சந்தைகளும் விநியோகச் சங்கிலிகளும் தற்போது சீர்குலைந்துள்ளதால், உலகம் முழுவதுமுள்ள பல நாடுகள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. இருப்பினும், இந்த குழப்ப நிலைக்கு மத்தியிலும் சில நாடுகள் ஆதாயமடையக்கூடிய புதிய வாய்ப்புகளைக் கண்டடையக்கூடும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரானுக்கு எதிராக முன்னெடுக்கும் போர், அந்தப் பிராந்தியத்திலும் உலகளவிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இது வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளதுடன், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் நிர்பந்தித்துள்ளது.

போர் நடைபெறும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள நாடுகள்கூட இதன் தாக்கத்தை உணர்கின்றன. கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வளைகுடா பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது வணிக நிறுவனங்களுக்கும், சாதாரண நுகர்வோருக்கும் செலவுகளை அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலின் விளைவாக, இரண்டு முக்கியமான கேள்விகள் எழுகின்றன. இந்த நெருக்கடியால் எந்தெந்த நாடுகள் மிக அதிகமான இழப்புகளைச் சந்திக்கப் போகின்றன? அதேவேளையில், எந்த நாடுகள் இதன் மூலம் பயனடையக்கூடும்?

ரஷ்யா

இரான் ரஷ்யாவின் ஒரு முக்கியமான நட்பு நாடு மற்றும் ராணுவக் கூட்டாளி. இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி கொலை, ரஷ்யாவுக்கு மற்றொரு ராஜதந்திர பின்னடைவாகும். முன்னதாக, சிரியாவில் பஷர் அல்-அசத் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டது, வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலமாக, ரஷ்யா ஏற்கெனவே இரண்டு நெருங்கிய கூட்டாளிகளை இழந்திருந்தது.

இருப்பினும், மத்திய கிழக்கில் நடந்த போர், யுக்ரேனுக்கு எதிரான அதன் சொந்த போரில் ரஷ்யாவுக்கு இன்னும் சில நன்மைகளைத் தரக்கூடும். ஏனெனில், இந்த மோதல் அமெரிக்காவை யுக்ரேனுக்கு பதிலாக மத்திய கிழக்கிற்கு அதிக ராணுவ தளவாடங்களையும் ஆயுதங்களையும் அனுப்ப கட்டாயப்படுத்துகிறது.

அதற்கொரு முக்கியமான உதாரணம், பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு இடைமறிப்பான்களின் பயன்பாடு. இந்த ஏவுகணைகள் உள்நுழையும் ராக்கெட்டுகள், ட்ரோன்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த இடைமறிப்பான்களில் பல இப்போது மத்திய கிழக்கில் இரானிய தாக்குதல்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொருள், யுக்ரேன் தன்னைத் தற்காத்துக்கொள்ளக் குறைவான அளவிலேயே அவற்றை வைத்திருக்கலாம் என்பதாகும்.

சர்வதேச அரசியல் படிப்புகளுக்கான பாரிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிக்கோல் கிராஜெவ்ஸ்கி இதுகுறித்து விளக்கியபோது, “பேட்ரியாட் ஏவுகணைகளின் அதிகப் பயன்பாடு ரஷ்யாவுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அது யுக்ரேன் பெறக்கூடிய வான் பாதுகாப்பு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது” என்றார்.

அதேநேரத்தில், இரானுக்கு சொந்தமாக ட்ரோன்கள் தேவை அதிகரித்து வருவது ரஷ்யாவை பெரிதாகப் பாதிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முன்னதாக யுக்ரேன் போரின்போது, ரஷ்யாவுக்கு ஷாகிட் ட்ரோன்கள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை இரான் வழங்கியது. ஆனால், இப்போது ரஷ்யா தனது சொந்த நாட்டிற்குள் இந்த ட்ரோன்களை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளது.

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

பட மூலாதாரம், Anadolu via Getty Images

அணு ஆயுத பரவல் தடை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜன்னா நோட்டேவின் கூற்றுப்படி, ரஷ்யா இந்த ட்ரோன்களுக்கு இனி இரானை சார்ந்திருக்க வேண்டியதில்லை. ரஷ்யா இப்போது அவற்றைத் தானே தயாரித்து, இரானின் உதவியின்றி யுக்ரேனில் தனது போரைத் தொடர முடியும்.

எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை இரான் மூடியுள்ளது. இதன் விளைவாக, எரிசக்தி ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த நிலைமை உண்மையில் ரஷ்யாவுக்கு நிதிரீதியாக உதவக்கூடும். யுக்ரேனுடனான போர் காரணமாக ரஷ்யா பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய அரசாங்கம், எண்ணெய் விற்பனையில் இருந்து வரும் வருவாயைப் பெரிதும் நம்பியுள்ளது. மேலும், அதன் தேசிய பட்ஜெட் எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 59 டாலர் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

இருப்பினும், மோதல் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் பெரிதும் அதிகரித்துள்ளன. ஒரு கட்டத்தில் பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 120 டாலர்கள் என்னும் அளவை எட்டியது. மேலும், வளைகுடாவில் சில பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இது சீனா, இந்தியா போன்ற பெரிய சந்தைகளுக்கு அதிக எண்ணெயை விற்க ரஷ்யாவை அனுமதிக்கும்.

எரிசக்தி நுண்ணறிவு நிறுவனமான ஆர்கஸ் மீடியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டேவிட் ஃபைஃப், “இந்தியா முன்னதாக ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைக்க ஊக்குவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அமெரிக்கா தற்காலிகமாக இந்தியாவை சுமார் ஒரு மாதத்திற்கு மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதித்துள்ளது,” என்று தெரிவித்தார்.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் சிக்கல்களைக் குறைக்க ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளைத் தளர்த்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாகவும் ஃபைஃப் கூறுகிறார்.

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

சீனா

இதுவரை, இரானை உள்ளடக்கிய போர் சீனாவின் மீது பெரியளவிலான உடனடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், சீனா சில பொருளாதார அழுத்தங்களை உணரக்கூடும்.

‘உலகளாவிய எரிசக்தி கொள்கை மையத்தின்’ தகவல்கள்படி, சீனா இறக்குமதி செய்யும் எண்ணெயில் சுமார் 12% மட்டுமே இரானில் இருந்து வருகிறது. சீனாவிடம் பல மாதங்களுக்குப் போதுமான பெரிய எண்ணெய் இருப்புகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு தேவைப்பட்டால், ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெயை அதனால் வாங்கிக்கொள்ள முடியும்.

ஆனால், சீனாவுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை அதன் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் பொருளாதாரம்தான். சீன பொருளாதாரத்தின் பெரும்பகுதி, “பிற நாடுகளுக்குப் பொருட்களை விற்பனை செய்வதையே சார்ந்துள்ளது” என்கிறார் ஃபைஃப். ஒரு நாடு உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பான ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில்’, சீனாவுக்கு அதன் ஏற்றுமதிகள் மட்டுமே சுமார் 20 சதவிகிம் பங்கு வகிக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்து வரும் சொத்து விலைகள் மற்றும் உள்நாட்டிலேயே குறைந்து வரும் நுகர்வோர் செலவினம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், இந்த ஏற்றுமதித் துறை தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கப்பல் போக்குவரத்துச் சிக்கல்கள் சீனாவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக அமையவில்லை. இருப்பினும், மேற்கத்திய சந்தைகளுக்குச் செல்லும் கப்பல் வழித்தடங்கள் சீனாவின் ஏற்றுமதிக்கு மிகவும் அவசியமானவை.

மற்றொரு வழித்தடமான ‘பாப் அல்-மண்டேப்’ நீரிணையும் இதில் முக்கியமானது. இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான வர்த்தக வழித்தடங்களை இணைக்கிறது. இரானின் ஆதரவு பெற்ற, ஏமனில் இருந்து இயங்கும் ஹூத்தி என்னும் ஆயுதக் குழுவின் தாக்குதல்களை இந்தப் பகுதி சந்தித்து வருகிறது.

