Home தேசிய national tamil இடைநிலை உண்ணாவிரத முறை எடையைக் குறைக்க உதவாதா?

இடைநிலை உண்ணாவிரத முறை எடையைக் குறைக்க உதவாதா?

9
0

SOURCE :- BBC NEWS

இடைநிலை உண்ணாவிரத வழிமுறை எடையைக் குறைக்க உதவாதா? ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்கள், எடையைக் குறைக்க, இடைநிலை உண்ணாவிரதம் என்றழைக்கப்படும் விரத முறையைப் பின்பற்றுவது பெரியளவில் பலனளிக்காது என்று ஒரு பெரிய மதிப்பாய்வு தெரிவிக்கிறது.

வாரத்தின் சில நாட்களில் உண்ணாவிரதம் இருப்பதும், பிற நாட்களில் இயல்பாகச் சாப்பிடுவதுமான பிரபலமான நடைமுறை “எடைக் குறைப்பு மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் சிறிதளவு பலனையே கொடுக்கலாம் அல்லது எந்தவித பலனையும் தராமல் போகலாம்” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இடைநிலை உண்ணாவிரதத்தால், சில உடல் செயல்பாடுகளில் பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இதற்குக் கூடுதல் சான்றுகள் தேவைப்படுகிறது.

இடைநிலை விரதத்திற்கான எடுத்துக்காட்டுகளில், 5:2 உணவுமுறை (இரண்டு நாட்களுக்குக் கடுமையான விரதத்தைக் கடைபிடித்து, 5 நாட்களுக்கு இயல்பான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது), தினசரி குறிப்பிட்ட காலத்திற்கு (பெரும்பாலும் 8 மணிநேரம்) சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 2,000 நபர்களை உள்ளடக்கிய 22 முந்தைய ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்தனர். சராசரி உணவு ஆலோசனையை மட்டும் பெற்றவர்கள் அல்லது உணவு ஆலோசனையே பெறாதவர்களுடன் ஒப்பிடும்போது, (12 மாதங்களுக்குப் பின்பற்றப்படும்) குறுகிய கால இடைநிலை விரதத்தைப் பின்பற்றியவர்களுக்கு அதிக எடையைக் குறைக்க உதவியதா என்பதை ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ள முயன்றனர்.

இடைநிலை விரதம் என்பது எடைக் குறைப்புக்கு மிகவும் புதிய அணுகுமுறையாகும். அதோடு, சமீபத்திய ஆண்டுகளில் இது பிரபலமாகியுள்ளது. அதில் பல்வேறு வகைகள் உள்ளன,

  • தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிடுதல்
  • வாரத்தின் சில நாட்களில் உண்ணாவிரதம் இருப்பது
  • வாரத்தில் சில நாட்களுக்கு வழக்கமாகச் சாப்பிடுவது மற்றும் சில நாட்களுக்கு மிகக் குறைவாகச் சாப்பிடுவது

கலோரி உட்கொள்ளலை குறைத்தல், மிகவும் ஆரோக்கியமாகச் சாப்பிடுதல் போன்ற உணவுக் கட்டுப்பாடு குறித்த பாரம்பரிய ஆலோசனைகளை மக்களுக்கு வழங்குவதுடன் ஒப்பிடும்போது, இடைநிலை விரதம் மக்களின் எடைக் குறைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தியது அல்லது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இந்த மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது.

எடைக் குறைப்பு ஆலோசனை எதுவும் பெறாதவர்களுடனோ அல்லது இன்னும் ஆலோசனை பெறக் காத்திருப்போருடனோ ஒப்பிடுகையில், இடைநிலை விரதம் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இடைநிலை உண்ணாவிரத வழிமுறை எடையைக் குறைக்க உதவாதா? ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

யுனிவர்சிடாட் மருத்துவமனை இத்தாலியனோ டி பியூனஸ் அயர்ஸை சேர்ந்தவரும் இந்த மதிப்பாய்வின் முன்னணி ஆசிரியருமான லூயிஸ் கரேக்னானி, இந்த உண்ணாவிரத முறை குறித்த ஆன்லைன் விளம்பரங்கள் தொடர்பாகத் தான் கவலைப்படுவதாகக் கூறினார்.

“சிலருக்கு இடைநிலை விரதம் ஒரு நியாயமான தேர்வாக இருக்கலாம். ஆனால், தற்போதைய சான்றுகள் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் காணப்படும் உற்சாகத்தை நியாயப்படுத்தவில்லை,” என்கிறார் அவர்.

ஆனால், ஆய்வாளர்களிடையே இதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. சிலர் இதில் பயன் கிடைக்கலாம் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

மூத்த மதிப்பாய்வு ஆசிரியர் ஈவா மாட்ரிட், “எடையைக் குறைப்பது குறித்து அதிக எடை கொண்ட ஒரு நபருக்கு ஆலோசனை வழங்கும்போது மருத்துவர்கள் ஒவ்வொரு நபரின் உடல் ஆரோக்கியத்திற்குத் தகுந்த அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும்,” என்று கூறுகிறார்.

ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில், “மிதமான நம்பிக்கையுடன்” இருப்பதாகக் கூறினாலும், ஆய்வின் பிற கூறுகள் குறித்து அவர்களுக்கு நம்பிக்கை குறைவாகவே உள்ளது.

அவர்கள் பகுப்பாய்ந்த பெரும்பாலான ஆய்வுகள் மிகவும் வலுவான ஆய்வு முறைகளைப் பயன்படுத்தவில்லை. மேலும், சிறிய எண்ணிக்கையிலான மக்களை உள்ளடக்கியவையாக உள்ளன. இதனால் உண்மையான விளைவுகளைக் கண்டறிவது கடினம்.

இடைநிலை உண்ணாவிரத வழிமுறை எடையைக் குறைக்க உதவாதா? ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கோக்ரேன் டேட்டாபேஸ் ஆஃப் சிஸ்டமேடிக் ரிவியூஸில் வெளியிடப்பட்ட இந்த மதிப்பாய்வு, டைப் 2 நீரிழிவு நோயின் நிலை மற்றும் பிற அடிப்படை சுகாதார நிலைமைகள் போன்ற பிற அம்சங்களில் இடைநிலை விரதத்தின் தாக்கம் எப்படியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை எனக் கூறுகிறது.

பல்வேறு வகையான இடைநிலை விரதங்கள் இருப்பதாகவும், அவை வெவ்வேறு பி.எம்.ஐ கொண்டவர்கள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாக எப்படி தாக்கம் செலுத்தும் என்பது குறித்தும் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதாக மதிப்பாய்வு தெரிவிக்கிறது.

இதில் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆய்வுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டவை.

‘பொது மக்களின் பார்வை’

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் மருத்துவ புள்ளிவிவரங்களுக்கான இணை பேராசிரியர் மருத்துவர் பாப்டிஸ்ட் லியூரன்ட் இதுகுறித்துப் பேசியபோது, “தனிப்பட்ட ஆய்வுகள் இடைநிலை விரதம் சிறிதளவு நன்மையை மட்டுமே அளிக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறியை வழங்குகிறது” என்றார்.

மேலும், “பொது மக்களின் கருத்துக்கும் அறிவியல் சான்றுகளுக்கும் இடையே நிலவக்கூடிய வேறுபாடுகளுக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு” என்றார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் மனித வளர்சிதை மாற்றம் தொடர்பான ஓய்வுபெற்ற பேராசிரியரான கீத் ஃபிரெய்ன், “உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் இடைநிலை விரதம் ‘சிறப்பான விளைவுகளை’ ஏற்படுத்துவதாகக் கூறப்படுவதால், இந்த வழிமுறை எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியாக வலுவாக ஊக்குவிக்கப்படுகிறது” என்று கூறினார்.

மேலும், “இந்த ஆய்வு அத்தகைய கூற்றுகள் சிறிதளவு பொருத்தமானவையாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. அத்துடன், அதிக எடை அல்லது பருமனாக இருப்போருக்கு உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைப்பதைத் தவிர வேறு ‘விரைவான தீர்வுகள்’ எதுவும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

பலரும் இடைநிலை விரதத்தை எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கான ஒரு நல்ல வழியாகக் கருதுகிறார்கள் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும், இது மதிப்பாய்வில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இது மக்கள் குறைவான உணவைச் சாப்பிட வித்திடுவதால், குறைந்த கொழுப்பு, குறைந்த ரத்த சர்க்கரை, சிறந்த குடல் ஆரோக்கியம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சுமார் 16 லட்சம் பேர் எடையைக் குறைக்க வெகோவி, மௌஞ்சாரோ போன்ற ஊசிகளைப் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் தேசிய சுகாதார சேவையில் அல்லாமல் தனியார் மருந்துச் சீட்டுகள் மூலம் இவை வாங்கப்படுகின்றன.

எடைக் குறைப்பு ஊசிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவோருக்கு, வழக்கமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை நிறுத்துபவர்களைவிட நான்கு மடங்கு வேகமாக எடை கூடுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU