Home தேசிய national tamil ஆப்கானியர் தாக்குதலுக்கு முடிவு கட்டிய ரஞ்சித் சிங் முன்னேறி வந்த எதிரிப்படையை தடுக்க அமைத்த வியூகம்

ஆப்கானியர் தாக்குதலுக்கு முடிவு கட்டிய ரஞ்சித் சிங் முன்னேறி வந்த எதிரிப்படையை தடுக்க அமைத்த வியூகம்

17
0

SOURCE :- BBC NEWS

 ராஜா ரஞ்சித் சிங்

பட மூலாதாரம், Getty Images

மார்ச் 1823-இல், வசந்த கால மழை தாமதமானதால் சிந்து நதியின் நீர்மட்டம் குறைந்திருந்தது.

எனவே, மகாராஜா ரஞ்சித் சிங், ஹுண்ட் கிராமத்திற்கு அருகிலுள்ள அதே வரலாற்றுச் சிறப்புமிக்க படித்துறை வழியாக நதியைக் கடக்க முடிவு செய்தார், அங்கிருந்து அவருக்கு முன்பு பல வெற்றியாளர்கள் கடந்து சென்றிருந்தனர்.

ஓலாஃப் காரோ தனது ‘த பதான்ஸ்’ புத்தகத்தில், 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆட்சி செய்த துர்ரானி ஆப்கானியர்கள், 1818-இல் முல்தானையும், அடுத்த ஆண்டு காஷ்மீரையும் இழந்ததுடன், சிந்து நதிக்கு கிழக்கே இருந்த தங்களது அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்தனர் என்றும், லாகூரில் இருந்து ஆட்சி செய்த சீக்கிய ஆட்சியாளர் ரஞ்சித் சிங், ஆஃப்கானிஸ்தான் பகுதியில் வலுவான பிடியை ஏற்படுத்திக்கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், ரஞ்சித் சிங் தனது நிலையை மேலும் வலுப்படுத்தினார். அவர் தேரா காஜி கான் மற்றும் தேரா இஸ்மாயில் கான் ஆகியவற்றைத் தனது அரசுடன் இணைத்துக் கொண்டார். மேலும் காஷ்மீருக்குச் செல்லும் வழிகளில் ஒன்றைக் கைப்பற்றி வைத்திருந்த ஹசன் அப்தாலுக்கு வடக்கே இருந்த ஹஜாரா பழங்குடியினரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.

துர்ரானி அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட இந்த சவாலுக்குப் பதிலடி கொடுப்பது அவசியமாக இருந்தது.

ஓலாஃப் காரோவின் கூற்றுப்படி, 1822-இல் ஆப்கான் ஆளுநர் அஜீம் கான் பராக்சாய், தப்பியோடிய சீக்கிய சர்தார் ஜெய் சிங் அட்டாரிவாலாவுடன் இணைந்து கைராபாத் மீது தாக்குதல் நடத்தவும், ரஞ்சித் சிங்கை சிந்து நதிக்கு அப்பால் தள்ளவும் பெஷாவருக்கு வந்திருந்தார். ஆனால் உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக, போர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே அவர் திரும்ப வேண்டியிருந்தது.

ரஞ்சித் சிங் படையெடுத்த போது…

“அஜீம் கான் யார் முகமது கானிடம் ரஞ்சித் சிங் வரி கேட்டார். யார் முகமது அவருக்கு விலைமதிப்பற்ற குதிரைகளைப் பரிசளித்து, அவரது கோபத்தைத் தற்காலிகமாகத் தவிர்த்தார். பின்னர், அஜீம் கான் பெஷாவருக்குத் திரும்புவதாகவும், ரஞ்சித் சிங்கின் கோபத்திலிருந்து தப்பிக்க ஸ்வாட்டில் உள்ள யூசுப்ஜாய் மக்களிடம் யார் முகமது தஞ்சம் புகுந்துள்ளதாகவும் ரஞ்சித் சிங்கிற்குத் தகவல் கிடைத்தது,” என எழுதியுள்ளார்.

இதையடுத்து ரஞ்சித் சிங் மார்ச் 1823-இல் அஜீம் கானுக்கு எதிராக மீண்டும் படையெடுத்தார்.