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

இந்த அபாயங்களின் விளைவாக, ஆசியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்கள் செங்கடலை தவிர்த்துச் செல்லக்கூடும். “அதற்கு மாற்றாக, அவை தென்னாப்பிரிக்காவை சுற்றி, ‘நன்னம்பிக்கை முனை’ வழியாகப் பயணித்து அட்லான்டிக் பெருங்கடலை அடையக்கூடும். நெடுந்தொலைவைக் கொண்ட இந்த மாற்றுப் பாதை, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் சீன பொருட்களுக்கான பயண நேரத்தையும் கப்பல் போக்குவரத்துச் செலவுகளையும் அதிகரிக்கச் செய்கிறது” என்று ஃபைஃப் பிபிசியிடம் கூறினார்.

மத்திய கிழக்கில் ஆபத்தைத் தவிர்க்க நீண்ட கடல் பாதையில் பயணிப்பது மிகவும் விலை உயர்ந்தது. சாத்தம் ஹவுஸில் உள்ள மத்திய கிழக்கு நிபுணரான நில் குயிலியம், “அதற்கு அதிக செலவாகும்” என்று விளக்குகிறார்.

ஆபத்தான பகுதிகளைத் தவிர்க்கும் கப்பல்கள் செங்கடல் வழியாகக் குறுகிய பாதைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவை சுற்றி நீண்ட பாதையில் பயணிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, “இது பயணத்தில் 10 முதல் 14 நாட்களைக் கூடுதலாக அதிகரிக்கிறது. மேலும், பொருட்களைப் பொறுத்து, சராசரியாக ஒரு கப்பலுக்கு, சுமார் 2 மில்லியன் டாலர்கள் கூடுதல் செலவாகும்.”

அதேநேரத்தில், இரான் சம்பந்தப்பட்ட போர் சீனாவுக்கு சில ராஜதந்திர வாய்ப்புகளையும் வழங்கக்கூடும். அமெரிக்காவுக்கு எதிராகத் தன்னை “பொறுப்பான எதிர் சமநிலையாக” சீனா காட்டிக்கொள்ள முயலக்கூடும் என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிலிப் ஷெட்லர்-ஜோன்ஸ் கூறுகிறார்.

ஷி ஜின்பிங், அமைதியான மற்றும் நிலையான உலகளாவிய தலைவராகத் தன்னைத் தொடர்ந்து காட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. டொனால்ட் டிரம்பிடன் ஒப்பிடும்போது அவர் மிகவும் கணிக்கக் கூடியவராகத் தோன்றுவதற்கு இது உதவும்.

இந்த மோதல், பிற உலகளாவிய பதற்றங்களுக்கு டிரம்ப் எவ்வாறு எதிர்வினையாற்றக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள சீனாவுக்கு உதவக்கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, தைவான் தன்னைத்தானே ஆட்சி செய்துகொள்ளும் ஒரு தீவு. ஆனால், சீனாவால் உரிமை கோரப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களுக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்க்க சீனா தற்போதைய சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனிக்கலாம்.

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

பட மூலாதாரம், AFP via Getty Images

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் மத்திய கிழக்கில் இருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிதும் நம்பியுள்ளன. போர் காரணமாக, இந்த நாடுகள் பல கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் பொருளாதார சேதத்தைக் குறைக்கவும் சில அரசுகள் ஏற்கெனவே கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

வியட்நாமில், போர் தொடங்கியதில் இருந்து டீசலின் விலை 60% அதிகரித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க, அரசாங்கம் மக்களை முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்கிறது.

பிலிப்பின்ஸில், நாட்டின் கச்சா எண்ணெயில் சுமார் 95% மத்திய கிழக்கில் இருந்து வருகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளின் விளைவாக, அவசர சேவையில் பணியாற்றுவோர் தவிர, அரசு ஊழியர்கள் இப்போது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள்.

பாகிஸ்தானும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். மேலும் பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தத் தொடங்கியுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளில் சேர்க்கப்படாத ஒரே முக்கிய நிறுவனங்கள் வங்கிகள் மட்டுமே.

தொலைக்காட்சி உரையில், ஷெபாஸ் ஷெரீஃப், “நாட்டின் எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்து கவனமாக மதிப்பிடுவது முக்கியம்” என்று கூறினார்.

இஸ்ரேல், இரான், அமெரிக்கா மோதல் - ஹோர்முஸ் நீரிணை

பட மூலாதாரம், Reuters

வங்கதேசத்தில், மக்கள் பீதியுடன் எரிபொருள் வாங்கத் தொடங்கியுள்ளனர். இது பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அரசாங்கம் எரிபொருள் வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கார்கள் ஒரு நாளைக்கு 10 லிட்டர் மட்டுமே வாங்க முடியும், இருசக்கர வாகனங்கள் நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் மட்டுமே வாங்க முடியும்.

இருப்பினும், போரின் விளைவுகள் எரிசக்தி பற்றாக்குறையையும் தாண்டிச் செல்லக்கூடும். மேலும் பல நாடுகள் பரந்த பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.

உலகெங்கும் உள்ள விவசாயிகள் மண்ணில் முக்கியமான ஊட்டச்சத்துகளைச் சேர்க்க உரங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஊட்டச்சத்துகள் பயிர்கள் சரியாக வளர்வதற்கு உதவுவதோடு, மோசமான வானிலைக்கு எதிராகவும் அவற்றை வலிமையாக்குகின்றன. இந்த உர விநியோகம் தடைபட்டால், அது உலகின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.

சாத்தம் ஹவுஸை சேர்ந்த நீல் குயிலியம் நிலைமையை இவ்வாறு விளக்குகிறார்: “உரமாகச் செல்லும் தீவனப் பங்கான உலகின் யூரியாவில் 30% ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. யூரியா பெட்ரோ கெமிக்கல்களில் இருந்து வருகிறது. இது கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் செயல்முறையில் இருந்து கிடைக்கிறது. எனவே நீங்கள் சர்வதேச சந்தைகளில் இருந்து 30% யூரியாவை எடுத்துவிட்டால், அது உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.”

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஹோர்முஸ் நீரிணை பல ஆற்றல் மற்றும் ரசாயனப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது. உரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் யூரியா, கச்சா எண்ணெயில் இருந்து வரும் பெட்ரோ கெமிக்கல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரும், உரப் பொருட்களின் முக்கிய உற்பத்தியாளருமான கத்தார் எனர்ஜி, அதன் சில கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஃபோர்ஸ் மேஜூர் என்று அறிவித்தது. இதுவொரு அவசரக்கால நடவடிக்கையாகும். இது எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் விநியோகங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அனுமதிக்கிறது.

இதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாமல் போகலாம் என்று குயிலியம் எச்சரிக்கிறார். “ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, பணவீக்கத்தின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்பின் அடிப்படையில் இதன் தாக்கத்தை நாம் காணக்கூடும்,” என்கிறார் அவர்.

மேலும் அவர், “இது இன்னும் நிகழாமல் இருக்கலாம். ஆனால், பயிர்கள் போராடும்போது அல்லது விவசாயிகள் தங்களுக்கான உரத்தைப் பெறுவதற்குப் போராடும்போது, நீண்டகால தாக்கத்தை நாம் காணப் போகிறோம்,” என்றார்.

எளிமையான சொற்களில் கூறுவதெனில், விவசாயிகளுக்குப் போதுமான உரம் கிடைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பயிர் உற்பத்தி குறையக்கூடும். இது உணவின் விலைகளை உயர்த்தக்கூடும் மற்றும் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

கூடுதல் தகவல்கள்: பிபிசி ஹிந்தி சேவை மற்றும் எலிசவெட்டா ஃபோக்ட் (பிபிசி ரஷ்ய சேவை)

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU