Home தேசிய national tamil இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? – டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு

இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? – டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு

32
0

SOURCE :- BBC NEWS

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Ronen Zvulun/POOL/AFP via Getty Images

3 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை ‘கட்டாயப்படுத்தியது’ என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், “அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்றார்.

பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. இதில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்ட இரானிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

‘இஸ்ரேல் தன்னை போரில் ஈடுபட கட்டாயப்படுத்தியது’ என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

‘நாங்கள் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம், அவர்கள் முதலில் தாக்குவார்கள் என்று நான் நம்பினேன்’ என்று இந்த மாதத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறினார்.

இருப்பினும், இரான் போர் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, புதன்கிழமையன்று இரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலை டிரம்ப் மறைமுகமாக விமர்சித்தார். அது குறித்துத் தனக்கு “எதுவும் தெரியாது” என்றும் அவர் கூறினார்.

இரானின் எரிவாயு வயல்கள் மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல், டிரம்புக்குத் தகவல் தெரிவித்ததா என்று நெதன்யாகுவிடம் கேட்டபோது, “இஸ்ரேல் தனித்தே செயல்பட்டது” என்று அவர் கூறினார்.

மேலும்,”மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் எங்களைக் கேட்டுக்கொண்டார், நாங்கள் அவ்வாறே செய்கிறோம்,” என்றும் கூறினார்.

“இரானின் உயர்மட்டத் தலைமையில் பிளவு”

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், ATTA KENARE/AFP via Getty Images

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா குறித்த தனது திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, இஸ்ரேல் தற்போது ஒரு “பாதுகாப்பு அமைப்பை ” உருவாக்கியுள்ளதாகவும், இது அதன் போராளிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் என்றும் நெதன்யாகு கூறினார்.

“எங்களிடம் எதிர்காலத்திற்கான திட்டங்களும் உள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “எங்களது மிகப்பெரிய முன்னுரிமை இரான் தான். அங்கிருக்கும் அரசாங்கம் வீழ்ந்தால், ஹெஸ்பொலாவும் முடிவுக்கு வரும்,” என்றார்.

இரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே பிளவுகளும் உள்நாட்டு பதற்றங்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, முன்னாள் அதி உயர் தலைவரைப் போன்ற “பிடிமானமும் அதிகாரமும்” இனி எவருக்கும் இருக்கப்போவதில்லை என்று கூறினார்.

இரானிய ஆட்சியில் விரிசல்கள் தோன்றி வருவதாகவும், “இந்த விரிசல்கள் அதிகரித்தால், ஆட்சி மாறக்கூடும்” என்றும் அவர் கூறினார்.

மேலும், “இரானிய ஆட்சி பலவீனமடைந்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

“இந்த ஆட்சி வீழும் வகையிலான சூழலை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அது நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம்” என்றார்.

இந்த ஆட்சி நீடித்தாலும், “அது மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும்” என்றும்,

இறுதியாக, “இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வது இனி இரானிய மக்களின் கைகளில்தான் உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றனவா?

பிபிசி செய்தியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியரின் கூற்றுப்படி, இரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடங்கிய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைக் காட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முயன்று வருகிறார்.

பட மூலாதாரம், Joe Raedle/Getty Images

பிபிசி செய்தியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியரின் கூற்றுப்படி, இரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைக் காட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முயன்று வருகிறார்.

அமெரிக்கா ஏன் இந்தப் போரில் இறங்கியது மற்றும் அதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பது குறித்து அமெரிக்காவிற்குள் கணிசமான உள்நாட்டு விவாதங்கள் எழுந்துள்ளன.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் இந்த வாரம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது.

ஜோ கென்ட் டிரம்பின் நீண்டகால கூட்டாளியாகவும், அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் பிரிவுடனும் தொடர்புடையவராக இருந்தார்.

தனது ராஜினாமா கடிதத்தில், “இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

பின்னர் கன்சர்வேட்டிவ் வர்ணனையாளர் டக்கர் கார்ல்சனுடனான சுமார் இரண்டு மணி நேர நேர்காணலில் தனது கருத்துகளை அவர் விரிவாக விளக்கினார்.

“இந்த முடிவு இஸ்ரேலால் உந்தப்பட்டது” என்றும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை போருக்குச் சம்மதிக்க வைக்க இஸ்ரேலிய அதிகாரிகள் வழக்கமான நடைமுறைகளை மீறிச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் புதன்கிழமையன்று, இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அமெரிக்காவிற்கு முன் கூட்டியே தெரியாது என்று ட்ரூத் சோசியல் சமூக ஊடகத் தளத்தில் டிரம்ப் எழுதியிருந்தார்.

சிலர் இதனை அமெரிக்க அதிபரின் கோபத்தின் அறிகுறியாகப் பார்த்தனர்.

தனது அறிக்கைகளின் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நோக்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்ற கருத்தை நிராகரிக்க நெதன்யாகு தெளிவாக முயற்சி செய்து வருகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU