SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், AFP via Getty Images
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இரான் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
அமெரிக்கா தங்களைத் தாக்கினால், அப்பகுதியில் (மத்திய கிழக்கு) உள்ள அமெரிக்க தளங்களை குறிவைக்க தனது நாடும் தயாராக உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
“வாஷிங்டன் எங்களைத் தாக்கினால், நாங்கள் அமெரிக்க பிரதேசத்தைத் தாக்க மாட்டோம், ஆனால் அப்பகுதியில் (மத்திய கிழக்கு) உள்ள அவர்களின் தளங்களை (இராணுவ தளங்கள்) தாக்குவோம்,” என்று அராக்சி கூறினார்.
டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனை பார்வையிட்ட நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஓமனில் அமெரிக்கா-இரான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அடுத்த கூட்டத்திற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் அதை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அராக்சி கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அதிகாலையில், “அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் சந்திப்போம்” என்றும் கூறினார்.
இருப்பினும், வெள்ளிக்கிழமை ஓமனில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்கும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.
இந்த வரி எவ்வளவு என்று தெளிவுபடுத்தப்படவில்லை, ஆனால் இது 25% வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
“அணுசக்தி செறிவூட்டல் இரானின் உரிமை”
பட மூலாதாரம், EPA
நேர்காணல் ஒன்றில் அராக்சி கூறுகையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மறைமுகமானவை என்றும், அணுசக்தி விவகாரத்துடன் மட்டுமே தொடர்புடையவை என்றும் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “இரானின் பார்வையில், யுரேனியம் செறிவூட்டலை தடை செய்யும் பிரச்னையில் எந்த பேச்சுவார்த்தையும் இருக்க முடியாது. யுரேனியம் செறிவூட்டல் இரானின் உரிமை, அது நிச்சயமாக தொடர வேண்டும்,”என்று கூறினார்.
“குண்டுவீச்சு மூலம் கூட அவர்கள் (அமெரிக்கா) இப்பகுதியில் இரானின் திறன்களை அழிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்த பிரச்னையில் அமெரிக்காவுடன் “உறுதியளிக்கும்” ஒப்பந்தத்தை எட்ட இரான் தயாராக உள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இரானின் ஏவுகணை திட்டத்தைப் பற்றி பேசிய அராக்சி, “இப்போதும் சரி எதிர்காலத்திலும்சரி ஏவுகணைகள் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இருக்க முடியாது, ஏனெனில் இது ஒரு பாதுகாப்பு பிரச்னை” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
பிபிசி அரபு செய்தியின்படி, இரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹீம் மூசவி, ‘இரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் எதிரிகளுக்கு பாரமாக இருக்கும் மற்றும் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்’ என்று கூறினார்.
அவர் கூறியதாவது, ‘எந்தவொரு இராணுவ ஆக்கிரமிப்பும் அவர்களின் மூலோபாய தோல்வியில் முடியும் என்பதையும், இது போரின் எல்லையை முழு பகுதிக்கும் பரப்பும் என்பதையும் எதிரி நன்கு அறிவார்.’
விமானம் தாங்கி கப்பலில் விட்காஃப் மற்றும் குஷ்னர்
பட மூலாதாரம், Reuters
இரானுடனான அமெரிக்க பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் ஸ்டீவ் விட்காஃப், சனிக்கிழமை விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனை பார்வையிட்டதாகக் கூறினார்.
“இன்று, அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் மற்றும் நான், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதன் தாக்குதல் குழுவில் பணியாற்றும் துணிச்சலான கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினரை சந்தித்தோம், அவர்கள் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் மற்றும் பலம் மூலம் அமைதி என்ற அதிபர் டிரம்பின் செய்தியை ஆதரிக்கிறார்கள்,” என்று விட்காஃப் சமூக ஊடக பதிவில் கூறினார்.
விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தற்போது இரானிலிருந்து வெகு தொலைவில் அல்லாமல் அரேபிய கடலில் நிலைகொண்டுள்ளது.
பிபிசி பெர்சியன் செய்தியின்படி, ஆக்சியோஸ் நிருபர் பராக் ராவிட், “லிங்கன் மற்றும் அதனுடன் வரும் தாக்குதல் குழு எதிர்காலத்தில் சாத்தியமான இரான் மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும். இரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நாள் கழித்து இந்த பயணம் அமைந்தது மற்றும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் அமெரிக்காவிடம் வேறு விருப்பங்கள் உள்ளன என்று டெஹ்ரானுக்கு ஒரு செய்தியாகும்” என்று கூறினார்.
சிஎன்என் நிருபர் கைலி அட்வுட் எக்ஸ் வலைதள பக்கத்தில், “அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியபோதிலும், அப்பகுதியில் அமெரிக்க இராணுவ இருப்பு மற்றும் நிலைநிறுத்துதலை அதிகரிக்கும் போக்கு தொடர்கிறது என்று செய்தி ஆதாரங்கள் தனக்கு தெரிவித்துள்ளன,”என்று பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இரான் இப்போது ஆர்வத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ய தயாராக உள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார், “கடைசி முறை அவர்கள் அப்படி நினைக்கவில்லை, ஆனால் இந்த முறை அவர்கள் தங்கள் மனதை உறுதி செய்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். என்ன ஒப்பந்தம் செய்யப்படுகிறது என்று பார்ப்போம், ஆனால் ஒன்று உறுதியாக உள்ளது: இது கடந்த முறையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.”
தோஹாவில் இரானிய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
பட மூலாதாரம், Al Jazeera Forum
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தோஹாவிற்கு வந்த அப்பாஸ் அராக்சி, அல் ஜசீரா மன்றத்தில் உரையாற்றி, இஸ்ரேலின் பிராந்திய ஆதிக்கம் மற்றும் பாலத்தீனம் குறித்த பிரச்சினையை எழுப்பினார்.
பாலத்தீன பிரச்னை “சர்வதேச சட்டம் இன்னும் ஏதேனும் அர்த்தத்தை கொண்டிருக்கிறதா என்பதற்கும், மனித உரிமைகள் உண்மையிலேயே உலகளாவியதா என்பதற்கும் ஒரு சோதனை” என்று அராக்சி கூறினார்.
“காஸாவில் இஸ்ரேல் புரியும் குற்றங்களின் மனித விலை முழு மனிதகுலத்தின் மனசாட்சியையும் காயப்படுத்தியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
இந்த “பேரழிவுகள்” கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன என்று அவர் கூறினார். “ஒரு குழந்தையின் உயிர் பேரம் பேசும் சீட்டாக இருக்க முடியாது, பசியை ஆயுதமாக்க முடியாது, மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல, குடும்பங்களைக் கொல்வதை முறையான தற்காப்பு என்று கருத முடியாது என்பதை நம்புபவர்கள் உள்ளனர்” என்றும் அராக்சி பேசினார்.
இரானிய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறியதாவது, “ஒரு தரப்பு சட்டத்திற்கு அப்பால் செயல்பட அனுமதிக்கப்படும் வரை எந்த பகுதியிலும் ஸ்திரத்தன்மை இருக்க முடியாது.”
ஆதிக்க கொள்கை இஸ்ரேலை தனது இராணுவ ஆயுதங்களை விரிவுபடுத்த அனுமதிக்கும் அதே வேளையில், அப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை ஆயுதங்களை இறக்குமதி செய்ய அழுத்தம் கொடுக்கிறது என்று அராக்சி கூறினார்.
“இஸ்ரேலின் விரிவாக்க திட்டத்திற்கு அண்டை நாடுகளை இராணுவ, தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும்,” என்ற கருதுகோள் இருப்பதாக அராக்சி கூறினார்.
“இந்த திட்டம் இஸ்ரேலுக்கு வரம்பு இல்லாமல் அதன் இராணுவ ஆயுதங்களை விரிவுபடுத்த அனுமதிக்கிறது, அதே நேரத்தில் மற்ற நாடுகள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று கோருகிறது. இது மற்றவர்களை அவர்களின் பாதுகாப்பு திறன்களை குறைக்க அழுத்தம் கொடுக்கிறது மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்காக அவர்களை தண்டிக்கிறது,” என்று அவர் கூறினார்.
வரலாறு காணாத வீழ்ச்சியில் இரானிய நாணயத்தின் மதிப்பு
பட மூலாதாரம், AFP via Getty Images
இதற்கிடையில், இரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இரானிய நாணயமான ரியால் டெஹ்ரானின் மாற்று சந்தைகளில் மேலும் சரிந்து, தனது எல்லா கால கட்டத்திலும் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக அதன் மதிப்பு சுமார் 1.59 மில்லியன் ரியால்களாக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்கில் வந்தபோது, ஒரு டாலருக்கு எதிராக அது 1.5 மில்லியன் ரியால்களை எட்டியிருந்தது.
கடந்த ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் இரானில் பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு கடற்படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இரானிய மனித உரிமைகள் குழு இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் ஆறாயிரம் போராட்டக்காரர்கள் இறந்ததாக கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