பழங்குடியினக் குழுக்கள் சிந்து நதியின் யூசுப்ஜாய் கரையில் திரண்டனர் மற்றும் சீக்கிய குதிரைப்படை வீரர்களுக்குச் சவால் விடும் வகையில் முழக்கமிட்டனர் என காரோ எழுதுகிறார்,

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சீக்கிய வீரர்கள், தங்கள் குதிரைகளை நதியில் இறக்கினர். அவர்கள் பாதி நீந்தியும் பாதி நடந்தும் நதியைக் கடந்தனர், இருப்பினும் பல வீரர்களும் விலங்குகளும் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

‘இதற்குப் பிறகு ரஞ்சித் சிங் தனது முக்கியப் படையுடன் ஒருங்கமைக்கப்பட்ட முறையில் முன்னேறினார். அவர் படகுகளைத் திரட்டினார் மற்றும் பீரங்கிகளை யானைகள் மூலம் நதியைக் கடக்கச் செய்தார். இதற்கிடையில், யூசுப்ஜாய் மற்றும் கட்டக் படைகளும் சுமார் இருபதாயிரம் எண்ணிக்கையில் திரண்டன. அவர்களுக்கு சையத் அக்பர் ஷா தலைமை தாங்கினார், அவர் பனிரில் உள்ள பீர் பாபாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்.’

வரலாற்றுப் போர்

 ராஜா ரஞ்சித் சிங்

பட மூலாதாரம், Getty Images

அஜீம் கான் பராக்சாய் காபூலில் இருந்து தனது வீரர்களுடன் பெஷாவரிலிருந்து முக்கியச் சாலை வழியாக முன்னேறினார். ஆனால் நதியைக் கடப்பதற்குப் பதிலாக, முக்கியச் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் கிழக்கே தற்போது நௌஷேரா கண்டோன்மென்ட் இருக்கும் இடத்தில் முகாமிட்டார் என காரோ எழுதுகிறார்,.

‘இந்தப் போருக்கு தற்போதைய நௌஷேரா கண்டோன்மென்ட்டின் பெயர் வைக்கப்படவில்லை, ஏனெனில் அந்த நேரத்தில் அங்கு கண்டோன்மென்ட் எதுவும் இல்லை, மாறாக லாந்தை நதியின் வட கரையில் அமைந்துள்ள நௌகர் என்ற பழமையான கிராமம் அல்லது நகரத்தின் பெயர் வைக்கப்பட்டது. இந்தப் போரின் மிகக் கடுமையான மோதல் பீர் சாப் மலையைச் சுற்றி நடந்ததால், இது சில நேரங்களில் அந்தப் பெயராலும் நினைவுகூரப்படுகிறது.’

அலெக்சாண்டர் கார்ட்னர் தனது ‘வீரரும் பயணியும்: மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் பீரங்கிப்படை கர்னலாகப் பணியாற்றிய அலெக்சாண்டர் கார்ட்னரின் நினைவுக் குறிப்புகள் (Soldier and Traveller: Memoirs of Alexander Gardner, Colonel of Artillery in the Service of Maharaja Ranjit Singh)’ புத்தகத்தில், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியிலும், ரஞ்சித் சிங்கின் படை சிந்து நதியைக் கடப்பதில் வெற்றி பெற்றது என்று எழுதியுள்ளார்.

இதற்குப் பிறகு பழங்குடியினப் படை பீர் சாப் மலைக்கு பின்வாங்கியது, அங்கு அது தனது பலத்தைத் திரட்டியது. அஜீம் கானின் துர்ரானி படையும் பீரங்கிப் படையும் உதவிக்கு வரும் என்று அது நம்பியது. ஆனால் அறியப்படாத காரணங்களால், அஜீம் கான் உடனடியாக காபூல் நதியைக் கடந்து பழங்குடியின மக்களைச் சந்திக்க முயற்சிக்கவில்லை.

அவர் மேலும் எழுதுகையில், ‘ரஞ்சித் சிங் தனது பீரங்கிகளையும் காலாட்படையையும் பழங்குடியினப் படைக்கு எதிராக ஒருமுகப்படுத்தினார் மற்றும் ஒரு சிறிய குழுவை நதியின் வலது (தெற்கு) கரையில் அஜீம் கானைத் தடுப்பதற்காக அனுப்பினார்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித் சிங் நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கிய போது

 ராஜா ரஞ்சித் சிங்

பட மூலாதாரம், Getty Images

பழங்குடியினருக்கும் சீக்கிய அகாலிகளுக்கும் இடையே கடுமையான நேரடி மோதல் தொடங்கியது. அமிர்தசரஸின் மதக் குழுவின் தலைவர் பூலா சிங் கொல்லப்பட்டார் மற்றும் சீக்கிய குதிரைப்படை பழங்குடியினக் காலாட்படை மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, ஏனெனில் அவர்கள் சமவெளியில் சிதறிக்கிடந்த பாறை மேடுகளுக்கு இடையே சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டிருந்தனர் என காரோ எழுதுகிறார்,

‘போரின் போக்கு சீக்கியர்களுக்கு எதிராக மாறத் தொடங்கியது. யூசுப்ஜாய் மற்றும் அவர்களது போராளிக் குழுக்கள் அசாதாரண வீரத்தை வெளிப்படுத்தி, பயிற்சி பெற்ற சீக்கிய காலாட்படையைப் பின்னுக்குத் தள்ளினர்.’

அவர் எழுதுகிறார், ‘பழங்குடியினப் படை உற்சாகமாக முன்னேறத் தொடங்கியது, ஆனால் மகாராஜாவின் படையின் கூர்க்கா பட்டாலியன் அவர்களை ஒரு பக்கம் தடுத்து நிறுத்தியது. இந்தப் பட்டாலியன் ஸ்கொயர் வியூகம் அமைத்து முன்னேறி வந்த பழங்குடியினக் குழுக்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. மறுபுறம், சீக்கிய பீரங்கிப் படையும் நதியின் அந்தப் பக்கத்திலிருந்து திறம்பட தாக்குதல் நடத்தியது, இதனால் பழங்குடியினப் படையின் முன்னேற்றம் நின்றது.’

பழங்குடியின மக்கள் இந்த பாறை மலைகளுக்கு இடையே பின்வாங்கினர் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் ஒருங்கமைந்து பீர் சாப் மலையின் முக்கியமான உச்சியைப் பிடிக்க மூன்று முறை முயற்சித்தனர், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

‘நான்காவது முயற்சியில் மலையில் வெற்றி கிடைத்தது, அதுவும் மகாராஜா ரஞ்சித் சிங் நேரடியாக, எஞ்சியிருந்த கூர்க்கா வீரர்கள் மற்றும் தனது குதிரைப்படை மெய்க்காப்பாளர்களுடன் தலைமை தாங்கிப் போர்க்களத்தில் இறங்கி அவர்களின் உற்சாகத்தை அதிகரித்ததால் மட்டுமே சாத்தியமானது,’ என காரோ எழுதுகிறார்,

இந்தச் சந்தர்ப்பத்தில் பழங்குடியினருக்கு ஏற்பட்ட இழப்பை நௌஷேரா அருகே உள்ள பிரமாண்டமான மயானங்களைப் பார்த்து மதிப்பிட முடியும் என்று அவர் எழுதுகிறார்.

ரஞ்சித் சிங்கின் பெஷாவர் வெற்றி

 ராஜா ரஞ்சித் சிங்

பட மூலாதாரம், gettyimages

காரோவின் கூற்றுப்படி, இந்த நேரத்தில் நதியின் மறுபுறம் இருந்த அஜீம் கான், நதியைக் கடக்க முயற்சிக்கவில்லை அல்லது சீக்கிய பீரங்கிப் படையின் தாக்கத்தைக் குறைக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை, இருப்பினும் அவரது படை தென்கரையில் இருந்தது. அன்றே மாலை அஜீம் கான் பின்வாங்கினார். அவர் போரில் அரிதாகவே ஈடுபட்டார் மற்றும் இதற்கான எந்த உறுதியான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஜொனாதன் எல் லீ தனது ‘ஆப்கானிஸ்தான்: 1260 முதல் இன்று வரையிலான வரலாறு (Afghanistan: A History from 1260 to the Present)’ புத்தகத்தில் சீக்கியர்களின் பேச்சைக் கேட்டு தனது சகோதரர் பெஷாவரை மீண்டும் கைப்பற்ற வருகிறார் என்று அஜீம் கான் நம்பியதாகச் சிலர் கருதுகின்றனர், மற்றவர்கள் இதை கோழைத்தனம் அல்லது சீக்கியத் தாக்குதல் குறித்த அச்சம் என்று கூறுகின்றனர், என எழுதினார்,

“ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெஷாவரில் அலெக்சாண்டர் பர்ன்ஸிடம் அஜீம் கான் தனது கருவூலம் கொள்ளையடிக்கப்படும் என்று பயந்ததாகக் கூறப்பட்டது, அல்லது வடகரையில் இருந்த அகாலி தள உறுப்பினர்களின் அலறல் சத்தத்தால் அவரது வீரர்கள் எச்சரிக்கையடைந்தனர். அவர்கள் இந்த அலறல் சத்தத்தைப் புதிய படையின் தாக்குதல் என்று கருதினர்.”என காரோ எழுதினார்.

அஜீம் கான் போருக்குப் பிறகு விரைவில், ஆனால் எந்தக் காயமும் இன்றி இறந்து போனார்.

இந்த மரணத்துடன் உயிருடன் இருந்த 20 சகோதரர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையின் கடைசி நூலும் அறுந்தது என காரோ எழுதுகிறார்.

அஜீமின் மாற்றாந்தாய் சகோதரர் யார் முகமது காபூலில் அஜீமின் இடத்தைப் பிடித்தார் மற்றும் பின்னர் 1826-இல் அஃப்கானிஸ்தானின் ஆட்சியாளராகவும், பெஷாவரின் ஆட்சியாளராகவும் ஆனார்.

அலெக்சாண்டர் கார்ட்னர் தனது ‘வீரரும் பயணியும்: மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் பீரங்கிப்படை கர்னலாகப் பணியாற்றிய அலெக்சாண்டர் கார்ட்னரின் நினைவுக் குறிப்புகள் (Soldier and Traveller: Memoirs of Alexander Gardner, Colonel of Artillery in the Service of Maharaja Ranjit Singh)’ புத்தகத்தில், ‘ரஞ்சித் சிங் துர்ரானி அதிகாரத்தின் எஞ்சியிருந்த அடையாளங்களை அழித்து பெஷாவரைத் தரைமட்டமாக்கினார் மற்றும் கைபர் கணவாயையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார், அதன் மூலம் அந்த வழியாக துர்ரானி படைக்கு எந்த உதவியும் வராதபடி செய்தார்.’ என்று எழுதியுள்ளார்.

“பாலா ஹிசார் கோட்டை மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது மற்றும் அதனுள் இருந்த அழகான அரண்மனை கொள்ளையடிக்கப்பட்டது. கோட்டைக்குக் கீழே இருந்த தோட்டத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன மற்றும் குளங்களின் நீர் அசுத்தமாக்கப்பட்டது. அவர்களது குதிரைப்படை பெஷாவரைச் சுற்றி மைல் கணக்கில் பரவியிருந்த புகாரா பேரீச்சை, பீச், ஏப்ரிகாட் மற்றும் பேரிக்காய் ஆகியவற்றின் பிரம்மாண்டமான தோட்டங்களை அழித்தது.” என்று காரா குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர் வருகை

ராஜா ரஞ்சித் சிங்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், வி. நால்வா தனது ‘ஹரி சிங் நால்வா’ புத்தகத்தில், சீக்கியப் படைத் தளபதி ஹரி சிங் நால்வா விரைவில் இந்தக் கோட்டையை மீண்டும் கட்டத் தொடங்கினார் என்று எழுதியுள்ளார்.

ரஞ்சித் சிங்கின் இந்த வெற்றி அவரது வெற்றிகளின் உச்சமாக அமைந்தது. அவரது பேரரசு இப்போது மேற்கில் கைபர் கணவாய் முதல் வடக்கில் காஷ்மீர் மற்றும் தெற்கில் முல்தான் வரை பரவியிருந்தது.

காரோவின் கூற்றுப்படி, ரஞ்சித் சிங் அங்கு அதிக நேரம் தங்கவில்லை. அவர் யார் முகமதுவின் சரணடைதல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தெற்கு நோக்கித் திரும்பினார்.

‘மகாராஜா ரஞ்சித் சிங் இப்போது பெஷாவருடன் கோஹாட், பன்னு மற்றும் தேரா ஜாட் ஆகியவற்றை பெயரளவில் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றார். ஆனால் துர்ரானி ஆளுநர்கள் அவரது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட பகுதிகளிலும் கூட அவரது படைகள் பழங்குடியினருக்கு எதிராகக் கடுமையான போர்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தன, ‘

ராஜ்மோகன் காந்தியின் ‘பஷ்தூன்களின் அகிம்சை அரசர் (The Non-Violent King of the Pashtuns)’ புத்தகத்திலிருந்து, அவருக்குப் பிறகு வட இந்தியாவின் மதத் தலைவர் சையத் அகமது வந்ததை அறிய முடிகிறது. அவர் 1827-இல் பெஷாவரை அடைந்தார். அவரது இயக்கத்தின் மையம் சாரசத்தா ஆகும்.

‘பெஷாவர் ஆளுநர் தமக்கு விஷம் வைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி, சையத் அகமது பெஷாவர் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் யார் முகமது கான் கொல்லப்பட்டார். பிரெஞ்சு தளபதி வென்சுரா தலைமையிலான சீக்கியப் படை அங்கு இல்லாமல் இருந்திருந்தால், யார் முகமதுவின் தம்பி சுல்தான் முகமது கானால் பெஷாவரைக் காப்பாற்றியிருக்க முடியாது.’ என அவரது புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சையத் அகமது மீண்டும் பெஷாவர் மீது தாக்குதல் நடத்தினார். பராக்சாய்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் சையத் அகமது 1830 கோடை காலத்தின் இறுதியில் இரண்டு மாதங்கள் பெஷாவரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் 1831-இல் பாலக்கோட்டில் சீக்கியர்கள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

1849-இல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் சீக்கியர்களைத் தோற்கடித்து, ரஞ்சித் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த பெஷாவர் உட்பட பஞ்சாபைக் கைப்பற்றியது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU