SOURCE :- BBC NEWS
இந்தியா மற்றும் சீனா இடையே சமீபத்தில் பல உயர்நிலை சந்திப்புகள் நடந்தன. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இந்தப் பதற்றம் எங்கிருந்து தொடங்கியதோ, அந்த எல்லைப் பிரச்னையின் தற்போதைய நிலை என்ன?
அதாவது, இரு நாடுகளுக்கு இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இப்போது என்ன நடக்கிறது?
குறிப்பாக லடாக்கில் என்ன நடக்கிறது? அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதா? இந்த சந்திப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இன்னும் தெளிவாகாத கேள்விகள் யாவை?
சீன வெளியுறவு அமைச்சருடன் தோவல் சந்திப்பு
டிசம்பர் 18 அன்று, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் இருவரும் இந்தியா மற்றும் சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகளாக சந்தித்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் எல்லை பிரச்னைகள் தொடர்பானது.
கடந்த 2020-ஆம் ஆண்டு லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்ததில் இருந்து, முக்கியத்துவம் வாய்ந்த உயர்நிலை பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதல்முறை.
இந்தச் சந்திப்புக்கு முன் பல முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக, இந்த ஆண்டு அக்டோபர் 23 அன்று, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்தனர்.
அதுதவிர இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் இடையே பல சந்திப்புகள் நடந்துள்ளன.
ஜூன் 2020 முதல், இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சக மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இடையே 38 சந்திப்புகள் நடந்துள்ளன.
இந்த சந்திப்புகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்ன?
கடந்த 2020ஆம் ஆண்டு எல்லையில் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதிகள் தொடர்பான ‘தீர்வை’ சீன வெளியுறவு அமைச்சகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
அடிப்படையில், அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கியப் புள்ளி, கிழக்கு லடாக்கின் பல எல்லைப் பகுதிகளுடன் தொடர்புடையவை.
இந்த ஆண்டு அக்டோபரில் டெப்சாங் மற்றும் டெம்சோக் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
செப்டம்பர் 2022இல் இரு படைகளும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து பின்வாங்கின. அதற்கு முன், 2021இல் கோக்ரா மற்றும் பாங்காங் ஏரி தொடர்பாகவும் தீர்வு எட்டப்பட்டது
ஜூலை 2020இல், இரு நாடுகளும் முதலில் தங்கள் படைகளை கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து விலக்கிக் கொண்டன. இருப்பினும், அதற்கு முன் 15 ஜூன் 2020 அன்று, கல்வானில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனாவும் அதன் 4 வீரர்கள் இறந்ததாக உறுதி செய்தது.
டெப்சாங் மற்றும் டெம்சோக்கை தவிர்த்து, இந்த ஒப்பந்தத்தின் கீழ், பல பகுதிகளில் ராணுவ மோதலற்ற மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
அதே இடத்தில், இரு படைகளும் நுழையக் கூடாத பகுதிகளும் தீர்மானிக்கப்பட்டன.
முன்பு போல ராணுவம் ரோந்து செல்வது, கால்நடை மேய்ச்சலுக்கு டெப்சாங் மற்றும் டெம்சோக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிப்பது குறித்து சீனாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
ஆனால், பிபிசி ஹிந்தியிடம் பேசிய ராணுவ அதிகாரிகள், ராணுவ மோதலற்ற மண்டலங்களில் இன்னமும் 2020க்கு முன் இருந்த நிலை எட்டப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மாநிலங்களவையில் இதைச் சுட்டிக்காட்டினார்.
“2020-ஆம் ஆண்டு சில இடங்களில் ராணுவங்கள் நேருக்கு நேர் மோதின. இது போன்று மீண்டும் நிகழாமல் இருக்க, உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் தற்காலிக மற்றும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வழிமுறைகள் இரு தரப்புக்கும் பொருந்தும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப இதனை மறுபரிசீலனை செய்து கொள்ளலாம்” என்றார்.
இந்தியா தனது எல்லையில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதா?
இந்த பிரச்னையில், காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம். பி.யுமான மணீஷ் திவாரி சமீபத்தில் இந்தியாவை அதன் சொந்த பிராந்தியத்தில் இருந்து பின்வாங்க ‘ராணுவ மோதலற்ற மண்டலம்’ பயன்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக் காந்த் தனது சமீபத்திய கட்டுரையில் பல கேள்விகளை எழுப்பி அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.
சீனா படிப்படியாக இந்தியாவின் பிராந்தியத்தில் தனது பிடியை அதிகரித்து வருகிறது என்பதே தனது கவலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் மூலம் அல்ல, ஆக்கிரமிப்பு மூலம் இது நடக்கிறது என்கிறார் அவர்.
எல்லையில் உள்ள நிலைமை அவ்வளவு சீக்கிரம் மாறப் போவதில்லை என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் General Officer Commanding-in-Chief, Northern Command, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டிஎஸ் ஹூடா கருதுகிறார்.
“கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மிக வேகமாக மாறி வருவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இருப்பினும், இது எல்லை பிரச்னையில் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது. நாம் நேருக்கு நேர் மோதிய இடத்தில் இருந்து கொஞ்சம் பின்வாங்கிவிட்டோம்” என்றார் ஹூடா
”அங்கு பிரச்னை தணிந்ததா, அதாவது அங்கிருந்த ராணுவ பலம் குறைந்துள்ளதா என்றால், இல்லை என்பதே பதில். அதற்குப் பிறகு, 2020இல் லடாக்கிற்கு கொண்டு வரப்பட்ட ராணுவப் படை திரும்பிச் சென்றுவிட்டதா என்றால், அதுவும் இல்லை. ”
”இந்தப் பிரச்னைகள் விவாதிக்கப்படவே இல்லை. இதன் பொருள் என்னவென்றால், இரு தரப்பிலும் படைகள் நிற்கும். ஏனெனில் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது” என்று ஹூடா கூறுகிறார்.
“எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அங்கு சாலைகள் மற்றும் பாலங்களைத் தொடர்ந்து அமைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓர் அறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு, லடாக் பகுதியில் சீனா தனது வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை. மேலும், இந்தப் பகுதியில் தனது ராணுவ வீரர்களுக்கான அடிப்படை வசதிகளை சீனா பலப்படுத்தியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராணுவ மோதலற்ற மண்டலம் குறித்த சர்ச்சையை எவ்வாறு புரிந்துக்கொள்வது. ஜெனரல் ஹூடா இதுகுறித்து கூறுகையில், “முதலாவதாக, இதுவொரு புதிய விஷயமல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு சுமரில் சீன ராணுவ வீரர்கள் எல்லையை மீறியபோது, சில காலம் அங்கு அப்படியொரு ‘ராணுவ மோதலற்ற மண்டலம்’ உருவாக்கப்பட்டது. இந்த முறை எத்தனை ‘ராணுவ மோதலற்ற மண்டலங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன, எந்த அளவில், எங்கு உருவாக்கப்பட்டுள்ளன என்பது நமக்குத் தெரியாது. மேலும், அவை உருவாக்கப்படுவதால் இந்தியா அல்லது சீனா அதிக இழப்புகளைச் சந்திக்கிறதா என்பதைச் சொல்வது கடினம்.”என்றார்
அபர்ணா பாண்டே, ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். வாஷிங்டன் டிசி-யில் வசிக்கும் அவர், எல்லையில் அமைதி நிலைத்திருக்குமா என்ற கேள்விக்கு, இந்த முடிவு சீனாவை சார்ந்தது என்றார்.
“இதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். சீனா முதலில் தனது படைகளை அனுப்புகிறது. ராணுவம் மற்றும் ராஜ்ஜீய மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு இடையில் பல சந்திப்புகளுக்குப் பிறகு, உயர்நிலை சந்திப்பு ஏற்படுவதற்கு முன்பு, அது தன் படைகளைத் திரும்பப் பெறுகிறது. எனவே இப்போது நடப்பதை ஒரு தற்காலிக நடவடிக்கையாக பார்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் விளக்கினார்.
அவரைப் பொறுத்தவரை, “இந்த நிலையை சீனா விரும்பும்போது மாற்றும். சீனா உத்தி அளவில் மனம் மாறியிருக்கிறதா என்பதே நாம் கேட்க வேண்டிய கேள்வி. அதற்கு இல்லை என்பதே பதில். இந்தியா இந்த விவகாரத்தில் இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சு விட முடியாது” என்கிறார்.
“சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது பரந்த உலகளாவிய சூழ்நிலையுடன் தொடர்புடையது என்று நான் நினைக்கிறேன். டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்பது சீனாவுக்கு கவலை அளிக்கிறது. சீனாவுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்படுபவர்களை டிரம்ப் தனது அணியில் சேர்த்துள்ளார். சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க அல்லது வளர்ச்சி வேகத்தைக் குறைக்க, தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள் என்பதை சீனா உணர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், லடாக்கில் இந்தியா உடனான மோதலை தற்காலிகமாக நிறுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது” என்று அபர்ணா பாண்டே கூறுகிறார்.
அமைதியை நிலைநாட்ட இரு படைகளும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜெனரல் ஹூடா நம்புகிறார். ”இரு படைகளுக்கும் இடையே இருந்த நம்பிக்கை தற்போது இல்லை. இந்தப் போக்கு 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது” என்றார் அவர்
கடந்த 2017இல், டோக்லாமில் இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே பதற்றம் அதிகரித்தது. டோக்லாம் பகுதி இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகளை இணைக்கிறது. அங்கு சுமார் மூன்று மாதங்களுக்கு இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே பதற்றமான சூழல் இருந்தது.
“கவனக் குறைவாகவோ அல்லது வேறு தவறுகள் காரணமாகவோ அமைதி பாதிக்கப்படக்கூடாது. 2020ஆம் ஆண்டில் கல்வானில் என்ன நடந்தது என்பதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வானில் நிலைமை மோசமடைந்தது, பலர் உயிரிழந்தனர். இரு படைகளும் பரஸ்பர நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அமைதி என்றென்றும் நீடிக்குமா என்று சொல்வது கடினம். இரு நாடுகளும் எல்லையில் இன்னமும் உடன்படவில்லை, எனவே எந்த நேரத்திலும் நிலைமை மோசமடையக்கூடும்” என்று ஹூடா விளக்குகிறார்.
இருநாட்டு உறவு எந்த திசையில் செல்லும்?
எல்லைப் பிரச்னைகளைத் தாண்டி இந்தியாவுடனான தனது உறவை சீனா மேம்படுத்த விரும்புவது தெளிவாகிறது. இந்தியாவும் இதே நிலைபாட்டில் உள்ளது.
டிசம்பர் 18 அன்று நடந்த சந்திப்பிற்குப் பிறகு, எல்லை பிரச்னை தவிர, மற்ற விஷயங்களிலும் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருப்பது தெளிவாகிறது. உதாரணமாக, மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவது, இரு நாடுகளுக்கு இடையே ஓடும் நதிகளின் வழித்தடம் பற்றிய தரவுகளைப் பகிர்ந்து கொள்வது, எல்லைப் பகுதியில் வர்த்தகத்தை தொடங்குவது ஆகியவற்றில் ஒருமித்த கருத்து இருந்தது.
இருப்பினும், முன்னதாக எல்லையில் நிகழ்ந்த மீறல்களை மிகப்பெரிய பிரச்னையாகப் இந்தியா பார்த்தது. அந்த நேரத்தில் மற்ற விஷயங்கள் அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட்டன.
‘சீனாவின் நடத்தையைப் பொறுத்தே மாறும்’
மீரா சங்கர் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இந்திய தூதராக இருந்தவர். அவர், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்.
“உண்மையில் எல்லை ஒப்பந்தத்தை நாம் வரவேற்க வேண்டும். இருப்பினும், அதன் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்படக்கூடாது. சீனாவின் நடத்தையைப் பொறுத்தே எதிர்காலத்தில் விவகாரங்கள் மாறும் என்று நான் நினைக்கிறேன்”
”ஏனென்றால் அவர்கள் முந்தைய ஒப்பந்தங்களை மீறியுள்ளனர். மற்றொரு விஷயம் என்னவென்றால், டிரம்ப் பதவிக் காலத்தில் வர்த்தகம் குறித்த அமெரிக்காவின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது குறித்து சீனா அதிகம் கவலைப்படுகிறது” என்கிறார் மீரா சங்கர்
”அமெரிக்கா தவிர மற்ற சர்வதேச சந்தைகளையும் சீனா தேடுகிறது. அதனிடம் உற்பத்தித் திறன் உள்ளது. சீனா தனது பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. சீனாவுடன் இந்தியா ஏற்கெனவே பெரியளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. மலிவான சீன இறக்குமதிகள் நமது தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தக் கண்ணோட்டத்தில், நாம் எச்சரிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC