Home தேசிய national tamil இரவில் நொறுக்குத்தீனி சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வருமா?

இரவில் நொறுக்குத்தீனி சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வருமா?

6
0

SOURCE :- BBC NEWS

இரவு நேரத்தில் சாக்லேட் போன்ற சிற்றுண்டிகளை உண்பது நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு உதவுமா? ஆய்வுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து ஆலிஸ் மஷ்ரூம்ஸ் என்ற நிறுவனம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த நிறுவனம், காளான்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சாக்லேட்டுகளை உருவாக்குகிறது.

அதன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று நைட்கேப் என்ற சாக்லேட். இந்தத் தயாரிப்பு இப்போது அமெரிக்கா முழுவதும் சுமார் 2,000 கடைகளில் விற்கப்படுகிறது. இந்த சாக்லேட்டில் உள்ள பொருட்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

நைட்கேப் சாக்லேட்டை நிறுவனத்தின் இணை நிறுவனர்களான சார்லோட் க்ரூஸ், லிண்ட்சே குட்ஸ்டீன் ஆகியோர் உருவாக்கினர். சாக்லேட்டில், அமைதிப்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்துவதற்குப் பெயர்போன ரெய்ஷி காளான்கள், கெமோமில் ஆகியவை அடங்கியுள்ளன. இதில் மெக்னீசியம் மற்றும் துத்தநாகமும் உள்ளன. இது மக்களை தூக்கத்தை உணர வைக்கும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியை உடலில் இயற்கையாக அதிகரிப்பதற்கு உதவலாம்.

மற்றொரு மூலப்பொருள், எல்-தியானைன். இது இயற்கையாகவே பச்சைத் தேநீரில் காணப்படும் ஒரு அமினோ அமிலமாகும். இந்தப் பொருள் உடல் ஓய்வெடுக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும் என நம்பப்படுகிறது.

இந்தத் தயாரிப்பை உருவாக்குவதற்கு நீண்ட காலம் எடுத்ததாக விளக்குகிறார் க்ரூஸ். “தூக்கம் மிகவும் கடினமானது என்பதால், எங்கள் ஸ்லீப் சாக்லேட்டை உருவாக்க நாங்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டோம். ஏனெனில் தூக்கம் வராமல் மக்கள் சிரமப்படுவதற்கு லட்சக்கணக்கான காரணங்கள் உள்ளன” என்கிறார் அவர்.

இந்தத் தயாரிப்பை உருவாக்க நிறுவனம் பல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியதாகவும் அவர் கூறுகிறார். “தூக்க சுழற்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் இடையூறு ஏற்படக்கூடியவற்றுக்கு ஏதேனும் தீர்வைப் பெற ஹோமியோபதி மருத்துவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தொழில்முறை தயாரிப்புக்கான ஃபார்முலேட்டர்கள் ஆகியோருடன் இணைந்து நாங்கள் பணியாற்றினோம்.”

சிறந்த தூக்கத்திற்கான உறுதியை அளிக்கும் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், க்ரூஸ் மற்றும் குட்ஸ்டீனின் வளர்ந்து வரும் தொழில் அதில் கவனம் செலுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 1,003 பேரிடம் மெத்தை தயாரிப்பு நிறுவனமான ஸ்லீப்போலீஸ் நடத்திய ஓர் ஆய்வில், சுமார் 47% அமெரிக்கர்கள் தற்போது ஏதேனும் ஒரு வகையான உதவி மருந்து அல்லது தயாரிப்பை தூங்குவதற்குப் பயன்படுத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், தாங்கள் உறங்குவதற்கு உதவியாக, மெலடோனின் போன்ற இயற்கையான சப்ளிமென்டுகளை பலர் விரும்புவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுடன் மட்டுமே பெறப்படக்கூடிய மருந்துகளையோ அல்லது மருந்துக் கடைகளில் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே வாங்கக்கூடிய மருந்துகளையோவிட, இந்த இயற்கைப் பொருட்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

சார்லோட் க்ரூஸ் (இடதுபுறம்), தனது 'ஆலிஸ் மஷ்ரூம்ஸ்' இணை நிறுவனரான லிண்ட்சே குட்ஸ்டீனுடன்

பட மூலாதாரம், Leslie Kirchhoff

பிரிட்டனில், மருந்து தயாரிப்புகள் தூக்கத்திற்கான மிகப்பெரிய உதவி வகையாக உள்ளன. ஆனால், இயற்கை சப்ளிமென்ட் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாகவும் உள்ளது.

ஐ.கே.இ.ஏ-வின் தூக்கம் தொடர்பான 2025 அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்டபடி, நல்ல “தூக்க விகிதம்” கொண்ட நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டுமே கடைசி 10 இடங்களில் இடம் பிடித்துள்ளன.

ஆலிஸ் மஷ்ரூம்ஸின் நைட்கேப் சாக்லேட் போன்ற தூக்கத்தை மேம்படுத்தும் சிற்றுண்டி உணவுகள், சுகாதார சப்ளிமென்டுகளின் ஆரோக்கியக் கூற்றுகளை, ஒரு விருந்தின் வடிவத்துடன் இணைக்கும் புதிய வகை தயாரிப்புகளின் ஓர் அங்கமாக விளங்குகின்றன.

க்ரூஸ் குறிப்பிடுவதைப் போல, தூங்க உதவும் சாக்லேட்டை சாப்பிடுவது ஒரு வெகுமதியாக உணரப்படுகிறது. அதேநேரம், ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்வது அதிகமாக மருத்துவம் சார்ந்த எண்ணத்தையும் குறைவான சுவாரஸ்யத்தையுமே உணர வைக்கிறது.

“தூக்க உபசரிப்புகள்” வகை ஏன் மிகவும் போட்டித்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்பதை இது விளக்குகிறது. பிற தேர்வுகளில் எல்-தியானைன் மற்றும் மெலடோனின் கொண்ட குட்நைட் டார்க் சாக்லேட் ஸ்லீப் பைட்ஸ்; எல்-தியானைன் மற்றும் மெக்னீசியம் கொண்ட லகூன்ஸ் நைட் பைட்ஸ், மெக்னீசியம், எல்-தியானைன் மற்றும் கெமோமில் கலந்த குட் டே சாக்லேட் என தூக்கத்தை வழங்கும் சிற்றுண்டி நீள்கின்றன.

ரெய்ஷி காளான்கள் பல சாக்லேட்டுகள், சூயிங் கம்கள் மற்றும் பானங்களில் பயன்பாட்டில் உள்ள மூலப்பொருளாகும். இவை அனைத்தும் தளர்வடைவதை ஊக்குவிக்கின்றன.

ஆசியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ரெய்ஷி காளான்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

பட மூலாதாரம், Getty Images

பல புதிய தயாரிப்புகள் மக்கள் நன்றாகத் தூங்க உதவுவதாகக் கூறுகின்றன. ஆனால், இவை உண்மையிலேயே வேலை செய்கின்றனவா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சில பொருட்கள் ஏற்கெனவே வலுவான அறிவியல் ஆதரவைக் கொண்டுள்ளன. மெக்னீசியம், மெலடோனின் தூக்கத்திற்கு உதவுவதாக நீண்டகாலமாக அறியப்படுகிறது. இருப்பினும், கெமோமில் போன்ற பிற பொருட்கள் குறுகிய கால நன்மைகளை மட்டுமே வழங்கக்கூடும், சில நேரங்களில் மருந்துப்போலி விளைவு காரணமாக முன்னேற்றம் ஏற்படலாம். அதாவது இந்தத் தயாரிப்புகள் தூங்க உதவும் என்று மக்கள் நம்புவதால் அவர்கள் நன்றாக உணரலாம்.

பிரிட்டனில், மெலடோனினை ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டுடன் மட்டுமே பெற முடியும். தூக்கப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பொதுவாகக் குறுகிய காலத்திற்கு செயற்கை மெலடோனினை பரிந்துரைக்கின்றனர்.

ரெய்ஷி காளான்கள் பற்றிய ஆராய்ச்சி இன்னும் குறைவான அளவிலேயே உள்ளது. சீனா மற்றும் பிற ஆசிய கலாசாரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரம்பரிய மருத்துவத்தில் ரெய்ஷி காளான்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும், பெரும்பாலான ஆய்வுகள் சிறிய அளவிலானவை மற்றும் குறுகிய காலத்தில் செய்யப்பட்டவை. எனவே விஞ்ஞானிகளால் இன்னும் வலுவான முடிவுக்கு வர முடியவில்லை.

எல்-தியானைனுக்கான ஆதாரமும் நிச்சயமற்றதாகவே உள்ளது. கிரீன் தேநீரில் இயற்கையாகவே காணப்படும் இந்த மூலப்பொருள், 1960களில் ஜப்பான் இதை ஓர் உணவுப் பொருளாக அங்கீகரித்த பிறகு மிகவும் பிரபலமானது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 2005ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்களில் எல்-தியானைனை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது.

தூக்கத்தை மேம்படுத்தும் பொருட்கள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று கேட் லெடர்லே கூறுகிறார்

பட மூலாதாரம், Petra Gatto

இருப்பினும், ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் விதிமுறைகள் கடுமையானவை. பச்சைத் தேயிலையில் இருந்து இயற்கையாகவே பிரித்து எடுக்கப்பட்டால் எல்-தியானைன் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், செயற்கைப் பதிப்புகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதுவரை, தூக்கத்தில் எல்-தியானைனின் விளைவு மிகவும் சிறியது என்றே ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வலுவான முடிவுகளை எதிர்பார்ப்பது குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான மெலனி ஸ்டெர்ன்ஸ், அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் எல்-தியானைனின் அளவு பெரும்பாலும் உணவுப் பொருட்களில் காணப்படும் அளவைவிட அதிகமாக இருக்கும் என்று விளக்குகிறார்.

“இதன் காரணமாக, சாக்லேட் மற்றும் பிற சிற்றுண்டிப் பொருட்களை உட்கொள்ளும்போது கிடைக்கும் எல்-தியானைனின் தூக்க நன்மைகள் நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. மேலும் அவற்றின் விளைவுகள் வியத்தகு முறையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது,” என்கிறார் அவர்.

பிங்காம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளர் லினா பெக்டாச், மனநிலையையும் தூக்கத்தையும் உணவு எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.

தூக்கம் தொடர்பான பல்வேறு பொருட்களில் இந்த மூலப்பொருட்கள் தோன்றினால், மக்கள் அதிகமாகத் தூக்கம் தொடர்பான பொருட்களை உட்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

“செறிவூட்டப்பட்ட உணவுகளில் இருந்து நீண்டகாலமாக அதிக நுகர்வு மற்றும் நீண்டகால நரம்பியல் நடத்தை விளைவுகள் பற்றிய சான்றுகள் இன்னும் குறைவாகவே உள்ளன. மிதமான தன்மை, தெளிவான லேபிளிங், மொத்த தினசரி வெளிப்பாட்டிற்குக் கவனம் செலுத்துதல் ஆகியவை புத்திசாலித்தனமான அணுகுமுறை” என்று பெக்டாச் வலியுறுத்துகிறார்.

எளிமையான சொற்களில் கூறுவதெனில், அத்தகைய தயாரிப்புகளைக் கவனமாகப் பயன்படுத்தவும், லேபிள்களை சரிபார்க்கவும், ஒரே நாளில் அதிகமான தூக்கம் தொடர்பான பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்

தூக்கத்தை மேம்படுத்தும் பொருட்கள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்று கேட் லெடர்லே கூறுகிறார்

பட மூலாதாரம், Getty Images

இந்தப் புதிய தூக்கம் வரவழைக்கும் பொருட்கள் குறித்து சில நிபுணர்கள் கவலைப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் லண்டனை சேர்ந்த தூக்க ஆலோசகரான கேட் லெடர்லே.

வெவ்வேறு பொருட்கள், வெவ்வேறு நேரங்களில் வேலை செய்கின்றன என்பது ஒரு பிரச்னைக்குரிய விஷயம் என்கிறார் அவர். உதாரணமாக, மெலடோனின் பொதுவாக படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட வேண்டும். ஆனால், ஆலிஸ் மஷ்ரூம்ஸ் நிறுவனம் அதன் நைட்கேப் சாக்லேட்டின் விளைவுகளைச் சாப்பிட்ட 15 முதல் 45 நிமிடங்களுக்குள் உணர முடியும் எனக் கூறுகிறது.

எல்-தியானைன் போன்ற பொருட்கள் கொழுப்பு, சர்க்கரை, புரதம் போன்ற பிற உணவுக் கூறுகளுடன் கலக்கும்போது அவை எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதும் லெடர்லேவுக்கு தெரியவில்லை.

“இந்தக் கூற்றுகளில் சில மிக விரைவாக வந்தவையாக இருக்கலாமோ என்று நான் கருதுகிறேன். எப்போது, எவ்வளவு, எந்த கலவையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றியோ, வெவ்வேறு மக்கள் குழுக்களில் இது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தோ இன்னும் அதிகமான ஆராய்ச்சி தேவை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

மற்றுமொரு கவலையையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தூக்கத்திற்கான உதவிகள், சாக்லேட், சூயிங் கம், சிற்றுண்டிகள் அல்லது பானங்கள் போன்ற வடிவங்களில் வரும்போது, சிலர் தங்களது தூக்கப் பிரச்னைகளுக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய முயல்வதற்குப் பதிலாக அவற்றையே முழுதாகச் சார்ந்திருக்கலாம்.

சுவாரஸ்யமாக, ஆலிஸ் மஷ்ரூம்ஸை சேர்ந்த சார்லோட் க்ரூஸ் இந்தக் கருத்துடன் உடன்படுகிறார். “நீங்கள் எங்களுடைய நான்கு நைட்கேப் சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், செல்போன் பார்த்துக்கொண்டு இரவில் தாமதமாக டிக்டோக்கில் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தால், சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டதில் எந்த அர்த்தமும் இல்லை.”

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

தற்போது குட் ஃ புட் ஸ்டூடியோவில் உணவு ஆலோசகராக இருக்கும் சமையல் கலைஞரான அமீர் மௌசவி, புதிய உணவுப் பொருட்களிலும் பணியாற்றுகிறார். மௌசவி தற்போது கூடுதல் சுகாதார நன்மைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட உணவுகளைக் கொண்ட பல புதிய “செயல்பாட்டு உணவு” பிராண்டுகளில் பணியாற்றி வருகிறார்.

“பயோஹேக்கிங்” போக்கு காரணமாக இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார். மேலும், மக்கள் தங்களது உடல் மற்றும் மனதின் செயல்திறனை மேம்படுத்த அறிவியல் முறைகளைப் பயன்படுத்த முயல்கிறார்கள் என்கிறார்.

மௌசவி ஒவ்வொரு நாளும் பல சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்கிறார். தசையை கட்டமைக்க கிரியாட்டின், கவனம் செலுத்த உதவும் லய்ன்’ஸ் மேனி காளான்கள், மன அழுத்தத்தைக் குறைக்க அஸ்வகந்தா, ஓய்வெடுக்க மாலையில் ரெய்ஷி காளான்கள் ஆகியவை இதில் அடங்கும்.

கடந்த ஆண்டு மன அழுத்தம் நிறைந்த காலகட்டத்தில் அவர் எல்-தியானைன் கொண்ட தூக்க உதவி மருந்தையும் எடுத்துக் கொண்டார். உடல் வெப்பத்திற்கு ஏற்ப வெப்பநிலையை சரிசெய்யும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மின்சாரப் படுக்கை உறையைக்கூட அவர் வாங்கியுள்ளார். இது அவருக்கு நன்றாகத் தூங்க உதவுவதாகக் கூறுகிறார்.

“நாம் அனைவரும் பயோ-ஹேக்கிங் செய்கிறோம். இது எப்போதுமே மனித இயல்பாக இருந்துள்ளது. நாம் ஏமாற்றுக்காரரை விரும்புகிறோம், குறுக்குவழிகளைத் தேடுகிறோம்” என்கிறார் மௌசவி.

அறிவியல் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போதுகூட, மக்கள் புதிய சுகாதார யோசனைகளை முயன்று பார்க்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். “ஆரம்பக்கட்ட அறிவியலாகவே இருந்தாலும், போதுமான ஆதாரங்கள் இல்லையென்றாலும்கூட, மக்கள் அதைப் பரிசோதனை செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்.” என்கிறார் அவர்.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU