SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
‘கேட்சஸ் வின் மேட்சஸ்’ (Catches win matches) என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான சொல்லாடல்.
ஒரு கேட்சைப் பிடிப்பதும் தவறவிடுவதும் போட்டியின் முடிவையே மாற்றும் என்பதை உணர்த்துவதற்காக அதைச் சொல்வார்கள்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி இந்தக் கூற்று உண்மைதான் என்பதை உணர்த்தியது.
சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை, இங்கிலாந்து கேப்டன் ஹேரி ப்ரூக் தவறவிட்டார். அதன்பிறகு சாம்சன் 89 ரன்கள் எடுத்தார். அது இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோரை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தது.
அதேசமயம், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, அக்ஷர் பட்டேல் தன்னுடைய அபார ஃபீல்டிங் திறமையால் இரண்டு விக்கெட்டுகள் வீழ்வதற்குக் காரணமாக அமைந்தார். அதுவும் ஹேரி ப்ரூக் மற்றும் வில் ஜேக்ஸின் விக்கெட்டுகள்.
இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் இரண்டு சிறந்த பேட்டர்கள் அவர்கள்தான். அவர்கள் இருவரில் ஒருவர் இன்னும் கூடுதலாக ஆடியிருந்தாலும், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியிருக்கும். அக்ஷரின் ஃபீல்டிங் அதை மாற்றியது.
பட மூலாதாரம், Getty Images
அபாரமான கேட்ச்கள் மூலம் மாறிய ஆட்டம் என்று யோசிக்கும்போது, உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு கேட்சுகள் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாதவை.
ஒன்று, 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸின் கேட்சை கபில் தேவ் பிடித்தது. மற்றொன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் கேட்சை சூர்யகுமார் யாதவ் பிடித்தது.
இங்கிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை அக்ஷர் ஃபீல்டிங் செய்தது, கிட்டத்தட்ட இந்த இரண்டு கேட்ச்களின் நகல் போலவே இருந்தது. அந்த இரு கேட்ச்களையுமே அது மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது.

கபில் தேவ் – 1983 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி
இந்திய அணி 183 ரன்கள் எடுக்க, அதை விரைவில் சேஸ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்தக் காலகட்டத்தில் உலகின் அச்சுறுத்தலான பேட்டராகக் கருதப்பட்ட விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். அந்த உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸுக்காக அதிக ரன்கள் எடுத்திருந்தது அவர்தான்.
100+ ஸ்டிரைக் ரேட்டில் 33 ரன்கள் எடுத்திருந்த ரிச்சர்ட்ஸ், மதன் லால் வீசிய ஒரு ஷார்ட் லென்த் பந்தை தூக்கி அடித்தார்.
அப்போது மிட் ஆன் திசையில் நின்றுகொண்டிருந்த கபில் தேவ் பந்தை நோக்கி ஓடத் தொடங்கினார். பொதுவாக அப்படி பந்தின் திசையிலேயே ஓடிப் பிடிப்பது கடினமானது. அதிலும், பந்தை மேலே அன்னார்ந்து பார்த்து வெகுதூரம் ஓடிச் சென்று அதை சரியாகப் பிடித்தார் கபில் தேவ்.
பட மூலாதாரம், Getty Images
விவியன் ரிச்சர்ட்ஸ் வெளியேறிய பிறகு அந்தப் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியது. இந்தியா அந்தப் போட்டியை வென்றது. இன்னும் கபில் தேவின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
2026-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹேரி ப்ரூக் கேட்சை அக்ஷர் பட்டேல் கிட்டத்தட்ட இதேபோலத்தான் பிடித்தார். ரிச்சர்ட்ஸ் மற்றும் ப்ரூக் இருவருக்கும் இடையில் கூட ஒரு ஒற்றுமை இருக்கிறது.
எப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஸ்கோரராக ரிச்சர்ட்ஸ் இருந்தாரோ, அதுபோல் சூப்பர் 8 சுற்றின் முடிவில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்திருந்தவர் ப்ரூக் தான். (அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு ஜேக்கப் பெதெல் இங்கிலாந்தின் டாப் ஸ்கோரர் ஆனார்).
பட மூலாதாரம், Getty Images
பும்ரா வீசிய ‘ஸ்லோயர் பால்’-ஐ சரியாகக் கணிக்காமல் தூக்கி அடித்தார் ப்ரூக்.
உயரமாகச் சென்ற பந்து, டீப் பாயின்ட் திசையை நோக்கிச் சென்றது. பாயின்ட் திசையில் நின்றிருந்த அக்ஷர் பட்டேல், பின்னால் திரும்பி வெகுதூரம் ஓடி ‘டைவ்’ அடித்து பந்தை கேட்ச் செய்தார்.
பந்தை நன்றாகப் பார்த்துக்கொண்டே ஓடிய அக்ஷர் பட்டேல், பந்து எங்கே விழுகிறது என்பதை சரியாகக் கணித்தார். டைவ் அடிப்பதற்கு முன்னால் அவர் தன் வேகத்தை குறைத்திருப்பார். அது அவர் அந்த கேட்சை சரியாகப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த ஃபீல்டிங் செயல்பாட்டின் மூலம், நல்ல ஃபார்மில் இருந்த, ஆபத்தான ஹேரி ப்ரூக்கை வெளியேற்றினார் அக்ஷர். அது போட்டியில் இந்தியாவின் பிடியை இறுக்கியது.
பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமார் யாதவ் – 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி
இந்தியாவுக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்தார் டேவில் மில்லர்.
உலக கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர்களுள் ஒருவராகக் கருதப்படும் அவர் அந்த தருணத்தில் இந்தியாவுக்கு சவாலாகவே கருதப்பட்டார்.
அந்த கடைசி ஓவரின் முதல் பந்தை மில்லர் நேரே தூக்கி அடிக்க, ‘வைட் லாங் ஆன்’ திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் இடதுபுறம் பவுண்டரி எல்லையை ஒட்டியே ஓடி வந்தார்.
கேட்சைப் பிடித்த அவர், தன் நிலைத்தன்மை தவறுவதை உணர்ந்தார். அதனால், பந்தை மேலே தூக்கி போட்டு, பவுண்டரி எல்லைக்கு வெளியே காலை வைத்துவிட்டு, பின்னர் திரும்பும் உள்ளே வந்து அந்தப் பந்தை மறுபடியும் பிடித்தார். யாருமே எதிர்பாராத வகையில் அந்த கேட்சைப் பிடித்தார் சூர்யகுமார் யாதவ். மில்லர் அவுட்.
பட மூலாதாரம், Getty Images
அந்த கேட்சை சூர்யகுமார் பிடிக்காமல் இருந்திருந்தால், பந்து சிக்ஸர் போயிருக்கும். 5 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை வந்திருக்கும். அது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அந்த சூழ்நிலை தடுக்கப்பட்டது.
2026… இங்கிலாந்து அணிக்கு சிறந்த ஃபினிஷராக விளங்கிக்கொண்டிருக்கும் வில் ஜேக்ஸ், 14-வது ஓவரின் கடைசிப் பந்தை டீப் பாயின்ட் திசையில் தூக்கி அடித்தார்.
சூர்யகுமார் யாதவ் அன்று செய்ததைப் போலவே, இடது புறம் பவுண்டரி எல்லையை ஒட்டியே ஓடினார் ‘ஸ்வீப்பர் கவர்’ திசையில் நின்றிருந்த அக்ஷர் பட்டேல்.
வெகுதூரம் ஓடி பந்தைப் பிடித்தவர், தன் நிலைத்தன்மையை இழந்துவிட்டதை உணர்ந்தார். அந்த நேரத்தில் ‘டீப் பேக்வேர்ட் பாயின்ட்’ இடத்தில் நின்றிருந்த துபேவும் அருகில் வந்திவிட, அவரிடம் பந்தை தூக்கி வீசிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் விழுந்தார் அக்ஷர்.
பட மூலாதாரம், Getty Images
அந்த விக்கெட் போகாமல் இருந்திருந்தால், அந்த ஷாட் சிக்ஸராகி அந்த ஓவரில் 18 ரன்கள் வந்திருக்கும். அது இந்தியா மீது நெருக்கடியை பன்மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால், அக்ஷரின் அந்த ஃபீல்டிங் செயல்பாடு அதைத் தடுத்தது.
இரண்டு பெரிய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த இரண்டு தருணங்களை, ஒரே அரையிறுதிப் போட்டியில் நினைவுபடுத்திவிட்டார் அக்ஷர் பட்டேல்.
இந்த உலகக் கோப்பையில், அரையிறுதிக்கு முன்புவரை இந்திய அணி 13 கேட்ச்களைத் தவறவிட்டிருந்த நிலையில்தான், இப்படியொரு செயல்பாட்டை அதிமுக்கிய போட்டியில் கொடுத்தார் இந்திய அணியின் துணைக் கேப்டன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



